மரணம் அல்ல; தற்கொலை

பதினைந்தாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் முடிந்து, அமைச்சரவை பொறுப்பேற்பும் முடிந்து விட்டது. அமைச்சரவை அமைப்பதற்கு முன் நடக்கப் போவதாகப் பேசப்பட்ட அணிமாற்றங்கள், பேரங்கள், கொடுக்கல் வாங்கல்கள் என எதுவும் இல்லாமல் ஆக்கி விட்டன தேர்தல் முடிவுகள். இந்திய வாக்காளர்கள் அளித்துள்ள இந்த முடிவுகள் பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு. குறிப்பாகக் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தலைமைக் குடும்பமான நேரு குடும்பத் திற்கும் இதுவரை இல்லாத பெருமகிழ்ச்சி. தோல்வியைத் தழுவிக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் கூட நிம்மதிதான். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நல்ல ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்..
மாநிலக் கட்சிகளின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு அவை ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு, அவைகளின் ஆதரவில் வெற்றி பெற்று, அவற்றின் அத்து மீறிய ஆசாபாசங்களைத் தட்டாமல் ஏற்று, ஐந்து ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரஸ் இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் நிம்மதிப் பெருமூச்சு விடத் தொடங்கியிருக்கிறது என்று சொல்வதை விட அமைதி யாகக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாரதீய கட்சிகளின் தேர்தல் வியூகங்களால் தோற்றார்கள் என்று சொல்வதை விடத் தங்கள் தோல்வியைத் தாங்களே தேடிச் சேர்த்துக் கொண்ட இடதுசாரிகளின் தோல்வியை எப்படிக் குறிப்பிடுவது எனத் தெரியவில்லை.
நிலையற்ற தன்மை மீது வெறுப்புக் கொண்டவைகள் போலப் பாவனை செய்த படியே அந்நிலையை ரசிக்கும் ஆங்கில ஊடகங்கள் இந்தத் தேர்தல் முடிவுகளையும், அதற்குப் பிந்திய நடவடிக்கைகளையும் எப்படி எதிர்கொள்வது எனத் தவிப்பது ஏன் என்று தெரியவில்லை. குறிப்பாக ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளுக்கு தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியா? வருத்தமா?என்று உறுதியாகத் தெரியவில்லை இந்த முடிவுகளை ஏற்கத் தயங்கும் விதத்தை அவை நடத்தும் விவாதங்கள் வெட்ட வெளிச்சமாகவே காட்டுகின்றன.
தேர்தனின் போதும், தேர்தல் நடந்த நாளன்றும் நடத்தியதாகச் சொன்ன கருத்துக் கணிப்புகள் என்னும் கருத்துத் திணிப்புகள் அத்தனையும் பொய்த்துப் போய்விட்டதில் அவைகளுக்குக் கொஞ்சம் கூடக் குற்ற உணர்வே இல்லை. அதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டுக் கலங்காமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விட்டன என்பது தான் ஆச்சரியம். எண்பதுகளின் இறுதியில் பரபரவெனக் கிளம்பிய புலனாய்வு இதழ்களின் பெருக்கம் உண்டாக்கிய பரபரப்பைப் பற்றிச் சொல்லும் போது அவ்விதழ்களின் இதழியல் என்பது புலனாய்வு இதழியல் அல்ல; மோட்டுவளை இதழியல் எனச் சொல்லப் பட்ட கூற்று அப்படியே ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளுக்கும் பொருந்தும். புலனாய்வு இதழ்கள் நிகழ்வுகளைப் புனைவுகளாக ஆக்கிக் காட்டின என்றால், ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள், செய்திகளைப் புனைவுகளாகவும், கணிப்புகளைத் திணிப்புகளாகவும் மாற்றிக் கட்டமைக்க முயல்கின்றன. இந்திய மொழிகள் உணர்ச்சிகளையும், பக்தியையும், புனைவையும் பேசுவதில் வல்லமையுடையன; ஆனால் ஆங்கிலம் அறிவியலைப் பேசும் தன்மை கொண்டது எனச் சொல்லப்பட்ட வாக்கியத்தை இந்திய ஆங்கிலச் செய்தி அலைவரிசைகள் பொய்யாக்கிக் கொண்டிருக்கின்றன. அறிவியல் அடிப்படைகள் எதுவும் இல்லாமல் ஆரூடத்தை மட்டுமே நம்புவனவாக ஆங்கிலத் தொலைகாட்சி ஊடகங்கள் மாறிப் போய்விட்டன.
இந்தியப் பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தையும், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளையும் இரண்டு தராசுகளில் வைத்து நிறுத்துப் பார்த்து விவாதங்களை அமைக்கும் அவை எல்லாவற்றையும் அதன் அதன் எல்லைக்குள் நின்று பார்க்கும் படிப் பார்வையாளர்களைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்றன.தேர்தலுக்குப் பிந்திய அரசுரு வாக்கத்தை வெறும் அரசியல் நடவடிக்கைகளாக மட்டுமே பார்த்துப் புரிந்து கொள்ளும்படி பார்வையாளர்களைப் பழக்கப் படுத்தும் அதே நேரத்தில் ஐ.பி.எல் போட்டிகளைக் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே என்பதாகக் காட்டி விடத்துடிக்கின்றன. இரண்டிற்கும் பின்னால் இருக்கும் பொருளாதார, பண்பாட்டுப் பிரச்சினைகளுக்குள் அவை நுழைவதே இல்லை. இப்படித் தங்கள் எல்லையைக் குறுக்கிக் கொண்ட ஊடகங்களின் நிலையைக் குறிக்கத் தோதான வார்த்தைகளாக மரணம் அல்லது தற்கொலை என்ற சொற்களைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று தோன்றியது. ஆனால் அவற்றின் இருப்பிற்கு ஏற்பட்டுள்ள கதியைச் சொல்வதற்கு இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவது பொருந்தாது அதற்கு மாறாக அவற்றின் பார்வையாளர்களின் மனத்திற்கும் மூளைக்கும் ஏற்படும் இழப்பைக் குறிக்கும் சொற்களாக மரணத்தையும் தற்கொலையையும் பயன்படுத்தலாம் என்று தோன்றியது.
மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவய யதார்த்தத்தைக் குறித்துக் கொண்டிருக்கும் ஒரு சொல்லைப் புனைவாகவும் கருத்தாகவும் நினைப்பாகவும் இருக்கும் ஒன்றிற்குப் பயன்படுத்தக் கூடாது என்பதைப் புனைகதை ஆசிரியர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கட்டுரை எழுதுபவர்கள் அப்படி எழுதினால் நிச்சயம் மொழிப்பிழை என்பதைச் சொல்ல வேண்டியதில்ல.
காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஆட்சி அமைப்பதற்கான ஆசுவாசப் பெருமூச்சை மட்டும் இந்தத் தேர்தல் வழங்கியுள்ளதாக நாம் நினைக்க முடியாது. நேரு இருந்தவரை தனியார் மயம் x கலப்புப் பொருளாதாரம் என்ற எதிர்வுகளால் பொதுத்தேர்தல்கள் நடந்து வந்தன. இந்திரா காந்தி அதையே கொஞ்சம் மாற்றி நிலையான ஆட்சிக்கு எதிராக இருக்கும் பழைமையானவர்களை எதிரிகளாகக் காட்டினார். அவரை வெற்றி கொள்ள விரும்பிய மாநிலத் தலைவர்கள் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராகப் பொதுத் தேர்தலைக் கட்டமைத்தனர். அவரிடமிருந்து ஆட்சியைக் கை மாற்றிக் கொண்ட ராஜீவ் காந்தியைப் பதவியிலிருந்து இறக்க ஊழல் x ஊழலற்ற ஆட்சி என்ற எதிர்வு பயன்பட்டது. ஊழலற்ற ஆட்சியைத் தருவதாகச் சொன்னவர்கள் அதைக் கைவிட்டுச் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த போது, மத அடிப்படைவாதம் தேசியவாதத்தை உயர்த்திப் பிடித்து அதிகாரத்திற்கு வந்தது. தேசியவாதத்திற்குப் பின்னால் மதவாதம் இருக்கிறது என்பதை உணர்த்த காங்கிரஸ் சமயச்சார்பின்மையை உயர்த்திப் பிடித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எனப் பாரதீய ஜனதா கட்சி நாடு தழுவிய கூட்டணி அமைத்துள்ளதாகக் காட்டிக் கொண்டபோது, தேசம் தழுவிய கூட்டணி எதுவும் இல்லை எனக் காங்கிரஸ் அறிவித்து விட்டு மாநில அளவில் தேர்தல் கூட்டுக்களை மட்டுமே முயற்சி செய்து வெற்றியை அடைந்துள்ளது. இந்தத் தேர்தலில் எந்தவிதமான எதிர்வும் உருவாக்கப் படவில்லை என்பது தற்செயலானது அல்ல;எதிர்வுகளால் உருவாக்கப்படும் தேசிய அளவிலான கோஷம் எதுவும் இல்லை என்பதே அதன் அர்த்தம். கடந்த பத்தாண்டுகளில்-குறிப்பாக நேருவின் கலப்புப் பொருளாதாரக் கோட்பாட்டிலிருந்து விலகித் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என மன்மோகன் திட்டம் முன் வைக்கப்பட்டதின் பின்னணியில் இந்த எதிர்வின்மையை விளங்கிக் கொள்ள வேண்டியது அவசியம்.
அப்படிப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போது 65 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டி ருந்த இடதுசாரிகள் 20 என்ற எண்ணிக்கையில் சுருங்கி விட்டதை இடதுசாரிகளின் மரணம் என்ற சொற்றொடரால் குறிப்பது அபசகுனம் எனத் தோன்றவில்லை. இடதுசாரிகளுக்கு ஏது சகுனமும் அபசகுனமும். அப்படிக் குறிப்பதை விட இடதுசாரிகளின் தற்கொலை என்று குறிப்பது கூட மிகப் பொருத்தமானது என்று தோன்றுகிறது.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டிக் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொண்டதின் பின்னணியில் அந்த ஒரு அம்சம் மட்டுமே இருந்தது என்று சொல்ல முடியாது. தொடர்ந்து முதலாளிகளுக்கு ஆதரவான பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுக்கும் மன்மோகன் சிங்கின் ஆட்சியின் மேல் பாவப்பட்ட மக்கள் கோபம் கொள்ளப் போகிறார்கள்; அதனால் காங்கிரஸ் வரப்போகும் தேர்தலில் படுதோல்வி அடையப் போகிறது; மக்கள் கோபம் கொள்ளும் போது காங்கிரஸை நாங்கள் ஆதரிக்க வில்லை எனச் சொல்லிக் கொள்ளலாம் என்ற அபத்தமான முன் எச்சரிக்கையுடன் தான் இடதுசாரிகள் ஆட்சிக்கு ஆதரவில்லை என்று சொல்லி ஒதுங்கினார்கள்.
அப்படியான எச்சரிக்கை உணர்வுடன் ஆற்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த இடதுசாரி களுக்குக் கிடைத்த தெப்பம் தான் அணுசக்தி ஒப்பந்தம். அதைக் கைப்பிடித்துக் கரையேறப் போவதாக வந்தவர்கள் தேர்தல் என்னும் பெருங்கடலில் குதித்த போது அந்தத் தெப்பத்தின் மீதேறிப் பயணம் செய்யாமல் கரையில் விட்டு விட்டு உதிரிக் கட்சிகளின் துடுப்புப் படகுகளில் பயணத்தைத் தொடர்ந்தார்கள் என்பது தான் நடந்து முடிந்த தேர்தலின் கதை.
பொதுத்தேர்தலில் காங்கிரஸையும் பாரதீய ஜனதாக் கட்சியையும் ஒரே தூரத்தில் விலக்கி வைப்பது என முடிவு செய்தால் அதைச் சரியாகச் செய்திருக்க வேண்டும். அதற்கேற்ற ஒரு கூட்டணியை அல்லது இயக்கத்தை முன்னெடுத்திருக்க வேண்டும். அப்படியான இயக்கத்தை முன்னெடுக்கத் தேவையான தோழமைக் கட்சிகள் இல்லாத நிலையில் என்ன காரணம் சொல்லி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை என்று சொன்னார்களோ அதைப் பேச முடியாத வர்களாக ஆனார்கள். அவர்கள் கூட்டணி சேர்ந்த கட்சிகளுக்கு அணுசக்தி ஒப்பந்தமோ, தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதாரத் தத்துவங்களோ ஒரு பொருட்டே கிடையாது என்பதை முதலிலேயே அறிந்திருந்தும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்தார்கள். அப்படிச் சேர்ந்தை எப்படிக் குறிப்பது.? இடதுசாரிகளின் மரணம் என்றா? அல்லது தற்கொலை என்றா?
இடதுசாரிகள் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு விதமாக இருந்தது. ஆட்சி அதிகாரம் மட்டுமே முக்கியம் என்று கருதும் மாயாவதியோடும், ஜெயலலிதாவோடும் மேடையைப் பங்கிட்டுக் கொண்ட போது அவர்களின் பொருளாதாரக் கருத்துக் களும் அமெரிக்க எதிர்ப்பும் பேசும் பொருளாகக் கூட இல்லாமல், அந்தந்த மாநிலத்து எதிரிகளின் மீதான வசைகளாக மாறிப்போனதை எப்படிக் குறிப்பது. இடதுசாரிகளின் மரணம் என்றா? அல்லது தற்கொலை என்றா?
தமிழ்நாட்டில் இலங்கைப் பிரச்சினையை முக்கியமான தீர்மானமாக ஆக்கிய போது இடதுசாரிகளால் தெளிவான ஆதரவு அல்லது எதிர்ப்பு என ஒன்றை முன் வைக்க முடிய வில்லை. பா.ம. க., ம.தி.மு.க. போன்றவற்றின் உணர்ச்சி வசமான கோஷங்களுக்குள் முடங்கிப் போனதோடு, தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்ற ஜெயலலிதாவின் அபத்தச் சந்தர்ப்ப வாதத்திற்கும் ஆமாம் சாமி போட வேண்டியதாகி விட்டது. அத்துடன் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் கிடைத்தால் பாரதீய ஜனதாவின் பக்கம் அக்கட்சிகள் போவதை இவர்கள் தடுக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமலேயே அந்தக் கூட்டணியில் இருந்ததை எப்படிக் குறிப்பது.? இடதுசாரிகளின் மரணம் என்றா? அல்லது தற்கொலை என்றா?
இந்திய தேசத்தின் மொத்தப் பரப்பிலும் காங்கிரஸ் என்னும் தேசியக் கட்சி இன்னும் இருக்கிறது என்ற நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்துள்ள இந்தப் பொதுத்தேர்தலின் பின் விளைவுகள் எப்படி இருக்கும்? பொருளாதார வளர்ச்சியே முதன்மை நோக்கம் எனச் சூளுரைத்துள்ளது புதிய அரசு. தங்களுக்கு வரப்போகும் ஆறாவது ஊதிய ஆணையப்படியான சம்பள உயர்வு, பஞ்சப்படி நிலுவை, நாசுக்கான நடுத்தர வர்க்க அடையாளமான நானோ கார்கள், வழுக்கும் சாலைகள், வீட்டு உபயோகப் பொருட்களின் பெருக்கம், போன்ற வசதிகள் தடைப்படாது என மகிழ்ச்சியில் திளைக்கின்றது நடுத்தர வர்க்க மனம். மாநிலக் கட்சிகளின் அதிகாரம் குறைந்து விட்டது என்பதை நேர்மறை அம்சமாகக் கருதிப் புன்னகை முகத்துடன் விவாதிக்கின்றன தேசிய அலைவரிசைக் காட்சி ஊடகங்கள்.
எப்போதும் பொதுத்தேர்தலை முக்கியமான எதிர்வொன்றின் முரண்பாடாகக் கட்டமைக்கக் காரணமாக இருந்த இடதுசாரிகளின் இருப்பை, இந்தத் தேர்தல் முடிவுகள் கேள்விக்குள்ளாக்கி விட்டன. அதை நினைத்து இந்தத் தேசத்தின் உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் நிச்சயமாக மகிழ்ச்சி அடைய முடியாது. 20-05-2009

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்