இடைத்தேர்தல் என்னும் குதூகலம்
திருமங்கலம் - இந்த ஊரின் பெயர் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் ஒலிக்கத் தொடங்கிப் பத்து நாட்கள் ஆகி விட்டன. அச்சு ஊடகங்கள் குறைந்தது ஒவ்வொரு நாளும் பத்து இடங்களுக்குக் குறையாமல் அந்தப் பெயரை அச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி ஒன்றின் மீது ஊடகங்கள் கொள்ளும் கவனம் இப்படித்தான் இருக்கும்.
பெயர் உச்சரிப்பு, அச்சிடல் என்ற அளவைத் தாண்டிய முக்கியத்துவம் கூடிக் கொண்டே இருக்கிறது சில நாட்களாக. பெயரைச் சொல்லும் போது காட்சிகளும் சேர்த்தே காட்டப் படுகின்றன. செய்திகளை அச்சிடும் போதே படங்களையும் சேர்த்தே இடம் பெறச் செய்கின்றன. இனிவரும் நாட்களில் இந்தப் பெயர் இன்னும் கூடுதலாக ஒலிக்கப் படும்; காட்சிகளின் தொகுப்புகள் கூட இடம் பெறலாம். அதேபோல் செய்தித்தாள்களில் அச்சிடப் படும் செய்திகள் தேர்தல் செய்திகள் என்ற வகைப்பாட்டைக் கடந்து கலவரச் செய்திகள் என்பதை நோக்கி நகரலாம். தேர்தல் முடிவுகள் வருவது திருமங்கலம் என்ற அந்தப் பெயரைக் கேட்டுக் கொண்டிருப்பதையும் வாசித்துக் கொண்டிருப்பதையும் தவிர்க்க முடியாது எனப் பிற இடங்களில் இருப்பவர்கள் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் திருமங்கலம் நகரவாசிகளும் அந்தத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் இருப்பவர்களும் அவ்வாறு இருந்து விட முடியுமா என்று தெரியவில்லை.
உசிலம்பட்டியை அடுத்துள்ள எனது கிராமத்திற்குச் செல்ல வேறு பாதை எதுவும் இல்லை. திருநெல்வேலியிலிருந்து திருமங்கலத்தில் இறங்கித் தான் உசிலம்பட்டிக்குச் செல்ல வேண்டும். அந்தப் பயணத்தில் திருமங்கலம் தொகுதியூனூடாகக் குறுக்கு வெட்டாகப் பயணம் செய்ய நேர்ந்த போது நான் கண்ட காட்சிகள் விதம் விதமானவை. ஒவ்வொரு கிராமத்திலும் தெருவெங்கும் சுவரொட்டிகள், பிளாஸ்டிக் தட்டிகளில் கட்சித் தலைவர்களின் பிரமாண்டமான வண்ணப் படங்கள். ஆங்காங்கே காதைக் கிழிக்கும் ஒலி பெருக்கிக் குரல்கள். ரோட்டோரங்களில் நிற்கும் நவீன ரகக்கார்களும் அவற்றின் அருகே வெள்ளை வேட்டி சட்டையில் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தொண்டர்களும் எனத் திமிலோகப் பட்டுக் கொண்டிருக்கின்றன அந்தக் கிராமங்கள். ஒரு பொதுத்தேர்தலில் இருப்பதை விடக் கூடுதலாகவே இடம் பெற்றுள்ளன. கூடுதல் என்றால் இரண்டு அல்லது மூன்று மடங்கு கூடுதல் என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டாம். நிச்சயம் பத்து மடங்குக்கும் கூடுதலாகவே இருக்கும்.
இந்தக் களேபரத்தில் திருமங்கலம் வாக்காளர்கள் ஒரு உறுதியைத் திடமாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. யாருக்கு ஆதரவு என்பதை வெளிப்படையாகச் சொல்லி விடக்கூடாது என்பதில் உறுதியைக் காட்டும் வாக்காளர்களிடம் கொஞ்சம் மிரட்சி மட்டும் காணப்படுவது உண்மை. மிரட்சி மட்டும் அல்ல; குதூகலமும் சேர்ந்தே வெளிப்படுகின்றது. காரணம் ஆங்காங்கே கோழி, கிடாய்க் கறிகளோடு கூடிய விருந்துகளுக்கும் பஞ்சமில்லை. காதில் விழுந்த செய்திகளும் கண்ட காட்சிகளும் தேர்தல் என்னும் நிகழ்வைக் கிராமத்துத் திருவிழாவாகவே மாற்றிக் கொண்டிருக்கின்றன.
திருவிழா என்றவுடன் கிராமத்துக்காரர்கள் அனைவரும் ஒருமனதாகக் கூடி உட்கார்ந்து பேசிக் காசு பிரித்து நடத்தும் திருவிழாக் கொண்டாட்டம் என்று நினைத்து விட வேண்டாம். அந்தத் திருவிழாவில் அம்மன் எடுப்பு, குலவை,கும்மி, தீச்சட்டி தூக்கல்,சாமி ஆட்டம், வேண்டு தலுக்காகக் காலில் விழுதல், காணிக்கை போடுதல், அருள் வழங்கல் என்பதான நிகழ்வுகள் கட்டாயம் இருக்கும். அதனூடாகக் கிராமத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மகிழ்ச்சி உத்தரவாதம் செய்யப்படும். இப்போது நடக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் என்னும் திருவிழாக் கொண்டாட்டத்தில் இவை எல்லாம் இருக்கின்றன என்பதென்னவோ உண்மை தான். ஆனால் மகிழ்ச்சிக்கும் சந்தோசத்திற்கும் மட்டும் உத்தரவாதம் இல்லை. அதற்கு மாறாகக் கலவரத்திற்கும் பீதியூட்டலுக்கும் தான் உத்தரவாதம் கிடைத்துள்ளது.
கிராமத்துத் திருவிழாக்களில் நடக்கும் நேர்மறைக் கூறுகள் எல்லாம் வெளியேற்றப்பட்டுத் தேர்தல் கொண்டாட்டம் என்னும் விழாவில் எதிர்மறைத் தன்மையோடு எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம் அந்தத் திருவிழா நிகழ்வுகளை ஒவ்வொரு ஊரிலும் நடத்துகிறவர்கள் அந்தந்த ஊர்க்காரர்கள் அல்ல;வேறு வேறு ஊர்களிலிருந்து வந்த ஆளுங் கட்சிக் காரர்களும் எதிர்க்கட்சிக் காரர்களும் என்பது தான்.
எல்லா இடைத்தேர்தல்களும் இத்தகைய பரபரப்போடு எதிர்கொள்ளப் படாத நிலையில் திருமங்கலம் இடைத்தேர்தலில் மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு?. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று விடுவதன் மூலம் ஆளுங்கட்சியை ஆட்சிக் கட்டிலிலிருந்து இறக்கி விட்டு எதிர்க்கட்சி ஆளுங்கட்சியாக ஆகிவிடுமா? நிச்சயமாக இல்லை. திருமங்கலத்தில் வெற்றி பெறுவதன் மூலம் ஆளுங்கட்சிக்கு இருக்கும் மைனாரிட்டி அந்தஸ்து முடிவுக்கு வந்து மெஜாரிட்டிக்குத் தேவையான எண்ணிக்கை கிடைத்து விடுமா? இதுவுமில்லை. அப்புறம் ஏன் இந்தப் பரபரப்பு?
கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்த ம.தி.மு.க.வின் வேட்பாளர் வீர.இளவரசன் வெற்றி பெற்ற தொகுதி திருமங்கலம். அவரது மரணம் (2009)காரணமாக நடக்கும் இடைத்தேர்தலில் தானே போட்டியிடாமல் தனது கூட்டணியின் முதன்மைக் கட்சியான அஇஅதிமுகவிற்குத் தொகுதியை விட்டுக் கொடுத்ததன் மூலம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலைக் கவனத்துக்குரியதாகவும் சூடு பிடிக்கும் வெளியாகவும் மாற்றியவர் வைகோ. அப்படி விட்டுக் கொடுத்த போதே பரபரப்பின் விதை தூவப் பட்டு விட்டது என்பதென்னவோ உண்மை தான். அவரே விட்டுக் கொடுத்தார் என்பதை விடவும் அவரிடமிருந்து கேட்டு வாங்கிப் போட்டியிட்டதின் மூலம் ஆளுங்கட்சியான தி.மு.க.வை நெருக்கடிக்குள்ளாக்கியது எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.
ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றும் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் ஆளுங் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே இத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்பதை எல்லாரும் ஒத்துக் கொள்ளவே செய்வர். ஒவ்வொரு கட்சியும் தங்கள் பலம் கூடுதலானது எனக் காட்ட இடைத்தேர்தல்களை வாய்ப்பாகப் பயன்படுத்தும் நடைமுறை பாராளுமன்ற அரசியலின் அங்கம் தான். தங்கள் பலத்தையும் மக்கள் ஆதரவையும் காட்டிக் கொள்ள இடைத்தேர்தல் ஒரு வாய்ப்பு என்ற நிலையில் அதிலும் அடுத்த நான்கு மாதத்திற்குள் நாட்டின் மைய அரசாங்கத்தை உருவாக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அத்தேர்தலில் தனியொரு கட்சியாகச் சந்திக்கும் திராணி எந்தவொரு கட்சிக்கும் இல்லை என்பதால் ஒவ்வொரு கட்சியும் தங்களது பலத்தைக் காட்ட இடைத்தேர்தலை வாய்ப்பாகக் கருதுதல் தவிர்க்க முடியாதது என்பது ஏற்கத் தக்க ஒன்றெ. அந்த அடிப்படையில் தான் ஆளுங்கட்சியான தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அஇ.அ.தி.மு. க.வும் திருமங்கலம் இடைத்தேர்தலை மானப் பிரச்சினையாக நினைக்கின்றன. வாழ்வா? சாவா? எனக் கருதி வெற்றி பெற்றே ஆக வேண்டும் என மோதுகின்றன. ஆனால் இடையில் திண்டாடுவது திருமங்கலம் மக்கள் என்பதைத் தேர்தல் கமிஷன் உணர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இன்னும் ஒரு பத்து நாட்களுக்குத் திருமங்கலம் என்ற பெயர் தொலைக் காட்சி ஊடகங் களிலும் அச்சு ஊடகங்களிலும் ஒலிக்கப்படுவதோடும் அச்சடிக்கப்படுவதோடும் நின்று விடும் என்றால் யாரும் கவலைப்படப் போவதில்லை. ஜனநாயக அரசியல் அமைதியாக நடை பெறுவதோடு ஆர்ப்பாட்டமாகவும் நடைபெறும் எனக் கருதி விட்டுவிடலாம். ஆனால் நடந்தவைகளும் நடக்கப் போகின்றவைகளும் வெறும் ஆர்ப்பாட்டம் என்பதாக மட்டும் நின்றுவிடும் எனச் சொல்வதற்கில்லை.
வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் படலத்தில் இரண்டு கட்சிகளும் சளைக்காமல் ஒருவரை மாற்றி இன்னொருவர் குற்றம் சாட்டிக் கொண்டே அதே பணியைத் தொடர்கின்றனர். அப்பணிக்கு இடையூறாக வரும் மாற்றுக் கட்சிக்காரர்களைத் தாக்கி விரட்டி அடிக்கும் காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் வாகனங்கள் நொறுக்கப்படுகின்றன. துப்பாக்கி சூடு நடக்கிறது. மாற்றுக் கட்சிக்காரர்களைத் தாக்குவதோடு புகார்களும் அளிக்கப்படுகின்றன. காவல் துறையின் கட்டுப்பாட்டை மீறிக் கலவரங்கள் தூண்டப்படுகின்றன. காவல் துறையைக் கைவசம் வைத்திருக்கும் ஆளுங்கட்சி முடிந்த வரை கைது நடவடிக்கைகள் மூலம் மேலாதிக்கம் செய்ய முயல்கிறது. அதன் தொடர்ச்சியாகத் துணை ராணுவத்தின் தேவையை எதிர்க்கட்சிகள் கோருகின்றன. பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் அதனை உறுதி செய்கின்றன.
பணம் கொடுத்து, கலவரங்களை உண்டாக்கி,பயமுறுத்திப் பெறும் ஓட்டுகள் மூலம் ஜெயித்த பின்பு ஜனநாயகம் வென்றது என ஒருவர் பேட்டி அளிக்கப்போவது மட்டும் உறுதி. உண்மை யில் இடைத்தேர்தல்கள் மூலம் ஜனநாயகம் வெற்றி பெறுகிறதா? பணபலமும் அடாவடித் தனமும் வெற்றி பெறுகிறதா? என்று கேள்வி கேட்டுத் திருமங்கலத்தில் திரும்பவும் ஒரு தேர்தலை- இடைத்தேர்தலைத் தேர்தல் கமிஷன் நடத்தினால் அச்சமும் பீதியும் கலந்த மனநிலையில் ஓட்டுப் போட்ட அவர்கள் ஜனநாயகமா? அப்படியென்றால் என்ன என்று தான் கேள்வி கேட்பார்கள்.
ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாகவும் வன்முறைக் கொண்டாட்டமாகவும் ஆக்கும் இடைத்தேர்தலுக்குப் பதிலாக ஏற்கெனவே வெற்றி பெற்ற கட்சிக்கே அந்தத் தொகுதியை வழங்கும் புதிய முறையைப் பற்றி யோசிப்பது அவசரத் தேவை என்று தோன்றுகிறது. நமது தேர்தல் முறையில் செய்ய வேண்டிய அவசர மாற்றங்களில் இந்த மாற்றம் உடனடியாகச் செய்ய வேண்டிய மாற்றம் என்பதைத் திருமங்கலம் உணர்த்திக் கொண்டிருக்கிறது.

கருத்துகள்