முப்பரிமாணமென்னும் மாயவலை.

கயிறு திரித்தல் தமிழ் நாட்டுக் கிராமங்களின் ஒரு கைத்தொழில். வணிகரீதியாக விற்பதற்காக என்றில்லாமல் விவசாயிகள் அவர்களின் தேவைக்கென அவர்களே கயிறுகளைத் திரித்து உருவாக்கிக் கொள்வார்கள். என்னுடைய தந்தை எங்கள் வீட்டில் இருந்த மாடுகள், ஆடுகள் போன்ற வற்றைக் கட்டுவதற்கும்,மூக்கணாம் கயிறுகளுக்கும் தேவையான கயிறுகளை அவரே தான் திரிப்பார். அப்பொழுதெல்லாம் மிளகாய்ச்செடிகள் நட்ட பொழுது புளிச்சி மார் என்றொரு தாவரத்தைப் பயிரிடுவார்கள்.மிளகாய் நட்ட தோட்டத்தைச் சுற்றி அரண் போல அது வளர்ந்து நிற்கும். மிக நெருக்கமாக அவ்விதைகள் போடப்படுவதால் நேர்கோட்டில் உயரமாக வளர்ந்துவிடும். அத்தாவரத்தின் காய்கள், கனிகள் உண்பதற்குப் பயன்பட்டமாதிரி எனக்கு நினைவில் இல்லை. காய்ப்பது வரை விவசாயிகள் காத்திருந்ததுமில்லை. இலைகள் பச்சையம் குறைந்து பழுப்பேறத்தொடங்கும் போது வேரோடு பிடிங்கித் தண்ணீரில் மிதக்கவிட்டு நார் உறித்துக் காயவைத்துப் பிரியாக்கிக் கயிறு திரித்த காட்சிகள் இப்பொழுதும் நினைவில் இறக்கிறது. அந்த நினைவு களில் இரட்டைக் கமலைகள் போட்ட எங்கள் கிணறும் அங்கு வளர்ந்த பூவரச மரமும் கொடுக்காப்புளி மரமும் அடக்கம். ஆனால் இன்று எனது கிராமத்தில் இவை எதுவும் இல்லை. மாடுகளும் இல்லை; அவற்றைக் கட்ட புளிச்சநார்க் கயிறுகளும் இல்லை. எல்லாம் பிளாஸ்டிக் கயிறுகள் தான்.
கயிறு திரித்தலின் இன்னொரு பரிமாணத்தைப் பாண்டிச்சேரிக்கு நான் பணி காரணமாகப் போன போது பார்த்தேன். தென்னை மரங்கள் நிரம்பிய கிழக்குக் கடற்கரையோரக் கிராமங்களில் அதிகாலையிலிருந்தே கயிறு திரிக்கும் தொழில் செய்பவர்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இறங்கிவிடுவதைப் பார்த்திருக்கிறேன். தேங்காயின் ஓட்டைச் சுற்றி மூடியிருக்கும் நாரைத்தட்டிப் பிரித்துத் தனித்தனியாக ஆக்குவார்கள். பின்பு தேவையான அளவு ஈரப்பதத் திற்காக அவற்றைக் காயவைப்பார்கள். பாதி அளவு பஞ்சாக ஆகிவிடும் நிலையில் திரிக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள். குடும்பத்தில் நான்கு பேர் இருந்தால் கயிறு திரிக்கும் தொழில் தொடங்குவதில் சிரமம் இல்லை. செங்குத்தாக நிற்கும் ஒரு பலகையில் மூன்று துவாரங்களும் ஒரு சக்கரமும் அதைச்சுற்றுவதற்கான கைப்பிடியும் கொண்ட அந்த இயந்திரத்தைச் செய்வது மிக எளிய காரியம் தான். மடியில் நிரப்பிய தேங்காய் நாருடன் வேறு பக்கம் திரும்¢பிப் பேசிக்கொண்டு வேலை செய்தாலும் கைகள் நாரை எடுக்கும் அளவிலும் அமுக்கி அனுப்பும் லாவகத்திலும் தவறுவதில்லை. ஒரே சீராக மூன்று பிரிகளும் இணைந்து ஒரே கயிறாக- வலுவான சக்தியுடன் உருவாகி முறுக்கேறி நிற்கும். தொய்வுடன் இருந்த நாருக்குள் முறுக்கையும் பலத்தை யும் வலுவையும் இணைத்த கைகள் அந்தக் கயிற்றை வட்டமாகச் சுற்றப் படும் சிரமம் விரும்பி ஏற்கப்படும் சிரமம். முப்பிரிநூல் ஒன்றிணைவதில் வலுவும் பலமும் உண்டாகிறது.

கல்லூரியில் அறிவியில் படிக்கவில்லை என்றாலும் பள்ளியில் படித்த அறிவியல் இன்னும் நினைவில் இருக்கிறது. முப்பரிமாணக் கண்ணாடிப் பட்டையைப் பார்த்தும் இருக்கிறேன். மிகச்சிறிய துவாரத்தின் வழியாக வரும் சூரிய ஒளியை அந்தப் பிரிசத்தின் வழியே செலுத்தினால் அதன் அடுத்த பக்கத்தில் நிறுத்தப்படும் திரையில் அல்லதுவௌளைத்தாளில் வானவில்லின் ஏழு வண்ணங்களை உண்டாக்கிக் காட்டும். நிறப்பிரிகையாக நிற்பது அந்த முக்கோணப்பிரிசம்.நிறமற்றதாக நம்பப்படும் சூரிய ஒளிக்குள் ஏழு வண்ணங்கள் உள்ளன என்பதை அறிவதும் அவ்வண்ணங்களில் லயிப்பதும் விரும்பப்படும் மன உணர்வு.

தனித்தனியான மூன்று பிரிகளை ஒன்றாக்கும் கைவினைத் தொழில் பற்றிய நினைவும் வண்ணமற்ற வண்ணத்திலிருந்து ஏழு வண்ணங்களை உண்டாக்கிக் காட்டும் நிறப்பிரிகை பற்றிய நினைவும் கவிஞர் ம.மதிவண்ணனின் வெளிச்சங்களைப் புதைத்த குழிகள் என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலைப் படித்த போது தோன்றியது என்பதை சொல்லியாக வேண்டும். தொண்ணூறுகளில் தொடங்கிய தலித் எழுச்சியைப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கும் அளவிற்குக் கால நீட்சி கண்டு விடவில்லை என்பது ஒரு பக்கம் உண்மைதான். என்றாலும் அவ்வெழுச்சி உண்டாக்கியுள்ள அலை களையும் அதன் மேடு பள்ளங்களையும் அதனால் விவாதத்திற்குள்ளான பொருள்களையும் பார்க்கும்பொழுது வியப்பாகவும் இருக்கிறது.கலை இலக்கியத் துறையிலும் சமூகப் பண்பாட்டுத்தளத்திலும் அரசியல் பரப்பிலும் தலித் இயக்கம் எழுப்பிய விவாதங்களும் முன்வைத்த பார்வைகளும் நிராகரித்த நபர்களும் நிலை கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது கண்கூடு. அத்தகைய தவிப்பும் பதற்றமும் தலித் இயக்கங்களுக்கு வெளியே தான் நடந்தது என்று சொல்ல முடியாது. உள்ளேயும் நடந்தது;நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு எழுத்துச் சாட்சி இந்த நூல்.

தலித் இயக்கங்களின் சிந்தனை நிகழ்காலத்தைப் பற்றிக் கொண்டு பரவி வந்த வேளையில் தலித் என்ற உணர்வை உண்டாக்குவது,அதன் வழியாக அனைத்து விதமான ஒடுக்கப்பட்ட மக்களை - குறிப்பாகத் தீண்டாமையால் ஒதுக் கப்படும் மக்களை ஒன்றிணைப்பது, அதன் தொடர்ச்சியாகத் தங்கள் மேல் சுமத்தப்பட்ட கருத்தியல் மற்றும் சமூக இழிவுகளுக்கு எதிராகப் போராடுவது என இயங்கி வந்தன அந்த இயக்கங்கள். ஆனால் அடுத்த கட்டமாக வரலாற்றுக்குள் , அதாவது கடந்த காலத்திற்குள் சென்று தங்களின் ஆதர்சங்களையும் முன்னோடிப் போராளிகளையும் தேடிக் கண்டுபிடிக்கத் தொடங்கிய போது இயக்கங்களுக்குள் விரிசல்கள் ஏற்படத்தொடங்கின. அதே போல் கடந்த காலத்தில் தங்களின் நண்பர்களாக இருந்தவர்கள் யார்..? அவர்களின் வழித்தோன்றல்கள் இன்றும் நண்பர்களாக இருக்கத்தக்கவர்கள் தானா.. ? என்ற வினாவையும் விசாரணைகளையும் முன்னெடுத்த போது விரிசல்கள் மேலும் விரியத் தொடங்கின. அதன் காரணமாகப் பின்வரும் கருத்தோட்டம் உருவாகிவிட்டது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.

தலித் என்ற ஒற்றைச் சொல்லால் தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்ட சாதிகளுள் முக்கியமானதாக உள்ள அருந்ததியர், பறையர், பள்ளர் என்ற மூன்று பிரிவினரையும் ஒன்றுபடுத்திவிட முடியாது என்ற கருத்து இன்று மேலோங்கிவிடத்து. ஜனநாயக அரசியலில் கூட்டமே வலிமை என்ற உண்மை புரிந்த் போதிலும் இம்மூன்று குழுக்களும் ஒன்றிணைவதன் தேவை உணரப் படவில்லை. சமகால அரசியலில் இம்மூன்று பிரிவினரையும் வழி நடத்தும் அரசியல் தலைவர்களும் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. தலித் இயக்கங்களும் அதன் சிந்தனையாளர்களும் இவற்றை ஏற்று தங்களின் இலக்கியக் கொள்கைகளை உருவாக்கிக்கொண்ட படைப்பாளிகளும் கூட ஒன்றிணைவதற்கான வழியைப் பற்றி யோசிக்காமல் வேறுபாடுகளைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர். முப்பிரி நூலை ஒற்றைக் கயிறாக்கும் சிறு இயந்திரத்தின் அழகியலைக் கணக்கில் கொள்ளாமல் வண்ணக் கோலங்களை உண்டாக்கும் நிறப்பிரிகையின் அழகியலில் தடுமாறிப் போய்க் கிடக்கின்றனர். இந்தக் கருத்தோட்டம் சாதிய சமூகத்தை விரும்பும் மைய நீரோட்டத்தின் கருத்தோட்டம் தான். அதை உருவாக்குவதில் வெகுமக்கள் ஊடகங்கள் மட்டுமே வினையாற்றுகின்றன என்று சொல்வதற்கில்லை. சிந்தனைத் தளத்தில் செயல்படுவதாக நம்பும் சிறுபத்திரிகைகளும் கூட அதிலிருந்து விலகிவிடவில்லை.

நிகழ்காலச் சூழலைக் கூர்ந்து கவனிக்கும் ஒரு படைப்பாளியாகவும் சிந்தனை யாளனாகவும் கருதிக் கொள்ளும் ஒருவனின் பயணம் வினாக்களை எழுப்புதல், விவாதங்களை முன் வைத்தல், பக்கச் சார்பை அடையாளப் படுத்துதல், நிறைவாகத் தனித்து நிற்க வேண்டிய தேவையைச் சுட்டிக்காட்டி ஒதுங்கிக் கொள்ளுதல் என்பதாகப் பயணிக்கிறது. கவிஞர் ம.மதிவண்ணனின் 10 கட்டுரைகளையும் ஒருசேர வாசித்தபோது இந்த பயணவழி எனக்குப் புலப்பட்டது. தன்னிலையை மறக்காத ஒரு படைப்பாளியின் பயணம் அப்படி இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

கவிஞர் மதிவண்ணன் இவ்வாறு ஒதுங்கிக் கொண்டதற்கான காரணங்களும் புலப்படத்தான் செய்கின்றன. இன்னொரு விதத்தில் இவரது ஒதுங்குதல் காணாமல் போவது அல்லது தனிமனிதனாக அலையத் தொடங்குதலின் ஆரம்பம் என்றும் சொல்ல முடியாது. தனது இருப்பின் நியாயங்களை இன்னொன்றில் தேடுதல் அல்லது முன்னர் இருந்த ஒன்றோடு அடையாளப் படுத்திக் கொள்ளுதல் என்பதாகச் சொல்லலாம். 10 கட்டுரைகளில் நான்கு கட்டுரைகளைப் புதிய கோடாங்கியில் எழுதிவிட்டு புதிய தடம், கவிதாசரண், புதியபார்வை எனப் பயணம் செய்துள்ள மதிவண்ணனின் பயணம் இதைத் தான் உணர்த்துகின்றன.

ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்பட்ட மனிதர்களின் விடியலாக நம்பிக்கை தந்த தலித் இயக்கம் -குறிப்பாக சாதி ஒழிப்பு இயக்கமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தலித் இயக்கம் --தனக்¢குள் இருக்கும் மூன்று பிரிவுகளுள் ஒன்றை முன்னெடுக்கும் போக்காக இருக்கிறது என்பது மதிவண்ணன் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டிற்குள் பறையர்களின் அடையாளங்களையும் நலன்களையும் மட்டும் கணக்கில் கொண்டதாக தலித் இயக்கம் மாறிவிட்டது என்ற துணைக் குற்றச்சாட்டும் அருந்ததியர்களின் இருப்பும் விடுதலையும் பொருட் படுத்தப்படவில்லை என்ற தொடர் குற்றச் சாட்டும் இருக்கிறது. அயோத்திதாசரைச் சிந்தனையாளராக முன்வைப்பதிலும் , பெரியாரைத் தலித் இயக்கத்தின் விரோதியாகச் சித்திரிப்பதிலும் உள்ள அரசியலைப் பேசுவதி லிருந்து தனது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
மதிவண்ணனின் வாதங்கள் விவாதிக்கவேண்டிய வாதங்கள் என்பதில் கருத்து வேறுபட வாய்ப்பில்லை. அவ்விவாதங்களின் வழியாக வேறு சில விவாதங்களுக்கும் நாம் செல்லலாம்.தலித் இயக்கமாக இம்மூன்று பிரிவினரையும் இணைய விடாமல் தடுப்பதில் உள்ள பிரச்சினை உண்மை யில் உள்சாதி முரண்பாடுகளா..? அல்லது இந்திய சாதி அமைப்பு வலி யுறுத்தும் சுயசாதி அடையாளத்தைத் தக்க வைப்பதற்கான போராட்டமா..? என்பதையும் விவாதிக்கலாம்.
===========================================================================
வெளிச்சங்களைப் புதைத்த குழிகள்
ம.மதிவண்ணன், கருப்புப் பிரதிகள் வெளியீடு
45-ஏ இஸ்மாயில் மைதானம், லாயிட்ஸ் சாலை, சென்னை-5 .விலை.ரூ35/
Puthiya kodanki, November,2005

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்