சுந்தரராமசாமி என்னும் நவீனத்துவக் காதலன்


தமிழ்ச் சிந்தனைமரபு, நவீனத்துவத்தைத் தனதாக்கிக்கொண்டதின் தொடக்கப் புள்ளியின் வெளிப்பாடு யார்? எனக் கேட்டால் சட்டென்று வரக் கூடிய பதில் ‘ கவி பாரதி ’ என்ற பெயர்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நடந்து விட்ட அந்தத் தொடக்கத்தை இன்று பலரும் மறுபரிசீலனை செய்து கொண்டிருக்கின்றனர். அத்தகைய மறுபரிசீலனைகள் பல நேரங்களில் படைப்பாளிகளை அவர்கள் தோன்றி வாழ்ந்த சூழலில் வைத்து விமரிசிக்காமல் இன்றைய சூழலில் வைத்து விமரிசித்துப் புதிய அடையாளங்களைச் சூட்டி வருகின்றன. இத்தகைய மறுபரிசீலனைகள் தவறான நோக்கம் கொண்டன என்று சொல்ல முடியா விட்டாலும் சில நேரங்களில் ஆபத்தான போக்குகளுக்கு இட்டுச் செல்லக் கூடியன என்பதையும் மறுத்து விட முடியாது.

ஆங்கில ஆட்சியின் போது ஏற்பட்ட மாற்றம் என்பதாலேயே நவீனத்துவத்திற்குக் காலனித்துவ குணம் உண்டு என்று சிலர் வாதிடுவது வாடிக்கையாக உள்ளது. இதன் மறுதலையாக இந்தியாவில் ஏற்பட்ட பல மாற்றங்களை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எதிர் கொண்டவர்கள் இந்திய சமூகத்தின் மேட்டுக்குடி மனிதர்களான பிராமணர்கள் என்பதால் அந்த மாற்றம் பிராமணீயத்தைத் தக்க வைப்பதற்கான மாற்றம் என்று வாதிடுவதும் நடக்கிறது.

இருதரப்பு வாதங்களிலும் நேர்மறை- எதிர்மறைக் கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டையும் பிரித்துப் பார்த்து ஏற்க வேண்டியனவற்றை ஏற்பதும், தள்ளவேண்டியனவற்றைத் தள்ளுவதும் வளர்ச்சியில் நாட்டமுடையோர் செயல்.கவி பாரதியிடம் இந்தத் தெளிவு சரியாகவே இருந்தது எனச் சொன்னால் மறுப்பவர்களும் உண்டு; ஆதரிப்பவர்களும் உண்டு. கவி பாரதியைப் பற்றிய இதே வாதப்பிரதிவாதங்கள் அவருக்குப் பின் தமிழின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளாகக் கருதப்படும் பலரைப் பற்றியும் உண்டுதான். தனது வாழ்நாள் முழுவதும் நவீனத்துவத்தின் தேவைகளைச் சரியான திசையில் புரிந்துகொண்டு பின்னோடிகளை வழிநடத்துபவராகவும் இருந்து வந்தவர் சுந்தரராமசாமி. அவரைப் பற்றியும் இத்தகைய வாதப்பிரதிவாதங்கள் அவர் இருந்த போதும், இறந்த பின்னும் நடந்து வந்துள்ளன; நடந்து வருகின்றன.

தனது முதல் நாவலான புளிய மரத்தின் கதை வெளியானது முதல் கவனிக்கத்தக்க படைப்பாளியாகவும் இலக்கியத்தை மையப்படுத்தி சமூகம், அரசியல் தளங்களில் தனது கருத்தைத் தீவிரமாகவும், நேர்மையாகவும் பதிவு செய்து வந்தவர் சுந்தரராமசாமி. தொடக்க காலத்தில் தனது பார்வைகளைப் படைப்பெழுத்துக்களின் வழியாக மட்டுமே வெளிப்படுத்தி வந்த சுந்தரராமசாமி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தனது பதிவுகளில் நேரடித் தன்மையும் வலிமையான உறுதியும் வெளிப்பட வேண்டும் எனக் கருதியதால் கவிதை, புனைகதைகளைவிட்டுவிட்டு புனைவல்லாத எழுத்துக்களுக்கு மாறத் தொடங்கினார்.

அவரது அறுபதாவது வயதிற்குப் பின் நடந்த இந்த அணுகுமுறை மாற்றத்தை வாழ்நாள் முழுக்கக் கடைப்பிடித்துத் தனது கருத்துக்களைப் புனைவல்லாத எழுத்துக்களில் பதிவு செய்துவிட்டுச் சென்றுள்ளார். நூல் மதிப்புரை, கேள்வி -பதில், சிறு கட்டுரைகள், நீண்ட கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் , நேர்காணல்கள் என விரிந்த அந்தப்பதிவுகள் இன்று நூல்களாகத் தொகுக்கப்பட்டு வாசகர்களுக்குக் கிடைக்கின்றன.
வானகமே இளவெயிலே மரச்செறிவே என்ற பாரதியின் வரிகளைத் தலைப்பாகக் கொண்ட இந்நூலும் அப்படிப்பட்டதொரு தொகுப்புத்தான். காலச்சுவடு இதழில் அவர் எழுதிய பத்தி எழுத்தின் தொகுதி இது பதினைந்து தலைப்புகளில் எழுதப்பட்ட அந்தப் பத்தி எழுத்து அதன் இயல்புக்கேற்பப் பலவற்றைத் தொட்டுக் கருத்துத் தெரிவிப்பனவாக உள்ளது.

இந்தப் பதினைந்து தலைப்புகளில் அதிகம் விவாதிக்கப்படும் பொருள் மொழிபெயர்ப்பு என்று சொல்லலாம். மொழிபெயர்ப்புகளின் தேவை, தமிழில் செய்யப்படும் மொழிபெயர்ப்புகளின் தன்மைகள், ஒரு நல்ல மொழி பெயர்ப்பு உருவாவதற்கும் பாராட்டப்படுவதற்குமான சூழல் நிலவவேண்டும் என்ற அக்கறை ஆகிய இந்த விவாதங்களில் வெளிப்பட்டுள்ளன. மார்¢தா த்ராபாவின் நூலை அமரந்தா மொழி பெயர்த்துள்ள (நிழல்களின் உரையாடல்) விதம் பற்றித் தனக்கும் முத்துலிங்கத்திற்கும் இடையில் நடந்த உரையாடலாகவும், கடிதத் தொடர்பாகவும் அவர் விவரிக்கும் பகுதிகளும், ழாக் ப்ரோவரின் கவிதைகளைப் பிரெஞ்சு மூலத்திலிருந்து வெ.ஸ்ரீராம் மொழிபெயர்த்துச் சொற்கள் என்ற தொகுப்பைக் க்ரியா வெளியிட்ட போதும் எழுதியுள்ள குறிப்புகளும் கவனிக்க வேண்டியவைகளும் பின்பற்ற வேண்டியவைகளும் ஆகும். மொழி பெயர்ப்புகள் குறித்த அவரது வெளிப்பாடுகள் அவரை ஓர் இலக்கிய ஆளுமை என்பதைக் கடந்தவராக வாசகர் முன் நிறுத்துகிறது. நவீனத்துவ வாழ்முறைக்குள் நுழையும் சமூக நடைமுறைக்கு மொழிபெயர்ப்பின் பங்கு என்பதாக சுந்தரராமசாமி அதனை முன்னிறுத்திக் காட்டுகிறார்.
 
நடப்பு சமூகத்தின் போக்கைத் தீர்மானிக்கும் அமைப்புகள், நிறுவனங்கள் போன்றவற்றின் மீது அவநம்பிக்கை கொண்ட தொனி அவரது படைப்புகளில் தொடர்ந்து வெளிப்பட்டாலும் கவனித்துச் சொல்ல வேண்டிய ஆளுமைகள், நிகழ்வுகள், படைப்புகள் பற்றிய அவரது பதிவுகள் நம்பிக்கை ஊட்டும் தொனியில் வெளிப் பட்டுள்ளன. யதார்த்தவாதியான ஒரு கர்மவீரர் என்ற தலைப்பிட்டுக் காமராசர் பற்றி அவர் எழுதிய கட்டுரையிலும், தொட்டிலில் உறங்கும் சில புரட்சிகளும் என்ற தலைப்பில் எழுதியுள்ள கருத்துக்களும் அவரது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்துவனவாக உள்ளன. நிகழ்கால அரசியல், சமூகம் பற்றிய அவரது மதிப்பீடுகளை இந்தக் கட்டுரைகள் சொல்வது போலவே நாவல்கலை பற்றிய அவரது முக்கியமான எண்ணங்களை இரண்டு கட்டுரைகளில் தெளிவு படுத்தியுள்ளார். யூமா வாசுகியின் ரத்த உறவு பற்றியும் எஸ். ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி பற்றியும் அவர் எழுதியுள்ள குறிப்புகள் தமிழ்ப் புனைகதைகளைக் குறிப்பாக நாவல்களைத் தொடர்ந்து வாசிப்பவர்களாகவும் விமரிசனக் கருத்துக்களை முன் வைப்பவர்களாகவும் இருப்பவர்களுக்குப் பயன் படக் கூடிய குறிப்புகள். அதைவிடவும் நாவல் எழுத முனையும் இளம் படைப்பாளிகளுக்கு அதிகம் பயன்படக் கூடிய குறிப்புகள் என்றே சொல்லலாம்.

அதே நேரத்தில் மௌனி பற்றியும் , பத்மநாப அய்யர் பற்றியும், குடிப்பது என்னும் பழக்கம் அல்லது சமூக நிகழ்வு குறித்து அவர் எழுதியுள்ள குறிப்புகள் திரும்பவும் விவாதிக்க வேண்டியனவாக உள்ளன. தொடர்ந்து தனது வாழ்நாள் முழுவதும் இலக்கியம் சார்ந்த சிறுபத்திரிகை இயக்கத்துடன் இயங்கி வந்துள்ள சுந்தரராமசாமி தான் தொடங்கி நடத்தி வந்த காலச்சுவடு இதழ் குறித்தும், ஆங்கிலத்தில் வெளி வரும் த லிட்டில் மேகஸின் என்ற இதழ் பற்றியும் எழுதியுள்ள குறிப்புகள் தமிழின் தீவிர இலக்கியம் சார்ந்த வாசகர்களை நோக்கிய குறிப்புகளாக உள்ளன. 

மொத்தமாக இந்தப் பத்தி எழுத்துக்களை வாசிக்கும் ஒருவர், சுந்தரராமசாமி என்ற படைப்பாளுமை யின் பயணம் ஒரு குறிப்பிட்ட காலப்பரப்பிற்குள் என்ன என்ன எல்லைகளைத் தொட்டுப் பயணம் செய்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அந்தப் பயணம் தமிழ்ச் சமூகத்தை நவீனத்துவம் சார்ந்த சிந்தனைப் பரப்பிற்குள் செலுத்த முனைந்த பயணம் என்பது தெளிவாகப் புரியலாம். அப்படிப் புரிந்து கொள்வதன் மூலம் தனது வாசகப்பரப்பையும் நவீனத்துவத்தின் ஊடாக வளர்த்துக் கொள்ள வாய்ப்புண்டு என்பது மறுதலை விளைவு தான்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்