தொகுப்புப்பார்வை: தேடிப்படித்த நூல்கள்

 குறிப்பிட்ட வகையான  இலக்கியப் போக்கை அதன் தோற்றம், வளர்ச்சி, விரிவு, சிறப்புக் கூறுகள் என விவரித்து எழுதும் எழுத்துகள் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துவிடும். அப்படி அமைந்த  முக்கியமான  மூன்று நூல்கள் என இவற்றைச் சொல்லலாம். இவற்றைத்தேடிப் படித்ததோடு பத்திரமாகவும் வைத்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய பார்வை நூல்கள் இவை.

தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்

சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை,இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம்.

இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது பக்தி என்னும் அரூபம்.பொருள் நிராகரிப்பு பக்தி கவிதைகளில் வெளிப்பட்டாலும், காதலையும் காமத்தையும் கடவுளிடமிருந்து எளிதாகப் பெற நினைப்பதைத் தமிழ்ப் பக்திக்கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.

அகமரபின் நீட்சியாகத் தமிழ்ப் பக்திக் கவிதைகளை வாசித்து அதன் அழகியலைப் பேசும் தமிழாய்வு மரபு வளர்த்தெடுக்கப்படவேண்டிய ஒன்று. அதனை இந்நூலில் கோடிட்டுக் காட்டியுள்ளார் பேரா.அ.அ.மணவாளன்.அவர் எழுதியுள்ள முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதி, தொகுப்பிலுள்ள கவிதைகளில் பாதியை மொழிபெயர்த்து தந்தாலே தமிழ்க்கவிதை மரபின் குறிப்பிட்ட காலப்பகுதி உலக இலக்கியத்தின-மு பகுதியாகிவிடும். முக்கியமான காலப்பகுதி துலக்கும் பெறும். 
கல்விப்புலத்தினர்கூட அதிகம் கவனிக்காமல் கைவிட்ட பக்தி கவிதைகளை வாசிக்க இத்தொகுப்பு உதவும். தேடிப் படித்துப் பார்க்கலாம்.

தமிழ் இலக்கிய சரிதத்தில் காவியகாலம்

இப்போது உருவாக்கப்படும் பாடத்திட்டங்களில் இலக்கிய வரலாறுகளின்டுத்தலென சமாதானமடைவதைத தவிர வேறுவழியில்லை. அது போகட்டும்.
இடம் கேள்விக்குள்ளாகிவருகின்றது. “எளிமையிலிருந்து கடினத்திற்கு” என்றொரு கற்பித்தல் நிலையை முன்வைத்து வரலாற்றை ஆதியிலிருந்து தொடங்கி வரிசையாகப் படிக்காமல், தலைகீழாகப் படிப்பதை நியாயப்படுத்தும் ஆசிரியர்கள் நிரம்பியதாகப் பாடத்திட்டக்குழுக்கள் அமைந்துவிட்டன. பெரும்பான்மையோடு சண்டையிட்டுத் தோல்வியைத் தழுவியதுதான் மிச்சம். பெரும்பான்மையிடம் சிறுபான்மை அடைவது தோல்வியல்ல; விட்டுக்கொடுத்தல்.

மொழி, இலக்கியக்கல்வியைப் பகுதி ஒன்று அல்லது பகுதி இரண்டில் கற்பவர்களுக்கான இலக்கிய வரலாறும்,பட்டப்படிப்பிலும் முதுகலைப்படிப்பிலும் இலக்கியக்கல்வியைச் சிறப்புப்பாடங்களாகப் படிப்பவர்களுக்கான இலக்கியவரலாறும் ஒன்றுபோல் இருக்கமுடியாது; இருக்கக்கூடாது. நான் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படித்த காலத்தில் இந்த வேறுபாட்டை உணர்ந்தநிலையில் இலக்கியவரலாறுகள் கற்றுத்தரப்பட்டன; அறிமுகப்படுத்தப்பட்டன். எம்.ஆர். அடைக்கலசாமி வழியாக அறிமுகமான தமிழ் இலக்கியவரலாறு மு.வரதராசனின் நூல் வழியாக அதிகம் விரிவடையவில்லை. ஆனால் கா.சு.பிள்ளையின் இரண்டு பகுதிகள் வழியாகவும், மு.அருணாசலத்தின் நூற்றாண்டு அடிப்படையிலான இலக்கிய வரலாறுகள் ( 9 முதல் 14 ஆம் நூற்றாண்டுவரை பல பாகங்களில் எழுதியுள்ளார்) தமிழ் இலக்கியப்பரப்பின் விரிவைக் கூட்டின. அதே நேரத்தில் ஆ.வேலுப்பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் வேறுவகையாகத் தமிழ் இலக்கியப்பரப்பை - கருத்தியல் வளர்ச்சியை அறிமுகம் செய்தது.
மொத்த வரலாற்றை அறிந்த நிலையில் தனித்தனி இலக்கிய வகைகளின் வரலாறுகளைத் தேடும்போது நீண்டகாலம் என் பையிலும் கையிலும் இருந்த நூல் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் என்பது. பிள்ளையின் விவாதமும் விளக்கங்களும் விவரிப்பு முறையும் என்னை ஈர்த்தது. அவரது முடிவுகள் பலவும் அந்த நேரத்திலும் ஏற்கத்தக்கனவாக இருந்ததில்லை; இப்போதும்கூட ஏற்கமுடியாத முடிவுகள் பல உண்டு. தமிழின் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் காவியம் அல்லது காப்பியம் என வரையறை செய்வதில் எனக்கு ஏற்பில்லை. தொல்காப்பியம் கூறும் தொடர்நிலைச் செய்யுள் என்பதை விரிவாகப் பேசி நிறுவாமல் காவியம் எனக் காட்டுவதில் தீவிரம் காட்டியிருக்கிறாரோ என்ற ஐயம் உண்டு. அந்த ஐயங்களை மறுத்து விவாதிக்கும் நூல்கள் எதுவும் எழுதப்படாமலேயே நிராகரிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டன. என்றாலும் இலக்கியக்கல்வியில் ஆழம் தேடும் ஒருவர் தேடிக் கற்கவேண்டிய நூலாக இதைத் திரும்பவும் பரிந்துரை செய்வேன்.

தமிழில் வட்டாரநாவல்கள்
1991 ஆம் ஆண்டில் வெளிவந்த காவ்யாவின் வெளியீடான "தமிழில் வட்டாரநாவல்கள்" என்னும் நூலைத் திரும்பவும் வாசிக்கவேண்டிய கட்டாயத்தை இந்தக் கல்வியாண்டில் (2016-17) உருவாக்கிக்கொண்டேன். திருநெல்வேலியின் முக்கியமான நூலகங்களில் தேடிய மாணாக்கர்கள் கிடைக்கவில்லை என்றார்கள். கடைசியாக சண்முகசுந்தரமிடமே கேட்டுவிடலாமென்று தொலைபேசியில் அழைத்தபோது கைவசம் இல்லையென்றார். இருந்தால் நகல்போட்டு அனுப்புங்கள்; பணம் அனுப்புகிறேன் என்றார் . தொடர்ந்து பதிப்பக அரசியலெல்லாம் பேசிவிட்டு, அந்த நூலின் முக்கியத்துவத்தையும் திருத்திய பதிப்பாக அந்நூல் வரவேண்டிய அவசியத்தையும் சொன்னபோது கொஞ்சம் இறங்கிவந்தார். கைவசம் 3 பிரதிகள் இருக்கிறது; ஒன்றை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

தமிழில் நாவல் எழுத நினைப்பவர்களும் ஆய்வுசெய்ய நினைப்பவர்களும் படிக்கவேண்டிய பார்வை நூல்களாகப் பத்துநூல்களையாவது பட்டியலிடலாம். எழுத நினைப்பவர்கள் இதுபோன்ற நூல்களை வாசிப்பதில்லை என்பது தெரிந்த்துதான். ஆனால் ஆய்வாளர்கள் அப்படியொரு பட்டியலை உருவாக்கிக்கொள்ளவேண்டும். கட்டாயம் வாசிக்கவேண்டிய முதல் ஐந்துக்குள் இந்த வலியுறுத்துவேன். தமிழில் அதுவரை வந்துள்ள நாவல்களின் பட்டியலைப் பல்வேறு நோக்கில் பிரித்துத் தரலாம் என்றாலும் அந்தக் காலகட்டத்தில் தீவிரப்பட்ட “வட்டார எழுத்து” என்ற கருத்தியல் தளத்தில் வைத்துச் சாத்தியமான விவாதங்களோடு கூடிய முதல் இயலைத் தொடர்ந்து நிலவியல் பின்னணியில் -நாஞ்சில், நெல்லை, முகவை,மதுரை, தஞ்சை,கொங்கு, புதுவை- எனப் பிரித்துக்காட்டியிருக்கிறார் சண்முகசுந்தரம். இறுதியியலில் இந்நாவல்களை நாட்டுப்புறவியல், மொழியியல்,பண்பாட்டியல் நோக்கில் எவ்வாறெல்லாம் விவாதிக்கலாம் என்பதற்கான அடிப்படைகளையும் முன்வைத்துள்ளார்.இந்த இயல் பிரிப்பும், பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ள நாவல்களின் பெயர்ப்பட்டியலும் இன்றைய வாசகர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்படக்கூடிய ஒன்று.

முடிந்த கல்வியாண்டில் நான்கு ஆய்வியல் நிறைஞர் பட்ட மாணவ மாணவிகள்”வெளியை எழுதும் பின்னணியில்”என்ற பொதுத்தலைப்பில் - இரா.முருகவேள், வேல.ராமமூர்த்தி, தஞ்சை ப்ரகாஷ், விநாயகமுருகன் ஆகியோரின் இரண்டிரண்டு நாவல்களை ஆய்வுசெய்தார்கள். இப்படிச் செய்யப்படும் ஆய்வுகள் நூறுசதவீதம் சரியாகச் செய்யப்பட்டிருக்கும் என்பதில்லை. சிலர் தேர்ச்சிபெறும் அளவுக்கு எழுதுவார்கள்; சிலர் இரண்டாம் வகுப்பும், சிலர் முதல்வகுப்பும் வாங்குவார்கள். யாராவதொருவர் சிறந்த ஆய்வொன்றை உருவாக்கிவிடுவார். ஒருநெறியாளராகவும் இக்கால இலக்கியங்களை ஆய்வுசெய்யத்தூண்டும் ஆசிரியராகவும் நான் எதிர்பார்ப்பது ஒவ்வொரு வருடத்திலும் சிலருக்கு இலக்கிய வாசிப்பு ருசியையும் ஆய்வுமனோபாவத்தையும் உண்டாக்கவேண்டும் என்பது மட்டும்தான்.கவிதை, நாவல், நாடகம், சிறுகதை வாசிப்பவராக உருவாக்கப்படுபவர், ருசிகண்ட பூனையாக நல்ல வாசகராகவும், ஆய்வின்பக்கம் திரும்பி நல்ல ஆய்வாளராகவும் ஆவார்கள் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு அது. 

முதல்பதிப்பு வந்தபோது வாங்கிவாசித்த பலநூல்கள் இப்போது கைவசம் இல்லை. தருவதாகச் சொல்லி வாங்கியவர்கள் திருப்பித்தராமல் போவதுண்டு. ஆய்வுக்காக வாசித்துப் பயன்படுத்துவார்கள் என்று நம்பிக்கைதரும் மாணாக்கர்களுக்குக் கொடுத்த நூல்களைத் திரும்பவும் வாங்காமல் வைத்துக் கொள்ளவும் சொல்லிவிடுவேன். அப்படி வைத்துக்கொள்ளும்படி சொன்ன நூல்களில் இதுவுமொன்று. இப்போது திரும்பவும் என் கைக்கு வந்துள்ளது. இந்நூலின் முதன்மை நோக்கத்தோடு இயைந்து இன்றுவரையிலான தகவல்களை இணைத்து இன்னொரு நூலை உருவாக்கினால் நல்லது என்று தோன்றுகிறது. நான் செய்யவில்லையென்றாலும் யாரையாவது செய்யத்தூண்டவேண்டும்.




.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்