அமெரிக்கத்தேர்தலும் அடையாள அரசியலும்

அமெரிக்கத் தேர்தல் இந்தியத் தேர்தல் போன்றதல்ல என்பது பலருக்கும் தெரியும். ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி என்ற இரு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு குடியரசு நாட்டில், ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் பெரிய வேறுபாடுகள் இருக்காது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் அடிப்படையான கொள்கைகளில் வேறுபாடுகள் எதுவும் இல்லை.
இப்போது அதிபராக இருக்கும் ஜார்ஜ் புஷ்ஷின் குடியரசுக் கட்சி ஜான் மெக்கைன் என்னும் 71 வயது நபரைத் தனது வேட்பாளராக மூன்று மாதத்திற்கு முன்பே முடிவு செய்து விட்டது. ஆனால் இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாது, ஜனநாயகக் கட்சி தான் வெற்றி பெறும் என ஊடகங்களும், கருத்துக் கணிப்புக்களும் சொல்ல , அதன் வேட்பாளராகப் போட்டியிடக் கடுமையான போட்டி நிலவியது. அந்தப் போட்டியும் கடந்த வாரம் முடிவுக்கு வந்து விட்டது.
ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபராக இருந்த கிளிண்டனின் மனைவி ஹில்லாரி போட்டியிட விரும்பினார். ஜனநாயகக் கட்சிக்குள் நடந்த தேர்தலில் அவரை விடவும் கூடுதல் வாக்கு களைப் பெற்று வேட்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளார் பராக் உசேன் ஒபாமா. பராக் உசேன் ஒபாமா ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதை அமெரிக்க ஊடகங்களும், சர்வதேச ஊடகங்களும் விதந்து பாராட்டிக் கொண்டிருக்கின்றன.பாராட்டுவதிலும் வியப்பதிலும் காரணங்கள் இருக்கின்றன.
ஒபாமாவின் பூர்விகம் கென்யதேசம். வெள்ளைத்திமிர் கொண்ட பெரும்பான்மை மக்கள் இருக்கும் அமெரிக்காவில் இன வேறுபாட்டால் , நாளும் கூனிக் குறுகி நிற்கும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர். அவரைத் தனது வேட்பாளராகத் தேர்வு செய்துள்ள ஜனநாயகக் கட்சியின் இந்த முடிவு அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்பத்தைத் தொடக்கம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அவர் அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டால், முதல் கறுப்பின அதிபர் என்று வரலாற்றில் குறிக்கப்படுவார். அமெரிக்க அதிபராகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் பதவி ஏற்கும் நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்.? அமெரிக்காவின் முகத்தை உலக அளவில் வேறு விதமாகக் காட்ட முடிவு செய்து விட்ட ஜனநாயகக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளும் , உள்நாட்டு உற்பத்திக்கும், வெளிநாட்டு ஏற்றுமதிக்கும் வைத்திருக்கும் கொள்கைகளும் எதுவும் மாறப்போவதில்லை. குறிப்பாக ஆயுதங்களை உற்பத்தி செய்து எல்லா நாடுகளின் அரசுகளுக்கும், அவ்வரசுகளை எதிர்க்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் ஒரே நேரத்தில் விற்பனை செய்யும் வியாபார உத்திகள் எதனையும் மாற்ற முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. அற நெறியற்ற வியாபார நோக்கங்கள் கொண்ட அமெரிக்காவின் பன்னாட்டு குழுமங்களின் பிடியில் இருக்கும் அரசின் கொள்கைத் திட்டங்களை பராக் ஒபாமா மாற்றுவாரா? முதலில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக ஆகட்டும். அப்புறம் பேசலாம் இதைப் பற்றி.
நேரடியாக அமெரிக்கத் தேர்தலோடு தொடர்பில்லை என்றாலும் வேறொன்றைப் பற்றிப் பேசலாம்.
நடக்க இருந்த கருத்தரங்கு மக்கள் தொகை மற்றும் மனித ஆற்றல் பற்றிய கருத்தரங்கு. அக்கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் பொறுப்பில் எனது நண்பர் இருந்ததால் அவசியம் வர வேண்டும் என்று அழைத்தார். நம் நாட்டின் தலையாய பிரச்சினையைப் பற்றிய கருத்தரங்கு என்பதால் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன். மக்கள் தொகைப் பெருக்கம் இந்தியாவின் தலையாய பிரச்சினை என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் அதுதான் ஒரே பிரச்சினை என்று நான் நினைப்பதில்லை. மனிதனின் வயிறு சாப்பிட வேண்டும் என உணர்த்தும் போது கைகளும் கால்களும் உழைக்க வேண்டும் என நினைக்கவே செய்யும் என்பது எனது நம்பிக்கை.
மனிதர்கள் பிறக்கும் போது வெறும் வயிறோடு மட்டும் பிறப்பதில்லை; கைகளோடும் கால்களோடும் தான் பிறக்கின்றார்கள். அமெரிக்காவின் இப்போதைய அதிபர் இந்தியர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறார்கள் என்று கருத்துச் சொன்ன போது, ஆம் இந்தியர்கள் அதிகமாகச் சாப்பிடுகிறவர்கள் மட்டும் அல்ல, அதிகமாக வேலை செய்கிறவர்களும் கூட என்று முகத்தில் அடிப்பது போலப் பதில் சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். நமது தலைவர்கள் ஒருவருக்கும் அந்தத் தைரியம் கிடையாது. அமெரிக்க ஆதரவு என்பது இப்போது அமெரிக்காவிற்கு ஊழியம் செய்தல் என்பதாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில் இப்படி எதிர்பார்ப்பது அதிகம் தான்.
கருத்தரங்கிற்கு வந்திருந்த பல வெளிநாட்டுப் பேராசிரியர்களான அறிவுஜீவிகளை அறிமுகப் படுத்தி வைத்தார். அவர்களில் பலர் வெள்ளையர்கள். இரண்டு மூன்று பேர் தான் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள. வெள்ளையர்களை வெள்ளையர்கள் என்று சொல்வதை விரும்பி ரசிப்பார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் கறுப்பினத்தைச் சேர்ந்தவரை அப்படி அழைப்பதை விரும்புவதில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அன்றையக் கருத்தரங்கில் வெள்ளையர்களின் ஒருவர் தன்னை அவ்வாறு குறிப்பிடக் கூடாது என்று வலியுறுத்திப் பேசினார்.
இந்தக் கட்டுரையில் அப்படிக் குறிப்பிட்டு எழுதுவதை வாசித்தால் நிச்சயம் வருத்தப்படுவார். வருத்தப் படுவதோடு கோபம் கூடக் கொள்ளக் கூடும். தன்னை அயர்லாந்தைச் சேர்ந்தவன் என்றே குறிப்பிட வேண்டும் என்பதைப் பல காரணங்களோடு மேடையில் அவர் விளக்கினார். ஐரோப்பியன் என்று சொல்வதை அவர் விரும்ப வில்லை என்றார். அயர்லாந்தைச் சேர்ந்த ஒருத்தியோ பின்லாந்தைச் சேர்ந்த ஒருவனோ ஐரோப்பியன் என அழைக்கப்படுவதை விரும்பினால் அவன் தனது அடையாளத்தை இழந்து போகத் தயாராகிறான் என்பது அவரது வாதமாக இருந்தது.
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற ஒன்றை உருவாக்கிக் கொண்டு யூரோ என்கிற நாணயத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் தங்களுக்குள் நெருங்கி வந்திருப்பதில் பலவிதமான பொருளாதார சாதகங்கள் இருந்தாலும், ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றுக்குமான அடையாளம் காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் கூடிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்திப் பேசினார். அவரது பேச்சில் அச்ச உணர்வோடு குற்ற உணர்வும் வெளிப்படுவதைக் கவனக்க முடிந்தது.
தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் தங்களது யூரோ நாணயத்தை உலகச் செலாவணி நாணயமாக மாற்றுவதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று ஓரளவு அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றன. டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடைவதும், யூரோவின் மதிப்பு கூடிக் கொண்டே போவதும் இதைத் தான் காட்டுகிறது என்றார். இதன் காரணமாக உலக அரங்கில் அமெரிக்கா பிடித்திருக்கிற இடத்தை ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் பிடித்து விடலாம். அப்படிப் பிடிப்பதை அரசியல்வாதிகளும் பொதுஜனங்களும் விரும்பலாம்; ஆனந்தம் அடையலாம்; கொண்டாடலாம். ஆனால் சிந்திக்கின்ற ஒரு அறிவிஜீவி அதைக் கொண்டாட முடியாது; கொண்டாடக் கூடாது என்று சொன்ன போது அங்கிருந்த கல்வியாளர்கள் பலருக்கும் அவரது பேச்சு புரியவில்லை என்றே தோன்றியது.
ஆரவாரமற்ற அவர்களின் கையொலி அப்படித்தான் உணர்த்தியது. டாலரோடு, யூரோ போட்டி போடுவதும், இவற்றிற்கு மாற்றாக இந்தியா ரூபாயும் ஜப்பானின் யென்னும் தங்களது மதிப்பைக் கூட்டிக் கொள்ள முயல்வதும் வெறும் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் சார்ந்த ஒன்று என்று கருதக் கூடாது. ஒவ்வொரு நாடும் இந்த உலகத்தில் தங்களது இடத்தை உறுதி செய்ய முயலும் முயற்சியின் வெளிப்பாடு என்று புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அவரது பார்வையும் விளக்கங்களும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நண்பர் அவரை அறிமுகப்படுத்திய போது கை குலுக்கவே தயங்கிய நான், பேச்சின் முடிவில் அவரது வலது கரத்தை இரண்டு கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டே எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். இந்த உலகத்தின் தண்டல்காரனாகவும், கண்காணிப்பாளனாகவும் கருதும் அமெரிக்க அரசாங்கங்களுக்கு இத்தகைய குற்ற உணர்வு தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.
வெள்ளையர்கள் என்ற ஆணவத்தைத் தொலைக்கத் தயாராகி விட்ட அமெரிக்கர்களுக்கு இந்த உலகத்தின் வளம் அனைத்தும் எங்களுக்கு முதலில் பயன்பட வேண்டும் என்று நினைப்பது தவறானது என்ற உண்மையை ஒபாமா உணர்த்த வேண்டும். இவ்வளவு காலமும் அவ்வாறு கருதியதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வெளியுறவுக் கொள்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.இல்லையென்றால் எழுந்து வரும் அடையாள அரசியல் அந்த நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்