உத்தமவில்லன் : இன்பியலில் கரையும் துன்பியல்

எழுதியது ஒரேயொரு கவிதை. மனித வாழ்வின் சலனங்கள் அனைத்தையும் உறையச் செய்துவிடும் வல்லமைகொண்ட வரிகள் கொண்ட கவிதை. அந்தக் கவிதைக்குள் அவன் வைத்த அலங்காரச் சொற்றொடர் “நீர்வழிப்படூஉம் புனை”. உத்தம வில்லன் படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து படுத்த நள்ளிரவில் கணியன் பூங்குன்றனின் இந்தச் சொற்றொடரோடு ஔவையின் ‘உயவுநோயறியாது துஞ்சும் ஊர்’ என்ற வரியும் சேர்ந்துகொண்டு தூக்கம் கலைத்துக்கொண்டே இருந்தன. மரணத்தையும் காமத்தையும் இணைத்த படத்தின் தாக்கம் என நினைத்துக் கொண்டேன். இப்படித் தூக்கம் தொலைப்பதற்காக வரும் கவிவரிகள் சில இருக்கின்றன;அவ்வப்போது செருப்பிடைப்பட்ட சிறுபரல்போல உருண்டவண்ணம் இருக்கும். ‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ எனச் சொல்லிக்கொண்டே தூங்கவிடாமல் அடித்த சேரனோடு ‘துணிக்கயிற்றில் தொங்கும் குரல்வளைகள்’ என்று எழுதிய ஆத்மநாம் சேர்ந்துகொள்வது ஒருசில நாட்கள் என்றால், ‘வேற்றாகி நின்ற வெளியை’த் தூரத்தில் நின்று பார்த்துவிட்டுத் திரும்பியவனைக்காட்டிய வில்வரத்தினத்தோடு ‘என்னை என்னிடத்தில் போட்டுவிட்டு ஓடிவிட்ட இரவு மிருகம்’ என்று எழுதித் தொல்லைப்படுத்தும் சுகிர்தராணி சேர்ந்துகொள்...