வெய்மூத்திலிந்து - அந்தக் குடியிருப்பிலிருந்து- விடைபெறலாம்
பெருஞ்சாலையிலிருந்து விலகி இடதுபுறம் திரும்பிச் செல்லும் சாலை 200 மீட்டர் தூரத்தைக் கடக்கும்போது அடர்வனப்பகுதி தொடங்குகிறது. உள்ளே நுழைந்த தடங்கள் இல்லாமல் தடுக்கும் மரங்கள் உயர்ந்து நிற்கின்றன. இரவு நேரத்தில் பறவைகளின் ஓசையோடு மிளாவின் ஓசையையும் கேட்கலாம். நுழையும்போது இடதுபுறம் ஒரு டென்னிஸ் மைதானம். அதனைத் தாண்டினால் உட்கார்ந்து பேசிக்கொள்ளச் சாய்வு மேசைகள். வலதுபுறம் வண்ணப்பூச்செடிகளோடு கூடிய சிமெண்ட் பாதைகளுக்குள் தோட்டமொன்று பிரிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகள் சிறுவண்டி ஓட்டிட ஒரு தளம். அதனருகில் ஒரு நீச்சல் குளம். ஒவ்வொரு வீட்டிலிருப்பவர்களுக்கும் ஒரு கார் நிறுத்துமிடம். அவர்களைப் பார்க்கவருபவர்களுக்காக 20 கார்கள் நிறுத்துமிடங்கள். பின்புறம் சுற்று நடக்க ஒருசாலை. அச்சாலையில் வாகனங்கள் வரத்தடை உள்ளது. கார்களை அவரவர் விருப்பப்படி நிறுத்த முடியாது. அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எண்களில் தான் நிறுத்தவேண்டும்.