திருமங்கலம் - இந்த ஊரின் பெயர் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கத் தொடங்கிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. அச்சு ஊடகங்கள் குறைந்தது ஒவ்வொரு நாளும் பத்து இடங்களுக்குக் குறையாமல் அந்தப் பெயரை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி ஒன்றின் மீது ஊடகங்கள் கொள்ளும் கவனம் இப்படித்தான் இருக்கும். பெயர் உச்சரிப்பு, அச்சிடல் என்ற அளவைத் தாண்டிய முக்கியத்துவம் கூடிக் கொண்டே இருக்கிறது சில நாட்களாக. பெயரைச் சொல்லும் போது காட்சிகளும் சேர்த்தே காட்டப் படுகின்றன. செய்திகளை அச்சிடும் போதே படங்களையும் சேர்த்தே இடம் பெறச் செய்கின்றன. இனிவரும் நாட்களில் இந்தப் பெயர் இன்னும் கூடுதலாக ஒலிக்கப் படும்; காட்சிகளின் தொகுப்புகள் கூட இடம் பெறலாம். அதேபோல் செய்தித்தாள்களில் அச்சிடப் படும் செய்திகள் தேர்தல் செய்திகள் என்ற வகைப்பாட்டைக் கடந்து கலவரச் செய்திகள் என்பதை நோக்கி நகரலாம். தேர்தல் முடிவுகள் வருவது திருமங்கலம் என்ற அந்தப் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பதையும் வாசித்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க முடியாது எனப் பிற இடங்களில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால்...