நாடகக் கலை இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளும், ஓவியம்,சிற்பம் போன்ற நுண்கலைகளும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், காணொளித்தொகுப்புகளாகச் சமூக ஊடகங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் இருநிலை ஊடகக்கலைகளும் கூடக் கல்வித்துறைப் பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளன. இவற்றைக் கற்பித்துத் தேர்வுகள் நடத்தி, இலங்கை/ இந்தியப் பல்கலைக் கழகங்கள் பட்டங்கள் வழங்குகின்றன. இலங்கைப் பல்கலைக்கழகங்களில் செயல்படும் அழகியல் கற்கை நிறுவகங்கள் பட்டப்படிப்பு நிலையிலேயே இருப்பதால், பட்டமேற்படிப்புக்கும் ஆய்வுப்படிப்புக்கும் இந்தியப் பல்கலைக்கழகங்களை நாடிவரும் மாணாக்கர்களை நான் அறிவேன். புதுவைப்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த காலத்தில் நேரடி மாணவராக இருந்தனர். அங்கிருந்து நான் வெளியேறியபின் ஆலோசனைகள் வழங்கும் ஆசிரியனாக அவர்கள் என்னை நாடியிருக்கிறார்கள். கல்வி நிலையங்களில் இப்போது கற்றுத் தரப்படுகின்றன என்று சொல்லுவதால் அதற்கு முன்பு அத்தகைய கல்வி இல்லை என்று பொருள்கொள்ளவேண்டியதில்லை. இவ்விரு நாடுகளிலும் காலனிய ஆதிக்கம் நிலவிய காலத்த...