நாடகமாக வாசித்தல்; அனுபவங்களிலிருந்து உண்டான பாடம்
எழுத்துப்பிரதிகள், ஒவ்வொரு வாசகருக்கும்
ஒவ்வொரு அனுபவம் தரக்கூடியன. ‘ அனுபவம்’ என்ற பதத்திற்கு ‘அர்த்தத்தளம்’ என்று அண்மைக்காலங்களில்
பொருள் சொல்லப்படுகிறது. ஒருவருடைய அர்த்தத்தளத்திற்கு, அவரது புறச்சூழல்கள் காரணமாக
இருக்கின்றன. சமூகப் பொருளாதாரப்புறச்சூழல்களும், அக்கால கட்டத்தில் கட்டியெழுப்பி
உலவவிடப்படும் கருத்தியல் புனைவுகளும் படைப்பாளியையும் பாதிக்கின்றன. வாசிப்பவர்களையும்
பாதிக்கின்றன.
வாய்மொழிக்கதைகளில் இருந்ததை
இதிகாசமாக வான்மீகி வாசித்தார். சோழவளநாட்டின் பின்னணியில் கம்பர் காப்பியமாக மாற்றி
உருவாக்கினார். அதிலொரு கிளைக்கதை ‘அகலிகை வெண்பா’வாகவும், ‘கல்லிகை’யாகவும் முறையே
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாராலும் ஞானியாலும் வாசிக்கப்பட்டது. பிரபஞ்சனால்
ஒரு நாடகமாக வாசிக்கப்பட்டு என்னால் மேடையேற்றமும் கண்டது. பலப்பலரால் கவிதைக் குறியீடாகவும் படிமமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.
இதிகாசம், காப்பியமாக, கதைப்பாடலாக, சிறுகதையாக, நாடகமாக, புதுக்கவிதைகளின் பகுதிகளாக
வாசிக்கப்பட்டதில் வாசகர்களின் விருப்பங்களும் காலத்தின் தேவைகளும் இருக்கின்றன. நாடகத்தை
மேடையேற்றியபோது எனது விருப்பங்களும் பார்வையாளர்களுக்கு நான் முன்வைக்க விரும்பிய
விளக்கமும் (Interpretation) இருந்தன.
இந்நூலில் நான் சில பிரதிகளை
என்போக்கில் நாடகப்பிரதிகளாக வாசித்திருக்கிறேன். இவற்றைப் பலரும் சிறுகதையென்னும்
வடிவத்தில் வாசித்திருக்கக்கூடும். சிறுகதையிலிருந்து நாடகங்களை உருவாக்கலாம் என நினைத்ததுகூட
தேவையின் அடிப்படையில்தான். நாடகவிழாக்களைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தி முன்னோடி
அமைப்பான மதுரை நிஜநாடக இயக்கம், 1988, டிசம்பர் 31 இல் ஒருநாள் கலைவிழா ஒன்றைத் திட்டமிட்டது.
அவ்விழாவில் ஒரு நாடகத்தை நிகழ்த்தவேண்டும் என்பதற்காகச் சுதேசிகள் என்றொரு நாடகக்குழுவைத்
தொடங்கினோம். அக்குழு மேடையேற்றுவதற்காகப் பல நாடகப்பிரதிகள் பரிசீலிக்கப்பட்டன. அந்தப்
பரிசீலனையின்போது புதியதாகவே நாடகங்கள் எழுதுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இருந்தோம்
என்ற பன்மைக்குள் நான், சுந்தர்காளி, அரவிந்தன். பொன்.சந்திரன், தனலெட்சுமி, வடகரை
ரவிச்சந்திரன், குமார், கண்ணன் முதலான மதுரை நண்பர்கள் வட்டம் அடங்கும். காட்சிப்பிழை
ஆசிரியர்கள் குழுவிலிருக்கும் சுபகுணராசன், பிரபாகர், மணி போன்றோரும் எப்போதாவது வருவார்கள்.
நண்பர்களின் உரையாடல் வட்டத்தில்,
பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப்
பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச்
சரியெனப்பட்டதால் எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள்
செய்யப்பட்டன. மேடையேற்றினோம். சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப்பிரதியை அனுப்பிவைத்து
மேடையேற்றத்துக்கு அழைத்தோம். “மேடையேற்றத்தின்போது வர இயலவில்லை” என்று கடிதம் எழுதினார்.
பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை;
நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார்.
அதிகமான
நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம்
தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம்
கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின்
பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத்தூக்கிகளைப்
பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை
உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை
முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும். அதனைக் கண்டறிந்து
தூரப்படுத்தியபின், 1990 களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில்
சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித
முரணிலையை உருவாக்கவேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும்,
வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில்
பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத்தூக்கிகளின் உரையாடலின்
வழி உருவாக்கப்படும் அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழிப் புறநிலை
முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுகிறார்.
புதுமைப்பித்தனின் சிற்பியின்
நரகம் சிறுகதை, நாடகத்திற்குத் தேவையான முரணைத் தன்னுள்ளே கொண்ட பிரதி. கதைமாந்தர்களுக்கிடையேயுள்ள
முரணை, இக்காலகட்ட இந்திய நிலைமையோடு பொருத்தச்செய்து வாசித்தது மட்டுமே எனது வேலை.
கலையின் இருப்பு, அமைப்பின் இயல்பு, அவ்விரண்டும் கொள்ளும் உறவும் முரணும் என்பது எல்லாக்காலத்திலும்
தொடரும் முரணிலை. இப்படி நாடகமாக வாசிக்கப்படவேண்டிய
சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் பட்டியல் ஒன்று எப்போதும் உண்டு. மிகக்குறைவான
கதைகளைத் தமிழில் எழுதிய திலீப்குமாரின் கதைகள் நாடகீயத்தன்மைகள் பலவற்றைக்கொண்டவை.
அவரது இரண்டு கதைகள் இங்கே நாடகமாக்கப்பட்டுள்ளன. அதேபோல் அதிகம் சிறுகதை எழுத்தில்
கவனப்படுத்தாத மதிவண்ணனின் வீடு என்ற கதையைச் சில கவிதைகளோடு பரப்பிப்போட்டபோது புதுவகை
நாடகமாக வடிவம் கொண்டது.
ஜெயகாந்தனின் ‘ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன’, ‘கோகிலா என்ன செய்துவிட்டாள்’ போன்றவற்றை நாடகமாக ஆக்கிவைத்திருந்தேன். மேடையேற்றிக் கொள்ளலாம்; அச்சிடக்கூடாது என்று அப்போது
அவர் சொல்லிவிட்டார். மேடையேற்றுவதற்கு எந்தக் குழுவும் அப்போது தயாராக இல்லாத நிலையில்
அந்தப் பிரதிகள் காணாமல் போய்விட்டன.
தமிழ்ச் சிறுகதைகளை மட்டுமல்லாமல்,
ஒரு புகழ்பெற்ற கவிதையிலிருந்தும், தொன்மக்கதையிலிருந்தும், சில நாடகங்களின் பகுதிகளைக்
கொண்டும்கூட நாடகப்பிரதிகளை உருவாக்கியிருக்கிறேன். எஸ்.டி.
கோலரிட்ஜ் எழுதிய ‘தி ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்’ என்ற கவிதையின் உணர்வும் அதில்
உள்ள கதைக்கூறுமே ‘சாபம்’என்ற நாடகத்தின் கட்டமைப்பாக
மாறியிருக்கிறது. ‘மூடதேசத்து முட்டாள் ராஜா’
நாடகத்தின் மூலக்கதை, இந்திய மொழிகள் பலவற்றிலும் இருக்கும் ஒரு தொன்மக்கதை. ‘ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்’
, சாமுவேல் பெக்கட்டின் ‘கிராப்பின் கடைசி
ஒலிநாடாக்கள்’ என்ற நாடகத்திலிருந்து ஒருசொல்லையும்
எடுத்துக்கொள்ளாமல் அதன் வடிவத்தை மட்டும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட பிரதி. ‘விளிம்பு’ நாடகத்திற்காக நன்றியோடு நினைக்கப்படவேண்டியவர்
ஹென்ரிக் இப்சன்.
அவரது பொம்மைவீட்டை
வாசித்ததின் விளைவு அது. தீர்ப்பளிக்கப்படாத வழக்கு என்ற நாடகம் எதன் மூலம் உருவானது
என்பதை நாடகத்தின் பகுதியிலேயே நீங்கள் வாசிக்கலாம்.
ஏற்கெனவே இன்னொரு வடிவத்தில்
எழுதப்பட்ட பிரதிகளை நாடகமாக ஆக்கவேண்டியதின் காரணங்கள் என்ன? என்று பலரும் கேட்கலாம்.
முன்னரே சொன்னபடி தேவைக்கான வாசிப்புதான். கவிதை அல்லது கதை என்னும் வகைமைகள் நேரடியாக
- ஒற்றைத் தொடர்பாக - வாசிக்கத்தக்கவை. நாடகம் திரளான வாசகர்களைப் பார்வையாளர்களாக
நினைக்கும் வகைமை. எழுதப்பெற்ற பிரதிகளைப் பலருக்கும் கொண்டுபோகவேண்டும்; சமகால மதிப்பீடுகளோடு
நினைத்துப் பார்க்கச்செய்யவேண்டும் என்பதான தேவைகளும் காரணங்களும் பின்னணியில் இருக்கின்றன.
அத்தோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. நாடக இலக்கியமே பலநேரங்களில் கடந்த காலத்தை எடுத்துச்சொல்வதன்
வாயிலாகவே நிகழ்காலத்திற்குரியதாக ஆகிக்கொள்ளும் வடிவம். அதனால் அதில் செயல்படுபவர்கள்
தங்களின் வெளிப்பாட்டிற்குக் கடந்தகாலத்திற்குள் பயணம் செய்துகொண்டே இருப்பார்கள்.
உலக அளவில் எடுத்துக்காட்டுகள் சொல்லமுடியும். சேக்ஸ்பியரின் பல நாடகங்களின் மூலக்கதை
அவருடையதல்ல; பெர்ட்டோல்ட் பிரக்டும் அப்படித்தான். சேக்ஸ்பியரின் ‘கிங் லியர்’ எட்வர்ட் பாண்டிடம் வெறும் ‘லியர்’
ஆக ஆகியிருக்கிறது. இன்னொரு நாடகமான மேக்பெத் நாடகம் அகிரோ குரோசோவிடம் புதுச்சினிமாவாக
மாறியது. பழையதைத் திரும்ப எழுதிப்பார்ப்பதும், தங்கள் வெளிப்பாட்டு வடிவத்தில் பார்வையாளர்களிடம்
கொண்டுபோய்ச் சேர்ப்பதும் அரங்கியல் மற்றும் திரைப்படவியலின் தேவைகள். ‘பழைய’ என்பதில்
கால வேறுபாடுகள் இருக்கலாம்; அவ்வளவுதான். பழைய பழையனவாக இருந்தாலும், புதிய பழையனவாக
இருந்தாலும் பழையது புதியனவாக ஆதலில் நிகழ்காலம் நம்முன் வருகிறது.
================================================================
வரப்போகும் நாடகத்தொகுப்பிற்கான
முன்னுரை
கருத்துகள்