தொலையாமல் அலைதல்- ஒட்டாவாவின் குறுக்கும் நெடுக்கும்
பூக்கும் தருணங்கள் தொடங்கிவிட்டன கனடாவுக்குள் சரியாக 30 நாட்கள் இருந்தேன். அமெரிக்காவின் நியுயார்க் மாநிலம் பப்பல்லோ விமான நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாக ஒட்டாவா நகருக்குப் போனேன். போகும் பாதையெங்கும் வயல்களும் தோட்டங்களும் வனங்களும் நீர்ப்பரப்புகளுமே கண்ணை நிரப்பின. போகும் பாதையில் நிரம்பிய பச்சையம் மொத்தப் பயணத்திலும் கூடவே இருந்துவிட்ட தாகத் தோன்றுகிறது. ஒருவேளை ஒட்டாவாவுக்குப் பதிலாக டொரண்டோவில் இறங்கியிருந்தால், இப்படித் தோன்றியிருக்காதோ என்று மனம் நினைக்கிறது. வானுயர்ந்து நின்றிருக்கும் கட்டடங்களே மனதை முதலில் ஆக்கிரமித்திருக்கும். பேரங்காடிகள், காட்சிக்கூடங்கள், அருங்காட்சியகங்கள், கல்விக்கூடங்கள், வீடுகள், அலுவலகங்கள், சாலையின் பரப்புகள், போக்குவரத்துகள், கார்கள், டிராம்கள் என நவீனத்துவ அடையாளங்கள் பிடித்துக்கொண்டிருக்கும்.