தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்- கல்வி,கேள்வி அதிகாரங்களை முன்வைத்து
மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன. இக்கட்டுரை தமிழ்ச் செவ்வியல் பரப்பிற்குள் இருக்கும் திருக்குறளின் கல்வி, கேள்வி என்ற சொல்லாடல்கள் முன் வைக்கும் கருத்தியல் மற்றும் இயங்குநிலையைப் பற்றிப் பேசுகின்றது.
ஆளுமைப் பண்பு உருவாக்கம் :
மனிதன் என்னவாக இருக்கிறான்? என்ற கேள்வி தத்துவம் சார்ந்ததாக இன்று அறியப்படுகிறது. ஆனால் இந்தக் கேள்வி அடிப்படையில் உலகில் உள்ள மனிதன் உள்ளிட்ட உயிரினங்களும், கடல், வான், அண்டம், பூமி, கோள்கள் என இயங்கும் இயற்கைப் பொருட்களும், இவ்வியற்கைப் பொருட்கள் தரும் பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பெறும் செயற்கைப் பொருட்களும் எவ்வாறு இருக்கின்றன? என்ற அறிதலுக்கான அடிப்படைக் கேள்வியிலிருந்து உருவாகும் அறிவுத்தோற்றவியல் ( Epistemology) கேள்வியே என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் என்னவாக இருக்கிறான் என்ற மூலக்கேள்வியை மனிதத் தன்னிலை என்னவாக இருக்கிறது? என மாற்றிக் கேட்கலாம். அத்தன்னிலை உடலாகவும் உயிராகவும் இருக்கிறது என ஒரு காலத்தில் சொல்லப்பட்டது. உயிர் என்பதை ஆன்மா என விளக்கிச் சொல்லப் பலர் முயன்றனர். ஆன்மாவின் பயணம் பற்றிப் பேசிய கருத்துகளின் தொகுதி சமயவியலாகவும் (Religious Studies), இறையியலாகவும் (Theological Studies) வளர்ச்சி பெற்றன
மனிதத் தன்னிலை என்னவாக இருக்கிறது என்ற அதே கேள்விக்கு உடலாகவும் உயிராகவும் மட்டுமல்ல; அந்த உடலும் உயிரும் எந்தப் பரப்பிற்குள் வாழ நேர்கின்றதோ, அந்தப் பரப்பு உருவாக்கும் சூழலின் பகுதியாகவும் இருக்கிறது என்ற விளக்கம் ஒரு கட்டத்தில் தரப்பட்டது. வாழிடம், உணவு உடை, உறையுள் ஆகியவற்றை உற்பத்திசெய்துகொள்ளத் தேவையான நடைமுறைகள், அவற்றிற்காக உறவு கொள்ளும் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள், அவற்றால் உருவாக்கப்படும் எதிர்பார்ப்புகள் என விரியும் காரணிகளால் ஆகக்கூடியது என்பது சூழலுக்குத் தரப்படும் கூடுதல் விளக்கம்.
மனித உயிரியின் எதிர்பார்ப்பு நிலையற்றது. குறிப்பாக விளக்கிவிட முடியாதது. அதனைத் தீர்மானிக்கும் சக்தி வெளிப்படையாகத் தெரியும் சூழலுக்கு மட்டுமே உரியதல்ல. ஆழ்மனத்திற்கும், அம்மன அமைப்பை உருவாக்கும் தொல்படிவக் கூறுகளுக்கும்கூட அதில் பங்கு உண்டு என நவீனச் சிந்தனை முறைகள் கூறுகின்றன. தனிமனிதத் தன்னிலையை உருவாக்கும் மன அமைப்பை விளக்கும் அறிவுத் துறை அதனை ஆளுமைத்திறன் என வகைப்படுத்திக் காட்டுகின்றது. ஆளுமைத் திறனை - அறிவு எனக் கூறுவதும் உண்டு. இவ்வாளுமைத் திறனை - அறிவை உருவாக்கிக் கொள்ள ஒரு மனித உயிரிக்குப் பல்வேறு கூறுகள் துணைபுரிகின்றன; வினைபுரிகின்றன. அக்கூறுகளுள் கல்வியும் கேள்வியும் மிக முக்கியமானவை.
அறிவுத்தோற்றவியலின் உட்பிரிவுகளே பின்னர் ஒவ்வொரு புலமாகவும் துறையாகவும் வளர்ச்சி பெற்றுள்ளன. அவ்வளர்ச்சியின் போக்காகவே மனித நாகரிகம், சமூக வளர்ச்சி போன்றன கணிக்கப்படுகின்றன. ‘மனித நாகரிகம் தோன்றி வளர்கின்றது’ என்று விளக்குகின்ற போது மனிதத் தன்னிலையின் ஒவ்வொரு கூறும் மாற்றமும் வளர்ச்சியும் அடைகின்றது என்பது பொருள்.அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றிய அறிவு மட்டுமல்ல. அவன் இயங்கும் குடும்பம், பணியிடம் போன்ற நிறுவனங்களைப் பற்றிய அறிதலும் தான். அந்த அறிவைப் பெறும் வழிகள் பல.
1.கூரிய நோக்கு (perception)
2.கல்வி கற்கும் முறை (learning process)
3.விவாதித்து முடிவுக்கு வருதல் (debates)
4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல் (open ears) - கேள்வி அறிவு
5. தனக்குத்தானே விவாதிக்கும் முறை (reasoning) என நவீனக் கல்வி அவற்றை விளக்குகிறது.
இனித் திருக்குறள் கல்வி, கேள்வி என்ற ஆளுமைத் திறன் கூறுகளைப் பற்றிப் பேசும் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு பேசலாம்.
தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறிவுத்தோற்றவியல்
தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்றதிகாரம் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் 9 இயல்களால் ஆனது. பொருளதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மரபியல் தொல்காப்பியப் பனுவலின் கடைசி இயல். அவ்வியலில் பேசப்படும் பொருட்கள் அதற்கு முந்திய மொழி இலக்கணம் என்பதைத் தாண்டியன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உயிருள்ள பொருட்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன; அவற்றின் இளமைப் பெயர்கள் எவ்வாறு சுட்டப்படும் என்றும் அங்கே பேசப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாக உயிர்கள் அவற்றின் புலனுணர்வை மையப்படுத்தி ஓரறிவு முதல் ஆறறிவு வரையிலான வகைப்பிரிப்பைப் பேசும்
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.(தொல். பொருள். மரபியல். 27 )
என்ற சூத்திரம் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஆறறிவுள்ள மனிதர்கள் அரசர்கள், அந்தணர்கள், வைசிகர்கள், வேளாளர்கள் (தொல். பொருள். மரபியல் 71-84) எனப் பிரிக்கப்படும் அடிப்படைகளையும் அவர்களுக்கான பொதுக்கடமைகளையும் பேசுகிறது. நிறைவாக இந்த அறிவைப் பயன்படுத்தி எழுதப்படும் நூலின் இயல்பையும் வகைகளையும் விரிக்கின்றன. நூல் அல்லது பனுவல் உருவாக்கத்தில் இருக்க வேண்டிய முறையியலை விரிவாகச் சொல்லும் தொல்காப்பிய மரபியல் தமிழ் அறிவுத்தோற்றவியலின் மூலக்கிடங்கு எனச் சொல்லலாம். தொல்காப்பிய மூலக்கிடங்கிலிருந்து உருவான பிந்திய இலக்கிய, இலக்கணங்கள் தமிழ் அறிவுப்புலத்தை மேலும் செம்மை ஆக்கியுள்ளன என்பதற்குச் சான்றாகத் திருக்குறளின் சில குறள்கள் இருக்கின்றன.
ஐம்புலனின் உணர்வுகளே அறிவின் வகைப்பாடு என்ற தொல்காப்பிய அறிதலை உள்வாங்கிய திருவள்ளுவர் காமத்துப்பாலில், ஒரு தலைவிக்கு உள்ள புலன்களின் கூட்டுநிகழ்வால் உருவாகும் அறிவு கண்ணிலேயே இருக்கிறது என்பதாக எழுதியுள்ளார்.
கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றுஅறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள. (திருக்குறள்,1101)
கண்ணால் காணுதலும், காதால் கேட்பதும் மன வளர்ச்சிக்கு உதவும் புலனுணர்வுகள் என்பது நவீன அறிவின் கண்டுபிடிப்பு. தமிழ் தொல்லறிவு கண்ணைக் கற்றல் அறிவாகவும், செவியைக் கேட்டலறிவாகவும் விளங்கிக் கொண்டது என்பதையும் நாம் அறிவோம்.
திருக்குறளில் கல்வியும் கேள்வியும் :
திருக்குறள் தனது சொல்லாடலை பா, அதிகாரம், இயல், பால் என்ற முறையியலின் வழி உணர்த்தும் இயல்புடைய ஒரு நூல். மூன்று பால்களுக்குள் இருக்கும் இயல் மற்றும் அதிகார வைப்புமுறையிலும் கூட ஒருவிதமான முறையியலை நாம் காண முடியும். பொருட்பாலின் முதல் அதிகாரம் இறைமாட்சி. அதனைத் தொடர்ந்து கல்வி, கல்லாமை, கேள்வி என அதிகாரவைப்பை விரிக்கும் திருவள்ளுவரின் முதன்மை நோக்கம் அரசியலை விளக்கும் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் என்றாலும், அரசியலின் நுண் அலகான மனிதனின் இருப்பும் அதன் பகுதியாகவே இருக்கிறது என்று நம்பினார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இறைமாட்சிக்கு அடுத்து வைக்கும் கல்வி, கேள்வி போன்றன தனிமனிதர்களுக்கானது என்பதாகவே அந்த அதிகாரங்களில் இருக்கும் குறள்கள் எழுதப்பட்டுள்ளன.
கல்வியே அறிவு என்ற நம்பிக்கை திருவள்ளுவரிடம் இல்லை. ஐம்புலன்களின் கூட்டு உணர்வே அறிவு என்று நம்பியவர் திருவள்ளுவர் என்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ஆனால் கல்வியும் கேள்வியும் முதன்மையானவை என்ற புரிதல் அவருக்கு இருந்துள்ளது. எனவே தான் முதலில் கல்வியையும் பின்னர் கேள்வியையும் வைத்துள்ளார். கல்வி, கேள்வி இரண்டுமே ஆளுமையை உருவாக்கும் அறிவு வகைகள் என்ற நுட்பமான புரிதலோடு, கல்லாமையினால் உண்டாகும் ஆபத்துகளையும் இரண்டுக்கும் இடையில் வைத்துச் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வியும் கல்லாமையும்
உலகம் முழுக்க ஒன்றை விளக்க இரண்டு வழிகளைப் பின்பற்றுவதைக் காணலாம். ‘இப்படி இருப்பது இது’ என விளக்குவது ஒரு முறை. இப்படிச் சொல்வதை நேர்க்காட்சி வாதம் எனச் சொல்வர். இன்னொரு முறை இதன் எதிர்நிலைப்பட்ட முறை. எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கு நகர்த்துவது அம்முறை. ‘இப்படி இல்லாமல் இருப்பது இது’ என்று பேசும் முறை. திருவள்ளுவர் கல்வியை விளக்க இவ்விருமுறைகளையும் பயன்படுத்தியுள்ளார். கல்வி என்னும் அதிகாரத்தில் வைக்கப்ப்பட்டுள்ள குறள்களின் வரிசைப்படி நாம் எதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் அதில் உள்ள 10 குறள்களின் தொகுப்பை வகைப்படுத்திச் சிலவற்றை நாம் விளக்க முடியும்.
எவற்றைக் கற்பது கல்வி? என்ற கேள்விக்கான விடையாக இரண்டைக் குறிப்பிடுவதாக கல்வி அதிகாரத்தின் இரண்டாவது குறளை முதன்மைப் படுத்த வேண்டியுள்ளது. ‘எண்ணென்ப ஏனையெழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு (392) எனப் பிரித்துப் பேசும் வள்ளுவர், அக்கல்வி அறிவை ஒவ்வொருவரும் பெற்றாக வேண்டும் என வலியுறுத்துகிறார். அவ்வறிவு தன் போக்கில் கிடைக்காது; முயற்சியைத் தொடர்ந்து செய்யும்போதுதான் கிடைக்கும் என்கிறார். ‘ தொட்டணைத்தூறும் மணற்கேணி போன்று வளரக்கூடியது அறிவு ( 396) என விளக்கியபின், கல்வியைப் பெறுவது கால நிர்ணயம் கொண்டதல்ல என்பதைச் சொல்லும்பொருட்டு ‘ யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்றும் சொல்கிறார். அப்படிக் கற்கிற கல்வியின் மனிதர்களுக்கு உயர்வான மகிழ்ச்சியை - உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதலாகிய மகிழ்ச்சியையும், சக மனிதர்களை நேசிக்கும் மனப்பக்குவத்தை அளிக்கும் உளப்பாங்கையும் உருவாக்குகிறது என்பது வள்ளுவரின் வாதம். ‘தாமின் புறுவது உலகு இன் புறக்கண்டு காமுறுவார் கற்றறிந்தார்’( 399) எனச் சொன்ன வள்ளுவர், அதுதான் இந்த உலகத்தில் பெறக்கூடிய உயர்ந்த செல்வம் (400 ) என்று சொல்கிறார். அதனை அடைந்தவர்கள் கண்கள் உடையவர்கள்; வாழ்க்கைக்கான பாதையை உணர்ந்தவர்கள்; சரியாகச் செல்வர். அக்கண்கள் இல்லாதவர்கள் - கல்வி அறிவு இல்லாதவர்களாக இருப்பவர்கள் நோய்கண்ட வாழ்க்கையை வாழும் மனிதர்களாகவே அறியப்படுவர் எனக் கூறுகிறார். கல்வியின் இயல்பு, தேவை, அது தரும் வாழ்க்கை இன்பம் எனப் பேசும் திருக்குறளின் கல்வி அதிகாரத்தில் வைத்திருக்கும் முதல் குறள், கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என எல்லாவற்றையும் உள்வாங்கி நிற்கிறது.
கல்வியின் அவசியத்தை நேர்நிலையாக வலியுறுத்திய வள்ளுவர், எதிர்நிலையாகவும் வலியுறுத்திட வேண்டியே கல்லாமை அதிகாரத்தை எழுதியுள்ளார். கல்வி கற்காதவர்கள் மனிதர்கள் அல்லர்; விலங்குகளைப் போன்றவர்கள் எனத் தீர்மானமாகச் சொல்லும் (410) கல்லாமையில் கல்வி கற்காதவர்கள் சொற்களின் மேல் கொள்ளும் விருப்பம் - எழுத வேண்டும் என நினைக்கும் என நினைக்கும் ஆசை -முலையிரண்டும் இல்லாத ஒரு பெண்ணுக்குத் தோன்றும் காமத்தைப் போன்றது எனவும், விளையாடத்தேவையான வட்டு இல்லாமல் - அடிப்படைப் பொருட்கள் இல்லாமல் விளையாடுவதை ஒத்தது எனவும் சொல்கிறார். தலைமைப் பண்பு, அழகு, நுண்மான் நுழைபுலம் போன்றன கல்வியில்லாதார்க்குக் கிடைக்காது எனவும் பேசுகிறார். இவையனைத்தும் மனித ஆளுமையின் கூறுகள் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. கல்வியைச் செல்வம் என்று சொன்னதின் மறுதலையாக ‘நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு’ (408) என்றதோடு மேல்குடியில் பிறந்திருந்தாலும் கல்வி இல்லையென்றால் கீழ்நிலைப்பட்டவராகக் கருதப்படும் வாய்ப்புண்டு என எச்சரிக்கை செய்துள்ளார் வள்ளுவர்.
கேள்வி:
மனித ஆளுமை உருவாக்கத்தில் கல்வி அறிவின் பங்கை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் வலியுறுத்திய வள்ளுவர் கேள்வி அறிவு மட்டுமாவது வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகக் கற்றிலன் ஆயினும் கேட்க (414) செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்? எனக் கோபமாகக் கேட்கிறார். உணவு உண்பதன் மூலமே உயிர் வாழ முடியும் என்றாலும் எல்லா நேரமும் அதையே செய்து கொண்டிருப்பதன் மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது. அதற்கான ஆளுமைத்திறன் அவசியம். ஆளுமைத்திறன் கிடக்கவல்ல அறிவைத் தேட வேண்டும் என்பதை வலியுறுத்தி ‘செவிக்குண வில்லாதபோழ்து சிறிது வயிற்றுக்கு ஈயப் படும்’ (412), ‘கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி (418) எனவும் பேசுகிறார். கேள்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்பதும் இல்லை.நல்லவைகளைக் கேட்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் தருகிறார்.
செல்வம் இல்லாமல் மனித ஆளுமையோ வாழ்க்கையோ இல்லை என்ற பொருளாதார வாதம் பேசும் வள்ளுவர் கல்வியைச் செல்வம், திரு எனச் சிறப்பித்துச் சொன்னதுபோல, கேள்வி அறிவையும் ஒருவகையான செல்வம் என்றே சுட்டுகிறார். அச்செல்வம் தலையாய செல்வம் என்பது அவரது கருத்தும் கூட, ‘செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை’(411) என்பது அவரது குறள்
முடிவுரை
தொடக்கநிலைத் தமிழ் நாகரிம், அறிவை ஆளுமைப் பண்பின் தலையாய ஒன்றாகக் கருதியது என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. அதன் காரணமாகவே அறிவுத் தோற்றவியலின் முக்கியக் கூறுகளைப் பேசும் தொல்காப்பியம், புறநானூறு, திருக்குறள் போன்றன எழுதப் பெற்றுள்ளன எனலாம். இவற்றுள்ளும் திருக்குறள் அறிவுத்தோற்றத்தைப் புலனுணர்வாகப் பார்த்து, அதனைத் தோற்றுவிக்கும் கருவிகளாகக் கண்ணையும் காதையும் முன் வைத்துள்ளது. கண் கல்வி அறிவின் குறியீடாகவும், செவி கேள்வியறிவாகவும் உணர்த்தப்பட்டுள்ளது. இதனை நிகழ்காலச் சமூகம் தனக்கான வழிமுறையாகக் கொள்ள வேண்டும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
உதவிய கட்டுரைகள்
எம் .டி. முத்துக்குமாரசுவாமி, சங்க இலக்கியத்தின் அறிவுத்தோற்றவியல் http://mdmuthukumaraswamy.blogspot.in/2014/12/blog-post_5.html
Keith DeRose, What Is Epistemology? A Brief Introduction to the Topic , Yale University, Dept. of Philosophy
--------------------------------------------------------------------------------------------------------------------------
2015, மே மாதம் சென்னையில், உலகத்தமிழ்ச் சங்கம் நடத்தவுள்ள திருக்குறள் மாநாட்டில் வாசிப்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை
கருத்துகள்