மாறியது திசை; மாற்றியது…
முதல் கோணல் என்று தோன்றியது. முற்றிலும் கோணலாகும் வாய்ப்பு குறைவுதான். ஆனாலும் கொஞ்சம் திகைப்பும்;தடுமாற்றமும் உண்டானதை மறுப்பதற்கில்லை.
கோவை விமான நிலைய நுழைவு வாசலிலேயே அந்தக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. அதனை அடுத்து முதலில் தகவல் சொல்லவேண்டியது அந்த நண்பருக்கு என்று மூளை சொல்லியது. பயணத்தைத் தொடங்குவதில் சிக்கலா? தேதி மாறுமா? பயணமே நின்றுபோகுமா? எதுவும் நடக்கலாம் என்று குழம்பிய நிலையில் மூளைக்குத் தோன்றிய ஒரே குறிப்பு இது மட்டும் தான். ‘இன்று பெங்களூர் வரும் வாய்ப்பில்லை; நீங்கள் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டாம்’ குறுஞ்செய்தியை அனுப்ப வைத்தேன். உடனே அவரிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் எடுத்துப் பேசவில்லை. எடுத்துப் பேசினால் அவருக்குச் சொல்லும் விதமாகத் தீர்மானமான முடிவு எதுவும் அப்போது என்னிடம் இல்லை. ‘காத்திருங்கள்; அழைப்பேன்’ என்று குறுஞ்செய்தியை ஆங்கிலத்தில் தட்டிவிட்டுக் குழப்பத்தைத் தீர்ப்பது எப்படி? என்பதில் இறங்கினேன். அவரது வீட்டிற்கும் விமான நிலையத்திற்கும் இடையேயுள்ள பயண நேரம் ஒன்றரை மணி நேரம் என்று சொல்லியிருந்தார். இப்போதே சொல்லிவிட்டால் கிளம்பாமல் இருந்து விடுவார் என்பதால் அதை மட்டும் செய்துவிடச் சொன்னது மூளை.
ஐந்து மாதங்களுக்கு முன்பே திட்டமிட்ட பயணம் இது. அதனால் எந்தவிதச் சிக்கலும் ஏற்படாது என்று நினைப்பு இருந்தது. அந்த நினைப்பை முதல் சோதனைப் புள்ளியே தவிடு பொடியாக்கி விட்டது. முதல் சோதனை என்பது பயணிகளுக்கான நுழைவு அனுமதி. விமான நிலைய முனையங்களின் நுழைவு வாசலில் பயணச்சீட்டையும் அடையாள அட்டையையும் பரிசோதித்து அனுப்பும் சோதனைக்கு இருப்பவர்கள் அடிப்படைப் பணிகளைச் செய்யும் காவலர்கள். பயணச்சீட்டில் இருக்கும் விமானங்களின் பெயர், எண், கிளம்பும் நேரம் ஆகியவற்றைப் பார்ப்பார்கள். அத்தோடு அடையாள அட்டையில் இருக்கும் முகத்தையும் பார்த்துவிட்டு உள்ளே அனுப்புவார்கள். வெளிநாட்டுப் பயணம் என்றால் கடவுச்சீட்டையும், போகும் நாட்டுக்கான அனுமதித் தேதியையும் பார்ப்பார்கள். உள்நாட்டுப் பயணம் என்றால் கடவுச்சீட்டுக்குப் பதிலாக ஆதார் அட்டை, குடிமைப்பொருள் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றனவற்றைக் காட்டினால் போதும் உள்ளே அனுப்பிவிடுவார்கள். அதனைத் தாண்டி பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள் நுழைய முடியாது. அதனைத் தடுப்பதே அந்தச் சோதனையின் நோக்கம்.
இந்தமுறை போகவும் வரவுமான மொத்தப் பயணத்திற்கும் ஏர்-பிரான்ஸ் பன்னாட்டுக் குழும விமானங்களின் சேவையைப் பயன்படுத்துவதற்கு முன்பதிவு செய்யப்பட்டது. பன்னாட்டுக்குழுமங்கள் பலவும் வெவ்வேறு உள்நாட்டு விமானச் சேவையாளர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டு பயணிகளுக்கு உதவுகின்றன. குறிப்பாக அனுமதிக்கப்படும் எடையுள்ள சரக்குப் பெட்டகங்களைப் பயணம் தொடங்கும் இடத்தில் பெற்றுக் கொண்டு, பயணம் முடியும் ஊரில் திரும்பத் தரும் வசதியைத் தருகின்றன.
கோவையிலிருந்து சென்னைக்கோ, பெங்களூருவுக்கோ 50 நிமிட நேரம் பயணம் செய்து பன்னாட்டு விமான சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். ஏர்-பிரான்ஸ் விமான சேவை, இண்டிகோ ஏர்லைன்ஸோடு ஒப்பந்தம் வைத்திருக்கிறது. அதனால் கோவையில் இண்டிகோ சரக்குக் கணக்கில் பெட்டிகளை ஒப்படைத்துவிட்டால், அவர்கள் ஏர்-பிரான்ஸுக்கு மாற்றிக் கொடுத்துவிடுவார்கள். முன்பெல்லாம் உள்நாட்டு விமான முனையத்திலிருந்து பொருட்களை எடுத்து, நாம் தான் வெளிநாட்டு முனையத்தில் பன்னாட்டு விமான சேவையாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.
கோவையிலிருந்து பெங்களூரு வரை இண்டிகோ விமான சேவை, 19.55-க்கு ஒன்றும், 21.35-க்கு ஒன்றும் இருந்தது. பன்னாட்டுப் பயணிகளுக்குச் செய்யப்படும் சோதனைகளைப் பெங்களூருவில் செய்யவேண்டும். அதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படும் என்பதால் 19.55-க்குக் கிளம்பும் விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்திருந்தோம். அதில் வந்தால் பெங்களூரு விமான நிலையத்தில் மூன்றரை மணி நேரம் இருக்கலாம். வழியனுப்ப வருவதாகச் சொன்ன நண்பரோடு கூடுதல் நேரத்தைச் செலவழிக்கலாம் என்பதும் இன்னொரு காரணம். பெங்களூரிலிருந்து 01.20 க்குக் கிளம்பி அடுத்த நாள் காலை 07.50 (பாரிஸ் நேரம்) க்குப் போய்ச்சேரும். பாரிஸ் விமான நிலையத்தில் இரண்டரை மணி நேரம் இருக்கலாம். அங்கிருந்து திரும்பவும் 10.20 -க்குக் கிளம்பி டல்லாஸ் நேரம் 13-40 -க்குப் போய்ச்சேரும் விதமாகப் பயணச்சீட்டு வாங்கியிருந்தோம். மூன்று விமானங்களிலும் இருக்க வேண்டிய நேரம் மொத்தம் இருபது மணி நேரமும் 10 நிமிடங்களும். விமான நிலையங்களில் செலவழிக்க வேண்டிய நேரம் ஏழரை மணி நேரங்கள். ஆக மொத்தம் 27 மணி, 40 நிமிடப் பயணம். 10 ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டிவிடும் இந்தப் பயணத்திட்டத்தை குழப்பியது இண்டிகோ விமானசேவை. 19.55-க்குக் கிளம்பும் விமானத்தை ரத்துசெய்து, 21.55 -க்குக் கிளம்பும் விமானத்தில் அனுப்பும் வாய்ப்பிருக்கிறது என்று முதல் நாள் சொன்னார்கள். ஆனால் உறுதி செய்யவில்லை. அதனால் முதல் விமானத்தைப் பிடிக்கும் விதமாக கோவை விமான நிலையத்திற்கு மாலை 5 மணிக்கெல்லாம் வந்து விட்டோம். பயணச் சீட்டையும் அன்று கிளம்பும் விமானங்களின் எண்ணையும் நேரத்தையும் ஒத்துப் பார்த்த நுழைவு வாயில் சோதனையாளர், நீங்கள் பயணம் செய்ய வேண்டிய விமானம் இன்று கிளம்பும் விமானங்களின் வரிசையிலேயே இல்லை என்று சொல்லி அதிர்ச்சியைத் தந்தார்.
எனது பயணச்சீட்டின் மென்படிகள் அலைபேசித் திரையில் சேமிக்கப்பட்டிருந்தாலும் காகிதத்தில் வன்படியொன்றை எப்போதும் வைத்துக்கொள்வேன். அப்படி வைத்திருந்த காகிதப்படியை ஒப்பிட்டபோது அவர் சொன்னது உறுதியானது. உடனடியாக நுழைவு வாசலுக்கு அருகில் இருந்த இண்டிகோ விமானசேவை விசாரிப்புச் சேவை மையத்தில் இருந்த பெண்ணிடம் பேசத் தொடங்கினேன். அவர் உங்களுக்கு வந்த குறுஞ்செய்தி அல்லது இணையக்கடிதங்களைக் காட்டுங்கள் என்றார். அவை எதுவும் என்னிடம் இல்லை. என்னிடம் இருந்தவையெல்லாம் ஒட்டாவிலிருந்து மகன் அனுப்பிய இணையக்கடிதங்களும் குறுஞ்செய்திகளும் மட்டும்தான் இருந்தன. இந்தப் பயணத்திட்டத்தைத் திட்டமிட்டுப் பயணச் சீட்டுகளை வாங்கி அனுப்பியவன் மகன்தான். ‘கடைசி நேர மாற்றங்கள் இருக்கும்; அவர்களே மாற்றித்தருவார்கள்’ என்றே சொல்லிவிட்டுத்தான் தூங்கினான். ஆனால் தவறு இண்டிகோவிடம் இல்லை; ஏர் -பிரான்ஸின் சேவை மாற்றத்தில் என்பது தெரியவந்தது. பெங்களூர் – பாரிஸ் விமான சேவையில் மாற்றம் செய்துள்ளது. அதனால் அவர்களிடம் தான் பேசவெண்டும் என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண். உடனடியாக மகனைத் தொடர்புகொள்ள முயன்றேன். குறுஞ்செய்தியாக ‘உடனே அழைக்கவும்’ என்று அனுப்பினேன் ;அலைபேசி அழைப்புகள் சிலவற்றிற்குப் பதிலே இல்லை. இந்திய நேரம் மாலை ஐந்தாக இருக்கும்போது கனடா நேரம் அதிகாலையாக இருக்கும். தூங்கிக் கொண்டிருப்பான். அப்போது இன்று பயணிக்கும் வாய்ப்பு குறைவு என்று மூளையில் ஒரு பொறி தட்டியது.
****** ******
தனியனாக எனது பயணங்கள் திட்டமிடாத பயணங்களே. கிராமங்களுக்குச் செல்லும் நகரப்பேருந்துகள், மண்சாலைகள், தார்ச்சாலைகள் எனப் பலவற்றில் விருப்பம்போல ஊர் சுற்றிய அனுபவங்கள் இருப்பதால் திடீரென்று ஏற்படும் திருப்பங்களைக் கண்டு அதிர்ச்சி அடைவதில்லை.மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் என எதிலும் புதுப்புது பாதைகளில் பயணிக்கும் ஆசை எப்போதும் உண்டு.
எல்லாவகைப் பயணங்களிலும் திடீர் திருப்பங்கள் ஏற்படும். ஏற்படும் திருப்பங்களை அனுபவிக்கத் தயாராக இருக்கவேண்டும். மனம் தளர்ந்துவிடக்கூடாது என்பதே எனது பயணக்கொள்கை. பாப்ரிமஜித் இடிக்கப்பட்ட தினத்திற்கு அடுத்த நாள் ஒரு நாடக விழா ஹைதிராபாத்தில் இருந்தது. சென்னையிலிருந்து ரயிலில் செல்ல முன்பதிவு இருந்த து. ஆனால் புதுச்சேரியிலிருந்து சென்ற பேருந்து 3 மணி நேரம் தாமதம் ஆனதால், ரயில் கிளம்பிப் போய்விட்ட து. அன்று இரவு எங்கும் போக முடியாமல் சென்னை பாரி முனை பேருந்து நிலையத்தில் தூங்காமல் சுற்றிக்கொண்டிருந்தேன். அந்த இரவு அச்சமும் உயிர்ப்பயமும் நிரம்பிய மரண வாடை வீசிய இரவு.
போகவேண்டிய ஊருக்குப் பதிலாக இன்னொரு ஊரில் இறங்கி, கிடைத்த லாட்ஜில் தங்கலாம் என்று நினைத்து அழகிகள் சந்திப்பு கிடைத்த அனுபவமும் உண்டு. முந்தியநாள் பயணத்திற்கான முன்பதிவுச் சீட்டோடு நள்ளிரவு 12.05 க்கு விருத்தாசலத்தில் ஏறி, டிக்கெட் இல்லாப் பயணமாகத் திருச்சிவரை சென்று, பேருந்துக்கு மாறி திருநெல்வேலிக்குப் போயிருக்கிறேன். முன்பதிவு இருக்கையை ராணுவ வீரன் ஒருவனோடு சண்டையிட்டு வாங்க முடியாமல், விசாகப்பட்டணத்திலிருந்து சென்னை வரை ரயிலின் நடைபாதையில் படுத்துறங்கி வந்திருக்கிறேன்.
பயணங்கள் தரும் ஒவ்வொரு அனுபவங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்பதைப் பள்ளிக்கால விடுதி வாழ்க்கை கற்றுத்தந்தது. எம்.ஜி.ராமச்சந்திரனைத் திராவிட முன்னேற்றக்கழகம் கட்சியை விட்டு நீக்கியபோது தமிழகப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் நட த்திய வேலை நிறுத்தங்களால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு முழுமையாகப் பாதிக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எனது பள்ளிவிடுதி மூடப்படும். முதல் வந்து அடுத்தநாள் விடுதியிலிருந்து கிளம்பிச் சென்ற பயணங்களே முதன்மையான அனுபவங்கள். அந்தக் காலகட்டத்தில் திண்டுக்கல்லிலிருந்து வத்தலக்குண்டு சென்று, அங்கிருந்து உசிலம்பட்டிக்குச் செல்ல வேண்டும். திண்டுக்கல் -வத்தலக்குண்டுக்கு எல்லாப் பாதைகள் வழியாகவும் பயணம் செய்ததுண்டு. ஒருதடவை திண்டுக்கல் -மதுரை சாலையில் பயணித்து நிலக்கோட்டை வழியாக வத்தலக்குண்டு போவேன். இன்னொரு முறை வத்தலக்குண்டுவிலிருந்து அய்யம்பாளையும், பட்டிவீரன் பட்டி வழியாக வருவேன். செம்பட்டி, சித்தையன் கோட்டை இன்னொரு பாதை. செம்பட்டி, சின்னாளபட்டி வழியாகவும் போகலாம். கையிலிருக்கும் பணத்திற்கேற்ப பயண வழிகள் மாறும் அப்போது. எல்லா ஊர்களுக்கும் ஒரே வழிதான் இருக்கிறது என்ற எண்ணத்தை அந்தப் பயணங்களே மாற்றம் செய்தன.
முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றொரு வசதி இருப்பதையே நினைக்காமல் கிடைக்கும் பேருந்தில் ஏறிப்போன பயணங்களே அதிகம். பாண்டிச்சேரியில் வாழ்ந்த எட்டாண்டுகளில் அதிகமும் பேருந்திலேயே பயணம் செய்திருப்போம். குடும்பமாகப் பயணம் செய்தபோது திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்வோம். அக்கழகப்பேருந்துகளுக்கென இருக்கும் தனி நிலையத்திற்கு வந்து மதுரை, நெல்லை, கன்யாகுமரி எனக் கிளம்பும் வண்டியில் ஏறிப்போய்விடுவோம். தனியாகச் செய்யும் பயணங்களுக்கு எப்போதும் தொலைதூரப் பேருந்துகளை விரும்பியதில்லை. இறங்கி ஏறும் பேருந்துகளே எனது விருப்பம். ஒருமுறை கடலூர், நெய்வேலி,தஞ்சை வழியென்றால், இன்னொரு முறை விழுப்புரம், திருச்சி வழியாகப் போவேன். சில நேரங்களில் தஞ்சை, கும்பகோணம், மாயவரம், சீர்காழி, சிதம்பரம், கடலூர் எனச் சுற்றிக்கொண்டு வரும் பேருந்தைத் தெரிவு செய்வதும் உண்டு. பேருந்துகளுக்குப் பதிலாக ரயில் பயணங்களுக்கு மாறியபோது வயது ஐம்பதைத் தாண்டியிருந்த து. மகளுக்குத் திருமணமாகிச் சென்னைக்கு அடிக்கடி போகவேண்டிய நிலை உருவான போதுதான் முன்பதிவுசெய்து பயணிக்கும் யோசனை உருவானது. குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பேருந்து பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியவர் மருமகன் பிர்ஜித் ஸ்ரீதரன். அந்தக் காலகட்ட த்தில் தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்கள் பலவற்றிற்குக் கல்விப்புல வல்லுநராகப் பயணங்கள் செய்துகொண்டே இருந்த நாட்கள் அவை. பயணத்தேதியையும் இடத்தையும் சொல்லி விட்டால் ரயில் பயணச்சீட்டுகளைப் பதிவு செய்து அனுப்பிவிடுவார்கள் மகனும் மருமகளும்.
********
பயணச்சீட்டுக் குழப்பத்தால், கோவை விமான நிலையத்திற்குள் நுழைய முடியாமல் திருப்பிவிடப்பட்ட உடனேயே மனைவியைத் தயார்படுத்தும் வேலையைத் தொடங்கிவிட்டேன். எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்; திரும்பவும் வீட்டுக்குப் போக நேர்ந்தாலும் மனம் தளரக்கூடாது என்பதைச் சொல்லித் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது மகன் ராகுல் அழைத்தான்.
இண்டிகோ பணியாளர் சொன்னதை அவனிடம் சொன்னபோது, “அரைமணி நேரம் காத்திருங்கள்; ஒருவேளை வீட்டிற்குத் திரும்பிப் போய்விட்டு நாளையோ, இன்னொரு நாளோ கிளம்ப வேண்டும் என்றாலும் தயாராக இருங்கள்” என்று அவனும் சொல்லிவிட்டு வைத்துவிட்டான். காபி குடித்துவிட்டுக் காத்திருந்தோம். அலைபேசி வந்தது. இண்டிகோவுக்குப் பதிலாக ஏர் பிரான்ஸ் சேவையாளர்கள் வேறு வாய்ப்புகளை முயன்றுகொண்டிருக்கிறார்கள். அது உறுதியானால் பெங்களூருவுக்குப் பதிலாக வேறு பாதை வழியாகப் பயணம் செய்ய வேண்டியதிருக்கும் என்று சொன்னான். அந்தப் பாதை சென்னை, மும்பை, டெல்லி என எதாவதொரு வழியாக இருக்கும்; இன்னும் ஒரு அரைமணி நேரம் காத்திருங்கள் என்றான். காத்திருந்தோம்.
அரைமணி நேரம் ஆவதற்கு முன்பே திரும்பவும் அழைத்து பயண மாற்றத்தை உறுதி செய்துவிட்டான். கோவையிலிருந்து பெங்களூருவுக்குப் பதிலாக மும்பைக்குப் போகவேண்டும். பயணிக்கும் விமானம் விஸ்தாரா. டாடா குழுமத்தின் விமானம். கிளம்பும் நேரம் இரவு 10.05. அதன் பயண நேரம் ஒரு மணி 50 நிமிடம் என்ற தகவலைச் சொல்லிவிட்டுக் கோவையில் இருக்கும் விஸ்தாரா விசாரணை மையத்தைத் தொடர்பு கொள்ளச் சொன்னான். அப்படியே செய்தேன். அங்கிருந்த பெண் மென்மையான ஆங்கிலத்தில் பேசினார்.
கணினித் திரையைத் திறந்து இணையக் கடிதங்களைப் பார்வையிட்டு, உங்கள் பெயர் அழகர்சாமி ராமசாமியா? என்றார். ஆமாம் என்று சொன்னபோது உங்கள் பயணம் விஸ்தாரா வழியாக உறுதி செய்யப்படுகிறது என்று சொன்னார். அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மகன் அனுப்பிய வாட்ஸ் -அப் செய்தியில் மாற்றம் செய்யப்பட்ட பயணச்சீட்டு வந்தது. அதனை அவரிடம் காட்டி, இதன் ஒரு படியை அச்சிட்டுத் தரமுடியுமா? என்று மெல்லிய குரலில் நானும் கேட்டேன். அவருக்கும் அதன் நகல் வந்திருந்தது. அதன் படியை அச்சிட்டு இடது கையால் எடுத்துத் தந்து சிரித்தார். நானும் சிரித்து ‘நன்றி’ எனத் தமிழிலும் பின்னர்“தேங்க்-யூ வெரிமச்” என்று ஆங்கிலத்திலும் சொன்னேன். உங்கள் பயணம் இனிதாக அமையட்டும் என்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் சொல்லிவிட்டுத் திரும்பவும் புன்னகைத்தார்.
19.55 இண்டிகோவைப் பிடிக்க மாலை 17.00 க்கு வந்த நாங்கள், இரவு 22.05 க்குக் கிளம்பும் விஸ்தாரா பணியாளர்களிடம் நான்கு பெட்டிகளையும் ஒப்படைத்தபோது மணி 20.40. மூன்று மணி நேரம் ஓடிவிட்ட து. கையில் எடுத்துச் செல்லும் இரண்டு பெட்டிகளோடு கோவை உள்நாட்டு விமான நிலையப் பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்க்க நினைத்தேன். நேற்று மழையால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் இறுதி ஆட்டம் தொடங்கியிருக்கும் என்பது அப்போது நினைவுக்கு வந்தது. ஆனால் உள்ளே தொலைக்காட்சி எதுவும் காணொளியாக வரவில்லை.காத்திருந்த பலரும் அலைபேசித் திரைகளில் கிரிக்கெட் ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற நினைப்பு எனக்கு இல்லை. விஸ்தாரா விமானத்திலிருந்து இறங்கிப் பாரிஸுக்குச் செல்லும் விமானத்தைப் பிடிப்பதற்கு இடையே இருக்கும் நேரம் குறைவாக உள்ளது என்ற கவலையே மனதில் நிரம்பியிருந்தது. அதனால் கிரிக்கெட் நினைவிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது பெங்களூர் நண்பருக்கு, ‘அழைக்கலாமா?’ என்று குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அவரே அழைத்துவிட்டார். நடந்ததைச் சொன்னேன். பெங்களூர் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து பன்னாட்டு விமான முனையத்திற்கு அழைத்துப் போவதாகவும், அப்போது இரவு உணவு எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் சொல்லியிருந்தார். எதுவும் நடக்கவில்லை என்பதில் அவருக்கும் வருத்தம்; எனக்கும் வருத்தம் தான். திரும்ப வரும்போது பெங்களூர் வழியாகவே வருவேன். அப்போது சந்திப்பேன் என்று சொல்லி வைத்தேன். வாழ்த்துச் சொல்லி அனுப்பினார்.
********
விஸ்தாரா மும்பை உள்நாட்டு விமான நிலையத்தில் சரியாக 23.55- க்குத் தரை இறங்கியது. ஆனால் அங்கிருந்து சத்ரபதி சிவாஜி பன்னாட்டு முனையத்திற்குச் சென்று சேர 45 நிமிடம் ஆனது. சென்னை விமான நிலையத்தைப் போல மூன்று மடங்காவது பெரியதாக இருக்கும் அவ்விமான நிலையத்தில் பாரிஸ் செல்லும் ஏர் -பிரான்ஸ் பணியகத்தைத் தேடிக் கண்டுபிடித்தபோது நள்ளிரவு 01.00. தேதியும் மாறிவிட்டது; மே.30. அப்போது கிளம்பிய பெருஞ்சத்தம் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கான கொண்டாட்டச் சத்தம் என்பது உறுதியானது. தோனியை இந்தியர்கள் எல்லாரும் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு பன்னாட்டு விமானக்குழுமங்களும் தனித்தனி வரிசைகளை ஏற்படுத்தியிருந்தன. ஏர்-பிரான்ஸ் குழுமத்தின் விமானங்களுக்கான பயண உறுதிக் கூடங்கள் எச்(H)வரிசையில் இருந்தன. அங்கிருந்த பணியாளர் நேரச்சுருக்கத்தை உணர்ந்து, பாரிஸுக்கும், பாரிஸிலிருந்து அமெரிக்காவின் டல்லஸுக்கும் செல்லும் விமான இருக்கைகளை உறுதி செய்யும் அட்டைகளை வழங்கினார். அத்தோடு உங்கள் கைப்பைகளில் இருக்கும் எடை அனுமதிக்கப்பட்ட எடையைவிட 7 கிலோ கூடுதலாக இருக்கிறது என்றொரு சிக்கலையும் முன்வைத்தார்; அதற்காகக் கூடுதல் பணம் கட்ட வேண்டும் என்றார். இதனைக் கோவையில் கிளம்பும்போது உங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள விஸ்தாரா பணியாளர்கள் சொல்லவில்லையே என்றேன். கணினி, காமிரா பைகளைத் தனியாக எடுத்துவர அனுமதித்தார்களே என்றேன். என்னிடம் உங்களுக்குத் தரும் அளவுக்குப் பணம் இல்லை; பயணச்சீட்டு வாங்கிய என் மகன் இருப்பது கனடாவில்; அவரிடம் தான் நீங்கள் பேசவேண்டும் என்று சொன்னவுடன் கொஞ்சம் பின் வாங்கினார். “இந்தப் பயணத்தில் இதனைக் கூடுதல் பரிசாக அனுமதிக்கிறேன்; இனிமேல் அப்படிக் கொண்டு வராதீர்கள்” என்று சொல்லி அனுமதி வழங்கினார். வழங்கிவிட்டு இன்னும் இருபது நிமிடத்தில் ஏர் பிரான்ஸ் 777 விமானம் நிற்கும் வாசல் 74 க்குச் சென்று வருகையை உறுதிசெய்யச்சொன்னார்.
கிளம்பினோம். ஓட்டமும் நடையுமாகப் போனோம். அந்த வாசலை அடைவதற்கு முன்பு பாதுகாப்புச் சோதனையை முடிக்கவேண்டும். வெளிநாட்டுப் பயணம் என்பதைக் குறிக்கும் விதமாகக் கடவுச்சீட்டில் முத்திரையிட்டு வாங்கவேண்டும். அவசரம்; அவசரம்; பதற்றம். எல்லாம் முடித்துப் போய்ச்சேர்ந்தபோது அங்கே நீண்ட வரிசையில் பாரிஸுக்குச் செல்லும் பயணிகள் நின்றிருந்தார்கள். வரிசை மெல்ல நகர்ந்தது. 02.20 க்கு விமானம் கிளம்பும் என்று விளக்கொளியில் எண்கள் காட்டின. எனக்கு முன்னால் நீண்ட வரிசையில் ஒரு பெண்ணை நிறுத்தி அவரது பொருட்களின் பெட்டியின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டார் பணியாளர். பதில் சொல்ல முடியாமல் தவித்தவரின் முகம் ஈழத்து முகம் என்று காட்டியது. அவர் அருகில் சென்று, ‘எத்தனை பொதியில் பொருட்கள் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார்?’ என்று சொன்னேன். இரண்டு என்றார் அந்தப் பெண். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பணியாளருக்குச் சொன்னவுடன் அந்தப் பெண்ணின் சீட்டில் முத்திரையிட்டு உள்ளே அனுப்பிவிட்டார். அவரது முகம் இன்னொரு தமிழ் முகத்தோடு சிரித்துவிட்டு நகர்ந்து சென்றது.
விமானத்திற்குள் நுழைந்து வரிசை எண் இருபத்தி ஒன்றில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டேன். விமானப் பணிப்பெண் அருகில் வந்து இடுப்புக் கச்சையை சரியாகப் போட்டுள்ளேனா எனப் பார்ப்பதை உணரமுடிந்த து. சில நிமிடங்களில் விமானம் அசைந்து நகரத் தொடங்கியது. வேகம் பிடித்து மேலே தாவியபோது நட்சத்திரக் கூட்ட த்தைக் காட்டிலும் கூடுதலான விளக்கொளிகளால் மும்பை நகரம் கீழே விரிந்து கிடந்த து. அப்போது தான் வெளிநாட்டுப் பயணம் தொடங்குகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது. இருக்கைக்கு முன்னால் இருந்த திரையில் விமானம் அரபிக்கடல் மீது பறப்பதாகக் காட்டியது. நான் அதை மாற்றவே இல்லை. மற்றவர்கள் அதில் இருக்கும் திரைப்படம், இசைக்காட்சிகள், விளையாட்டுகள் போன்ற அலைவரிசைகளுக்கு மாற்றிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார்கள். எனக்குத் தூக்கம் வரவில்லை. இதற்கு முந்திய அயல் நாட்டுப் பயணங்கள் எதுவும் இப்படி இல்லை என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்தப் பயணத்தைக் குறித்த தொடரில் பயணக் கட்டுரையாக அதிகம் எழுதக் கூடாது என நினைத்தேன். ஆனால் தொடக்கத்தில் ஏற்பட்ட குழப்பம் இப்படியொரு விரிவான பயணச்சிக்கலை எழுத வைத்துவிட்டது. நீண்ட தூரம் பயணிக்க நினைத்துத் திட்டமிடும் பலருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். சில பயண நூல்களில் நானும் வாசித்திருக்கிறேன். என்னுடைய அனுபவம் புதிதாகத் தொடங்கும் பயணிகளுக்குப் பயன்படும் என்பதால் இப்படியொரு விவரிப்பை எழுதிவிட்டேன்.
இந்தத் தொடரில் எழுத நினைத்த மையம் கிழக்கும் மேற்கும். அதனை உணரச்செய்த இரண்டு குடும்பங்களைப் பாரிஸ் -டல்லஸ் விமானப் பயணம் தந்தது. அடுத்த வாரம் அதைச் சொல்கிறேன்.
விமானத்திற்குள் நுழைந்து வரிசை எண் இருபத்தி ஒன்றில் அமர்ந்து கண்ணை மூடிக்கொண்டேன். விமானப் பணிப்பெண் அருகில் வந்து இடுப்புக் கச்சையை சரியாகப் போட்டுள்ளேனா எனப் பார்ப்பதை உணரமுடிந்த து. சில நிமிடங்களில் விமானம் அசைந்து நகரத் தொடங்கியது. வேகம் பிடித்து மேலே தாவியபோது நட்சத்திரக் கூட்ட த்தைக் காட்டிலும் கூடுதலான விளக்கொளிகளால் மும்பை நகரம் கீழே விரிந்து கிடந்த து. அப்போது தான் வெளிநாட்டுப் பயணம் தொடங்குகிறது என்று நிம்மதிப் பெருமூச்சு வெளியேறியது. இருக்கைக்கு முன்னால் இருந்த திரையில் விமானம் அரபிக்கடல் மீது பறப்பதாகக் காட்டியது. நான் அதை மாற்றவே இல்லை. மற்றவர்கள் அதில் இருக்கும் திரைப்படம், இசைக்காட்சிகள், விளையாட்டுகள் போன்ற அலைவரிசைகளுக்கு மாற்றிக் கொண்டார்கள். கொஞ்ச நேரத்தில் தூங்கிப் போனார்கள். எனக்குத் தூக்கம் வரவில்லை. இதற்கு முந்திய அயல் நாட்டுப் பயணங்கள் எதுவும் இப்படி இல்லை என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
இந்தப் பயணத்தைக் குறித்த தொடரில் பயணக் கட்டுரையாக அதிகம் எழுதக் கூடாது என நினைத்தேன். ஆனால் தொடக்கத்தில் ஏற்பட்ட குழப்பம் இப்படியொரு விரிவான பயணச்சிக்கலை எழுத வைத்துவிட்டது. நீண்ட தூரம் பயணிக்க நினைத்துத் திட்டமிடும் பலருக்கும் இந்த அனுபவம் கிடைத்திருக்கும். சில பயண நூல்களில் நானும் வாசித்திருக்கிறேன். என்னுடைய அனுபவம் புதிதாகத் தொடங்கும் பயணிகளுக்குப் பயன்படும் என்பதால் இப்படியொரு விவரிப்பை எழுதிவிட்டேன்.
இந்தத் தொடரில் எழுத நினைத்த மையம் கிழக்கும் மேற்கும். அதனை உணரச்செய்த இரண்டு குடும்பங்களைப் பாரிஸ் -டல்லஸ் விமானப் பயணம் தந்தது. அடுத்த வாரம் அதைச் சொல்கிறேன்.
கருத்துகள்