அடையாளப்பிரதிகளும் அடையாளம் தேடும் முகங்களும்……
· பல்வேறு மாநிலங்களின் பாராம்பரியக் கலைகளிலிருந்து உருவாக்கி, இந்திய நாடகம் (Indian Theatre) ஒன்றைக் கட்டமைத்து விட முடியுமா….? இந்தியா பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட துணைக் கண்டம் என்பதை மறுதலித்து, ‘ இந்தியா ஒரு நாடு’ எனப் பேசுகிறவர்களும் நம்புகிறவர்களும், ‘இந்திய நாடகத்தை’ உருவாக்கி விடலாம் என நம்புகின்றனர்.ஆனால் தேசிய இனங்களின் சுய நிர்ணயம், அவற்றின் பண்பாட்டுத் தனித் தன்மைகள் ஆகியவற்றில் நம்பிக்கையுடையவர்கள் மொழிவாரி நாடகத்தை (Language or Vernacular theatre) முன்னிறுத்துகின்றனர். அவர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் கொண்ட அரங்கைத் தேடுகின்றனர். தமிழ் அடையாளங்கள் கொண்ட ஒரு அரங்கை - தமிழ் நாடகத்தை (Tamil theatre) கட்டமைக்க முயல்கின்றனர். இவ்விரு முயற்சியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இவ்விரண்டுமே சாத்தியமா என்றால் பதில் சாத்தியமில்லை என்பது தான்.