திறமான ஆய்வு நூல்கள் - தேடிப்படித்த நூல்கள்

 கல்விப்புலப்பார்வையில் திறமான ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வுநோக்கைத் திறத்துடன் வெளிப்படுத்திய ஆய்வுநூல்கள் இவை

அடியும் முடியும் 

தமிழியற்புலத்தைத் தனது வளமான அறிவுத்திறனால் வளர்த்தெடுத்த அறிஞர்களுள் ஒருவர் க.கைலாசபதி. அவர் எழுதிய ஒவ்வொரு நூலுமே தேடித்தேடிப் படிக்கவேண்டிய நூல்கள் என்பதில் மாற்றில்லை. தமிழுக்குத் திறனாய்வுத்துறையை - கோட்பாட்டுத் திறனாய்வுகளை- அதன் உள்பிரிவுகளை அறிமுகம் செய்தவர்கள் பெரும்பாலும் அறிமுகநிலையிலேயே களைத்துப் போய்த் திசைமாறிவிடுவார்கள். 
ஆனால் கைலாசபதி மட்டுமே கற்றுத்தேர்ந்த திறனாய்வு முறைகளில் கோட்பாட்டு அறிமுகதோடு, அவற்றைப் பயன்படுத்தித் திறனாய்வைச் செய்முறையாகவும் செய்துகாட்டியவர். ஒப்பியல் ஆய்வை முனைவர்பட்டத்திற்கான ஆய்வாகக் கொண்ட கைலாசபதி அம்முறையில் காத்திறமான நூல்களை எழுதியிருக்கிறார். அதேபோல் அவரது சமூகப்பார்வையை வெளிப்படுத்த உதவிய மார்க்சியத் தத்துவம் கலை, இலக்கியத்தைப் புரிந்துகொள்வதற்கான முன்வைத்த மார்க்சியத் திறனாய்வுக் கோட்பாட்டைப் பயன்படுத்தியும் முன்னோடியான நூல்களை எழுதியுள்ளார். அவற்றையெல்லாம்விட ஆகச் சிறந்த வாசிப்பனுபவத்தைத் தரக்கூடிய நூலாக நான் நினைப்பது அடியும் முடியும் என்னும் நூலைத்தான். இந்நூலில் இடம்பெற்றுள்ள 5 கட்டுரைகளையும் வாசித்துப் புரிந்துகொள்ள நினைக்கும் ஒருவர் அதன் வழியாகத் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதையும் படிக்கும்படியான தூண்டுதலைப் பெறுவார் என்பது உறுதி.
மூலப்படிவவியல் அல்லது தொல்படிமவியல் என்பது உளவியல் அணுகு முறையின் ஒருபகுதி. ஒரு பிரதியின் எழுத்தை வாசிக்கும்போது எழுதியவரையே வாசிப்பதாகத் தொனிக்கும் பிரதி, முதன்மையாகக் கோருவது உளவியல் அணுகுமுறை வாசிப்பை. அவ்வணுகுமுறையைப் பின்பற்றி வாசிக்கும் வாசிப்பு, பிரதிக்குள் வெளிப்படும் பாத்திரங்கள், பேசுபொருள். பேசும் முறை என எல்லாவற்றையும் எழுதியவரின் உளவியல் சிக்கல்களோடு இணைத்துப் பேசத்தூண்டும். அதற்காக எழுதியவரின் வாழ்க்கைவரலாற்றையும் ரகசியங்களையும் தேடித் திரட்டச் சொல்லும். ஆனால் அதன் உட்பிரிவான தொல்படிவமவியல் அப்படியான கோரிக்கையை முன்வைக்காது. அதற்குமாறாக ஒருமொழியின் இலக்கியப்பரப்பில் ஒரே உரிப்பொருள் அல்லது கருத்தியல் திரும்பத்திரும்ப எழுதப்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கும் நிலையில், அவ்வுரிப்பொருள் அல்லது கருத்தியலின் தோற்றக்காரணி யாது? அல்லது எத்தகையது என்ற தேடலை வலியுறுத்தும். அப்படித் தேடிச் செல்வது புதுமையிலிருந்து பழைமையை நோக்கிய பயணமாகவும் ஒவ்வொரு ஆசிரியனும் அதைக் கையாண்ட விதத்திற்கான சூழல்காரணங்களைச் சொல்லவேண்டிய நெருக்கடியையும் உருவாக்கும். அப்படியான மூலப்படிமவியல் அணுகுமுறையைக் கோட்பாடாகவும் செய்ம்முறைத் திறனாய்வாகவும் எழுதிக் காட்டிய நூல் அடியும் முடியும். அந்நூலைக் கட்டாயம் வாசிக்கவேண்டும் என்று சொல்வேன். நான் 
அதிலிருக்கும் கட்டுரைகளைத் தேவைகருதிப் பலதடவை வாசித்திருக்கிறேன். நீங்களும் தேடிப்படிக்கலாம். குமரன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாவல்களில் உடல்மொழி

இந்நூலின் ஆசிரியர் இப்போது அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இந்திய மொழிகள் பற்றிய ஆய்வுகளை உலக அளவில் கொண்டுசென்ற தமிழ் அறிஞர். அவரை இந்தியப் பல்கலைக்கழகங்கள் -குறிப்பாகத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்திக்கொண்டது மிகவும் குறைவு. வ. அய். சுப்பிரமணியனின் வழிகாட்டுதலில் தொடங்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தராக ஆக்கப்பட்டிருக்கவேண்டும்; நடக்காமலேயே காலம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

மா.சு. திருமலை அவர்கள் 1986 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் அறக்கட்டளைச் சொற்பொழிவை நூலாக வெளியிட்ட நிறுவனம் அவர் அப்போது பணியாற்றிய இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம். அந்நிறுவனம் தமிழ் மொழிக்கல்வியோடு தொடர்புடையான முதன்மை நூல்கள் பலவற்றை வெளியிட்டிருக்கிறது. ஆனால் தமிழகப் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. அதனைப் பேசினால் என்னையும் சேர்த்தே நான் குறை சொல்லிக்கொள்ளவேண்டும். மைசூரிலிருந்து இயங்கும் இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வெளியிடும் நூல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமானவை.

மனிதர்களைப் படிப்பதற்கு அவர்களின் தொடர்புக்கருவியான மொழியைப் படிக்கும் மொழியியல் வழியாக முயல்வதே அறிவுத்தேடலின் முதன்மை வழிமுறை எனக் கருதிய கருத்தோட்டம் 1960 களில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் முதன்மைப்படுத்தப்பெற்றன. மொழியியல் கல்வியைச் சமூக அறிவியலின் மையமாக்கிய அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் தாக்கம் அல்லது கருத்தியல்போக்கு இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனம் வழியாகவே இந்தியப் பல்கலைக்கழகங்கள் பலவற்றுக்குள் நுழைந்தன. மொழியியலிலிருந்து மானிடவியல், சமூகவியல், சமூக உளவியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பலகிளைகள் இந்தியாவுக்குள் தோன்றுவதற்கு இந்நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் தூண்டுகோலாக இருந்தது.
1986- இல் ஆற்றிய உரையை 1987- இல் நூலாக வெளியிட்டது அந்நிறுவனம். அந்நிறுவனம் நடத்திய பயிலரங்கிற்குச் சென்ற எனது நண்பர் த.பரசுராமன் (புதுவை மொழியியல் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அவர் ஓராண்டுக்கு முன்பு மரணமடைந்தார்) அங்கிருந்து எனக்காக வாங்கிவந்து அன்பளிப்பாகத் தந்தார். தமிழ் நாவலில் உடல்மொழி என்று தலைப்பில் நாவல் என்பது மையப்படுத்தப்பட்டிருந்தாலும் இந்நூலை நாவல் விமரிசனம் என்றோ, ஆய்வு என்றோ நான் சொல்லமாட்டேன். நாவலை ஆய்வுக்கான கருவிப்பொருளாகக் கொண்டு மொழி, இலக்கியம், பண்பாடு என ஒன்றோடொன்று தொடர்புடைய பல்துறை ஆய்வுநூல். மனித உடலின் சாத்தியங்களையும் அதன் வழியாக உருவாக்கப்படும் மௌனமொழி, பேச்சுமொழி ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய தொடர்புமொழி உருவாக்கும் அழகியலை ஆய்வுசெய்துள்ள அடிப்படை ஆய்வுநூல் இது. ஒருதுறை ஆய்விலிருந்து பல்துறை ஆய்வுகள் வளரவேண்டிய காலகட்டமாக உலகப்பல்கலைக்கழகங்கள் அறிவித்து அரைநூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது.
தமிழகப்பல்கலைக்கழங்களும்கூட அத்தகைய முயற்சிகள் சிலவற்றைச் செய்திருக்கின்றன என்றாலும், அவற்றின் தாக்கம் மிகவும் குறைவு. பல்துறை ஆய்வுகள் பெருகவேண்டியதை வலியுறுத்தி ஆய்வாளர்கள் இந்நூலைத் தேடிவாசிக்கவேண்டுமெனக் கூறுவேன்.

சாசனும் தமிழும்

தமிழ் இலக்கிய வரலாற்றை ஆளுமைகள், ஆளுமைகள், ஆட்சியதிகாரங்கள் உருவாக்கவில்லை; ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றிய கருத்துகளே உருவாக்கின என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்ற நூல் ‘ தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும். அந்நூலின் ஆசிரியர் பேரா. ஆ. வேலுப்பிள்ளை. அந்நூலின் வழியாக அறிமுகமான அவரது இன்னொரு முக்கியமான நூல் “ சாசனும் தமிழும்”. இலக்கண,இலக்கியங்கள் புலமையாளர்களின் கருவிகள். அவர்களுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்தை நேரடியாக இல்லாமல் மேம்பட்ட வடிவில் பரிமாறிக்கொள்ளும் முறைமை அது. அதன் வழியாக அறியப்படும் தமிழியல் என்பது மேம்பட்ட புலமையாளர்களைப் பற்றிய அறிதலாகவே அமையும். அதற்கு மாறாகப் பெரும்பான்மை மக்களுக்குப் பழைய காலத்தில் செய்திகளைத் தருவனவாகவும் வழிநடத்துவனவாகவும் இருந்தவை கல்வெட்டுகள், செப்பேடுகள்,பட்டயங்கள் போன்றன. (இம்மூன்றையும் குறிக்கும் சொல்லாகச் சாசனங்கள் என்னும் சம்ஸ்க்ருதச் சொல் இருக்கும் என்பது அவரது நிலை)- 
இவற்றையும் கற்கவேண்டும் என வலியுறுத்தி எழுதப்பெற்ற நூலே சாசனமும் தமிழும். 
சாசனங்களை அவற்றின் வரிவடிவம், மொழியின் அடிப்படைக்கூறுகளான சொல் மாற்றும் தொடர்ப் பயன்பாடு,அதன் வழியாக வெளிப்படும் பண்பாடு, அதனைத் தாங்கிநிற்கும் இலக்கியங்கள், அதில் வெளிப்படும் வழக்காறுகள் எனப் பிரித்துப் படித்துக்காட்டியுள்ள இந்நூல் கடைசி இயலாகச் சாசனத்தில் தமிழ் இலங்கை என்ற இயலையும் கொண்டுள்ளது.

பிரிட்டானிய ஆட்சிக்காலத்தில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கம், அவற்றில் மொழி, இலக்கியக் கல்வியை அறிமுகம் செய்தல் போன்றன சமகாலத்தில் நடந்தன என்றாலும் அதனை உள்வாங்கிய விதத்தில் இலங்கைக்கும் -குறிப்பாகத் தமிழ் இலங்கைக்கும் தமிழ் இந்தியாவிற்கும் வேறுபாடுகள் இருந்துள்ளன. தமிழ் இந்தியா இங்கேயே கற்றுக்கொள்ளலாம் என முடிவெடுத்து ஆங்கிலேயர்களின் கையேட்டை வாங்கிப் போலச் செய்துகொண்டபோது,தமிழ் இலங்கை பிரிட்டானிய தேசத்திற்குச் சென்று கற்கும்- ஆய்வுசெய்யும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதைப் பார்க்கிறோம். அதனால் கிடைத்த நோக்கும் பார்வைகளும் அணுகுமுறைகளும்தான் தமிழ் இலக்கிய ஆய்வை வளப்படுத்தியுள்ளன. எனது வாசிப்பின் வழியாகப். பேரா. சு.வித்தியானந்தன், சு.கணபதிப்பிள்ளை போன்றவர்கள் அதற்கு முன்கை எடுத்தவர்களென அறிகிறேன். பின் தொடர்ந்தவர்களாக ஆ. வேலுப்பிள்ளை, க.கைலாசபதி,கா.சிவத்தம்பி போன்றவர்கள் என்று உணர்கிறோம். அவர்கள் அங்கேயே சென்று கற்றார்கள் என்றாலும் தமிழ் மரபையும் வளத்தையும் கைவிடாமல் கல்விப்புலத்திற்குள் உள்வாங்கவேண்டுமென்ற புரிதலோடு கற்றுவந்துள்ளார்கள் என்பது புரிகிறது இப்படியொரு வாய்ப்பைத் தமிழ்இந்தியா உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதின் விளைவுகள் பற்றியும் யோசிக்கவேண்டும். அதற்கு மாறாக தமிழ் இந்தியாவுக்கு ஆங்கிலேய/ அமெரிக்கக் கல்வியாளர்களே வந்து கற்றுத்தந்திருக்கிறார்கள் என்பதும் கவனிக்கவேண்டியதாக இருக்கிறது. நிற்க.
1971 இல் முதல் பதிப்புகண்ட இந்நூல் எனது ஆய்வுக்காலத்தில் தேடிக் கண்டடையவேண்டிய நூலாக இருந்தது. கழகப்புலவர் இரா. இளங்குமரனின் இல்லநூலகத்தில் அந்நூலைக் கண்டுபிடித்து வாசித்தேன். அவர் எந்த நூலையும் மூன்று நாட்களுக்கு மட்டுமே வாசிக்கத் தருவார். அதனைக் கொடுத்தபின் அடுத்த நூலைத் தருவார். அதில் தவறினால் அந்நூலகத்தைப் பயன்படுத்த முடியாது. இப்போது -2011 இல் குமரன் புத்தக இல்லம் / கொழும்பு- சென்னை வெளியிட்டுள்ளது. வாங்கிப் படிக்கலாம்
சங்ககால வாழ்வியல்
1986 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலின் ஆங்கிலத் தலைப்பு .சங்கம் பாலிட்டி(Tamil Polity) கதை,கவிதை வாசிப்பதிலும் அரசியல் விவாதங்களை முன்வைக்கும் மொழிபெயர்ப்பு நூல்களை வாசித்து விவாதிப்பதிலும் ஆர்வத்தோடு இருந்த என்னைத் திசைதிருப்பியது எனது முனைவர் பட்ட ஆய்வு. தமிழ்நாட்டின் வரலாற்றை இலக்கியங்களின் துணை இல்லாமல் எழுதமுடியாது என்ற கருத்தில் பிடிமானம் கொண்டிருந்த எனது நெறியாளர் தி.சு. நடராசன் அத்தகையதொரு ஆய்வை நீ செய்யவேண்டும் என்றார். நாயக்கர்கால இலக்கியங்களிலிருந்து தமிழக வரலாற்றை எழுதுவதற்கான சான்றுகளைத் தேடி வரலாறெழுதியலுக்கு உதவவேண்டுமென்றார். முதலில் மறுத்தேன். மறுத்ததற்கு மறைமுகமான காரணங்களும் வெளிப்படையான காரணங்களும் இருந்தன. அத்தோடு எனது இயலாமையும் இருந்தது. “ இக்கால இலக்கியங்களை வாசித்துச் சுகம்கண்ட உங்களைப் போன்றவர்களுக்குத் தமிழ் இலக்கியப்பாரம்பரியம் புரியாது" எனக் கிண்டலடித்து உசுப்பேற்றினார். அதன் பின்னர் சவாலாக ஏற்றுக்கொண்டு ஆய்வைத் தொடங்கினேன்.

தொடங்கிய காலத்தில் அவர் சொன்னவை: பல்லவர் கால வரலாற்றை எழுதியுள்ள மா. ராசமாணிக்கனாரின் ஆய்வுக்கு மேலும் வலுச்சேர்க்க ஆதாரமான தமிழ் இலக்கியப்பரப்பு அதிகம் இல்லை. ஆனால் சோழர்காலப் பின்னணியில் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. பிற்காலச் சோழர்காலத்தை பற்றிய வரலாற்று நூல்களாக சதாசிவ பண்டாரத்தார், நீலகண்ட சாஸ்திரி போன்றவர்களின் நூல்கள் வந்துள்ளன. அவ்விரு நூல்களின் முன்வைப்புகளை ஏற்றும் மறுத்தும் மே.து.ராஜ்குமார், க.கைலாசபதி, போன்றவர்கள் கட்டுரைகளும் நூல்களும் எழுதுகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாயக்கர்கால இலக்கியங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார். 

அந்த ஆய்வுக்கான முன்னோடியாக-முன்மாதிரிகளாக- சொன்ன நூல்களில் ஒன்று சங்கம் பாலிட்டி (Tamil Polity)சங்ககாலத்தின் அரசியல், பொருளியல், பண்பாட்டு முறைகளை இலக்கியம் மற்றும் வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியில் ஆய்வுசெய்த நூல் அது. ஆங்கிலத்தில் வாசித்த அந்த நூலின் தமிழாக்கம் எனது ஆய்வுக்கு உதவவில்லை.நான் முடித்த பின்பே வந்தது. தமிழில் வந்தபோது திரும்பவும் படித்தேன். 2010 இல் மறுபதிப்பாகவும் வந்துள்ளது. அனைவரும் தேடிப்படிக்கவேண்டிய நூல்களில் ஒன்று ந.சுப்பிரமணியனின் சங்ககால வாழ்வியல். நியூசெஞ்சுரி புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது.
தமிழ் இலக்கியத்தை ஆழமாகக் கற்றலை விரும்பும் ஒருவர் வாசிக்கவேண்டிய நூல்கள் சில உண்டு. அவற்றை எழுதிய/ தொகுத்தளித்த அறிஞர்களின் பணியைப் பாராட்டவேண்டும். அவர்களின் பணிமுறைமையையும் ஆய்வுநோக்கத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கவேண்டும். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைசிறந்த நூல்கள் இருக்கும் என்றாலும் ஏதாவது ஒருநூலையாவது வாசித்துப் பயிற்சிசெய்வது ஆய்வாளருக்குப் பயன்படும். அத்தகைய நூல்களை எழுதிய ஆசிரியர்களின் அனைத்து நூல்களும் முழுமையான ஆழத்தோடும் அகலத்தோடும் இருக்குமென்று நினைக்கவேண்டியதில்லை. சிலரின் கவனிக்கத்தக்க - தேடிப்படிக்கவேண்டிய நூல்களை இங்கே சுட்டிக்காட்டுகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்