கொதிகலன் : கனவுலக நடப்பியலின் சாத்தியங்கள்
ஜீனத் எழுதிக் கோணங்கியின் கல்குதிரை இதழில் (39/2024) வந்துள்ள
கொதிகலன் சிறுகதையை அச்சில் வாசிக்கவில்லை. அண்மையில் அவரது முகநூல்
பதிவேற்றத்தின் வழியாக அறிந்த பின்னரே வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் மணிக்கொடி கால (1933 -1950) எழுத்தாளர்களில் கு.ப.ராஜகோபாலனின் பாத்திரத்தேர்வுகள்
நினைவுக்கு வந்தன. கு.ப.ராஜகோபாலனின் பாத்திரத்தேர்வுகளின் தொடர்ச்சியை விரும்பி
ஏற்றுத் தங்கள் கதைகளில் உருவாக்கி வாசிக்கத்தந்த தி.ஜானகிராமன், ராசேந்திரசோழன்,
சு.வேணுகோபால் போன்றவர்களின் பெண்மையப் பாத்திரக்கதைகள் நினைவுக்கு வருவதையும்
தவிர்க்க முடியவில்லை.
நினைவுகள் எல்லாம் ஒட்டுமொத்தமான புனைவுத்
தன்மைகளுக்கான நினைவுகள் அல்ல. கதைக்குள்
விவாதிக்கப்படும் உரிப்பொருளுக்காக/அடிக்கருத்திற்காக மட்டுமே நினைவில்
வந்தன. விவாதப்பொருண்மை அடிப்படையில்
ஜீனத்தின் கொதிகலன் அந்த வரிசையில் நிறுத்தப்பட வேண்டிய கதை என்றாலும் சொல்முறையாலும்
உருவாக்கப்பட்டுள்ள பாத்திரங்களாலும் முற்றிலும் புதிதான சிறுகதை.
கு.ப.ரா.வின் ஆற்றாமையை குறிப்பாக நினைவூட்டியது
ஜீனத்தின் கொதிகலன். ஆற்றாமையின் சாவித்திரியும், ஜீனத்தின் இர்பானாவும்
புணர்ச்சியின் ருசியை அறிந்த நிலையில் விலக்கி வைக்கப்பட்டவர்கள். ஆணின்
அருகிருப்பும் உடலின் பசியும் இயல்பான தேவை என்ற நிலையில் தொடர்ந்து கிடைக்காமல்
போனதில் தவிப்பில் இருப்பவர்கள். இதில் இருவருக்கும் ஒற்றுமை இருந்தபோதிலும்
கு.ப.ராவின் சாவித்திரியின் நகல் அல்ல இர்பானா. இருவரும் எழுதப்பட்டுள்ள
காலப்பின்னணியும் சமூகச் சூழலும் வேறுவேறு. அதனால் கிடைக்காமல் போன காமத்தைப்
பற்றிய எண்ணங்களும் புரிதல்களும் வேறுபடவே செய்யும். அதனை வெற்றிகொள்ளத்
துடிக்கும் மனநிலையும் வேறானதாகவே இருக்கும். அந்த வேறுபாட்டை முன்வைக்கும்போது
கு.ப.ரா.வின் எழுத்துப்பாணியிலிருந்து முற்றிலும் விலகிய கதைசொல்லியாக
வெளிப்பட்டுள்ளார் ஜீனத்.
காமம்
என்னும் ஆதாரப்பிரச்சினை
இலக்கிய உருவாக்கம் எப்போதும்
உயிரிகளின் ஆதாரப்பிரச்சினைகளை
விவாதப்படுத்த நினைக்கின்றது. திரும்பத்திரும்ப விவாதிக்கப்படும் ஆதாரப் பிரச்சினைகளாகச் சிலவற்றை இலக்கியவியல்
நூல்கள் பட்டியலிடுகின்றன. பட்டியலிடப்படுபவைகளில் காமமும் பாலியல் விருப்பங்களும்
தவறாமல் இடம்பிடிக்கின்றன. ஒரு விதத்தில் கட்டுப்படுத்தப்படும் காமமும் மீறலும்.
வயிற்றுப் பசியைப் போக்கும் தேடலைப் போன்றதும் கூட. விவாதப்படுத்தப்படும் காமமும்
காமத்தின் நிமித்தங்களுமே தமிழின் அக இலக்கியங்கள். தமிழின் இலக்கியவியல் நூலான
தொல்காப்பியம் புணர்தல், இருத்தல்,ஊடல், இரங்கல், பிரிதல், கைக்கிளை என்னும் ஒருதலைக்காதல்,
பெருந்திணை என்னும் பொருந்தாக்காமம் என்ற ஏழையும்
அக இலக்கியத்தின் பொருண்மைகளாக – அடிப்பொருளாகப் பட்டியலிட்டுள்ளது.
அதற்குரிய கலைச்சொல் உரிப்பொருள். அகத்திற்குரிய உரிப்பொருள் ஏழும் புறத்திற்கும்
உரியன என மாற்றுநிலையையும் சொல்கின்றது.
மனித உயிரிகள் மட்டுமல்லாமல்
எல்லாவிதமான உயிரிகளுமே அந்தப் பசியைத் தீர்த்துக் கொள்ள இன்னொரு உடலைத்
தேடுகின்றன. தன் பால் உடலைவிடவும், எதிர்ப்பால் உடல்கள் தரும் இன்பம் ஏற்றுக்
கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. உயிரிகள் என்ற பொதுவில் மனிதர்களும் அடக்கம்.
ஆனால் மனிதர்கள் மற்ற உயிரிகளிலிருந்து மாறுபட்டவர்கள். வாழ்வியலுக்கான
நெறிமுறைகளை உருவாக்கிக்கொள்வது அவர்களின் கண்டுபிடிப்புகளாக இருக்கின்றன.
வாழ்வியலோடு தொடர்புடைய இலக்கியத்திற்கான ஆதாரப் பிரச்சினைகள் ஒவ்வொன்றின் மீதும்
விதிகளையும் நெறிமுறைகளையும் உருவாக்குவதும் தொடர் நடவடிக்கைகளாக உள்ளன. கட்டுப்பாடுகளையும் தனித்தனியான மரபுகளையும்
உருவாக்கிக் கொள்வதில் காலச்சூழலும் இடப்பின்னணிகளும் பங்காற்றுகின்றன. அதற்கு மொழியும் பண்பாடும் கருவிகளாகவும்
காரணங்களாகவும் இருக்கின்றன.
உடலின் தேடலை உணரும் பருவங்கொண்ட
உடல்களை அங்கீகரித்துச் சேர்க்கும் நடைமுறையால் உருவாவது குடும்ப அமைப்பு.
அக்குடும்ப அமைப்பின் தோற்றத்துக்குப் பின்னால் தனிச்சொத்துரிமை என்னும் பொருளியல்
காரணம் இருந்த போதிலும், உடலின்ப இச்சையே முதன்மைக் காரணம். காமம் எனவும் பாலியல்
ஈர்ப்பு எனவும் உருவகப்படுத்தப்படுவது குடும்ப அமைப்பிற்குள் இருப்பவர்களுக்கு மட்டும் உரியதன்று. குடும்பத்தின் பகுதியாக
ஆகாதவர்களுக்கும் உரியது. திருமணத்திற்கு முந்திய தனிமையை ஏக்கமாக உருவகித்துப்
பேசுவதும், திருமணத்திற்குப் பின்னரான தனிமையை ஆற்றாமையாகவும் இலக்கியப்பனுவல்கள்
எழுதிக்காட்டியுள்ளன. ஐந்திணையில்
முல்லையின் உரிப்பொருளான இருத்தல் என்பதே
ஆற்றாமைதான். இருத்தலில் ஆற்றியிருத்தல் – ஆற்றாதிருத்தல் என இரண்டு நிலைகளை
எழுதியுள்ளன முல்லைப்பாடல்கள். இருத்தல்
என்பது சிறுபிரிவாகவோ, பெரும்பிரிவாக நீண்டு முடிவுக்கு வரக்கூடியன.
உடல்பசியைக் காமம் என்ற சொல்லால் பேசும்
பண்டைய தமிழ் இலக்கியங்கள், மிகுதியாக காமநிலையை நோயாகக் கருதியுள்ளன. உயவு நோய்
என்னும் சொல்லாட்சியைக் குறுந்தொகை, நற்றிணை, திருக்குறளின் காமத்துப்பால் போன்றன
தருகின்றன. காமம் தாங்கிய உடல்களின்
இருப்புநிலையை எழுதிக்காட்டுவது தமிழ் இலக்கியத்திற்கு மட்டும் உரியது அல்ல. உலக
இலக்கியத்தில் திரும்பத்திரும்ப எழுதப்படும் அடிக்கருத்து. சேர்ந்திருக்க வேண்டிய
ஆணுடலும் பெண்ணுடலும் பிரிந்திருப்பதின் காரணங்களால் வெளிப்படும் ஆற்றாமையும்
மீறலை நினைக்கும் எத்தணிப்பும் என்பது இலக்கியப் பனுவல்களில் தொடர்ச்சியாக
இடம்பெறும் ஒன்று.
சாவித்திரியும்
இர்பானாவும்
திருமணத்திற்குப் பின்னரான பிரிவு
அல்லது விலகல், அதனால் ஏற்படும் தவிப்பு,
என்ற அளவில் மட்டுமே கு.ப.ரா.வின் ஆற்றாமையும் ஜீனத்தின் கொதிகலனும்
இணைநிலைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக்காரணங்களால்
ஆற்றாமையின் மையப்பாத்திரமான சாவித்திரியும் கொதிகலனும் இர்பானாவும் ஒப்பிடப்
படுகின்றார்கள். கணவனின் நீண்ட பிரிவால் காமமும் உடல்பசியும் மீதூர
ஆற்றாதிருக்கும்போது உண்டாகும் பொறாமையின் வெளிப்பாடுகளைக் கு.ப.ரா.வின்
சாவித்திரியில் வாசிக்கலாம். கொதிகலன் கதையில் ஜீனத் உருவாக்கியிருக்கும் இர்பானாவாவுக்குள் இருப்பதும் காமமும் மீதூர்ந்த உடல்பசியுமே என்றாலும் அவள்
ஆற்றியிருப்பவள் அல்ல. ஆற்றாதிருப்பவளும் அல்ல; வேறானவள்.
இருவரது பாத்திர
உருவாக்கத்திற்கும் இடையே எண்பது ஆண்டுக்காலம்
[கு.ப.ரா/ ஆற்றாமை/ 1943;ஜீனத் கொதிகலன்/ 2024/கல்குதிரை 39] இடைவெளி உண்டு. சாவித்திரி
அக்கிரஹாரத்து மரபுகளுக்குள் நின்று தனது நிலைக்காகப் புலம்பும் பெண்; இர்பானா முஸ்லீம் சமயத்தின் கட்டுப்பாட்டுகளுக்குள்
வாழப் பழக்கப்படுத்துபவள். ஆனால் அப்படி வாழ்ந்துதான் ஆகவேண்டுமே என்ற கேள்விகளால்
ஆன தன்னிலை கொண்டவள். தன்னைக் கட்டுப்படுத்தும் சமய நம்பிக்கை முழுமையான பிடிமானம்
இல்லாதவள். சமய நம்பிக்கையை ஏற்று மகளுக்கான வாழ்க்கையை உருவாக்கித் தந்த தாயிடம்
தனது மாற்று வாழ்க்கைக்கான கோரிக்கைகளை முன்வைத்து விவாதிக்க நினைப்பவள். நவீன இந்தியாவில் பெண்களுக்குக் கிடைத்த கல்வியும் விடுதலை
உணர்வும் அவரவர் அளவில் வினையாற்றுகின்றன. சாவித்திரி புலம்பும் தன்னிலையோடு
வெளிப்படுகின்றான். கட்டுப்பாடுகளை மீறித் தனது காதலன் தேவச்சந்திரனைச்
சந்திக்கும் வழிமுறைகளைத் தேடும் தன்னிலையோடு இர்பானா பாத்திரம்
உருவாக்கப்பட்டுள்ளது கட்டமைக்கப்பட்டுள்ளது. பிரிவும் விலகலும் ஏற்படுத்திய பின்
விளைவுகள் இருவருக்கும் வெவ்வேறானவை. சாவித்திரியின் தவிப்பு பிரிவாற்றாமையால் நிரம்பியது என்றாலும் மீறலை நினைத்துப் பார்த்த
ஒன்றல்ல.
****
எல்லாச் சடங்குகளோடும் முறைமைகளோடும் முடிந்த
திருமணத்திற்குப் பின் நடந்த சாந்தி
முகூர்த்தத்தில் கணவனிடம் கிடைத்த தொடுதலின் ருசி மூன்று நாளில் முடிந்து போன
ஒன்று. மூன்று நாளில் பிரிந்து வடக்கே மிலிட்டரி சர்வீஸுக்குப் போனவன் இரண்டு
ஆண்டுகளாக வரவில்லை. நீண்ட பிரிவில் தொடுதலின் ருசியை அடங்காத பசியாகத் தாங்கிக்
கொண்டிருப்பவள் சாவித்திரி. அந்தப் பசியைப் பக்கத்து வீட்டுக் கமலாவின்
கொண்டாட்டமான தாம்பத்யம் எண்ணெய் ஊற்றி எரிய விடுகின்றது. அதனால் அவளின் ஆற்றாமை,
பொறாமையாக மாறிக் கமலாவைப் பழிவாங்கக் காத்திருக்கின்றது. கமலாவின் கணவனைப்
பார்க்க வந்த சீனுவைக் கதவைத் தட்ட வைத்து கமலாவின் உடலை இன்னொரு ஆடவனைப் பார்க்க
வைக்கின்றது. அந்த நடவடிக்கையைக் கமலாவின் கணவன் ராகவன் இல்லாமல் செய்திருக்க
முடியும். அவனது பொறுப்பற்ற தன்மையால் திறந்திருந்த கதவின் வழியாகக் கமலாவின் ‘ஆடை
நெகிழ்ந்த உடலை ஒரு கணம் பார்த்துவிடுகின்றான் சீனு. கமலாவின் மீது கொண்ட
பொறாமையால் அப்படிச் செய்த சாவித்திரி, தனக்குள் இருந்த பொறாமைப் பேய் மனநிலையை
உணர்ந்து குற்றவுணர்வும் கொள்கின்றாள். பிரிவு -தவிப்பு -ஆற்றாமை- குற்றவுணர்வு
எனப் பலவிதமான உளவியல் காரணங்களால் உருவாக்கப்பட்ட நேர்த்தியான கதை
கு.ப.ரா.வினுடைய கதை. எளிமையான நேர்கோட்டு வரிசையில் நிகழ்வுகளை அடுக்கிச்
சொல்லப்பட்ட கதை. சிறுகதை வடிவத்திற்குச் சொல்லப்பட்ட செம்மையான வடிவத்தில் –
குறைவான பாத்திரங்கள், குறைவான காலம், குறைவான நிகழ்வுகள் எனக் கச்சிதமான
வடிவத்தில் சொல்லப்பட்ட கதை .
******
பழைய
கனவுலக நடப்பியல் புனைவு (Fantacy fiction) என்ற வகைப்பாட்டிற்குள் விவாதிக்க வேண்டிய கதை
எனத் தோன்றியது. அப்படித் தோன்றக் காரணம் அந்தக் கதையின் தொடக்கம். கதையின்
தொடக்கச் சொற்றொடர் மட்டுமல்ல; முதல் பத்தி முழுவதுமே கற்பனையான நிகழ்வொன்றை
விவரிக்கின்றது. இதோ அந்தப் பத்தி:
எழுதியுள்ள கொதிகலன் நான் வாசிக்கும் முதல்
சிறுகதை. அவரத்
நன்றாகக் குரைத்து
முடித்து ஒரு நாய் நேராகத் தெருவின் சாலைக்கு வந்து அப்படியே திரும்பி வேறொரு நாயுடன்
சேர்ந்து இரண்டும் இருளில் மறைந்தன. குள்ளனுக்கு ஏதோ புரிந்தது. பின் சரசரவென்ற
சப்தம். பெரிய பாம்பொன்று கம்பி வேலிக்கிடையே புகுந்து தாண்டிச் சென்றது. வேலி
ஒன்று தான். ஆனால் அதைத் தாண்டும் முறை தான் மாறுபடுகிறது. குள்ளன் தலைக்கு மேல்
ஒளி வட்டம் பிரகாசிக்க துவங்கியது. இருளின் காதலுனுக்கு ஒளி எதிரி தானே. அதனால்
ஒளி வட்டத்தை அவன் அமர்ந்திருந்த கிளையில் மாட்டி விட்டு வேறு கிளையில்
அமர்ந்தான்.
ஜீனத் எழுதிக் கல்குதிரை (39/2024) இதழில்
வந்துள்ள கொதிகலன் சிறுகதையை வாசித்தேன்.
அவரது முகநூல் பதிவேற்றத்தின் வழியாகக் கிடைத்த பனுவலை வாசித்து முடித்தவுடன்
தோன்றியது இது கனவுலக
நடப்பியல் புனைவு (Fantacy fiction) என்ற வகைப்பாட்டிற்குள் விவாதிக்க வேண்டிய கதை
எனத் தோன்றியது. அப்படித் தோன்றக் காரணம் அந்தக் கதையின் தொடக்கம். கதையின்
தொடக்கச் சொற்றொடர் மட்டுமல்ல; முதல் பத்தி முழுவதுமே கற்பனையான நிகழ்வொன்றை விவரிக்கின்றது.
இதோ அந்தப் பத்தி:
வானில் ஒளிக்கற்றைகளைப்
போல் ஒளியெழுத்துகள் செல்போன் டவர்களுக்குப் பாய்ந்து பின் வெளியேறிக்
கொண்டிருந்தன. அவன் இருளைக் கிழித்துக் கொண்டு பறந்து கொண்டிருந்தான். அவனுக்குப்
பெயரில்லை. அவனை “ சித்திரக்குள்ளன் “ என தேவச்சந்திரன் அழைப்பான்.
இந்தப்
பத்தியில் வெளிப்பட்டுள்ள கற்பனாவாதம் படிப்பவரை உள்ளிழுக்கின்ற நோக்கத்தைக் கொண்டது. உள்ளிழுக்கின்ற
நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளது என்று சொல்வதை
மறுத்து,
“இந்தக் கதைத் தொடக்கம், வாசிப்பவர்களை வாசிப்பிலிருந்து விலக்கி வைக்கின்ற
தன்மையுடன் இருக்கின்றது எனச் சொல்லலாம். ‘உள்ளிழுக்கிறது’ என்று சொல்வதற்கும், ‘விலக்கி
வைக்கின்றது’ என்று சொல்வதற்கும் காரணமாக இருப்பது நடப்பியல் அல்லாத எழுத்து
முறைமை.
நடப்பியல் எழுத்து என்பது புனைவிற்குள்
குறிப்பான புனைவுத்தன்மையுடன் கதை நிகழ்வுக்கான வெளியையும் காலத்தையும்
உருவாக்கிக் கொண்டு அவ்விரண்டின் பின்னணியில் புனைவான பாத்திரங்களை உலவவிடும்
தன்மை கொண்டது. அந்தப் பாத்திரங்களும் சமகாலத்திலோ, கடந்த காலத்திலோ வாழும்/
வாழ்ந்திருந்த மனிதர்களின் சாயல்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இம்மூன்றும்
இணைந்த ஓர்மையில் அளவையியல் சார்ந்த நம்பகத்தன்மை வெளிப்படும். ஆனால் நடப்பியல்
அல்லாத எழுத்து முறைமைகள் காலத்தையும் வெளியையும் உருவாக்குவதில் அளவியல் சார்ந்த
நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை தருவதில்லை. காலத்தொடர்ச்சியும் இடத்தொடர்ச்சியும்
இல்லாத வகையில் புனைவு வெளியும் காலமும் உருவாக்கப்பட்டிருக்கும் அத்தோடு புனைவில்
உலவும் பாத்திரங்களிலும் நேரடி வாழ்க்கையில் காணமுடியாத பாத்திரங்களும்
உருவாக்கப்பட்டுக் கதைக்குள் உலவும்.
இந்தப் பத்தியில் விவரிக்கப்படும்
எல்லாம் நம் முன் நடக்கக்கூடிய அல்ல. செல்போன் டவர்கள் வழியாக ஒளியெழுத்துகள்
கற்றைகளாகக் கிளம்பி வருகின்றன என்பதை வாசக மனம் நடக்கக்கூடியன என ஏற்றுக்
கொள்ளும். ஆனால் ஒருவன் பறந்துகொண்டிருந்தான் என்பதை ஏற்காது. ஆனால் சித்திரக்குள்ளன்,
தேவச்சந்திரன் என்ற பெயர்களின் மீது
கொஞ்சம் கற்பனைத்தன்மையோடு கூடிய நம்பிக்கையோடு ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருக்கப்
போவதில்லை.
இலக்கியப்பனுவல் ஒன்றை வாசித்து முடித்தவுடன்
இலக்கியத் திறனாய்வுக்குள் செயல்படும் வகைப்பாட்டு முறைமைகளுள் ஒன்றைக் கொண்டு
வகைப்படுத்தலாம். கலையியல் பார்வைகளின் அடிப்படையில் வகைப்படுத்திப் புரிந்துகொள்வதும்
விவாதிப்பதும் வாசிப்பு என்ற நிலையைத் தாண்டியது. – கவிதை, கதை, நாடகம் என
எந்தஒரு
வகைப்படுத்துவதின் பின்னணியில் ஒற்றை அடிப்படை
மட்டுமே செயல்படுகின்றது என்பதில்லை. எழுதப்பட்ட இலக்கியப்பனுவலின் உரிப்பொருள்
அல்லது உள்ளடக்கம் சார்ந்து என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கின்றது என்ற அடிப்படையில்
வகைப்பாடு செய்யும்விமரிச கலையியல் புரிதல்
[மற்றவை இங்கே முக்கியமில்லை என்றபோதிலும் சிலவற்றைப் பட்டியலிடம். மரணத்தைக் கண்டு அஞ்சுதலும்; மரணத்தை வெல்ல
நினைக்கும் மனநிலையும் இன்னொரு ஆதாரப்பிரச்சினை. அதேபோல் பொருளியல் தேவைகளுக்கான
போராட்டங்களும் இடப்பெயர்வுகளும் உலக இலக்கியத்தின் ஆதாரப்பிரச்சினைகளாக
இருக்கின்றன. வேறுபாடுகளைக் காட்டி
அடிமைப்படுத்துதலை எதிர்கொள்ளும் மீறல்களும்
மொழியின் வழியான அதிகாரமும் கூட அந்தப் பட்டியலுக்குள் இடம்பெறக்கூடியன.]
ஜீனத் / கல்குதிரை 39/2024
கொதிகலன்
1
வானில் ஒளிக்கற்றைகளைப் போல் ஒளியெழுத்துகள் செல்போன்
டவர்களுக்குப் பாய்ந்து பின் வெளியேறிக் கொண்டிருந்தன. அவன் இருளைக் கிழித்துக்
கொண்டு பறந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பெயரில்லை. அவனை “ சித்திரக்குள்ளன் “
என தேவச்சந்திரன் அழைப்பான்.
இர்பானாவும்
அதையே தான் அவனிடம் கேட்டாள். “ சித்திரக்குள்ளன் என்றால் குட்டிச்சாத்தானா?
உங்களுக்கு மாந்திரீகம் தெரியுமா? அது தப்பாச்சே?” அவளுள் எப்போதோ சேகரித்து
வைத்திருந்த குட்டிச்சாத்தானைப் பற்றியிருந்த பயமெல்லாம் கரும்புகையாய் மூளைக்குள்
விரவி ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தியது. அவள் தலைக்குள் குட்டி குட்டியாய்ப் பயங்கர
தோற்றத்தை உடைய சாத்தான்கள் குதித்தன. இன்னும் வெருண்டாள்.
அவன் “ மாந்திரீகமில்லை. அவன் சித்திரக்குள்ளன்.
குட்டியா அழகா இருப்பான். சுருட்டை முடி, பெரிய கண்கள், டை கட்டி இருப்பான்.
அப்புறம் லெதர் பெல்ட் போட்டிருப்பான்.ஒரே காலில் குதித்துக் குதித்து ஓடுவான்.
கட்டிடங்களின் சுற்றுச் சுவர்களைத் தாவித் தாவிப் போவான். நான் சொல்லும் வேலையை
செஞ்சிட்டு வருவான். அவன் ….முக்கியமான அழைப்பு வருகிறது . பின் அழைக்கிறேன்” என தேவச்சந்திரன் அழைப்பைத் துண்டித்தான்.
இர்பானாவுக்குச் சிரிப்பு வந்தது. அவள் முன்
சர்க்கஸ் கோமாளிகள் வந்து வேடிக்கை காட்டினர். சித்திரக்குள்ளனின் உருவத்தைத் தேவச்சந்திரன் சொன்னது போல் நினைத்தாள்.
இப்போது மிகவும் பிடித்தது.
சித்திரக்குள்ளன் நீண்ட தூரம் பறந்து வந்து விட்டான். அந்த ஒளிஎழுத்துகள்
தான் அயர்ச்சியை ஏற்படுத்தின. தூங்குவதை விட்டு இந்த மனிதர்கள் தொலைபேசியிலேயே
இருக்கின்றனரே. அப்படி என்ன தான் இருக்கிறது என ஆவல் மேலிட வாசிக்க ஆரம்பித்தான்.
காதல் எட்டுத்திசையும் பாய்ந்து கொண்டிருந்தது. திடீரெனக் கண்களை மூடி “பார்க்க
சகிக்கலை” எனத் திட்டி விட்டு “தூ” எனத் துப்பினான்.
அருகில் தன்
கூடு நோக்கி விரைந்து கொண்டிருந்த பறவை யார் துப்புவது எனப் பார்த்தது. அவன்
விசித்திரமாய் இருப்பதால் உன்னித்து நோக்க, குள்ளனுக்கு அதன் எண்ணவோட்டம் புரிந்து
அதனுடன் பேச ஆரம்பித்தான்.
“ என்ன பார்க்கிறாய்? நான்
பறவையுமில்லை.இயந்திரமும் இல்லை.
மனிதனுமில்லை “ என்றான்.
பறவை “
அப்படியெனில் நீ யார்? மாயங்கள் கற்றவனா? “ எனக் கேட்டது. சித்திரக்குள்ளன் “
அப்படியும் சொல்லலாம்.வேறு மாதிரியும் சொல்லாம்.” என்று சொல்ல அதன் அர்த்தம்
புரிந்தும் புரியாமலும் பறவை தலையாட்டியது. அதற்குத் தெரிந்ததெல்லாம் இரை
தேடுவதும் கூடடைவதும் மட்டும்தான். “ நிம்மதியான வாழ்க்கை “ என சித்திரக்குள்ளன்
பெருமூச்சு விட்டான்.
அவன் முதுகில்
ஒரு பையைக் கட்டி வைத்திருந்தான். “அப்பையுள்
என்ன?” எனப் பறவை கேட்க “ஒரு மனிதன். இவனைக் கொண்டு போய் ஓரிடத்தில்
சேர்க்கணும்.”என்றான். பறவையோ “ ஏன்?
மனிதன் தானே? அவனால் போக முடியாதா” என்றது.
குள்ளன் “அது தானே சிக்கல்.இந்த
மனிதர்களுக்கு யதார்த்தத்தைக் கடக்க
சக்தியில்லை. மாயம் தேவைப்படுகிறது. அதனால்
இவர்களைப் போன்றவர்கள் கேட்டால் உதவுகிறேன்.” என்றான்.
“ கடினமான
வேலை தான் “ என்றது பறவை. குள்ளனோ “
எனக்கொன்றும் கடினமில்லை. இவர்கள் தான் உண்மை என்ன? மாயை என்ன? எனத்
தடுமாறுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தன் சுய விருப்பங்கள் சமூக விதிகளுக்கு
முரண்படும் போது பிறழ்கிறார்கள்.சமூகத்திற்குப் பயந்து தன் சுய விருப்பத்தின் படி
நடக்க இயலாது தவிக்கும் போது கற்பனையில் ஆழ்கிறார்கள். கனவின் வீரியம் அதிகமாகும்
போது என்னை உதவிக்கு அழைக்கிறார்கள். சரி, எனக்கு நேரமாகிறது. வாய்ப்பு இருப்பின்
சந்திக்கலாம் “ எனச் சொல்லி விட்டு இன்னும் விரைவாகப் பறந்தான்.
இப்போது ஒரு
நகரின் மேல் பறந்து கொண்டிருந்தான். கீழே பார்த்தான். ஒவ்வொரு வீடாக விளக்கு
அணைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தெரு விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன.
சரியான வேளையில் தான் வந்திருக்கிறோம் என நினைத்தான். ஒரு தெரு வந்தவுடன் பறப்பதை
நிறுத்தினான்.
தெருவின்
இருபுறமும் பெரிய பெரிய வீடுகள். தெரு விளக்குகள் சுவரில் பதுங்கிப் பதுங்கி
திருடனைப் போல் ஏறும் மரப் பல்லியைக் கூடக் காட்டின. இரு புறமும் மரங்கள்
இருக்கும் வீட்டைச் சுற்றித் தாழ்வாகப் பறந்தான். கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டு இருந்தன. யாரும் வீட்டின் வாயில்கள் வழியாகவோ கதவுகள் வழியாகவோ
உட்புக முனைந்தால் ஓங்கி ஒலிக்கும் அலாரம் இருந்தது. மாயனுக்கு இவை எல்லாம் ஒரு
பொருட்டா? வீட்டில் விளக்குள் எல்லாம் அணைக்கப்பட்டு இருந்தன. குளிரூட்டிகள் ஓடும்
சப்தம் மட்டும் கேட்டது. இலைகளின் துல்லியமான அசைவுகள் கேட்டன. மற்றபடி பணம்
கொடுத்து வாங்கிய நிசப்தம் வீதியில் இருந்தது.
அவ்வீட்டில்
ஒர் அறையின் சாளரம் மட்டும் திறந்திருந்தது. அறையில் மெல்லிய வெளிச்சம் இருந்தது.
சாளரத்தின் கம்பிகளைப் பிடித்த படி இர்பானா நின்று கொண்டிருந்தாள்.
சித்திரக்குள்ளன் சாளரத்தின் கம்பி மேல் நின்றான். அவள் அறைக்குள் வரச் சொன்னாள்.
அப்போது தான் சித்திரக்குள்ளனை முதன் முதலாகப் பார்த்தாள். சின்ன வயதில் அவள்
வைத்திருந்த சாவி கொடுத்தால் தாவித் தாவி ஓடும் பொம்மை போல் அவன் ஒற்றைக்காலினால்
எம்பி எம்பிக் குதித்துச் சொகுசு நாற்காலியில் அமர்ந்தான். தன் பின் புறம் கட்டியிருந்த
பையை மெதுவாகக் கழற்றிப் பத்திரமாக வைத்தான். இர்பானா எதுவும் பேசாமல் பார்த்துக்
கொண்டிருந்தாள்.
அவள் அறையின்
கதவு தாழிடப்பட்டு இருந்தது. குள்ளன் தண்ணீர் கேட்டான். அவளுக்கு மிகச் சிறிய
அளவினாலான பொம்மைகள் பிடிக்கும். அதில் ஒரு சின்னஞ் சிறு குவளை இருந்தது. அதில்
நீருற்றிக் கொடுத்தாள். குள்ளன் அருந்தி விட்டு அவள் அறையில் இருந்த கண்ணாடி போட்ட
அலமாரியைப் பார்த்தான். அதில் இயேசு நாதர் சிலை, சாய் பாபா சிலை, சயன நிலையில் ஒரு
புத்தர் சிலை ஆகியன இருந்தன. சாய்பாபாவுக்கும் புத்தருக்கும் நடுவே கண்ணாடிச்
சட்டகத்தில் தங்க நிற இதய வடிவத்தில் “LOVE” என்று எழுதப்பட்டு இருந்தது. அவற்றுக்குப் பின் மார்பிளால் செய்யப்பட்ட பெரிய தாஜ்மகால்
சிற்பமிருந்தது.
குள்ளன் “ சந்நியாசமும் காதலும்
கலந்து நிற்கிறதா? இல்லை குழம்பிப் போய் நிற்கிறதா?” எனக் கேட்டுச்
சிரித்தான்.இர்பானா பதில் சொல்லாமல் சிரித்தாள்.
அறையின் வெளியே
கொஞ்சம் நடமாட்டம் தெரிந்தவுடன் பதட்டமாகி “ நாம் பேசுவது வெளியில் கேட்குமா?” என
வினவினாள். குள்ளன் விழுந்து விழுந்து சிரித்தான்.
“ மாயத்தில்
தேர்ந்தவன் இருக்கும் போதும் சந்தேகமா?உனக்கு உங்கள் அறை வீட்டில் இருப்பது போல்
தோன்றும். ஆனால் அதை நான் வேறு இடத்தில் வைத்து விட்டேன். அது பற்றி கேள்விகள்
வேண்டாம். நேரமாகிறது.” என்று சொல்லிப் பையைத் திறந்து அவனை எழுப்பி, கைகளில்
சின்னஞ்சிறு சிசுவைத் தாங்குவது போல் தரையில் நிற்கவைத்தான். மந்திரங்கள்
ஓத,தேவச்சந்திரன் இயல்பான உருவத்திற்கு
வந்தான். “ என் வேலை முடிந்தது. ஓய்வெடுக்க செல்கிறேன் “ என்று சொல்லி விட்டு
சாளரத்தைத் தாண்டிக் குதித்தான்.
அறையின்
மௌனத்தை இருவரின் எண்ண எழுச்சியின் அதிர்வலைகள் சலனப்படுத்தின . நீண்ட நாள் பிரிவு
தந்த ஏக்கமும் வலியும் உடலை விட்டு வெளியேறக் காத்திருந்தன. இது நிஜம் தானா என
ஒருவரை ஒருவர் தொட்டுப்பார்த்தனர். இவ்வளவு நாட்கள் கண் முன்னே தோன்றி மறையும்
பிம்பங்கள் இல்லை. மெய் தான் என உணர்ந்ததும் கண்கள் கலங்க ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டே இருந்தனர்.
இர்பானா “ நாம்
நிஜமாகவே பார்த்துட்டோமா? நீங்க வந்துட்டீங்களா “ எனக் கேட்டு அவன் கன்னங்களை
கைகளில் தாங்கி மெதுவாக வருடினாள். அவள் கண்கள் கலங்கியபடியே இருந்தன.
“ ஆமாம்
செல்லம். நிஜமாகவே பார்த்துட்டோம்” எனும் போது அவன் தோளில் சாய்ந்து விசும்பத்
துவங்கினாள். “ நான் தான் வந்துட்டேன்ல. அழாதே.”
“ நமக்கு
மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்? ஏன் பார்க்கக்கூட முடியாதபடி இத்தனை
கட்டுப்பாடுகள்?”
இன்னும் அவள்
அழுகை அதிகமாயிற்று. அவன் இறுக அணைத்தான். தாய்ச் செட்டைகளின் கதகதப்பில் அவள்
அழுகை மட்டுப்பட்டது. அவளும் அவனை அணைத்தாள். கொஞ்சம் ஆசுவாசம் அடைந்ததும் அவன்
தோளில் சாய்ந்தாள். அவன் அவள் தலையைக் கோத, மென்மையான உரையாடலுக்குள் சென்றனர்.
வீட்டருகே
இருந்த ஒரு மரத்தின் கிளையில் சித்திரக்குள்ளன் அமர்ந்திருந்தான். பக்கத்து
வீட்டில் கணவன் மனைவியை அடிப்பதும் அப்பெண் அழுதுகொண்டே பேசுவதும் கேட்டது.
வீட்டினுள் சென்று பார்த்தான். கணவன் வசைமொழிகளால் இரைய அப்பெண்ணோ ஒரு துணி மூட்டை
போல் சுவரில் ஒட்டிக் கிடந்தாள். குழந்தைகள் திகில் படம் பார்ப்பது போல் கதவை
ஒட்டி வெளிறிய முகத்துடன் நின்றிருந்தனர்.வேதனை தாங்காமல் வெளியே வந்த குள்ளன்
இர்பானாவின் வீட்டின் பால்கனியில் அமர்ந்தான். இர்பானாவின் கணவனின் அறை தெரிந்தது.
நிஜாம் தன் விருப்பமான பெண்ணுடன், “ நீ தான் என்
காதலி. முடிவு சொல்” எனக் கெஞ்சிக் கொண்டே இருந்தார். மறுமுனையில் இருப்பவளோ தன்
கணவனை சைக்கோ என்றாள். பின் அவளின் இன்னொரு நண்பனை அவன் தான் அவளைக் காதலிக்கிறான். அவள் அவனைக்
காதலிக்கவில்லை.அவனால் அவள் பெயர் கெடுகிறது என்றும் சொல்லிக்கொண்டே, நடன
நளினங்கள்கூடிய மேலும் சிலந்தியினுடையதைப் போன்ற லாவகம் பயின்ற அவளின் கைவிரல்கள்
வண்ணவண்ண நூலிழைகளிடை புகுந்து, கச்சிதமான வலையாடை பின்னிக் கொண்டிருந்தன.
நிஜாமுக்கு இது பொருந்தும் என ஒரு கணம் எண்ணிக் கொண்டாள்.
சலிப்படைந்து மீண்டும் மரக்கிளையில் அமர்ந்த குள்ளன் “ இந்த
மனித உறவுகள் ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கின்றன? இங்கே பொருந்தாத திருமணங்கள் தான்
பெரும்பான்மையான சதவீதத்தில் உள்ளன. அப்படி பொருத்தமும் விருப்பமும் இல்லா வாழ்க்கையை ஏன் வாழ்கிறார்கள்?” என
யோசித்துக் கொண்டிருக்கும் போது எதிர்த் திசையிலிருந்து நாய்கள் குரைக்கும் சப்தம்
கேட்டது.
நாய்கள்
தன்னை இனம் கண்டு கொண்டன போலும் என நினைத்தான். அப்போதுதான் தன் முன்னே உள்ள
நிலங்கள் கம்பி வேலியிட்டு பிரிக்கப்பட்டிருப்பதைக் கவனித்தான்.வேலிக்கு இப்புறம்
ஒரு நாய் குரைக்க மறுபுறம் ஒரு நாய் குரைத்தது. இவை சண்டையிடுகின்றனவா? இல்லை
துணையை அழைக்கின்றனவா?
நன்றாகக் குரைத்து முடித்து ஒரு நாய் நேராகத் தெருவின்
சாலைக்கு வந்து அப்படியே திரும்பி வேறொரு நாயுடன் சேர்ந்து இரண்டும் இருளில்
மறைந்தன. குள்ளனுக்கு ஏதோ புரிந்தது. பின் சரசரவென்ற சப்தம். பெரிய பாம்பொன்று
கம்பி வேலிக்கிடையே புகுந்து தாண்டிச் சென்றது. வேலி ஒன்று தான். ஆனால் அதைத்
தாண்டும் முறை தான் மாறுபடுகிறது. குள்ளன் தலைக்கு மேல் ஒளி வட்டம் பிரகாசிக்க
துவங்கியது. இருளின் காதலுனுக்கு ஒளி எதிரி தானே. அதனால் ஒளி வட்டத்தை அவன்
அமர்ந்திருந்த கிளையில் மாட்டி விட்டு வேறு கிளையில் அமர்ந்தான்.
2
இதமான குளிர்
காற்று வீசியது. அவனுக்குத் தூக்கம் வருவது போலிருந்தது.விடியற்காலை சரியான
நேரத்தில் எழாமல் போய் விட்டால் பிரச்சனை வந்து விடுமே என எண்ணி கண்களைக் கசக்கிக்
கொண்டான். கொஞ்சம் நடந்தால் தூக்கக்கலக்கம் போகும் என்பதால் மரத்திலிருந்து கீழே
குதித்து நடக்க ஆரம்பித்தான். தெரு நாய்கள் கூட இல்லாமல் வெறிச்சோடியிருந்தது.
திடீரென ஒரு வீட்டின் வாயிற்கதவு திறக்கும் சப்தம் கேட்டது.
அந்த
வீட்டிலிருந்து ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள்வெளி வந்தார்கள். அப்பெண்ணுக்கு
நாற்பது வயதிற்கு மேலிருக்கலாம். மிகவும் சோர்ந்து போய் இருந்தாள். கண்களில்
ஆர்வம் கலந்த பீதி இருந்தது. ஒரு ஆண் அவள் கணவன் போலும். அவன் வியர்வையைத்
துடைத்துக் கொண்டான். இன்னொருவர் மாந்திரீகன். அவன் மந்திரங்களை முணுமுணுத்துக்
கொண்டே கையில் பூஜை செய்யப்பட்ட பூசணிக்காயை வைத்து இருந்தான். குள்ளனுக்கு அந்தக்காய்
வெட்டப்பட்ட தலை போல் தெரிந்தவுடன் கொஞ்சம் வெருண்டான்.
மாந்திரீகன்
தெருவுக்கு நடுவே வந்து மந்திரங்களை ஆவேசத்துடன் சொல்லிப் பூசணிக்காயை உடைத்தான்.
அது மூன்றாய்ப் பிளந்து சிதறி தரையில் விழுந்தது.அவன் வாயிற்கதவின் அருகிலிருந்த
தண்ணீர்க்குழாயில் கை, கால்களை அலம்பினான். பின் அவர்களிடம், “ இனி வீட்டில்
பிரச்சனை வராது. குட்டிச்சாத்தான் ஏவலை எடுத்துட்டேன். உங்க இரண்டு பேருக்கும்
பூசலை ஏற்படுத்தியதே அவன் தான். இனி நீங்க இரண்டு பேரும் புது மாப்பிள, பொண்ணு
மாதிரி ஜம்முன்னு இருப்பீங்க. நான் சொன்னதை எல்லாம் மறக்காம செய்திடுங்க.
எக்காரணம் கொண்டும் அந்தத் தகட்டை எடுக்காதீங்க. நான் சொன்ன மந்திரத்தை சாயங்காலமா
தொடர்ந்து சொல்லுங்க. குடும்பம் சுபிட்சமா இருக்கும். கிளம்புறேன்” எனக்
கும்பிட்டு விட்டு சென்றான். தம்பதிகள் வீட்டினுள் சென்றனர்.
குள்ளன் சிரித்தான்.
“ அடப்பாவிங்களா! உங்களுக்குள்ளே சண்டை வந்தாலும் நாங்க
தான் காரணம். உங்களுக்கு வசியம்
செய்றதுக்கும் நாங்க தானா? முட்டாள்களா! உங்க மனசுல என்ன பிரச்சனைன்னு பாருங்க. அத
விட்டுட்டு எங்க மேல ஏன் வீணா பழி போடுறீங்க. இதுல மாந்தீரீகனுக்குக் கொடுத்து வேற
ஏமாறுங்க” எனச் சொல்லி விட்டு உடைந்த பூசணிக்காய் அருகே சென்றான். ஒரு பூசணித்
துண்டின் மேல் ஏறி அந்த மந்திரங்களை எள்ளலுடன் சொல்லி விட்டு சறுக்கினான்.
அப்போது இரவு
ரோந்துப் பணியில் இருக்கும் காவலர்கள் பைக்கில் வந்து கொண்டிருந்தனர். இவர்களுடன்
சென்றால் சுவாரஸ்யமாக இருக்குமென நினைத்தான். குள்ளன் வண்டியில் ஏறும்போது ஒரு
காவலரின் தொலைபேசி ஒலித்தது.அவர் வண்டியை நிறுத்தினார்.
“ தங்கம்.
என்னடா தூங்கலையா. டூட்டியில இருக்கேன். இன்னைக்கு வர முடியாது. நீ தூங்குடா “
எனக் கொஞ்சி விட்டுத் தொலைபேசியை வைத்தார்.
அடுத்த காவலர் “ என்னய்யா. சின்ன வீடா! பேசும் போதே தெரியுதே” என
நக்கலடித்து சிரித்தார். குள்ளனுக்கு
அலுப்பாக இருந்தது. “ இந்த மனிதர்கள்
இரவெல்லாம் இப்படித் தான் பொழுதைக் கழிக்கிறார்களா” என சலித்துக் கொண்டான்.
ஒரு காவலர் “
ஏய்! அங்கே பாருய்யா. மணி ஒண்ணாகுது. அந்த வீட்டம்மா இப்போ ஏன் மொட்டை மாடியில்
நிக்குறாங்க.வாசல்ல ஏதோ பூசணிக்காய் உடைச்சிருக்காங்க. அவங்க குடும்பத்தில
பிரச்சனைன்னு கேள்விப்பட்டேன். இந்த அம்மா கீழே விழுந்து செத்து நம்ம உசுரை
வாங்கப்போகுது.வா,போய் விசாரிப்போம்.” என்றார்.
அந்தப் பெண்மணியின்
உடலில் பணத்தின் செழுமை இருந்தாலும்
கண்கள் சோகமாக இருந்தன. வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாலையில்
வண்டியின் சப்தம் கேட்டவுடன் கீழே பார்த்தாள். காவலர்களைப் பார்த்தவுடன்
வீட்டுக்குள் போய் விட்டாள்.
காவலர் “அப்பாடா। அந்த அம்மா உள்ளே போயிடுச்சு. நாம
கிளம்பலாம்” என்றார்.
குள்ளன் வண்டியிலிருந்து குதித்து அந்த வீட்டுக்குள்
நுழைந்தான்.
3
அவள் அறைக்குள்
சென்றாள். குள்ளனுக்கோ அவள் தற்கொலை செய்து கொள்வாளோ? என்ற தவிப்பிருந்தது.
அப்படி ஒன்றை அவள் செய்ய முற்பட்டால், அவள் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி
அவளைக் காப்பாற்றவே அங்கு வந்திருந்தான். அறையின் வெளியிலிருக்கும் நாற்காலியில்
அமர்ந்து கொண்டான். அவள் பட்டென்று கதவைத் திறந்து வந்து அவள் கணவருடைய அறைக்குச்
சென்றாள். மெல்லிய வெளிச்சம் தரும் விளக்கைப் போட்டாள். அவள்
கணவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்.அவருடைய அலமாரியைத் திறந்து துணிகளுக்குப் பின்
எதையோ தேடினாள். அவள் தேடியது கிடைத்தது. அவள் அணிந்திருந்த இரவு ஆடைக்குள் அதைச்
சுருட்டி வைத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்று கதவை மூடினாள். குள்ளனுக்குப்
பயம் தலைக்கேறியது. அறைக்குள் செல்லத் தயங்கினான். அவன் தான் கண்ணியவான் ஆயிற்றே.
ஒரு பெண் தனித்திருக்கும் அறைக்குள் செல்வது தவறல்லவா.அதனால் கதவிற்கருகே நின்று
கொண்டான். ஏதேனும் ஆபத்து எனில் உள்ளே போகலாம் என எண்ணி செவிப்புலனை
கூர்மையாக்கிக் கொண்டான்.
அறைக்குள்
எதையோ தூக்கி எறியும் சப்தமும் பின் அப்பெண்மணி சத்தமாக அழுவது கேட்டது. இதற்கு
மேலும் தாமதித்தால் விபரீதமாகி விடுமென அறையினுள் நுழைந்தான். இருட்டாக இருந்தது.
அப்பெண்மணி கட்டிலில் அமர்ந்தபடி இரு கால்களையும் கைகளால் கட்டி முகத்தை அதில்
புதைத்து அழுது கொண்டிருந்தாள்.
அறையின்
வெளியிலிருந்து வந்த மென்மையான வெளிச்சத்தில் அவள் உருவம் நாடகத்திரை மீது
காட்டப்படும் திண்ணிழலுருவம்
போலிருந்தது. புலனுக்கும் அகப்படாவற்றை எல்லாம் பார்க்கும் குள்ளனுக்கு அவள் முகம்
தெரியாதது வியப்பை ஏற்படுத்தியது.
அவன் உற்று நோக்க அவள் வயிற்றில் ஒர் அனல் பந்து சுழல
ஆரம்பித்தது. ஆச்சரியமுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அப்பந்து தீயாய்க்
கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்து அவள் நெஞ்சில் நிலை கொண்டது. அத்தீயிலிருந்து
அவள் உடலுக்கு வெளியே தெறித்த தீத்துணுக்குகள் ஒரு காட்சியை உருவாக்கின.
அக்காட்சியில் அவளும் அவள் வயதை ஒத்த சிநேகிதியும் பேசிக் கொண்டிருந்தனர். குள்ளன்
அவர்கள் உரையாடலைக் கவனித்துக் கேட்க ஆரம்பித்தான்.
அவள் தன் தோழியிடம் “ எனக்கு உன்னைத் தவிர யாரோடும் இந்த
வேதனையைப் பேச முடியாது. என்னால் முடியல. செய்யத் தெரியல.தூக்கி எறிஞ்சிட்டேன்.”
எனச் சொல்லி கதறி அழ ஆரம்பித்தாள்.
இதோட பதினைந்து வருடமா அவர் என் பக்கம் கூட
வருவது இல்லை. அவருக்கு வேண்டியது வெளியில் கிடைக்குது. அந்த நேரங்களில் வெளியில்
சொல்ல முடியாதபடி உடலில் வலி வரும். அவரிடம் பல முறை ஒரு ட்ரீட்மெண்ட் போல் செய்யச்
சொல்லி வெட்கத்தை விட்டுக் கெஞ்சிட்டேன். மருத்துவரையும் பார்த்துட்டேன். மாதமொரு
முறை பார்லரில் இருந்து ஒரு பெண் வருவாள். அவள் பேசியல், பெடிக்யூர், மெனிக்யூர்,
கேர் மசாஜ், கலரிங் செய்வாள். அது ஒண்ணு தான் எனக்கு இருக்கும் ஒரே human touch.”
சின்ன வயசில
இருந்து சொல்லப்பட்ட மத போதனைகள், பாட்டியிலிருந்து இந்தச் சமூகம் வரை தலையில
ஏத்தி பதிய வைத்த கட்டுப்பாடுகள் எல்லாத்தையும் மீறவும் முடியாம, இந்த உடலுக்குத்
தேவையானதைச் செய்யவும் முடியாம இரண்டா பிளந்து போறேன். இந்த உடல் “கட்டுப்பாடுகள்”
என்கிற கொதிகலனுக்குள் இருக்குற தண்ணி மாதிரி கொதிக்குது. அதுவே கொதித்து அடங்கிடும். பின் வழக்கம் போல்
வேலை செய்றேன்.
நீ சொன்னபடி
முயற்சி செய்தேன். முடியலை. ஏன்னா அது பாவம்ன்னு போதிக்கப்பட்டது தலைக்குள்ள
பதிஞ்சு நிற்குது. நான் குளிக்கிற நேரம் தவிர என் உடலை நான் பார்த்ததோ தொட்டதோ
இல்லை.பூமியில் தோன்றிய முதல் மரம்போல் கை கால் எல்லாம் பாவம் செய்வது போல்
நடுங்குது.
பேசக் கூட
யாருமில்லாத தனிமையும் என்னைக் கொல்லுது. அந்த நேரங்களில் மனச்சோர்வுக்கு
உள்ளாகுறேன். அப்போ டாக்டர் கொடுத்த மாத்திரை ஒண்ணை எடுத்துட்டு சுருண்டு படுத்து
அழுவேன். அப்புறம் தூங்கிடுவேன். என் குரலில் இருக்கும் சோர்வு தெரியக்கூடாதுன்னு
போன் வந்தாக்கூட எடுக்க மாட்டேன். யாரிடமும் பேசக் கூட மாட்டேன். என் வாழ்க்கையப்
பத்தி யாரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பலை. அதற்கு மேல் யாராவது கேட்டா எனக்கு
உடம்பு சரியில்லைன்னு சொல்வேன். இந்த வயசுலயே ஏன் அடிக்கடி உடம்பு சரியில்லாமல்
போகுதுன்னு கேட்பாங்க. என்ன பதில் சொல்லமுடியும்? அவரை விட்டுக் கொடுக்கவும்
முடியாம, எதுவும் சொல்லாம அமைதியா இருந்திடுவேன்.
எங்களுக்குள்ள இருக்குற பிரச்சனைக்கு ஏவல்,
பில்லி, சூன்யம் காரணமா இருக்கலாம்ன்னு யாரோ சொன்னதைக் கேட்டு எனக்கு நம்பிக்கை
இல்லைன்னாலும் மாந்தீரீகனைக் கூப்பிட்டுச் செய்யவேண்டியதை செய்தாச்சு. எதுவும்
மாறவா போகுது? என் குழந்தைகளுக்கு அப்பா வேணும்ன்னு அவர் கூட வாழ்றேன்.
அவள் அறையில் அடத்தியான மௌனம் நிலவியது. அக்காட்சி
கரும்புகையாக மாறி மறைந்தது. குள்ளன் அவளைப் பார்த்தான். இப்போது நெருப்புக் கற்றை
அவள் நெஞ்சிலிருந்து கழுத்துவரை ஏறி இருந்தது. தீப்பொறிகள் வெளியேறி ஒன்றிணைந்து
மற்றொரு காட்சியை உருவாக்கின.அதில் அவளும் ஒரு வயதான பெண்மணியும் இருந்தனர்.
உரையாடல் துவங்கியது.
அவள் “ ஏன் என்
வாழ்க்கை இப்படி இருக்கும்மா? இப்படி காலம் முழுக்க தனியா வாழணும் ஏன் இறைவன்
விதித்தான்.” என அம்மாவிடம் கேட்டாள்.
அம்மா “சில பேருக்கு இப்படித் தான் வாழ்க்கை அமையுது. என்ன செய்ய.
அவர் அப்படி இருக்கார். நீ விதவை மாதிரி வாழப் பழகிக்கோ” என்றவுடன்
அதிர்ச்சியானாள்.
“ அவரைப் பத்தி தெரிஞ்சவுடன் ஏன் என்னை விவாகாரத்து வாங்க
வச்சிருக்கலாமே. நம்மதில தலாக் வாங்கிறதும் இன்னொரு கல்யாணம் செய்றதும்
தப்பில்லையே? நம்ம சொந்தத்திலேயே செய்திருக்காங்களே. உங்களுக்கு அப்புறம் எனக்கு
யார் துணைன்னு யோசிக்க மறந்துட்டீங்களா?
அம்மா “ விவாகரத்தெல்லாம் செய்யக் கூடாது. அப்படி
செய்தாலும் நீ நினைக்குற மாதிரி வாழ்க்கை அமையாது. இனி உனக்கு குழந்தைகள் மட்டும்
தான் வாழ்க்கை. அவங்களுக்குள்ள கடமையை செய்திட்டு ஓதி தொழுதிட்டு வாழ்” என்றவுடன்
“ நான் ஒரு
ஜென்ம வாழ்வை தொலைத்து விட்டு நிற்கிறேன். அப்போ குடும்ப கௌரவம் தான்
முக்கியமில்லையா? நான் தப்பா எதுவும் கேட்கலையே.எல்லாம் முறைப்படி தானே செய்ய
நினைக்கிறேன்.சின்ன வயதில் மெஹர் மாமி என்ன செய்தாங்கன்னு நான் பார்த்திருக்கேன்.
நான் அவங்களை குறை சொல்லலை. அவர் வீட்டுக்காரர் அவங்களை விட்டுட்டுப் போய் வேற ஒரு
பெண்ணோட இருந்தார். வெளியே தெரியாத வரை எல்லாம் ஒழுக்கமானவங்க தான். என்னால
தனியா இருக்க முடியலை. நானே என்னோட பேசிட்டு, எனக்கு நானே ஆறுதல்
சொல்லிட்டு….கடைசியில பைத்தியம் தான் பிடிக்கப் போகுது.“
என்றாள். அம்மா அமைதியாக இருந்தார்.
அக்காட்சி
மறைய ஆரம்பித்தது. இப்போது நெருப்பு அவள் தலை வரை எரிய ஆரம்பித்தது. மூன்றாவது
காட்சி தெரிய ஆரம்பித்தது. அக்காட்சியில் அவளும் சிறிது வயதான ஆணும் இருந்தனர்.
அவர் தாடி வைத்து , வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வேஷ்டியும் அணிந்திருந்தார். அவள்
அறையிலிருக்கும் ஒரு ஓவியத்தைப் பார்த்தார். அது “கிரிஸ்டியன் ஸ்கோல்” என்ற ஓவியர்
வரைந்த ஓவியம். அந்த ஓவியத்தில் நீலமும் வெண்மையும் சாம்பல் நிறமும் கலந்த
பிண்ணனியில் ஒரு பதின்ம வயது சிறுமி கைகளால் கால்களைக் கட்டிக் கொண்டு
காட்டுக்குள் அமர்ந்திருக்கிறாள்.வெண்ணிற பூக்கள் சுற்றிலும் மலர்ந்து அவள் தோள்
வரை மறைத்திருந்தன. அவள் நத்தை ஓட்டைப் போல் கொண்டை போட்டிருந்தாள். அமைதியாக கீழே
கண்களைத் தாழ்த்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்பெரியவர்
“ என்ன படமிது. உருவங்களே
வீட்டில் வைக்கக் கூடாதுன்னு தெரியாதா? காபிர்கள்* தான் இப்படிப் படமெல்லாம்
வைப்பாங்க. இதை எடு. இல்லைன்னா சைத்தானின் ஊசலாட்டம் வரும்” என இறைந்தார்.
குள்ளன் அந்த ஓவியத்தைப் பார்த்தான். அந்தச் சிறுமியைச்
சுற்றியிருந்த பூக்கள் சிறிய அழகான வனதேவதைகளாக மாறிப் பறக்கத்துவங்கின. பின்
அப்பெண்ணின் உடல் பாகங்கள் ஒவ்வொன்றாய் கழன்று தரையிலிருந்த வட்டத்துக்குள் விழ
ஆரம்பித்தன. அவ்வட்டத்துக்குள் ஒர் இளைஞன்
உட்கார்ந்திருந்தான். அவனுக்கு கண்களும் காதுகளுமில்லை. முகத்தில் வாயும் மூக்கும்
மட்டுமே இருந்தது. முடியை குடுமி போல் கட்டி இருந்தான். அவன் தாடி அரைவட்டம் போல்
வளைந்திருந்தது.
அவன்
விழுந்திருந்த அந்தப் பதின்மவயது சிறுமியின் உடல் பாகங்களை எடுத்துத் தைக்க
முயல்கையில் அவை “ யார் நீ? ஏன் என்னைத் தைக்க முயல்கிறாய் ? எனச் சினமுற அவன்
“ நான் தான் சமூக விழுமியங்கள். உன்னை
சமூக நியதிகளின் படி முறையாக உருவாக்கப் போகிறேன் “ என்று சொன்னான். அவள் “ நீ
இளமையாகத் தெரிகிறாய். ஆனால் உன் குரல் மட்டும் ஏன் பல நூற்றாண்டுகள் வயதான கிழவன்
போலுள்ளது “ என வினவ அவன் சப்தமிட்டு சிரித்து விட்டு “ நான் பல்லாயிரம்
ஆண்டுகளாய் இப்பூமியில் வாழ்பவன்.
பலகீனமான தெளிவில்லாத மனித மூளைகளில் வசிக்கிறேன். மனித உறவுகளுக்கான
விதிகளை அவர்களிடம் சொல்லச் சொல்ல நடைமுறைப்படுத்துவார்கள். தலைமுறைக்கேற்ப சில
வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அடிப்படை விதிகள் மாறாது. இது போல் மனிதர்களின்
முடத்தனத்தை உறிஞ்சி வாழ்வதால் நான்
என்றும் இளமையாக இருக்கிறேன். “ என்று சொல்லிய படியே விழுந்து கிடந்த அப்பெண்ணின்
கையை எடுக்க முயலும் போது அது சீறி வட்டத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தது.
பின் ஒவ்வொரு
உடல் பாகங்களும் வட்டத்தை விட்டு வெளியேறி படுக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை
நோக்கி வந்தன. ஒவ்வொன்றாய் அவள் உடலில் இணைய ஆரம்பித்தன. முழுமையாக சேர்ந்த பின்
அப்பெண்மணி கால்களை நீட்டி உடலை வளைத்து முறுவலித்தாள். பின் “ ஹோ” என ஆதிவாசிப்
பெண்ணைப் போல் சப்தமிட்டாள். கொதிகலனுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அனல்
காற்று வெளியேறுவது போல் பெருமூச்சு விட்டாள். அறையே கொதிகலன் போல் சூடேறியது.
பின் சம்மணமிட்டு அமர்ந்து ஆழ்ந்து மூச்சு விட, நெருப்பு தணிய ஆரம்பித்து ஒரு
சுடராக அவள் நெற்றியில் ஒளிர்ந்தது.
குள்ளன்
இவற்றை எல்லாம் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்பெண்ணின் முகம்
மட்டும் தெரியாதது குழப்பமாக இருந்தது. தீவீரமாக யோசிக்கும் போது அவன் அப்பெண்ணின் இருண்மைக்குள் அவனே
சிக்குண்டதால் தான் அவள் முகம் தெரியவில்லை. மனித இருண்மை இவ்வளவு வலியதா. இன்னும்
சிறிதுநேரம் விட்டிருந்தால் கருந்துளை போல் தன்னையே விழுங்கியிருக்கும் எனக் கொஞ்சம்
அச்சமடைந்தான்.
அப்பெண்
ஓய்வறைக்குள் சென்றாள். திரும்பி வந்தவுடன் அலைபேசியை எடுத்து எதையோ பார்த்துக்
கொண்டிருந்தாள். நல்ல வெளிச்சம் அவள் முகத்தில் பட குள்ளன் அதிர்ந்து போனான்.
அவள்
இர்பானா. குள்ளன் வேகவேகமாய் போய் தொலைபேசியைப் பார்த்தான். அதில் தேவசந்திரனின்
புகைப்படம் தெரிந்தது.சற்று முன் தானே இருவரையும் ஒரே அறையில் விட்டு வந்தோம்.
இர்பானா இங்கு எப்படி வந்தாள்? தேவச்சந்திரன் எங்கு போனான்? குள்ளன் தலை சுற்றி
மயக்கமடைந்தான்.
4
குள்ளனை ஏதோ
நன்றாகக் கடித்தது போலிருந்தது. பதறி எழுந்தான். ஒரு பூச்சி ஊர்ந்து சென்று
கொண்டிருந்தது. அவனுக்கு நன்றாக விழிப்பு தட்டியதும் தான் இருக்குமிடத்தை விழித்து
விழித்துப் பார்த்தான். அட. இர்பானாவின் வீட்டின் அருகிலிருந்த அதே மரம்.
அப்படியெனில் தான் கண்டது கனவா? என்ற குழப்பம் அவனுள் எழுந்தது. அவனுக்கு எதையும்
அதிகம் யோசிக்கப் பிடிக்காது.ஒரு வகையில் ஞானி போல் தன்னை நினைத்துக் கொள்வான்.
பின் கோமாளி என்பான்.
எதிரே ஒரு
தோட்டம் இருந்தது. அங்கே சென்று நடக்கலானான்.
“ காதல் தான் என்ன மாதிரியான உணர்வு. நல்லாத் தானிருக்கு.
ஆனா சில பேரைப் பார்க்கையில் கஷ்டமா இருக்கு. நல்லவேளை என் இனத்தில் பெண்கள்
இல்லை. தப்பித்தேன். ஆனா காதலிக்கணும் போலிருக்கு. இன்னைக்குச் சேரமுடியாதவங்களைச்
சேர்த்து வைத்துவிட்டேன் .” எனப் பெருமையுடன் தன் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக்
கொண்டான்.
பரபரப்பான
நகருக்குள் இப்படி ஒரு பழமையான தோட்டமா? அது புவியின் முதல் கனியை உதிர்க்காத அமைதியில்
லயித்திருந்தான். பறவைகள் ஒலி எழுப்பத் துவங்கின. குள்ளனுக்கு விடியப்போகிறதென்ற
பிரக்ஞை வந்தது. விடிவதற்குள் தேவச்சந்திரனை இர்பானாவின் வீட்டிலிருந்து அழைத்துச்
சென்று விட வேண்டும். இல்லையெனில் இருவர் வாழ்வுமே கேள்விக்குறியாகி விடும் என்ற
பதற்றத்தோடு இர்பானாவின் வீட்டை நோக்கி விரைந்தான். அவள் அறையின் சாளரத்தை மெல்லத்
தட்டி, தேவச்சந்திரனை அழைத்தான். பின் அறைக்குள் போய் தேவச்சந்திரனைக் குள்ளனாக்கி
பைக்குள் அடைத்து விட்டு இர்பானாவிடமிருந்து விடை பெற்றுப் பறந்தான்.
5
இர்பானா
தூக்கம் கலைந்து மணி பார்க்க, கடிகாரம் ‘ஏழு’என்று காட்டியது.நீண்டநேரம் தூங்கிவிட்டோமெனப் பதறி
எழுந்தாள். வீடு இயங்க ஆரம்பித்த சத்தங்கள் கேட்டன. அப்போது தான் அறையின் கதவுகள்
திறந்திருப்பதைப் பார்த்தாள்.அவள் என்றும் கதவுகளை மூடாமல் தூங்கியதில்லை. முன்
தினம் வேலைப்பளு அதிகம் என்பதால் அசதியில் தன்னை மறந்து சீக்கிரம் தூங்கிவிட்டாள்.
கட்டிலை விட்டு இறங்கி சாளரத்தின் அருகே சென்றாள். அதற்கு முன்பே அவள் மனம்
ஒற்றைக்காலில் குதித்து குதித்துச் சென்று சாளரத்தைத் திறந்தது.
காபிர்கள் * - நிராகரிப்பாளர்கள்
ஜீனத்
13.12.23
.
கருத்துகள்