மத்தேயு என்னும் தன்மை, முன்னிலை, படர்க்கை
தன்மை, முன்னிலை, படர்க்கை இந்தச் சொற்களை இலக்கணப் புலமையின் அடிப்படைச் சொற்களாக அறிமுகம் செய்துள்ளது நமது கல்வியுலகம். தான், யான், நான் என்பன தன்மைகள்- தன்மை ஒருமைகள். அவற்றின் பன்மைகளாக தாம், யாம், நாம், நாங்கள். முன்னிலையில் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. அவன், அவள், அவர்,அது என்பன படர்க்கை யொருமைகள்; அவர்கள், அவை பன்மைகள். இச்சொற்களை உச்சரிக்கும்போது நான் என்னும் தன்னிலையும் நீ என்னும் மாற்றுநிலையும் அவள்/அவன் /அவர்-கள், அவை என்னும் விலகல் அல்லது சுட்டுநிலையும் உருவாவதைப் பற்றி இலக்கணப்புலம் விரிவாகப் பேசுகின்றது. இந்த உருவாக்கமே மொழியின் அடிப்படை வினையாற்றுக்கூறு. இவற்றிலிருந்தே அறிவுத்தோற்றம் நிகழ்கிறது.