பண்பாட்டுப் பெருவிழா: பெட்னா நினைவுகள்

ஒற்றை நோக்கம் கொண்ட பயணங்களை மட்டுமே திட்டமிடுவதில்லை. தமிழ்நாட்டுக்குள் திட்டமிடும் பயணங்களையே ஒன்றிற்கு மேம்பட்ட நோக்கங்களோடு தான் திட்டமிடுவேன். வெளிநாட்டுப் பயணங்களில் நிச்சயம் ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்கள் இல்லாமல் திட்டமிடக்கூடாது என்றிருந்தேன். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த ஆண்டுக் கோடை காலத்தைக் கழிப்பதென்ற திட்டத்துடன் முதலில் இணைந்தது ஒரு கனடாவின் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம். அதனைக் கல்வி நோக்கத்தில் அடக்கலாம் என்றால், இரண்டாவதாக இணைந்துகொண்ட நியூஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு (FETNA) நடத்தும் தமிழ் விழாவைப் பண்பாட்டுப் பங்கேற்பு என வகைப்படுத்தவேண்டும்.

அமெரிக்காவிற்குக் கிளம்புவதற்கு முன்பு பெட்னாவைப் பற்றி அறிந்தனவெல்லாம் பிரபலமான ஆளுமைகளை அழைத்துக் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்கும் ஓர் அமைப்பு என்பதாக இருந்தது. 1990 முதல் நடத்தப்படும் பெட்னா விழாவின் இந்த அடையாளத்தைச் சமீபகால நிகழ்வுகள் கொஞ்சம் மாற்றிட முனைந்திருந்தன. தீவிரமான கவிகள் என அறியப்பட்டவர்களும், திரைப்பட ஆளுமைகளும் நவீன நாடகங்களும் அழைக்கப்பட்டதைக் கவனித்திருக்கிறேன். அதனால் நாமும் பங்கேற்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. அழைக்கப்படாவிட்டாலும் பார்வையாளனாகப் பங்கேற்கலாம் என்ற திட்டம் இருந்தது. அதனைத் தாண்டி எனது அமெரிக்க வருகையைக் கூறி, அதன் தலைவர் நாஞ்சில் பீட்டருக்குக் கடிதம் ஒன்றையும் என்னைப் பற்றிய சிறுதகவலையும் அனுப்பினேன். அனுப்பிய ஒருவாரத்தில் நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள்; உரிய கடிதம் 10 நாட்களில் வந்து சேரும் என்றார்
முகநூல் வழியாகப் பெட்னாவின் நிகழ்ச்சிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் பற்றிய தகவல் முன்னோட்டமாக ஒன்றிரண்டு வந்தன. எனது பங்கேற்பும் படத்துடன் உறுதி செய்யப்பட்டது. எனக்கான அமெரிக்க நுழைவு அனுமதியை (VISA) ஏற்கெனவே வாங்கிவிட்டேன் என்பதால், பெட்னாவின் ஏற்பாடு களுக்காகக் காத்திருக்கவில்லை. அமெரிக்காவிற்கு வந்திறங்கி விட்டேன். கவி சுகிர்தராணி, பேரா.கல்யாணி, நாடகம் மற்றும் திரைப்படங்கள் சார்ந்த நண்பர் அம்ஷன்குமார் ஆகியோர் பெயர்களும் அந்த முன்னோட்ட விளம்பரங்களில் இருந்தன. தஞ்சாவூரிலிருந்து வரலாற்று நாடகமொன்றும் கலந்துகொள்ளும் என்ற தகவலும் இருந்தது. ஆனால் இவர்கள் அனைவரும் வரவில்லை என்பதை அங்கு போனதும் அறிந்தேன். அமைப்பாளர்களிடம் உடனடியாக விசாரித்தபோது அமெரிக்கத் தூதரகத்தில் புதிதாகக் கடைப்பிடிக்கத்தொடங்கியுள்ள புதிய விதிமுறைப்படி 2 மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்கவேண்டும் எனச் சொல்லிவிட்டதால் நுழைவு அனுமதி கிடைக்கவில்லை. அவர்களின் வருத்தம் நியாயமானது. வருத்தம் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியுள்ளதோடு அவர்களுக்குண்டான செலவுகளையெல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார் அதன் தலைவர் திரு நாஞ்சில் பீற்றர். அமெரிக்கத் தூதரகம் அனுப்பிய கடிதத்தையெல்லாம் எனக்குக் காண்பித்தார்.

முதலில் நடிகரும் தொழில் முனைப்பு வழிகாட்டி உரையாளருமான அரவிந்த்சாமியின் பெயரும், பின்னர் இன்னொரு நடிகர் ஜெயம் ரவியின் பெயரும் இணைக்கப்பெற்றன. இந்தப் பிரபலங்களோடு விஜய் தொலைக் காட்சிப் புகழ் சூப்பர் சிங்கர் பாடகர்களும் பங்கேற்பார்கள் என்ற தகவல்கள் எனக்குக் கலக்கத்தையே ஏற்படுத்தின. இவ்வளவு பிரபலங்களுக்குள் நான் கவனிக்கப்படும் வாய்ப்புகள் இல்லை என்றே நினைத்தேன். அடிப்படையில் நானொரு பேச்சாளன் அல்ல; பெரும்பத்திரிகைகளில் கதை, கவிதைகள் எழுதிப் படங்கள் போடப்பட்ட பிரபல ஆளுமையும் அல்ல. ஏராளமான கட்டுரைகளை எழுதியிருந்தாலும் அவை எதுவும் 500 பேரைத்தாண்டாத சிறு மற்றும் குறு இதழ்களில் தான். என்னைக் கூடுதல் எண்ணிக்கையில் அறியத்தந்த ஊடகம் என்றால், விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா? தான். நீயா நானா போன்ற நிகழ்வுகளில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு பேசுவது என்னைப்போன்றவர்களுக்கு எளிமையானது. பேசப்பட்ட கருத்துகளின் மேல் தர்க்க நியாயங்களோடு கூடிய- ஏற்கத்தக்க முடிப்புரையொன்றைச் சொல்லவேண்டும். அப்படி நான் சொன்ன முடிப்புரைகள் பலநேரங்களில் கவனிக்கப்பட்டதாக இருந்திருக்கின்றன என்பதைத் தமிழ்நாட்டில் பயணம் செய்தபோது உணர்ந்திருக்கிறேன்.

இரண்டுமாத வெளிநாட்டுப் பயணத்திட்டத்தில் யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கமும் பெட்னா விழாவும் சேர்ந்துகொண்டபோது சுற்றுலாப் பயணம் கல்வி மற்றும் பண்பாட்டுப் பயணமாக மாறிவிட்டது. யார்க் பல்கலைக்கழகக் கருத்தரங்கம் மே மாதத்தின் வாரக்கடைசி. கோடை விடுமுறையின் தொடக்கம். பல்கலைக்கழகத்திற்குத் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். கூடுதல் விடுமுறை தேவையில்லை. ஆனால் பெட்னா விழா நடப்பதோ ஒவ்வோராண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரக்கடைசி நாட்கள். அமெரிக்காவின் சுதந்திரதினத்தையும் உள்ளடக்கிய நீளும் வாரக்கடைசி எனத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஜூலையில் பல்கலைக்கழகம் தொடங்கிவிடும் என்பதால், பல்கலைக்கழகத்தில் கூடுதலாக அனுமதியும் விடுமுறையும் வாங்கவேண்டும். அதற்கான அழைப்புக்கடிதங்கள் வேண்டும். அத்தோடு அங்கிருக்கும் வேறுசில தமிழ்ச் சங்கங்களின் நிகழ்வுகளிலும் பங்கேற்க நேரிடலாம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதுகுறித்த கடிதங்களை ஏப்ரல் மாதத்தின் நடுவிலேயே அனுப்பிவிட்டனர். எனது அலுவலகத் தேவைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு உதவியவர் நண்பர் பாஸ்டன் பாலா. அவரது தொடர்புகளின் வழியாக வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்புகளின் தலைவரான நாஞ்சில் பீற்றரும் உரிய அழைப்புக்கடிதங்களை தேவையான நேரத்தில் அனுப்பிவைத்தனர். அதனால் பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கும் விடுப்புக்கும் விண்ணப்பம் செய்வது எளிதானது. பயணக் காலம் 50 நாட்கள், 80 நாட்களாக நீண்டு விட்டது.
வடஅமெரிக்காவின் பெருநகரங்களில் செயல்படும் தமிழ்ச்சங்கங்களின் செயல்பாடுகளையும் கல்வி முயற்சிகளையும் முன்பே அறிவேன். தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் ஒன்றில் அவற்றின் சார்பாளர்கள் சிலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஆர்வமும் ஓய்வு நேரங்களைத் தமிழ் கற்பிக்கப் பயன்படுத்தப்படும் பாங்கும் உள்நாட்டுத் தமிழர்கள் கைவிட்டவை. புலம்பெயர்ந்து வாழும் தேசத்தின் பெருமொழித்தேவையைக் கூடுதலாக உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க ஆங்கிலம் பேசும் லாவகத்தையும், அவற்றோடு லத்தீன், பிரெஞ்சு போன்ற சர்வதேச மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் விருப்பங்களும் உண்டு. அதனோடு சேர்த்துத் தங்களின் சொந்தமொழியின் தேவையையும் பெருமையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்தவேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்கள். தனிமனிதனுக்கான பண்பாட்டு அடையாளத்தொடர்ச்சி, அவரது தாய்மொழி வழியாகவே தொடரும். உலக மனிதனுக்குள் இருக்கும் உள்ளூர் அடையாளத்தைக் காட்ட, அவரது தாய்மொழியும், அதன் சொல்முறையும் இலக்கியங்களும் கலைகளும் வாழ்முறையறிவும் அவசியமானவை. அப்படித் தக்கவைப்பதென்பது பெருங்கடலில் நீந்தும் மீன்களின் வாலசைப்புகள். அதற்கு மாறாகச் சொந்தமொழியைக் கைவிடுதலென்பது பெருங்கடலில் கரைந்துவிட்ட உப்பாக மாறுதல். நாம் கடலின் மீன்களாக இருப்பதா? கரைந்துவிடும் உப்பாக இருப்பதா? என்பதைத் தீர்மானிக்கவேண்டியவர்கள் தனிமனிதர்கள். மீன்களாக இருக்க நினைப்பவர்களுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க நினைப்பதாகப் பண்பாட்டுக்குழுமங்களும் கூட்டங்களும் அமையும்.

பெட்னாவின் நான்கு நாள் பெருவிழாவில் முதல் நாளில் விருந்தினர் சந்திப்பின்போது விழா நடக்கும் விடுதியை அடைந்துவிட்டேன். எனக்கு முன்பே நடிகர் அரவிந்த்சாமி, மருத்துவர் சிவராமன், ஜெர்மனியிலிருந்து தமிழ் அறக்கட்டளையின் பொறுப்பாளர் சுபாஷினி போன்றோர் வந்துவிட்டனர். 2000 பேருக்கும் மேல் திரண்டிருந்த பெருவிருந்து அரங்கில் விஜய் தொலைக்காட்சிப் பாடகிகள் பாடிக்கொண்டிருந்தனர். விருந்தினர்கள் மேடையில் தோன்றினார்கள். ஒருவரோடு ஒருவர் இணைந்து நின்று படம் எடுத்துக்கொண்டார்கள். குழுமியிருந்த கூட்டமும் அங்கங்கே நின்று படம் எடுப்பதும் சாப்பிடுவதுமாகக் கடந்தது அந்த இரவை.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என்னிடம் வந்தவர் தன்னைச் சங்கர பாண்டியன் எனப் பெயர்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். அத்தோடு நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளர் என்றும் சொன்னார். பைக்குள் நாளை வெளியிடவுள்ள மலரின் பிரதியிருக்கிறது. அதை நீங்கள் தான் வெளியிட்டுப் பேசுகிறீர்கள். மருத்துவர் சிவராமன் பெற்றுக்கொண்டு பேசுவார். அந்நிகழ்ச்சி நாளை காலை 11.00 மணிக்கு என்றார். இது எனக்குக் கூடுதல் பணியாக நினைத்தேன். நான் அழைக்கப்பட்டபோது சொல்லப்பட்ட வேலைகள் இரண்டு. வார்சா பல்கலைக்கழகத்தில் நான் பெற்ற மொழிக்கற்பித்தல் அனுபவங்களை மையப்படுத்தி ஓர் உரையைப் பொதுஅரங்கில் தரவேண்டும். இன்னொரு உரையைத் தமிழ்நாட்டில் 100 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றக்காரணங்கள், தேவைகள், தாக்கங்கள் பற்றிப் பேசவேண்டும். இந்த இரண்டு உரைகளுக்கு மட்டுமே நான் தயாராகப் போயிருந்தேன். ஆனால் சங்கரநாராயணனின் அறிமுகமும் பேச்சும் என்னை மூன்று நாட்களும் அங்கேயே இருக்கவேண்டியவனாக மாற்றிவிட்டது. என்னோடு அவர் தனது பொறுப்பிலிருந்த “தமிழ்மணம்” இணைய இதழுக்காக பத்தாண்டுகளுக்கு முன்பு என்னைத் தொடர்புகொண்டதையெல்லாம் நினைவுபடுத்தினார். இங்கே உங்களது இணையவழிச் செயல்பாடுகளை அறிந்த பலரும் இருக்கிறார்கள்; உங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தப்போகிறோம் என்றார்.

முதல் நாளின் முற்பகலில் மலரைவெளியீடு. பேரவைகளின் ஆண்டுமலருக்கென ஒரு மலர்க்குழு இருந்தது. மலர் தயாரிப்பவர்களுக்கு முக்கிய நோக்கமும் இருந்திருக்கிறது. பாவேந்தர் பாரதிதாசனின் 125 -ஆவது பிறந்தநாள், தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு என்பன அவை. இதனோடு சேர்ந்து உலகத்தமிழர்களுக்கான மலராக இருக்கவேண்டுமென்ற அக்கறையை மலர்க்குழுவின் தலைவி ரேணுகா குமாரசாமி வெளிப்படுத்தியிருந்தார். கிழக்கிலிருந்து - ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, இலங்கை எனத்தாவி ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து அமெரிக்காவிலும் கனடாவிலும் தமிழ், தமிழர்கள் வளமாக வாழ்கிறார்கள் என்பதற்கான அடையாளங்களை மலரின் இதழ்களாக ஆக்கவேண்டுமென்ற ஆர்வமும் உழைப்பும் வெளிப்பட்ட இந்த மலரை வெளியிடுவதில் மகிழ்ச்சியெனக் கூறி வெளியிட்டேன். மருத்துவர் சிவராமன் பெற்றுக்கொண்டார். இன்னொரு நிகழ்வில் கவி அறிவுமதி எழுதி, உன்னிகிருஷ்ணன் மகளோடு சேர்ந்து பாடிய பாடலின் குறுவட்டு வெளியிடப்பெற்றது.மேற்கு வங்காளத்தின் கூடுதல் அரச செயலாளராக இருந்த திரு. பாலச்சந்திரன் இஆப.வோடு இந்தியவியல் அறிஞர் திருமதி ப்ரெண்டா பெக், முனைவர் சுபாஷிணி ஆகியோருடன் இணைந்து வெளியிடப்பெற்ற பாடல் உலகெங்கும் இணையம் வழியாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்க வழிசெய்யப்பட்டது. முதல் நாள் இரண்டு தடவை என்னை மேடையேற்றிய சங்கரநாராயணன் அடுத்தடுத்த நாட்களிலும் இரண்டு தடவை மேடையில் இருக்கவேண்டும் என்றார்.

இரண்டாவது நாள் திரளான கூட்டத்தில் தமிழ் உலகமெங்கும் கற்பிக்கப்படும் முறைகளின் வேறுபாட்டை எடுத்துக்கூறி, “மொழியென்பது அறிவு; அறிவே அதிகாரம்; தமிழ்மொழியின் வழியாக ஒவ்வொருவரும் அதிகாரம் பெறமுடியும்” என்று காரண காரியங்களோடு சொன்னபோது கூட்டம் கைதட்டி ஆரவாரம் செய்தது. பேச்சுக்குப் பின்னான இடைவேளையில் ஒவ்வொருவராக வந்து அறிமுகம் செய்துகொண்டு பேசினார்கள். இன்னும் எவ்வளவு நாட்கள் இங்கே இருக்கிறீர்கள்? எங்கள் மாநிலத்தமிழ்ச்சங்கத்திற்கு வரமுடியுமா? எனக்கேட்டபோது பேச்சின் ஆழம் அவர்களை யோசிக்கவைத்ததை நான் உணர்ந்தேன்.

பிற்பகலில் நடந்த வினாடிவினா நிகழ்வுக்கு நடுவராக இருக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. என்னோடு சங்கரபாண்டியனும் இருந்தார். 50 நிமிடத்தில் 50 கேள்விகள். தமிழண்ணல் அணி, வ.சுப. மாணிக்கம் அணி எனப் பிரிக்கப்பட்ட இரு அணிகளிலும் ஒவ்வொரு பக்கமும் 50 பேர். ஆழமான வினாக்களோடு உயர்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இதுபோன்ற போட்டிகளைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தமிழ் மாணவர்களுக்கு நடத்தவேண்டும். அதை உருவாக்கியவர் இப்போதைய தலைவர் நாஞ்சில் பீற்றர். இவ்வளவு பணிகளுக்கிடையிலும் இதை அமைப்பாளராக இருந்து அவரே கணியையை இயக்கினார். பாராட்டுக்குரிய ஒன்று. நடுவராக இருந்து ரசித்துக்கொண்டே இருந்தேன்.

நானே பங்கேற்ற இந்நிகழ்வுகளைத் தாண்டி அங்கே நடந்த பல நிகழ்வுகளுக்கும் பார்வையாளனாக அமர்ந்து நான் ரசித்ததோடு, வட அமெரிக்கத் தமிழர்களின் ரசனையையும் ஈடுபாட்டையும் கவனித்துக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். மருத்துவர் சிவராமனின் உரை மற்றும் கருத்துக்களத்தில் அவர்கள் பங்கேற்ற விதமாகட்டும், திருக்குறள் தேனீ என்ற நினைவாற்றல் போட்டியாகட்டும் ஒவ்வொன்றிலும் சிறுவர்களும் பெரியோர்களும் ஆழமான ஈடுபாட்டைக் காட்டினர்.
கரகாட்டம், பறையடிப்பு, கும்மியாட்டம் என மேடையில் பல நாட்டுப்புறக்கலைகள் வண்ணமயமாக அசைந்து கோடுகளை உண்டாக்கிக் கண்களுக்கு விருந்தளித்தன. இடையிடையே அறிஞர்களும், தமிழ் மொழிக்கும் பண்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் பங்களிப்புச் செய்தோரை அளித்துச் சால்வை அணிவித்து நினைவுப்பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்கள்.

சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையை நாடகமாக்கி ஒரு தமிழ்ச்சங்கம் மேடையேற்றியது. இரண்டு ஊர்களிலிருந்து வேலுசரவணன் தந்த பயிற்சியோடு இரண்டு சிறுவர் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. வேலுசரவணன் எனது மாணவன். தம்மின் தம்மக்கள் என்பதுபோல.. நம் மாணவர் நம்மைத் தாண்டும் தருணம் நமக்கும் பெருமை. எப்போதும் பார்வையாளர்களைத் தொட்டுவிடும் நாடகங்களை அரங்கேற்றும் வேலுசரவணன், தேவலோகத்து யானை,தங்கராணி என்ற இரண்டு நாடகங்களைச் சிறுவர்களைக் கொண்டு மேடையேற்றினார். ஒன்று நீதிக்கதை. இன்னொன்று எப்போதும் பொருந்தும் மிதாஸ் கதை. வேலுசரவணன் எப்போதும் பார்வையாளர்களை நிகழ்த்துநர்களாக்கும் வல்லமைகொண்ட அரங்கியலாளன். முதல் நாடகத்தில் உடலாலும் பேச்சாலும் தொட்டுவிடும் உத்தியைக் கையாண்டிருந்தார். இரண்டாவது நாடகத்தில் கருத்தால் பார்வையாளர்களைத் தொட்டுவிடும் உத்தியைக்கையாண்டார்.

இரண்டு மற்றும் மூன்றாவது நாளின் பிற்பகல்களில் ஐந்து அறைகளில் இணை அமர்வுகள் நடந்தன. அவரவர் விருப்பம் சார்ந்து தமிழ் மருத்துவம், ஆவணக்காப்பகம், வரலாற்றுத்தரவுகள், யோகா, ஓலைச்சுவடிகள் சேகரிப்பு என ஏதாவதொன்றைத் தேர்வுசெய்து பங்கெடுத்தனர். எனது விருப்பத்தின் அடிப்படையிலும் திருமதி சுபாஷினியின் வேண்டுகோளின்படி அவரது உரைக்களத்தில் பங்கேற்றேன். அண்மையில் கோப்பன்ஹாகன் அரச நூலக சேகரிப்பில் உள்ள தமிழ் ஓலைச்சுசடிகள் மின்னாக்கம் தொடர்பான அவரது உரைக்குப் பின் உடன் அந்த நடவடிக்கைகளில் நானும் இணைந்துசெயல்படுகிறேன் என உறுதியளித்திருக்கிறேன். ஆய்வுசெய்வதற்கான அடிப்படைத் தரவுகளைத் தொகுத்தளிப்பதற்குத் தன்னார்வம் வேண்டும். தன்னார்வத்தின் நிகழ்கால முன்மாதிரி சுபாஷ்சினி

பெட்னா தமிழ்விழாவில் சந்தித்த இன்னொரு ஆளுமை வைதேகி ஹெர்பர்ட். தனது மொழிபெயர்ப்பு சார்ந்த/ அகராதி உருவாக்க முயற்சிகள் சார்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வந்த வைதேகி ஹெர்பர்ட்டோடு உரையாடிக் கொண்டிருந்தேன். தனி மனுசியாக அவரது ஆர்வமும் பணிகளும் ஆச்சரியம் உண்டாக்குபவை. சங்க இலக்கியங்கள் மொழிபெயர்ப்பைத்தாண்டி இன்னும் பல பணிகளைச் செய்யத் தொடங்கிவிட்டார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையொன்றை உருவாக்கத்திட்டமிட்டுள்ள மருத்துவர்கள் சம்பந்தம், ஜானகிராமன் ஆகியோரோடு இணைந்து அதற்கான நிதிதிரட்டலில் மூன்று நாளும் கவனம் செலுத்தினார். அவரது தொடர்புகிடைத்தது முக்கியமான ஒன்று.
இரண்டாவது நாள் இரவிலும் மூன்றாவது நாள் இரவிலும் திரைப்படப்புகழ் ஆளுமைகள் மூலம் கூட்டத்திற்குக் கொண்டாட்ட மனநிலை உருவாக்கப்பட்டது. நடிகர் அரவிந்சாமியின் வணிக நிறுவனங்கள் குறித்த தனியுரையை நான் கேட்கவில்லை. பொது அரங்கில் அவர் பேசிய உரையைக் கேட்டபோது ஆழமானதும் நிதானமானதுமான ஆளுமையை அழைத்திருக்கிறார்கள் என்று தோன்றியது. அதேபோல் டி.எம். கிருஷ்ணாவின் இசை பற்றிய உரையையும் குறிப்பிட்டாகவேண்டும். மூன்றாம் நாளின் இரவைத் திரைப்படப்பாடல்களின் வழி உருவாக்கப்பட்ட ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்ற மனநிலை குதூகலமாக்கின.


அதற்கும் முன்னதாக நடந்த சங்கங்களின் சங்கமம் பெட்னா விழாவின் உச்சநிகழ்வு எனலாம். அனைத்துச் சங்கங்களும் தங்கள் மாநிலக் கொடியடையாளத்துடன் வந்து கலந்துகொண்டார்கள். விளையாட்டு அணிவகுப்புகளில் இடம் பெறும் இத்தகைய அணிவகுப்பைப் பண்பாட்டுத் திருவிழா ஒன்று உள்வாங்கியிருப்பதை இப்போதுதான் நான் பார்க்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தின்அணிகளும் தங்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்பதோடு கலந்துகொண்ட அந்தப் பெருநிகழ்வு கண்கொள்ளாக்காட்சி. எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் மாநிலத்தை அடையாளப்படுத்தும் நோக்கத்தோடு கரகம், காவடி, பறை, தப்பு, மத்தளம், கொம்பு, கும்மி, கோலாட்டம், கூத்து வேடம், செவ்வியல் நடனக்கோலம் எனத் தமிழ்நாட்டின் கிராமங்களும் நகரங்களும் நியுஜெர்சிக்கு பெயர்ந்திருந்தன. அப்படி இடம்பெயர்ந்திருந்தால்கூட இவ்வளவு வண்ணமயம் இருக்குமா? குதூகலம் இருக்குமா? என்று தெரியவில்லை. ஆண்களும் பெண்களும் வயதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு கலந்துகொண்டார்கள். நிச்சயம் தமிழ்நாட்டில் இது நடக்காது. பத்தாண்டுகள் நடனம் கற்ற பெண் திருமணத்திற்குப் பின் சலங்கையைத் தொட அனுமதிக்கப்படாமல் போன கதைகள் எனக்குத் தெரியும். கல்லூரிக்காலத்தில் கற்ற கலைகளையெல்லாம் வேலைக்குப் போனபின் தள்ளிவைத்து அதிகாரியாக ஆகிப்போன ஆண்களையும் அறிவேன்.

இந்தக் கொண்டாட்டங்களின் பின்னால் ஒரு வாழ்வியல் உண்மை இருக்கிறது. அமெரிக்காவின் சுதந்திரம் தந்த வெளிப்பாடு அது. தன்காலில் நிற்பேன் என்ற தன்னம்பிக்கை. அத்தோடு எனது நிலப்பரப்பின் அடையாளத்தைக் காட்ட வேண்டும் என்ற அக்கறை.
நான்காவது நாள் மதியம் வரைதான் நிகழ்வுகள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த நாளைத் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுவிழாக் கருத்தரங்கமும் பட்டிமன்றமும் தனதாக்கிக் கொண்டன. கருத்தரங்கில் ஓர் சிறப்புரையாற்றிய என்னை பள்ளிச்சிறார்களின் பேச்சுவளத்தைக் கூர்தீட்டும் தனித்தமிழ் இயக்கப் பட்டிமன்றத்திற்கும் நடுவராக இருக்கக் கேட்டபோது அன்போடு மறுத்துவிட்டேன். அங்கிருந்த பேரா. இரா.மோகனே பொருத்தமானவர் எனக்கூறி அவரிடம் வழங்கினேன். என்றாலும் பரிசு தரும் பொறுப்பு என்னிடமே வழங்கப்பட்டது. பட்டிமன்றத்திற்குப் பொறுப்பேற்றிருந்த நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த திருமதி சுபாவும் அந்நிகழ்வைத் தொகுத்தளித்தவரும் என்னைக் குறித்துக் கொண்டிருந்த கருத்து எனக்கே ஆச்சரியமூட்டுவனவாக இருந்தன. அமெரிக்காவில் இருக்கும் தமிழர்கள் வெகுமக்கள் ஊடகங்களான திரைப்படம், தொலைக்காட்சி, வியாபாரப்பத்திரிகைகள் போன்றவற்றை மட்டுமே கவனித்து ஆளுமைகளை முடிவுசெய்பவர்கள் அல்ல என்பது புரிந்தது. தொடர்ந்து இணையம் வழியாக நான் எழுதும் கட்டுரைகளை அவர்கள் வாசித்திருக்கிறார்கள். எனது வலைப்பூவைத் தொடரும் நபர்கள் அங்கே இருக்கிறார்கள். குறிப்பிட்ட கட்டுரையைச் சொல்லிக் கேள்விகேட்டவர்களையெல்லாம் தமிழ்நாட்டில் சந்தித்ததே இல்லை.
நிகழ்ச்சிநிரல் திட்டமிடலில் ஒரு பன்னாட்டுக்குழுமங்களின் தேர்ச்சி இருந்தது. கருத்துக்குரியன; காட்சிக்குரியன; செவிக்குரியன; சிந்தனைக்குரியன என ஒவ்வொன்றும் அடுக்கப்பட்ட விதத்திலும், அவற்றிற்கு வழங்கப்பட்ட நேரத்திலும் அதனைக்காணமுடிந்தது. அச்சடித்துத் தரப்பட்ட நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் நிமிடக்கணக்கில் தரப்பட்டிருந்தன. ஒன்று காலத்தை நீட்டினாலும், இன்னொன்றின் இடம் காலியாகிவிடும் என்பதால் காலத்தைக் கறாராகப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தினார் ஒருங்கிணைப்பாளர் சங்கரபாண்டியன் .
முதல் நாள் அறிவிப்பின்போது காலை 08.45 தொடங்கி இரவு 10 மணி வரை முதன்மை மேடையிலும் பிற்பகல் நேரங்களில் இணை அரங்குகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை அப்படியே பின்பற்ற வேண்டாம். கடைசிநேர மாறுதல்கள் இணையத்தில் இருக்கின்றன. அதில் மாற்றங்கள் இருக்காது என்றார். அதையே ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டுமென அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிரல் புத்தகத்தில் தரப்பட்ட இன்னொரு பட்டியலில் எத்தகைய மாற்றமும் இல்லை. அது உணவுப்பட்டியல். அதில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நேரமும் வழங்கப்படும் உணவும் உடன் வழங்கப்படும் பண்டங்களும் பானங்களும் எனக் குறிப்பிடப்பட்டபடி வழங்கப்பட்டதை அவர்களின் திட்டமிடலுக்குச் சான்றாகச் சொல்லவேண்டும். ஒரு பண்பாட்டுப் பெருவிழாவை எப்படித் திட்டமிட வேண்டும் என்பதையும் எவ்வாறு நடத்தவேண்டுமென்பதையும் ஒவ்வொருவரின் பங்கேற்பையும் எவ்வாறு கவனப்படுத்த வேண்டுமென்பதையும் எனக்குக் கற்றுத்தந்த விழாவாக இந்த பெட்னா விழா என் நினைவை விட்டு அகலாமல் இருக்கப்போகிறது.




கருத்துகள்

Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
பெட்னா பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்து இருக்கின்றன. ஆனால் உங்களின் இந்த பதிவில் மட்டும் பல பாசிட்டிவான தகவல்கள் வந்து இருக்கின்றன. இந்தியாவில் இருந்து வந்து பார்த்த உங்களின் பார்வைக்கும் இங்கேயே இருந்து விழாவில் கலந்து கொண்டவர்களின் பார்வைக்கும்தான் என்ன அளவு வித்தியாசம்... இந்த விழா என் வீட்டிற்கு அருகில் உள்ள பகுதியில் தான் நடந்தது ஆனால் அந்த சமயத்தில் குடும்பத்தோட கேன்ஸாஸ் நகரத்திற்கு தரைவழிபயணம் மேற்கொண்டதால் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை உங்களை போன்றவர்களின் பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து கொண்டு இருக்கிறேன்
Avargal Unmaigal இவ்வாறு கூறியுள்ளார்…
உங்களுக்கு நேரம் இருந்து விருப்பம் இருந்தால் என் வலைத்தளம் வாருங்கள் அரசியல் நையாண்டி மற்றும் பல் சுவை பதிவுகளை வழங்கி வருகிறேன் முகவரி http://avargal-unmaigal.blogspot.com/ நன்றி
naanjil இவ்வாறு கூறியுள்ளார்…
மிக்க நன்றி.
அருமையான பதிவு.
முனைவர் சொர்ணம் சங்கர் என்ற சங்கரபாண்டியன் எங்களுக்கு கிடைத்த அருமயான சொத்து. முன் நின்று வழி நடத்துபவர். தன்னலமற்ற உழைப்பாளி. மனித நேயமிக்கவர்.
Arizona penn இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள்மி பபயணத்தை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அதே சமயம் கொண்டாட்டங்களும் நிறைந்ததாகவும் திட்டமிட்டு இருந்தீர்கள்!!!!!!
Arizona penn இவ்வாறு கூறியுள்ளார்…
உங்கள்மி பபயணத்தை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக அதே சமயம் கொண்டாட்டங்களும் நிறைந்ததாகவும் திட்டமிட்டு இருந்தீர்கள்!!!!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்