மனிதநேயம் பேசிய தமிழ் நாடகங்கள்

கலை இலக்கியங்கள் மனிதவாழ்வின் அன்றாட நிகழ்வில் தவிர்க்கமுடியாத அங்கம் என்பதில் பலருக்கும் கருத்துவேறுபாடுகள் இருக்கக் கூடும். அதேபோல் கலையின் பணி ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றிக் காட்டுவது தான் என்பதிலும் ஒத்தகருத்தை எட்டிவிடமுடியாது. ஆனால் படைப்பின் உருவாக்கத்தில்,சமூகத்தின் இயங்குநிலைக்கும் கூட்டுச் சிந்தனைக்கும் முக்கியமான இடம் உண்டு என்பதை மறுப்பதற்கு அதிகமானபேர் இருக்கமாட்டார்கள். ஒரு படைப்பை-குறிப்பாக எழுத்து சார்ந்த கலைப்படைப்புகளை- தனியொரு மனித மனத்தின் பிரத்தியேகமான கணங்களின் வெளிப்பாடுகள் தான் எனச்சொன்னாலும் கூட்டுமனத்தின் நனவுமனமும் நனவிலி மனமும் ஆற்றும் வினைகளின் பங்களிப்பும் உண்டு எனச்சொல்லுவதும் அதன் மேல் விவாதங்கள் நடத்துவதும் உலகம் முழுக்க நடந்துவரும் அறிவார்ந்த சொல்லாடல்களின் இயல்பு.தனிமனிதனின் நனவுமனமும் நனவிலி மனமும் இயங்கும் காரணங்களைப்பற்றி உளவியலில் பலவிளக்கங்கள் தரப்படலாம். கூட்டுமனத்தின் நனவிலி மனம் தனியொரு அலகின் பிரதிநிதியாக அலைவதிலேயே ஆர்வம் கொண்டதாக இருக்கிறது என்றாலும் நனவுமனம் சமூகத்தின் மனசாட்சியாக இருக்கவே விரும்புகிறது. கலை இலக்கியத்துறைகளில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் கருத்துப் போக்கு உருவாவதற்கு இந்த அம்சமே காரணமாக இருக்கிறது எனலாம். இக்கட்டுரை ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் தோன்றிய மனிதநேயம் என்னும் கருத்துப் போக்கு தமிழ் நாடகத்துறையில் எத்தகைய பதிவுகளைச் செய்தது என்பதைக் காட்ட முயல்கிறது.

மனிதநேயத்தின் தோற்றம்:

மனிதநேயம் என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக்குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு, மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவதும் ஆகும்.இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு ;மேற்கு ஐரோப்பிய நாடுகள்.கிரேக்க, ரோமானிய செவ்வியல் இலக்கியங்களை மறுமலர்ச்சிக் கால வாசிப்புக்கு உட்படுத்திய கலை இலக்கியவாதிகள் அவற்றின் ஊடாக கிறிஸ்தவ சமயத்தின் பொருத்தப் பாடுகளைப் பற்றி விவாதிக்கும் விதமாக மனிதநேயம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியதின் விளைவே இந்தக் கருத்தோட்டத்தின் தொடக்கம் எனலாம்.
 
இத்தாலியின் பின்னிடைக்கால எழுத்தாளர்களான தாந்தே, க்ளோவன்னி பொக்காஸியோ, ப்ராங்செஸ்கோ பெற்றார்ச் போன்றவர்கள் மனிதநேயம் என்பதைத் தோற்றுவித்து அதற்கான படைப்படையாளங்களையும் உருவாக்கியவர்கள்.1453-ல் இன்றைய இஸ்தான்புல் (அப்போதைய காண்ஸ்டாண்டின் நோபிள்) நகரில் தோற்று விக்கப்பட்ட பிளாட்டினிக் அகாடமி மனித நேயக் கருத்துருவாக்கம் உருவாவதற்குக் காரணமாக இருந்தது. அதன் நிறுவனர் மார்சில்லோ ஃபிஸினோ போன்றவர்கள் கலை இலக்கியச் செயல்பாடுகளில் மனிதநேயம் வெளிப் பட வேண்டும் எனவலியுறுத்திப் பேசினர்.பிரான்ஸ் நாட்டில் மனிதநேயம் அறிமுக மாகிய பொழுது அதனை வளர்த்தெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அறிஞர் டச் கிளரிக் டெஸி டெரஸ் எராஸ்மஸ் என்பவர் ஆவார். இவரே இங்கிலாந்திலும் மனிதநேயக்கருத்தோட்டம் அறிமுகமாகக் காரணமாகவும் இருந்தார். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் எராஸ்மஸ்ஸால் அறிமுகப் படுத்தப்பட்ட மனிதநேயம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வியல் இலக்கிய வல்லுநர்களான வில்லியம் க்ரொசின், தாமஸ்லினாக்ரெ போன்றவர் களால் உறுதியான வரையறைகளுடன் உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களுக்குள் நுழைந்த மனிதநேயக் கருத்தோட்டம் எலிசபெத்தியன் இலக்கியங்களின் வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் ஆங்கிலம் பேசப்பட்ட நிலப்பரப்பெங்கும் பரவியது.
 
ஐரோப்பிய இலக்கியத்தின் மிக முக்கியமான காலகட்டம் மனிதநேயம் சார்ந்த மறுமலர்ச்சி காலகட்டம்தான். தொடக்கத்தில் பொத்தாம் பொதுவான மனிதநேயம் எனப் பேசிய இலக்கியங்கள் பின்னர் படிப்படியாக உழைக்கும் மக்களின் சார்பான மனிதநேயமாகவும் பெண்களின் சார்பான வெளிப்பாடு களாகவும் மாறியது உலக இலக்கியத்தின் வரலாறு.ஆங்கிலக் கல்வி மற்றும் சிந்தனை முறைமேல் இன்று நம்மில் பலருக்கும் பலவிதமான காரணங்களுக்காக விமரிசனங்கள் இருக்கக் கூடும். ஆனால் அவை தான் இந்திய மனிதனை உலகச்சமுதாயத்திற்குரியவனாக ஆக்கியது என்பதை மறுத்துவிடமுடியாது. ஆங்கிலேயர்களின் இந்திய வருகைக்குப்பின்னால் வணிக நோக்கமும் காலனியாதிக்க விருப்பங்களும் இருந்தன.அதன் காரணமாக இந்தியப் பொருளாதார வாழ்வு எதிர்பாராத மாற்றங்களைச் சந்திக்க நேர்ந்தது.ஆனால் பண்பாட்டு வாழ்வில் அதன் தாக்கம் பலவிதமான நேர்மறையான அம்சங்களையே உண்டாக்கிவைத்தன.
 
ஆங்கிலக் கல்வி அதன் மொழியினூடாக வளமான இலக்கியப் பக்கங்களையும் இந்தியர் களுக்கு அறிமுகம் செய்தது. குறிப்பாக ஷேக்ஸ்பியரின் நாடகங்களும் ஐரோப்பாவின் மனித நேயக் கவிகளும் அறிமுகமானதை எதிர்மறை அம்சங்களாக இன்றும்கூடக் கணித்து விட முடியாது. அந்த அறிமுகத்தின் பின்விளைவுகளே பாரதியும் புதுமைப்பித்தனும் திராவிட இயக்கச் சிந்தனைகளும் இலக்கியங்களும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.இந்திய நாடகம் தனது சாராம்ச வடிவமான பத்ததி அசைவும் இசைமொழியுமான எடுத்துரைப்பு முறைக்கு (musical and styllised narration) விடை கொடுத்து விட்டு வசனம் சார்ந்த உரையாடலுக்கு மாறிய பொழுது அதனுடன் சேர்ந்து மனிதநேயக் கருத்தோட்டமும் சேர்ந்தே நுழைந்தது எனச்சொல்லலாம்.
 
சங்கரதாஸ் சுவாமிகளின் இசைநாடகத் தன்மையைக் கைவிட்ட 'ஆண்டி' ராமசுப்பிரமணியம் நவீனவசனநடையோடு புராணக் கதாபாத்திரங்கள் அல்லாத அவர்கால மனிதர்களையும் சேர்த்தே மேடையில் தோன்றச் செய்தார். அந்தத் தொடக்கம் பம்மல் சம்பந்த முதலியாரிடம் தூக்கலாக வெளிப்பட்டு திராவிட இயக்க நாடகாசிரியர்களிடம் இயக்கமாகவே அறிமுகம் ஆனது எனலாம். தமிழ் நாடகத்தின் மனிதநேய முகம்.தமிழ்நாடகம் மனிதநேயக் கருத் தோட்டத்தை உள்வாங்கிக் கொண்டு மேடையேறத் தொடங்கிய காலகட்டம் இருபதாம் நூற்றாண்டின் முன்பாதி ஆண்டுகள். அரசியல் தளத்தில் இந்திய மனநிலைக்கு மாறான சிந்தனைகளும் வட்டாரகுணம் சார்ந்த பார்வைகளும் தமிழ்நாட்டின் மையந்நீரோட்டமாகப் பரிமாணம் பெறத் தொடங்கியிருந்த காலகட்டம்.மொத்த இந்தியாவின் போராட்டக்களமாக தேசவிடுதலை இருந்தபோது தமிழ் அறிவாளிகளின் பார்வையும் எண்ணங்களும் வேறாக இருந்தன.

சமூகவாழ்வில் நிலவும் சாதி அடுக்குகள் குறித்தக் கேள்விகளும் அதனை மாற்றுவதற்கான வழிமுறைகளும் அதற்குத்தடையாக இருக்கும் சக்திகள் எவை என்ற வினாக்களும் அவர்கள் முன்னால் இருந்தன.தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சிக்குத்தடையாக இருப்பன வைதீக இந்துமதமும் அதற்கு தத்துவ விளக்கங்கள் தந்து கருத்தியல் அதிகாரம் செலுத்திய பிராமணர்களுமே என அடையாளம் காட்டவேண்டிய தேவை இருப்பதாகக் கருதப்பட்டது.இதன் காரணமாகக் காலனிய ஆட்சியாளர்கள் குறித்த பார்வைகளும் கூட மாறுபட்டனவாகவே இருந்தன.சுதந்திரத்துக்குப்பிந்திய தமிழக நலன் சுதந்திர இந்தியாவில் எவ்வாறிருக்கும் என்ற கேள்வி தமிழ்ச்சிந்தனையாளர்களுக்கு இருந்தது. இந்தப்பின்னணியில் வைத்து திராவிட இயக்க எழுத்துக்களைப் புரிந்து கொள்ளத்தொடங்கினால் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கில் ஓரளவு ஐரோப்பிய மனிதநேயத்தோடு ஒத்த கருத்துடைய இலக்கியங்களை எழுதியவர்கள் அவர்களே என்பது புரிய வரும்.பாரதியின் தேசம் சார்ந்த கவிதைகளைவிடுத்து பிறவகைக் கவிதைகளில் அதிகம் வெளிப்படுவது மனிதநேயக்கருத்தியல்தான் என்றாலும் மனிதனுக்கும் சமயநெறி களுக்கும் இடையேயுள்ள உறவை விமரிசனத்திற்குள்ளாக்கிய பாங்கு திராவிட இயக்க எழுத்தாளர்களிடம் சற்று அழுத்தமாகவே காணப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். 

சி.என் . அண்ணாதுரையின் ஓரிரவு, வேலைக்காரி போன்ற நாடகங்கள் மையமாகப் பேசவந்த புள்ளி இதுதான் எனக்கூற முடியாதவாறு அமைக்கப்பட்டுப் பல்குரல் தன்மையுடைய -பல்மைய முரண்களைக் கட்டமைத்துக் கொண்டுள்ள நாடகங்கள். ஆனந்தன் Xவேதாசல முதலியார், அமிர்தம்Xவேதாசலமுதலியார் , சரசா X அமிர்தம், எனக் கட்டமைக்கப்படும் எதிர்வு களுக்குள் செயல்படும் வேலைக்காரி நாடகம் கடைசியாக எழுப்பும் உணர்வு வேலைக்காரி அமிர்தத்தின் மீதான மனிதநேயவெளிப்பாடுதான். அதற்குள்ளாக சி.என். அண்ணாதுரை விமரி சனத்திற்குள்ளாக்கும் கருத்துருவங்களாக இருப்பவை போலிமதநம்பிக்கை, பணக்காரத்திமிர், அதிகாரம் சார்ந்த மேலாண்மை எனச்சுட்டிக் காட்டலாம். இவையெல்லாமுமே ஓரிரவு நாடகத்தின் விவாதப் பொருளாகவும் இருக்கின்றன. காதல்வாழ்வில் நுழைய விரும்பும் ஒரு யுவதிக்கும் இளைஞனுக்கும் இடையில் எவையெல்லாம் தடைகளாக இருக்கின்றன எனக் காட்ட விரும்பும் அண்ணாதுரை மனிதநேயக் கருத் தோட்டத்தின் மிகநெருக்கத்தில் நிற்பவராகச் சொல்லவேண்டியவர். மு.கருணாநிதியின் புகழ்பெற்ற நாடகங்களான பராசக்தி, வண்டிக்காரன் மகன், மனோகரா போன்றநாடகங்கள் மனிதநேய வெளிப்பாட்டிற்கு உதாரணங் களாக நிற்கத்தக்க நாடகங்களாகவே இருக்கின்றன. குணசேகரன் என்னும் தனிமனிதன் -அயலிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு தனிமனிதன் தமிழ்நாட்டில் இயங்கும் மரபானவும் நவீனமானவுமான நிறுவனங்களுக்குள் அலைக்கழிக்கப்படும் விதம் பராசக்தியில் ஆவேசமாகவே வெளிப்படுகிறது.

திராவிட இயக்க எழுத்துக்களில் -குறிப்பாக -நாடகங்களில் மனிதப் பெருமதியும் மதத்தின்மீதான விமரிசனங்களும் வெளிப்படுகின்றன என்றாலும் இவை ஐரோப்பிய மனிதநேயவாதத்தின் அசலான வெளிப்பாடு என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் ஐரோப்பிய மனிதநேயம் துவேசத்தை முன்னிறுத்தியதாக வெளிப்படவில்லை.தமிழில் மனித நேயத்தைப் பேசிய திராவிட இயக்க எழுத்துகள் வன்மத்தையும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மேல் துவேசத்தையும் விதைத்தன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.இந்த வன்மமும் துவேசமும் திராவிட இயக்க எழுத்துக்களில் அதிகார நிறுவனங்கள்X தனிமனிதர்கள் என்றிருக்கப் பின்வந்த இடதுசாரி எழுத்துக் களில் வேறுவிதமாக வெளிப்பட்டன.
 
ஒட்டு மொத்த மனிதர்களின் நலனை முன்னிறுத்தி இலக்கியம் செய்வது என்ற பெயரில் வர்க்க முரண்கள் மட்டுமே அடையாளப்படுத்தப் பட்டன. ஐரோப்பிய வாழ்விலேயே ரஷ்யப் புரட்சிக்குப் பின் மனிதநேயம் என்ற பதம் புதிய அர்த்தத்தளத்திற்கு நகர்த்தப்பட்டது. தனிமனிதர்களைப் பற்றிப்பேசுவதை விட பாதிக்கப்பட்டோரின் பக்கம் நின்று வாதிடுவதே மனிதநேய எழுத்தின் அடையாளமாக ஆனது அந்தவகை மனிதநேயமே இந்தியமொழி இலக்கியங்கள் பலவற்றிலும் மனித நேயக் கருத்தியலாக பதியவும் செய்துள்ளது. கோமல் சுவாமிநாதன் போன்ற இடதுசாரி நாடகாசிரியர்களை இயக்கியதெல்லாம் இந்தச் சிந்தனைகளே. தமிழ்நாடக வளர்ச்சியில் ஐரோப்பிய மனிதநேய எழுத்தின் அசலான பிரதிநிதி இவர்தான் என உதாரணம் காட்ட முடியாது.ஆனால் அதன் சாராம்சமான தன்மைகளுடன் தனது நாடகப் பிரதிகளை எழுதியவர்களாகச் சிலரை அடையாளப் படுத்த முடியும்.

மேற்கத்திய நவீனத்துவம் தமிழ் நாடகத்துறையில் கால்பதிக்கத் தொடங்கிய அறுபதுகளில் ந.முத்துச்சாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயந்தன் ஆகிய மூவரும் எழுதிய தொடக்கக்கால நாடகங்கள் மனிதநேயக் கருத்தியலின் விளைவுகளாக இருந்தன.ந.முத்துச்சாமியின் நாற்காலிக்காரர், காலம் காலமாக, அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்றுநாடகங்களும் தனிமனிதனின் அடையாளம் அல்லது முகம் எவ்வாறு நிறுவன வாழ்விற்குள் அழிவுக்குள்ளாகின்றன என்பதைக் குறியீடாகவும் அங்கதமாகவும் சொன்ன நாடகங்கள். இதனையே இந்திரா பார்த்தசாரதியின் கோயில், பசி, போர்வை போர்த்திய உடல்கள், மழை, கால இயந்திரங்கள், போன்றன அபத்தப்பின்னணியில் சொல்லமுயன்றன.
 
ஜெயந்தனின் நினைக்கப்படும், மனுசா.. மனுசா, கணக்கன்,சார்பு விதிகள் போன்றன விமரிசன நடப்பியல் என்பதான மொழியில் சொல்லியுள்ளன. நடப்பியலின் துல்லியத்துடன் எழுதப்பட்ட நாடகப்பிரதியென அடையாளங்காட்ட ஒரு பிரதி உண்டு. அது சுஜாதாவின் ஊஞ்சல். சமகாலப் பயன்பாடற்ற மனித அறிவின் நிலைகுழைதலைச் சொல்லும் ஊஞ்சல் நன்கு வடிவம் பெற்ற நாடகமும்கூட.முடிவுரை:தமிழின் நாடகக் காப்பியம் சிலம்பு தொடங்கி இந்த மாதம் மேடையேறிய எஸ்.ராமகிருஷ்ணனின் அரவான் வரையுள்ள நூற்றுக்கணக்கான நாடகப் பிரதிகளிலும் வெளிப்படும் மனிதாயநலன்கள் பற்றிச் சான்றுகளுடன் ஒருகட்டுரையை எழுதலாம். ஆனால் அந்தக்கட்டுரை எமது பாரம்பரியத்தில் என்ன இல்லை ; எல்லாம் இருக்கின்றன என்ற சுயமோகத்தின் வெளிப்பாடாகவே அமையும். மனிதநேயம் என்னும் குறிப்பிட்ட கால கட்டத்துக் கருத்தியல் போக்கை அடையாளம் காட்டியதாக அமையாது. நமக்குள் நமது பெருமைகள் பேசும் காலம் இனியாவது முடிவுக்குவரட்டும். 

20,21, மார்ச் 2004 இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் நடக்கும் இலக்கியமும் மனித நேயமும் என்னும் கருத்தரங்கில் வாசிக்கப்படுவதற்காக எழுதப்பட்டு 21-03-04 இல் வாசித்த கட்டுரை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்