களவு போகும் கொண்டாட்டங்கள்
பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன- இந்த மரபுத்தொடரை கிரிக்கெட் பற்றி இந்தியப் பத்திரிகைகளில் எழுதும் செய்தியாளர்களும், கட்டுரையாளர் களும் தொடர்ந்து பயன் படுத்த முடியாது. அர்த்தமிழந்த வாக்கியங்களை, அபத்த வாக்கியங்கள் என்று தெரிந்து கொள்ளாமல் பயன்படுத்துபவர்களைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்த வாக்கியத்திற்கான அர்த்தத்தை நூறு சதவீதம் காலியாக்கி விட்டன சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல்.இருபதுக்கு/20 போட்டிகள்.
உயிரினங்களின் பரிணாமக் கோட்பாட்டை விளக்கிய சார்லஸ் டார்வினின் சூழலுக்கு மாறுவதே வாழும் என்ற விதியை நன்கு உணர்ந்துள்ள கிரிக்கெட்டின் ஆதரவாளர்கள் அதனைச் சரியாகவே பயன்படுத்துகின்றனர். ஐந்து நாள் நின்று நிதானமாக ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் விளையாட்டு, ஒரே நாளில் ஐந்து இன்னிங்ஸ் ஆடும் விதமாக மாறியதை என்ற டார்வினின் கோட்பாட்டைக் கொண்டு தானே விளக்க வேண்டும். ஒருநாள் ஆட்டமாக மாற்றிக் கிரிக்கெட்டைத் தக்க வைத்த அதன் சித்தாந்திகள் இன்று, இருபதுக்கு /20 என்ற வடிவத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்துடிப்பை வேகப்படுத்தி விட்டனர்.
கிரிக்கெட்டின் ஆதரவாளராகவும் திறந்த நிலைப் பொருளாதாரத்தின் விதிகளைக் கற்றுத் தேறியவருமான லலித் மோடி அதைப் பணங்காய்க்கும் மரம் என்று உறுதி செய்து விட்டார்.மேல் தட்டு மக்களின் விளையாட்டு என்ற சொல்லாடலை ஒரு நாள் போட்டிகள் காணாமல் செய்தன. நாள் முழுவதும் மைதானத்திலோ, தொலைக் காட்சிப் பெட்டியின் முன்போ உட்கார்ந்து கிடக்கும் ‘சோம்பேறிகளின் விளையாட்டு; நேரங்கொல்லும் கருவி’ என்றெல்லாம் பேசிய இடதுசாரிகளே கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர்களாகவும், ரசிகர்களாகவும் மாறி விட்டனர். கங்குலியின் அணித்தலைவர் பதவி பறிக்கப் பட்ட போது ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆளும் இடது முன்னணியினர் என்பதைப் பத்திரிகைகள் சொன்ன போது ஆச்சரியமாகத் தான் இருந்தது. மேற்கு வங்க அமைச்சர்கள் கூட கங்குலிக்கு ஆதரவாக அறிக்கைகள் விட்டதுண்டு.
கிரிக்கெட்டிற்கு எதிரான எல்லாக் கருத்துக்களையும் வீரேந்திர சேவாக் அடிக்கும் அதிரடி ஆறின் வேகத்தில் நொறுக்கும் உத்தியை இருபதுக்கு / 20 போட்டியின் வடிவமைப்பாளர்கள் கண்டறிந்து விட்டனர். மாலை நேரத்தில் தொடங்கி இரவு உணவுக்கு முன்பாக முடிந்து விடும் வகையில் போட்டி நேரம் குறுக்கப்பட்டுள்ளது. தன்னை- தனது வடிவத்தை மாற்றிக் கொண்டு நிலைத்து நிற்கத் தொடங்கி இருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது புதிதான குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை.
பன்னாட்டுக் கம்பெனிகள் ஏலம் எடுக்கப்படும் பொருட்களாக இந்திய அணியின் அதிரடி வீரர் தோனியும் ஆஸ்திரேலியாவின் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ§ம் (அதிக விலைக்குப் போன குதிரைகள்) ஆக்கப் பட்ட போது கிரிக்கெட்¢டின் ரசிகர்களும் அதன் ஆதரவாளர்களும் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். வியாபார உத்திகளில் ஒன்றான ஏலமுறை விளையாட்டின் கூறாக மாறுகிற போது விளையாட்டும் வியாபாரமாக மாறிப்போகும் என்பது ரசிகர்களின் கவலையாக ஆனது.இதுவரை கிரிக்கெட்டில் நடந்த மாற்றங்களையும், மற்ற விளையாட்டுக்களிலிருந்து தன்னை விலக்கி வைத்துக் கொண்டு ஆடம்பரமான அடையாளத்துடன் வளர்ந்து வருவதையும் தொடர்ந்து கவனித்து வரும் பலருக்கு இந்தக் கவலை அர்த்தமற்றது என்பது புரியக் கூடும். ஏனென்றால் கிரிக்கெட் விளையாட்டு இந்தியாவில் எல்லா நேரத்திலும் வியாபாரத்தோடும் வியாபார உத்திகளோடும் மட்டுமே நெருங்கிய தொடர்புடையதாக இருந்துள்ளது.விளையாட்டின் உத்திகளுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டைக் கட்டுப்படுத்தும் பிசிசிஐ எனப்படும் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்பதே அரசின் வாரியம் அல்ல. தன்னிச்சையான அதிகாரம் கொண்ட வாரியம் . அதன் கிளைகளுக்கும் மைய அமைப்புக்கும் நடக்கும் தேர்தல்களும் கூட தன்னிச்சையானவை. அவற்றை அவ்வமைப்பு உருவாக்கிய விதிகளும், நெறிமுறைகளும் தான் கட்டுப்படுத்தினால் உண்டு. இந்திய அரசின் விளையாட்டு அமைச்சகமோ, அவற்றின் பொதுவான நடைமுறைகளோ கட்டுப் படுத்துவதில்லை.இந்தியாவின் நீதிமன்றங்கள் கூட அதிகம் மூக்கை நுழைப்பதில்லை. இந்தக் காரணங்களால் தான் மற்ற விளையாட்டுக்களை விடக் கிரிக்கெட் பரவலான கவனிப்பையும் மாற்றங்களையும் அடைந்து வந்துள்ளது என்று சொல்பவர்கள் கூட உண்டு.
தன்னாட்சி அமைப்பான கிரிக்கெட் வாரியம் நடத்தி வந்த போட்டிகளையே இந்தியாவின் விளையாட்டுப் போட்டியாகவும், அதற்குத் தேர்வு செய்யப்பட்ட வீரர்களையே இந்தியக்¢ கிரிக்கெட் அணியாகவும் நமது அச்சு ஊடகங்களுக்கும், தொலைக்காட்சி ஊடகங் களுக்கும் முன்னிறுத்தி வந்தன. இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களும் அவற்றை ஏற்றுக் கொண்டு கொண்டாடி வந்தனர்.ரசிகர்கள் மட்டுமல்ல; பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் குடியரசுத் தலைவர்களும் கூட அந்த அடிப்படையிலேயே பாராட்டுப் பத்திரங்களையும் பரிசுகளையும் வழங்கி வந்தனர்.
இப்போது இந்த ரகசியங்களும் புனைவுகளும் களையத் தொடங்கியுள்ளன. கிரிக்கெட்டின் உள் ரகசியங்களையும் புனைவுகளையும் இதுவரைக் கட்டிக் காத்து வந்த இந்தியக் கிரிக்கெட் வாரியமே இப்போது களைத்துப் போடும் வேலையையும் செய்து விட்டது. பன்னாட்டு வீரர்களை அவர்களது தேச அடையாளங்களை நீக்கி வெவ்வேறு அணிகளில் இடம் பெறச் செய்தது புனைவுக் களைவின் முதல் படி எனலாம். கங்குலி தலைமையிலான இந்திய அணியை மண்ணைக் கவ்வச் செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டித் திட்டம் போடும் ரிக்கி பாண்டிங், கங்குலியின் தலைமையில் நான்கு போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் மட்டுமே எடுத்து விட்டு ஆஸ்திரேலியா திரும்பினார் என்பதை நினைத்துப் பாருங்கள். அதே போல் இலங்கையின் முன்னணி மட்டையாளர்களின் விக்கெட்டைச் சாய்க்க முத்தையா முரளிதரன் தனது தூஸ்ரா வீச்சால் பல தடவை முயன்றதும் இந்தப் போட்டியில் தான் நடந்தது. ஒரே ஒரு நாள் மட்டும் விளையாண்டு நான்கு ஓவர்கள் பந்து வீசி நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்த ஷோயப் அக்தரை கங்குலியும் அவரது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர் ஷாருக்கானும் தோளில் தூக்கி வலம் வந்தார்கள். தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்தும்,ஜாக் கல்லீஸ§ம் நிதினியும் விளையாடும் பன்னிரண்டு பேரில் இடம் பெறாமல் பெவிலியனின் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்ததும் நடந்து முடிந்து விட்டது. இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் எனக் குறி வைத்துக் கொண்டிருக்கும் மன்பிரித் கோனியும் யோமகேஷ§ம் வீரேந்திர சேவாக்கையும் சச்சின் டெண்டுல்கரையும் வீழ்த்தி விட்டுத் துள்ளிக் குதித்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரசிங் தோனி, சென்னை அணியின் தலைவராக மாறி, வேட்டி கட்டி, மீசை வளர்த்து சென்னைத் தெருக்களில் வலம் வந்தார். சென்னையைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கும் முரளி கார்த்திக்கும் டெல்லி அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் விளையாடிக் கொண்டிருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் முயற்சியில் ஷார்ன் மார்ஷ§ம், ஷேன் வாட்சனும் தடாலடியாக விளையாடி பிரித்தி ஜிந்தாவின் பஞ்சாப் அணியையும், ராஜஸ்தான் ராயல்ஸையும் வெற்றி பெறச் செய்து கொண்டிருந்தனர். இவற்றிற் கெல்லாம் மேலாக பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ள பன்னிரண்டு பேரும் இந்தியா வந்து ஒவ்வொரு அணியிலும் இடம் பிடித்துக் கொண்டு இன்னொரு பாகிஸ்தான் வீரருக்கு எதிராகப் பந்து வீசிக் கொண்டும் மட்டையைச் சுழற்றிக் கொண்டும் இருந்த அதிசயம் இந்த ஐ.பி.எல் போட்டியில் தான் நடந்தன.
இந்த மாற்றங்களைப் பாரம்பரியமான கிரிக்கெட்டின் ரசிக மனம் ஏற்கத் தயங்கும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா விளையாட்டையும் தேசத்தின் விளையாட்டாகவும், அந்த அணியின் வெற்றியைத் தேசத்தின் வெற்றியாகவும், அந்த அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு நேர்ந்த அவப் பெயரைத் தேசத்திற்கு நேர்ந்த அவமானமாகவும் கருதி வந்த மனம் திடீரென்று அதிலிருந்து விலகி நிற்பது சிரமமான ஒன்றுதான். தேசம், தேசநலன், தேசப்பற்று என்ற புனிதமான ஒன்றுடன் இணைக்கப் பெற்ற ஒன்றை அதிலிருந்து பிரித்து முதலாளிகளின் பெயரோடு இணைத்துக் கோர்ப்பது ஏற்க முடியாத ஒன்று என்றாலும் நடந்து முடிந்து விட்டது அதுதான்.
ஆங்கிலம் ஓர் உலக மொழி. ஆனால் இந்தியாவில் நடத்தப்படும் ஆங்கிலப் பத்திரிகைகள் எப்போதும் தேச வெறியைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன என்பதற்குத் தனியாகப் புள்ளி விவர ஆய்வுகள் செய்து நிரூபிக்க வேண்டியதில்லை. கிரிக்கெட் பற்றி எழுதும் செய்திக் கட்டுரைகளையும், விமரிசனக் கட்டுரை களையும் படித்தாலே போதும். அக்கட்டுரைகளுக்குப் பக்கத்தில் வெளியிடும் படங்களையும் அதோடு சேர்த்துக் கொள்ளலாம். தென் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது பாகிஸ்தான் அணியினருடன் இந்திய அணியினர் பீரங்கி யுத்தம் நடத்தப் போவதாகப் படங்கள் போட்டவை தான் அவை. அதன் விளைவுகள் பலவிதமானவை. ஆங்கிலப் பத்திரிகைகள் உண்டாக்கும் தேசப் பற்று வெறும் தேசப் பற்றாக மட்டும் இருப்பதில்லை. மதப் பற்றாகவும் பல நேரங்களில் வெறியாகவும் கூட இருந்திருக்கிறது.
ஆங்கிலப் பத்திரிகைகளின் பெரும்பான்மைப் பணியாளர்களும் வாசகர்களும் பெரும்பான்மை இந்து மதத்தின் உயர் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்பதால்,அவர்களின் மனவியல் விருப்பங்கள் சார்ந்தே அவை இயங்குகின்றன. இந்த அடுக்கைச் சேர்ந்தவர்களே இந்தியாவின் நடுத்தர வர்க்கமாகவும் உயர் நடுத்தர வர்க்கமாகவும் இருக்கின்றனர். மாறி வரும் தாராளமயப் பொருளாதாரத்திற்கு ஏற்றவர்களாக இந்திய நடுத்தரவர்க்கத்தைத் தகவமைக்க கிரிக்கெட் விளையாட்டு ஏற்றதொரு கருவி என்று உணரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட அதே வேளையில் துணை விளைவாகத் தேசப்பற்று உருவாக்கமும் சாத்தியம் என்பது உணரப்பட்டது.
உலகக் கோப்பைப் போட்டிகள் என்ற நிகழ்விற்காக ஒரு நாள் போட்டிகள் வடிவமைக்கப்பட்ட போதே இவையெல்லாம் நடந்து முடிந்து விட்டன.இப்போது இருபதுக்கு / 20 தேச அடையாளத்தைக் கைவிட்டுவிட்டு வியாபார அடையாளத்திற்குள் நுழைந்திருக்கிறது. கிரிக்கெட் ஒரு விளையாட்டு; அது தேசத்தின் அடையாளமோ புனிதமோ அல்ல என்பதை உணர்த்தும் மாற்றம் வரவேற்கப்பட வேண்டிய மாற்றமே. இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் போது தான் இந்திய வெற்றிக்காக யாகம் வளர்ப்பதும், பூஜை செய்வதும் நின்று போகும். பாகிஸ்தானோடு விளையாண்டு தோற்றால் முஸ்லீம் வீரர்களின் வீட்டைச் சூறையாடும் அடாவடித்தனம் மறையும். பல தடவை முகம்மது கைப்பும், ஜாகீர் கானும் அவரது குடும்பத்தினரும் குற்ற உணர்வுக்கு உள்ளாக்கப் பட்டதும், பாதுகாப்புக் கோரி காவல் நிலையத்தை நாடியதும் இந்த நாட்டில் தான் நடந்தது.
தேச அடையாளத்தை அழித்து விட்டு உருவாக்கப்பட்ட எட்டு அணிகளுக்கும் மாநிலம் சார்ந்த அடையாளம் உருவாக்கும் முயற்சிகள் கூட முழுமையாக வெற்றி பெறவில்லை. இந்தியப் பெரு நகரங்களான சென்னை, கல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், ஜெய்ப்பூர், சண்டிகர், ஆகியவற்றின் பெயரோடு சில ஒட்டுக்களைச் சேர்த்துக் கொண்டு பெயரிடப்படும் முயற்சியில் கடைசி மூன்று ஊர்களும் கண்டு கொள்ளப்படவில்லை. அணியை விலை கொடுத்து வாங்கிய முதலாளிகளின் விருப்பம் தான் பெயரிடலில் முதன்மை பெற்றது. தனது ராயல் சேலஞ்ச் என்னும் மதுபானக் நிறுவனத்தின் பெயர் தான் உருவாக்கும் அணிக்கு இடப் பட வேண்டும் என உறுதியாக இருந்து வெற்றி பெற்றார் விஜய் மல்லய்யா.
இருபதுக்கு /20 என்ற கிரிக்கெட் வடிவத்தை வரவேற்க இன்னும் சில காரணங்கள் உண்டு. இந்தியாவில் ஆகச் சிறந்த வீரர்கள் அணியில் இடம் பெறும் 15 பேர் மட்டுமே என்ற கருத்தையும் மாற்றி விட்டது. எட்டு அணிகளிலும் இடம் பெற்ற இளம் வீரர்கள் பலரை அந்தப் போட்டி வெளியே கொண்டு வந்திருக்கிறது. ஆனால் வீரர்களுக்கு ஏற்படப் போகும் நெருக்கடி களும் கடுமையானவைகளாக இருக்கப் போகின்றன.இந்த ஆண்டே இந்தியாவின் நளினமான மட்டையாளர் எனக் கருதப் பட்ட ராகுல் திராவிட் அத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்தார். லட்சுமணன் பல போட்டிகளில் விளையாடாத அணித் தலைவராகப் பெவிலியனில் உட்கார்ந்திருந்தார். கங்குலிக்கும் அவரை விலை கொடுத்து வாங்கிய ஷாருக்கானுக்கும் லடாய் என்று செய்திகள் வந்தன. தனியார் மயமாகும் எந்த ஒன்றுக்குள்ளும் மாட்டிக் கொள்ளும் தனி நபர்கள் இத்தகைய நெருக்கடிகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும்.
ஒரு விளையாட்டு என்பதற்கு மாறாக தேசப்பற்றோடும் மதப் பற்றோடும் இணைக்கப்பட்ட கருத்தியலாகவும் கொண்டாட்டமாகவும் ஆக்கப்பட்டது கிரிக்கெட். அதிலிருந்து கிரிக்கெட்டை விடுவித்து இன்னொரு பெருவெளியான பொருளாதாரத்திற்குள் தள்ளியிருக்கிறது ஐ.பி.எ. இருபதுக்கு /20. அதற்காக அவ்வப்போது கொண்டாட்டங்களைப் பல அடுக்குக் களியாட்டங்கள் நிரம்பிய பெருநிகழ்வாகவும் வடிவமைத்து விட்டது. இப்போது கிரிக்கெட் வீரர்களின் முதல் பணி ரன்களைச் சேர்ப்பதும் விக்கெட்டுகளை வீழ்த்துவதும் பந்துகளைப் பிடித்துத் தாவிக் குதிப்பதும் என்று நினைத்தால் நீங்கள் அப்பாவி தான். கோப்பைகளை வாங்கித் தூக்கிப் பிடிக்கும் போது கையொலி எழுப்பும் மனிதர்களையும் , அதன் பார்வையாளர்களையும் நுகர்வோராக மாற்றுவதுதான் முக்கியமான வேலை. அதைச் செய்வதற்காகத்தான் ஒரு சில கோடிகள் விலையாகத் தரப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 18 தொடங்கி, ஜுன் முதல் தேதி வரை 59 போட்டிகளை நடத்தி முடித்த ஐ.பி.எல். இந்தியாவின் கோடை விடுமுறைப் பொருளாதாரத்தை மொத்தமாகத் திரட்டித் தனதாக்கிக் கொண்டுள்ளது என்பதை நிதிஅமைச்சரும் மாண்டேக் சிங் அலுவாலயா போன்ற பொருளாதாரத் திட்டமிடல் நிபுணர்களும் அறியாதவர்கள் அல்ல. பத்தாயிரம் கோடிகள் வரை புழங்கிய ஐ.பி. எல் .விளையாட்டின் வழியாக வெள்ளைப் பணமாக ஆன கறுப்புப் பணத்தைக் கண்டு பிடிக்கும் தணிக்கை முறைகள் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்த இரண்டு மாதத்தில் உண்டான பணவீக்கத்திற்கும் கிரிக்கெட் பொருளாதாரத் திற்கும் கூட உறவு உண்டு என்றே பொருளாதாரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். கோடைகாலப் பயிற்சி முகாம்கள், கலைவிழாக்கள், பயணங்கள் எனப் பலவற்றிற்கும் கோடை விடுமுறைதான் வாய்ப்பான காலம். ஆனால் இந்த ஆண்டுக் கோடை விடுமுறை தொலைக்காட்சிப் பெட்டி களின் முன்னால் முடிந்து போய்விட்டன. ஒவ்வோர் ஆண்டும் வரும் கோடை விடுமுறை என்பது சுற்றுலாவின் பொருளாதாரத்தோடு, ரயில்வே, பேருந்து எனப் போக்குவரத்தின் பொருளாதாரத்தோடு, தங்கும் விடுதிகள், உணவகங்கள் ஆகியவற்றின் பொருளாதாரத்தோடு தொடர்புடையது. ஆனால் இந்த ஆண்டு அவற்றில் வருவாயில் பெருமளவு குறைந்தது என்பதைக் கணக்குப் பார்த்து முடிவு செய்திருப்பார்கள்.
கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களை நம்பித் திரைப்படங்கள் தயாரித்து வந்த திரைப் படத்துறையினர் ஸ்தம்பித்து நின்றது இந்த ஆண்டே வெளிப்படையாகத் தெரிந்தது. தசவதாரம் தள்ளிப் போனதற்கு நீதிமன்றக் காரணங்கள் இருந்தாலும் கிரிக்கெட் கொண்டாட்டங்கள் முடியட்டும் எனக் காத்திருந்ததும் காரணம் தான். கிரிக்கெட் கொண்டாட்டங்களைக் கவனத்தில் கொள்ளாமல் பறந்து வந்த விஜய் நடித்த குருவி வேறு நேரத்தில் வந்திருந்தால் இன்னும் உயரமாகப் பறந்திருக்கும் .
ஒவ்வொரு வருடமும் வரும் கல்லூரிப் பின்னணி கொண்ட படங்கள் இனி வரப் போவதில்லை. தொலைக்காட்சித் தொடர்களில் லயித்திருந்த பெண்கள் கூட அவற்றைத் தியாகம் செய்துவிட்டுக் கிரிக்கெட்டிற்கு இந்த ஆண்டே தாவி விட்டனர் என தொலைக்காட்சிப் பார்வையாளர்கள் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.தேசப்பற்று, மதப்பற்று என்ற மாயப் புனிதங்களைக் கிரிக்கெட் தொலைத்து விட்டது என்று மகிழ்ச்சி அடையும் அதே நேரத்தில் எல்லாவற்றையும் மொத்தமாகச் சுருட்டிச் சாப்பிடும் பன்னாட்டுக் கம்பெனிகளின் கைப் பாவையாக ஆகி விட்டது என்பதற்காக வருத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்.
எல்லா விளையாட்டுக்களையும் இல்லாமல் ஆக்கித் தன்னை நிலை நிறுத்தித் தனியாட்சி நடத்தப் போகும் கிரிக்கெட் உண்டாக்கப் போகும் எதிர்கால விளைவுகள் மக்கள் நலனுக்கு உகந்ததாக இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். நமது மனநிலையையும் நமது சந்ததிகளின் மனநிலையையும் காப்பாற்றுவதைப் பற்றித் தனி மனிதர்கள் நினைத்துக் கொள்வதை விடவும் நமது திட்டமிடல் வல்லுநர்கள் நினைத்துப் பார்த்து தேசத்தைக் கிரிக்கெட்டிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது.
கருத்துகள்