சாகித்திய அகாதெமியின் ‘யுவபுரஷ்கார்’
.jpg)
விடுதலை பெற்ற இந்தியாவில் கலை, இலக்கிய வளர்ச்சிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அகாதெமிகளில் எழுத்துக்கலைகளுக்கான அமைப்பு சாகித்திய அகாதமி (நுண்கலைகளுக்கானது லலித் கலா அகாதெமி; நிகழ்த்துக்கலைகளுக்கானது சங்கீத் நாடக அகாதெமி). பல்வேறு நோக்கங்களுடன் 1954 இல் உருவாக்கப்பட்ட சாகித்திய அகாதெமி அடுத்த (1955) ஆண்டிலிருந்தே ஒவ்வொரு இந்திய மொழிக ளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை எழுதியவர்களுக்கு விருதுகள் வழங்கத் தொடங்கியது. அவ்விருது தேசிய அளவில் கிடைக்கும் அங்கீகாரம் என முன்வைக்கப்பட்ட நிலையில் அவ்விருதைப் பெற்றுக்கொள்ளும் போட்டி ஆரம்பமானது. அதன் விருதுகள் வழங்கியதின் வழியாகவே சாகித்திய அகாதெமியின் இருப்பைப் பலரும் அறிந்துகொண்டார்கள். நூலுக்கு விருது எனச் சொல்லப்பட்டாலும் தொடக்கம் முதலே ஆளுமைகளுக்கு விருது என்பதே நடைமுறையாகத் தமிழில் இருந்து வந்துள்ளது. எப்போதாவது சில ஆண்டுகளில் விருதுக்குழுவினர் ஆளுமையைப் பின்னுக்குத் தள்ளி எழுத்தை அங்கீகரிப்பதாக நினைத்துக் கொண்டார்கள்.