தேவதச்சனின் சலனச் சித்திரங்கள் தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு. முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்கள...