குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்கை அதன் தோற்றம், வளர்ச்சி, விரிவு, சிறப்புக் கூறுகள் என விவரித்து எழுதும் எழுத்துகள் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துவிடும். அப்படி அமைந்த முக்கியமான மூன்று நூல்கள் என இவற்றைச் சொல்லலாம். இவற்றைத்தேடிப் படித்ததோடு பத்திரமாகவும் வைத்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய பார்வை நூல்கள் இவை. தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை,இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம். இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது...