உணர்வுகளை எழுதும் தர்க்கம்:சேரனின் கவிதைகள்

மூன்று தெருக்கள் என்று தலைப்பிட்ட இந்தக் கவிதை சேரனின் சமீபத்திய தொகுப்பில் உள்ள ஒரு கவிதை [பக்.45-46].இதை முதல் தடவையாக வாசித்த உடனேயே ‘ஒரு கவிதை எளிமையானதாக இருக்கிறது’ என்பதற்கு உதாரணமாகச் சொல்லத் தக்க கவிதை இது என எனக்குத் தோன்றியது. தொடர்ந்து கவிதைகளை வாசித்துப் பழக்கப்படுத்தி வரும் கவிதை வாசகன், முதல் வாசிப்பில் ஒரு கவிதையின் நோக்கம் என்ன? கவிதைக்குள் கவிஞன் உண்டாக்கிக் கடத்த விரும்பிய உணர்வின் தளம் எத்தகையது இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் நிலையில் அந்தக் கவிதையை எளிய கவிதை என அடையாளப் படுத்திக் கொள்கிறான். அப்படியான அடையாளத்திற்குள் அடைபடாமல் தப்பிக்கும் கவிதை, திரும்பவும் வாசிக்கும்படி தூண்டும். திரும்பத் திரும்ப வாசிக்கும் போதும் தன்னை அடையாளப்படுத்தாமல் போய்விடும் நிலையில் வாசகனிடம் தோன்றுவது அலுப்பு. தொடர்ந்த முயற்சிக்குப் பின்னும் வாசகனின் மனப்பரப்புக்குப் பிடிபடாமல் அலுப்பை உண்டாக்கி, ஒதுக்கிய கவிதையை வாசகனும் ஒதுக்கி வைத்து விட்டு ஒதுங்கிப் போய்விடுகிறான். கவிதை வாசிப்பில் நடக்கும் இந்த இயக்கம் பொதுவானது.சேரனின் மூன்று தெருக்கள் என்ற தலைப்பிட்ட அந்தக் கவிதை முதல் வாசிப்பிலேயே வாசகனிடம் தனது நோக்கம் மற்றும் உணர்வு நிலையை ஒருசேரக் கடத்தி விடும் இயல்பு கொண்டதாக இருக்கிறது. அந்தக் கவிதையை  வாசித்துப் பாருங்கள்.

கடவுளரும் பிசாசுகளும்
இணைந்து
புரிந்த
இனப்படுகொலையின்
ஒரு குருதித்துளி
பாலைப்பட்டினத்தின்
ஒதுக்குப் புறத்தில்
தெறித்து வீழ்ந்தது.

அந்தப் புள்ளியிலிருந்து
மூன்று தெருக்கள்
கிளை பிரிந்தன.
ஒன்று தெற்கே போயிற்று
எவரும்
திரும்பி வர முடியாத தெரு அது எனப்
போனவர்க்குத் தெரியாது
அவர் சாம்பலையும் காணோம்

இன்னொன்று மேற்கே போயிற்று
கடலும் காடுகளும் தாண்டி
இரவல் முகங்களுடன்
குளிர்காலத்து
ஆறுகளின் குறுக்கே நடந்து
எல்லைக்காவலர்களின்
கொள்ளிக் கண்களுக்கும்
தப்பிஇரவுப் பயணங்களில்
புதிய நாடுகளுக்குச் சென்றனர்.
கறுப்பு முகங்களில்
அவர்களுடைய வெள்ளை அநியாயம் படிந்தது.

திரும்பி வரும் கனவுகள்
தொலைந்து போக
வந்து சேர்ந்த வழியும்
மறந்து போய்த்
திசை கெட்டது உலகம்.
மூன்றாவது தெருகிழக்கே
கானகத்துக்குப் போயிற்று
போனவர்கள் போர்க்குரலுடன்
திரும்பி வந்தனர்.
மூன்று தெருக்களிலிருந்தும்
மூன்று உலகங்கள்
பிறந்தன
மூன்று உலகங்களிலிருந்தும்
முந்நூறு பார்வைகள் விரிந்தன
முந்நூறு பார்வைகளிலிருந்தும் மூன்று கோடி முகங்கள் …..
 அதன் அமைப்பில் ஒரு, நிகழ்வு, அதன் விளைவு, அதனால் ஏற்பட்ட பலன் என்ற தொடர்ச்சி இருப்பது புரிய வரும். பாலைப்பட்டினத்தின் ஒதுக்குப் புறத்தில் இனப் படுகொலையின் ஒரு துளி தெறித்து விழுந்தது நிகழ்வு;மூன்று தெருக்கள் உண்டானது விளைவு;அதனால் மூன்று கோடி முகங்கள் உண்டானது பலன். கடவுளர் களாலும் பிசாசுகளாலும் உண்டாக்கப்பட்ட இனப்படுகொலை என்னும் நிகழ்வின் விளைவு மூன்று தெருக்கள் உண்டானதும், அத்தெருக்களின் வழியே அப்பட்டினத்தின் மக்கள் பயணம் மேற்கொள்ள நேர்ந்ததும். பயணம் மேற்கொண்டவர்களில் தெற்கே போனவர்கள் சாம்பலாகிப் போனார்கள். மேற்கே போனவர்கள் முகம் இழந்து, அடையாளமிழந்து, பட்டணம் திரும்பும் ஆசைகளும் இன்றித் திசைகெட்டுத் திரிகிறார்கள்; கிழக்கில் போனவர்கள் போர்வெறியுடன் இன்னும் கானகத்திற்கும் பட்டணத்திற்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நிகழ்வின் விளைவு. இந்த நிகழ்வையும் விளைவையும் நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்வதோடு பாலைப்பட்டினம் என்பதை இலங்கையில் இருந்த ஒரு நகரம் எனப் புரிந்து கொண்டால் , அந்த நகரத்தின் மக்களுக்கு நேர்ந்த கதியைக் கவிதை சொல்கிறது எனப் புரிந்து கொள்ளலாம். ஒரு நகரம் என்பதற்குப் பதிலாக இலங்கை என்னும் தேசத்தில் தமிழர்கள் வாழ்ந்த நகரங்கள் எல்லாவற்றையும் தான் இந்தப் பாலைப் பட்டினம் என்ற குறியீடு குறிக்கிறது எனப் புரிந்து கொண்¢டால் கவிதை வெறும் அர்த்தத்தையும் அந்த அர்த்தத்தினால் உண்டாக்கப்படும் காட்சி ரூபத்தையும் மட்டும் சொல்வதாக இருக்காது. காட்சி ரூபங்களினூடாக இனப்படுகொலையின் தொடர்ச்சியால் இலங்கைத் தமிழர்களின் வரலாறு என்னவாக ஆக்கப்பட்டது என்பதைக் கவிதை விரித்துச் சொல்கிறது என்பது புரியலாம். இனப்படுகொலைக்குப் பிந்திய இலங்கைத் தமிழர்களின் வரலாறு மூன்று கிளைகள் கொண்டது. தெற்கே போனவர்களின் வரலாறு என்பது இனப்போரில் காணாமல் போனவர்களின் அல்லது கொல்லப்பட்டவர்களின் வரலாறு.மேற்கே போனவர்களின் வரலாறென்பது தேசத்தை விட்டு வெளியேறி , அகதிகளாக அலைந்துழலும் வாழ்க்கையை மேற்கொண்டவர் களின் வரலாறு. கிழக்கே போனவர்களின் வரலாறு என்பது போர்க்களத்தை விரும்பியவர்களின் வரலாறு. போரையே விரும்பி, போர்க்களமே வாழ்க்கை யாக, போரே உணவு, போரே மூச்சுக்காற்று, போரே காதல், போரே திளைப்பு என யுத்தத்தின் நேசர்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் வரலாறு என விரியும். ஒரு நிகழ்வையும் அதன் விளைவையும் மட்டும் விளக்கி விட்டு அதனால் உண்டான உணர்வையும் சொல்லி முடிப்பது கவிதைகளின் பொது இயல்பாக இருக்கிறது. தமிழில் சமூக நிகழ்வுகளைச் சார்ந்து கவிதை எழுதும் முக்கியமான கவிகள் பலரும் இந்த அமைப்பிலேயே தங்கள் கவிதைகளை எழுதியுள்ளனர்;எழுதுகின்றனர். வானம்பாடிக் கவிஞர்களிடமும் அதிகம் வெளிப் பட்ட அமைப்பு அதுதான். அவர்களின் நேரடி வாரிசுகளாக இல்லாமல் மாற்று முகங்களுடன் வெளிப்பட்ட ஆத்மாநாம், பழமலய், கலாப்ரியா, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், சல்மா , கனிமொழி எனச் சமூக நிகழ்வு சார்ந்து கவிதை எழுதிய/ எழுதும் பலரின் கவிதைகளில் இந்த அமைப்பு உள்ளதைக் காணலாம். மொத்தத்தில் பட்டணம் காணாமல் போனது என்பதாக முடித்து, அதனால் உண்டாகும் சோகத்தை வாசிப்பவனிடம் கடத்திவிட்டு முடித்திருந்தால் சேரனின் இந்தக் கவிதையும் அந்த அமைப்பிற்குள் தான் இருக்கிறது எனச் சொல்லி விடலாம். ஆனால் சேரன் பட்டணம் காணாமல் போன துயர நிகழ்வின் பின் விளைவாக வேறு சில பலன்களும் ஏற்பட்டன எனத் தன் கவிதையை விரிக்கிறார் சேரன். மூன்று தெருக்களிலிருந்தும் மூன்று உலகங்கள் பிறந்தனமூன்று உலகங்களிலிருந்தும்முந்நூறு பார்வைகள் விரிந்தனமுந்நூறு பார்வைகளிலிருந்தும் மூன்று கோடி முகங்கள் ….. என விரிந்துள்ளதை வாசித்துப் பாருங்கள். அந்த விரிப்பின் காரணமாக நிகழ்வின் பலன் வெறும் துயரம் மட்டும் அல்ல; துயரங்களின் ஊடாகச் சில நன்மைகளும் ஏற்பட்டுள்ளன எனக் கவி சொல்ல விரும்பியது புலப்படும். அந்தப் புலப்பாடு தான் கவி சேரனின் கவிதையியலின் தனித் தன்மை இதுவென அடையாளப்படுத்துகிறது.உணர்வுகளை உண்டாக்குவது மட்டுமல்ல; உணர்வுகளைத் தாண்டி விமரிசனங்களுக்குள்ளும் வினாக் களுக்குள்ளும், அழைத்துச்செல்வதும் கவிதையியலின் வேலைதான் எனச் சேரன் கருதுகிறார்.
மூன்று தெருக்கள் என்ற இந்தக் கவிதையில் மட்டும் அல்ல; அவரது பெரும்பாலான கவிதைகளில் இந்த அமைப்பினை- இயல்பி¬னைக் காணலாம். மீண்டும் கடலுக்கு என்ற இத்தொகுதியிலிருந்து இன்னொரு கவிதை.
மனிதர்களின்
கைகளையும் கால்களையும்
தலைகளையும்
துண்டித்துக் கொண்டிருந்த போது
இவனை முதன் முதலில் கண்டேன்
‘என்ன செய்கிறாய்?
என்று அலறினேன்பீதியில்
முற்றாக வெளிவர மறுத்ததுஎன் குரல்
‘‘ மிரளாதே .
இந்த அழகிய
உடல்களுக்குப்
பொருந்தாத உறுப்புக்கள் இவை.
புதியவற்றைப் பொருத்தவே
இவற்றைத் துண்டாடுகிறேன்
இப்போது தெரியாது என் ரூபம்
பொறுத்திரு ஒரு தலைமுறைக்கு
பிறக்கும் ஒரு புது அழகு ’’
என்று இவன்
சொல்லிமுடிக்கும் முன்பே
மனிதர்கள்
வரிசையாக இவனிடம் வருகிறார்கள்
இவன் துண்டாடுகிறான்
இவனது பெருவாளின் கூர்மை
பரிதிச் சுடரின் பொறிகளில்
மோதிப்பேரொளி கிளப்புகிறது.
இவனது கைவீச்சில் மனிதருக்கு வசப்படாத
துரிதமும் நளினமும்பிரிபடா
முழுமையாய் இணைகின்றன
நெடுங்காட்டுள் நுனிவிரலில்
நூறாண்டு தவமிருந்துபெற்ற உடல்
பிளந்தெறியும் போதும்
சாந்தம்
குடியிருக்கும்முகபாவம் அவனுக்கு
நிகழ்கால அவலங்களுள்
சிக்குண்டிராதஒரு முனிவனின் மனோநிலை
இவனது இதயத்துள்
சிலந்தி வலையாகப் படர்ந்திருக்கிறது
இவன் வெட்டியான் அல்லன்
கொலைக் கலைஞன்.
இந்தக் கவிதையின் தலைப்பு கொலைக்கலைஞன் என்பது. மூன்று பகுதிகளைக் கொண்ட நீண்ட கவிதையின் முதல் பகுதி இது [மீண்டும் கடலுக்கு.. ப.49]. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையில் யுத்தமும் வன்முறையும் என்னவாகத் தொடங்கி, என்னவாக ஆகி, இப்பொழுது என்னவாக இருக்கிறது என்பதைச் சொல்லும் அந்தக் கவிதையின் அமைப்பும் நிகழ்வு, விளைவு, பலன் என்ற அமைப்பிற்குள் தான் இருக்கிறது. இந்த அமைப்பிலிருந்து முற்றிலும் விலகாமல் இம்மூன்றையும் இடம் மாற்றி வைத்திருக்கும் கவிதைகளும் சேரனின் கவிதைத் தொகுப்புகளில் உள்ளன. எல்லாவற்றையும் மறந்துவிடலாம்
இந்தப் பாழும் உயிரை
அநாதரவாக இழப்பதை
வெறுத்துஒருகணப்
பொறியில் தெறித்த
நம்பிக்கையோடுகாலி
வீதியில்திசைகளும்,
திசைகளோடு இதயமும்குலுங்க
விரைந்த போது.
கவிழ்க்கப்பட்டு
எரிந்த
காரில்வெளியே
தெரிந்த தொடை எலும்பை,
ஆகாயத்திற்கும் பூமிக்குமிடையில்
எங்கோ ஒரு புள்ளியில் நிலைத்து
இறுகிப் போன ஒரு விழியை
விழியே இல்லாமல்,
விழியின் குழிக்குள்
உறைந்திருந்த குருதியை,
‘டிக்மண்ட்ஸ்’ ரோட்டில்
தலைக்கறுப்புகளுக்குப் பதில்
இரத்தச் சிவப்பில் பிளந்து
கிடந்தஆறு மனிதர்களை,
தீயில் கருகத் தவறிய
ஒரு சேலைத் துண்டை,
துணையிழந்து,
மணிக்கூடும் இல்லாமல்
தனித்துப் போய்க்கிடந்த
ஒரு இடது கையை
எரிந்து கொண்டிருக்கும் வீட்டிலிருந்து
தொட்டில் ஒன்றைச்
சுமக்க முடியாமல் சுமந்து போன
ஒரு சிங்களக் கர்ப்பிணிப் பெண்ணை
எல்லாவற்றையும்,
எல்லாவற்றையுமே மறந்து விடலாம்.
ஆனால்உன்
குழந்தைகளை ஒளித்து வைத்த
தேயிலைச் செடிகளின் மேல்
முகில்களும் இறங்கி மறைத்¢த
அந்தப் பின் மா¬லையில்
நீண்ட நாட்களூக்குப் பிறகு கிடைத்த
கொஞ்ச அரிசியைப் பானையிலிட்டுச்
சோறு பொங்கும் என்று ஒளிந்தபடி
காத்திருந்த போதுபிடுங்கி
எறிபட்ட என் பெண்ணே,
உடைந்த பானையையும்
நிலத்தில் சிதறி உலர்ந்த
சோற்றையும்நான் எப்படி மறக்க?
எல்லாவற்றையும் மறந்து விடலாம் என்ற தலைப்பிட்ட இந்தக் கவிதையில் - பலரும் விரும்பி மேற்கோள் காட்டும் இந்தக் கவிதையில் -அந்த அமைப்பு இடம் மாற்றி வைக்கப்பட்டிருக்கிறது [நீ இப்பொழுது இறங்கும் ஆறு ,ப.79] என்பதை வாசிக்கும் போதே உணரலாம். நிகழ்வு, விளைவு, பலன், அதனைச் சார்ந்து வினாக்கள் அல்லது விமரிசனங்கள் என்ற அமைப்பு சேரனின் கவிதைகளில் காணப்படும் பொது அமைப்பு என்பதை அவரது தேர்ந்தெடுத்த கவிதைகளை [நீ இப்பொழுது இறங்கும் ஆறு-சேரனின் ஒரு நூறு கவிதைகள்,ஆகஸ்டு, 2000] வாசிக்கும் போது சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். சேரன் கவிதைகளில் காணப்படும் இந்த அமைப்பு தான் ஈழத்தின் மற்ற கவிகளிடமிருந்து - இன்னும் சொல்வதானால் தமிழில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் பலரிடமிருந்தும் அவரைத் தனித்து அடையாளப் படுத்துகிறது. தனது கவிதைகளை வாசிக்கும் வாசகர்களுடன் நேரடியாக. ஒரு புனைகதையின் அம்சங்கள் நிரம்பிய உரையாடல் தொனி யுடன்,கவிதையின் வடிவ ஒழுங்கு சிதையாமல் விரியும் கவிதை அடையாளத் தைச் சேரன் தனதாக்கி இருக்கிறார். தமிழில் நவீன கவிதை எழுதும் சிலரிடம் இந்த அடையாளம் உண்டு. ஞானக்கூத்தன், கலாப்ரியா போன்றவர்களிடத்தில் ஆங்காங்கே இந்த அடையாளத்தைக் காண முடியும். ஆனால் சேரனிடம் இது தான் அவரது கவிதை வடிவம் என்பதாக வெளிப்படுகிறது என்பதுதான் அவரது சிறப்பு. மீண்டும் கடலுக்கு என்ற கவிதைத் தொகுதியை அடுத்து அவரது நேர்காணல்கள் தனி நூலாகத் தொகுக்கப்பட்டு வந்துள்ளது [கடவுளும் பிசாசும் கவிஞனும்-சேரன் நேர்காணல்கள், டிசம்பர், 2006] . இந்த நேர்காணல்களைக் கவனமாக வாசிக்கும் ஒருவர் அவரது பதில்கள் போகிற போக்கில் சொல்லும் பேச்சாக இல்லாமல் இருப்பதை அவதானிக்கலாம். தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கும் கூட நிகழ்வு, விளைவு, காரணம், தனது மாற்றுக் கருத்து என ஒருவித அமைப்பிலேயே விடை சொல்கிறார். தர்க்கம் சார்ந்து பேசும் இந்த அமைப்பையே கவிதையின் அமைப்பாகவும் கைக்கொண்டிருக்கிறார் சேரன் என்பதை நேர்காணல்கள், கவிதைகள் என இரண்டையும் ஒருசேர வாசிக்கும் போது புரிகிறது..சேரனின் கவிதைகளுக்குத் தனித்த அடையாளத்தை உண்டாக்கியுள்ள இந்தக் கவிதை அமைப்பு மேற்கத்திய தர்க்கம் சார்ந்து இயங்கினாலும், அதன் சாராம்சம் மேற்கின் தொடக்கம் அல்ல; தமிழ்க் கவிதை மரபின் தொடக்கம் தான். தமிழ்க் கவிதையின் தொடக்கமாகக் கருதப்படும் வீரயுகப் பாடல்களில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று காதல்/காமம் சார்ந்த உரிப் பொருள்களைக் குறிப்பான நிலம், காலம் என்ற பின்னணியில் எடுத்துரைக்கும் அகத்திணைக் கவிதைகள். இன்னொரு போக்கு போர்க் களக்காட்சிகளைக் குறிப்பான நபர்களை அல்லது நிகழ்வுகளை மையப்படுத்தி எடுத்துரைக்கும் புறத்திணைக் கவிதைகள். இப்புறத்திணைக் கவிதைகள் எப்பொழுதும் நிகழ்வு, விளைவு, பலன், அல்லது விமரிசனம் என்பதாகவே அமைந்துள்ளன. போர் வேண்டாம் என்று சொல்லும் போதும் , போரைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லும் போதும் புறநானூற்றுக் கவிகள் இந்த அமைப்பைத் தான் பின்பற்றியுள்ளனர். பொருள் வேண்டும் என்று கேட்டாலும் சரி, நீ தர வேண்டாம்; எனக்குத் தரப் பல மன்னர்கள் இருக்கிறார்கள் என மறுக்கும்போதும் புறநானூற்றுக் கவிதைகள் இந்த அமைப்பையே கொண்டிருக்கின்றன. போர்க்களத்தைப் பாடும் ஏழு திணைகளின் எல்லாத் துறைப் பாடல்களிலும் இந்த அமைப்பு பொதுவான கூறுதான்.போரைப் பாடாத பொதுவியல் துறையின் பாடல்களில் நேரடி எடுத்துரைப்பு முறை மேலும் கூடுதலாகவே இருக்கிறது. இந்தக் காரணமே கூட சேரனின் கவிதைகளும் அத்தொன்மைத் தொடக்கத்தின்- புறப்பாடல் பெருமரபின் நீட்சியாக இருக்கிறது எனச் சொல்ல வைக்கிறது. இந்தக் காரணமே கூடச் சேரனின் கவிதைகளை எளிமையாகவும் உணர்வை எழுதும் தர்க்கத்தோடும் இருப்பதாகத் தோன்றச் செய்யலாம். இந்த அம்சம் கவனித்துச் சொல்ல வேண்டிய அம்சம் மட்டும் அல்ல; புதிதாகக் கவிதை எழுதத் தொடங்கும் இளங்கவிகள் பின்பற்ற வேண்டிய ஒன்றுமாகும்.தமிழில் நவீனக் கவிதை எழுதும் பலரும் தங்களின் கவிதை வடிவத்தை மேற்குலக முன்னோடி களிடமிருந்து பெற்றுக் கொண்டதைப் போல சேரன் தனது வடிவத்தை மேற்கிலிருந்து பெறவில்லை. வடிவத்திற்கு மாறாகச் சேரன் மேற்கிலிருந்து சிந்தனை முறையைப் பெற்றிருக்கிறார் என்று மட்டும் சொல்லலாம். பொதுவெளி , தனிமனித வெளி என்பன பற்றியெல்லாம் அவரிடமிருந்து வரும் கருத்துக்கள் பெரும்பாலும் மேற்கின் நவீனத்துவ சிந்தனைகள் தான் என்பதை அவரது நேர்காணல்கள் தெளிவுபடுத்துகின்றன. மேற்கின் கல்வி முறையில் படித்து, சில பத்தாண்டுகள் மேற்குலகில் வாழ்ந்து வரும் ஒரு தமிழ்க் கவி மேற்குலகத்திடமிருந்து எதனைப் பெற வேண்டும் ; மரபில் எதனைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்துள்ளார் என்பது ஒருவிதத்தில் ஆச்சரியம் தான். ஆச்சரியங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கும். சேரன் கவி கற்க வேண்டிய ஆச்சரியம்.
இந்தக் கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்
கடவுளும் பிசாசும் கவிஞனும்-சேரன் நேர்காணல்கள்-காலச்சுவடு,டிசம்பர்- 2006மீண்டும் கடலுக்கு, சேரன் கவிதைகள், மறுபதிப்பு-டிசம்பர்- காலச்சுவடு,ஆகஸ்டு- 2005நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள் ஒரு நூறு- காலச்சுவடு,ஆகஸ்டு- 2000
தீராநதியில் வந்த விமரிசனக் கட்டுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நவீனத்துவமும் பாரதியும்

நாயக்கர் காலம். இயல் . 6 சாதிகளும் சமூக அசைவியக்கங்கமும்

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்