ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்
தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது. வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர...