சேகுவோரா


[மலையாள மூலம்: கோபன். தமிழில் ;  அ.ராமசாமி]

      காட்சி.1
நாடகம் தொடங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம்.
சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.
ராணுவ அதிகாரி : 1950, அர்ஜெண்டா
         குழு   : எல்சே..
ராணுவ அதிகாரி : 1954, குவாதிமாலா
         குழு   : எல்சே..
ராணுவ அதிகாரி : 1955,மெக்ஸிகோ
         குழு   : எல்சே..
ராணுவ அதிகாரி : 1956, கியூபா
         குழு   : எல்சே..   
ராணுவ அதிகாரி : 1965, காங்கோ
         குழு   : எல்சே..
ராணுவ அதிகாரி : 1966, பிரேசில்
         குழு   : எல்சே..   
ராணுவ அதிகாரி : 1968,பொலிவியா
         குழு   :       எல்சே..
[ஒவ்வொரு எல்சே சப்தத்துடனும் குழுவினரில் ஒருவர் முன்வந்து நிற்கின்றனர். கடைசி எல்சே ஒலிக்கும்போது மேடை முழுவதும் வெளிச்சம். போர்ப்பறையின் ஓங்காரம் மறையும்  சத்தம்]
ராணுவ அதிகாரி : (குழுவினரிடம்) நீங்கள் வாழ வேண்டுமா? சாக வேண்டுமா? என்பதைத் தீர்மானிக்கப் போகிறவன் நான்
தான். உங்களில் யார் அந்த ‘சே’. நீங்கள் ‘சே’ இல்லையென்றால், இல்லையென்று சொல்லி விடலாம். சொல்கின்ற நபருக்கு என்ன வேண்டும் கேட்டது கிடைக்கும் நீங்கள் ‘சே’ இல்லையென்று சொல்லி விட்டால் நீங்கள் போகலாம்.
         குழு   :       எல்சே. (குழுவினர் அந்த அதிகாரியைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கின்றனர்)
ராணுவ அதிகாரி :      இந்த சிரிப்பின் விலை என்ன என்று தெரிந்த பின்னும் இப்படிச் சிரிப்பதின் அர்த்தம் என்ன? திரும்பவும் ஒரு தடவை கேட்கிறேன். உங்களில் ‘சே’ யார்?
         குழு   : (மந்திரம் உச்சரிப்பது போல சொல்கின்றனர்)
                        நான் தான் அந்த சே   நான் தான் அந்த சே
நான் தான் அந்த சே   நான் தான் அந்த சே
                நான் தான்…   நான் தான் …
நான் தான் …. நான் தான் …
[சுத்தம் உச்சத்தை அடையும்போது அதை அடக்குவது போல் ஃபயர் என்று உத்தரவிடுகின்றான். குழுவினர் ஒவ்வொருவராக செத்து விழுகின்றனர். சவப்பெட்டியினுள் வெளிச்சம்]
உள்ளிருந்த முதியவன் : தோழர்களே! உங்களிடம் என்             கரங்களைத் தருகிறேன்.   
பொருள் மதிப்பற்ற என் அன்பு    உங்களுக்கானது.   
உங்களுக்காக என்னையே தருவேன்.
உபதேசத்தை தொடங்குவதற்கும் நியதிகளை உருவாக்குவதற்கும்
முன்பாக என்னை உங்களிடம் தருகிறேன்.
நீங்கள் உங்களை என்னிடம் தரவேண்டும்
என் பயணத்தில் சேர்ந்து கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஒன்றுபட்டு வாழ்வோம்.

காட்சி.2
[வெளிச்சம் வரும்பொழுது மேடையில் மூன்று புரட்சியாளர்கள் சே., தாண்யா, மார்க்கோஸ். சே., டிரம்ஸ் வாசித்தபடி, தான்யா கேட்டுக் கொண்டிருக்கிறாள்.]
தான்யா        :  அன்பு என்பது ஒரு சொரசொரப்பான கல்லாகவே எனக்குப் படுகிறது. அனுபவங்கள் கூடக்கூட பட்டை  
                  தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது.
        சே.     :பலரது வாழ்க்கையும் அநேக நேரங்களில் கற்பனைத்   
            தனமாக இருக்கிறது. மரக்கிளைகளைப் போல மனது
விரிந்து பரவியும் இருக்கிறது. ஆனால் தியானத்திலிருப்பவர்களாக ஒதுங்கியும் இருக்கிறார்கள். உண்மையான நடப்புகள் தான் கற்பனைகளைக் களைந்து விடுகின்றது. துயரமான வாழ்க்கை ஒவ்வொன்றின் மீதும் சந்தேகம் கொள்ளச் செய்கின்றது. குள்ளநரியைப் போல பதுங்கியும் பயந்தும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். ஒருவனது இருப்பு இன்னொருவனுடைய சதையும் ரத்தமும்தான். வாழ்க்கை தான் அவனை ஆக்கிரமிப்பாளனாக்குகிறது. ஆக்கிரமிப்பே வாழ்க்கை யாகி விட்டது.
மார்க்கோஸ்   : ஆனால்.. நாம்.. நாம்.
நம்முடைய ஆக்கரமிப்பு. ஆக்கிரமிப்புக்கு எதிரானது. காலம் காலமாய் சமூகத்தில் இருந்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆக்கிரமிப்பு. நம்மை வேட்டையாடுபவர்களையே நாம் ஆக்கிரமிக்கின்றோம். நாம் சிந்தவைக்கும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஏழைகளின் கண்ணீரினால் பரிசுத்தமாக ஆக்கப்படும்.
( வேகமாக ஒருவன் வந்து விழுகிறான். அவன் பாச்சோ)
        சே..    : என்ன நடந்தது?
பாச்சோ :ஆறு மணி நேரத்தில் தலைநகரை அடைந்து விட்டோம்.             எல்லாம் சுமுகமாகவே நடந்து கொண்டிருந்தது.
தான்யா   : அப்புறம்… என்னாச்சு?
பாச்சோ : நாங்கள் விரான்ஸியை அடைந்த பொழுது ராணுவம்      எங்களை வழி மறித்தது. நான் கொண்டு வந்துள்ளதைப் பாருங்கள்
        சே. : கொஞ்ச காலத்திற்கு எதிரிகளோடு சண்டையிட வேண்டாம் என்று சொல்லியிருந்தேனே..
     பாச்சோ : எங்களுக்கு வேறு வழியில்லை. நாரைகளைப் போல எங்களைச் சுற்றிச் சுற்றி வந்தனர். முட்டாள்கள்,
அவர்களது துப்பாக்கிகளைக் கீழே போடும்படி சொன்னோம். ஆனால் அதன் அதிகாரி தாயோளி துப்பாக்கியைத் தூக்கி விட்டான். அப்புறம்…நினைவு திரும்பியபோது மழை பெய்து கொண்டிருந்தது. என்மேல் ஒரு ராணுவ வீரனின் சடலம் கிடந்தது.
        சே.    : உத்தரவை மதிக்கவில்லை நீங்கள். அந்த ஏழுபேருடைய வாழ்க்கை.   (அமைதி)
  பாச்சோ   : நம்முடைய கூட்டத்தின் தன்மையைக் கருதி நீங்கள் எந்த  நடவடிக்கையையும் எடுக்கலாம். முழுமையாக
உங்களுக்கு கட்டுப்பட்டவன் நான். ஆனால்.. (அவன் கொண்டு வந்த பொருட்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்துப் போடுகிறான்)
அரிஸ்டோவுக்கு இந்த பூட்ஸுகள் தேவை. ஜூலியனுக்கு இந்த ஸ்வெட்டர். இருண்டிக்கு இந்த திசைகாட்டி. பெப்பினுக்கு ஸாக்ஸுகள் தேவை. நமக்கு மோட்டார் வேண்டும்; ரேடியோ வேண்டும். ( கூடிக்கொண்டே வரும் சத்தம் கடைசியில் கத்தும் நிலையை அடைகிறது)
 சே. : (விரக்தியுடன்)  நான் என்னையே வெறுக்கிறேன்.        அவர்கள்.. மனிதர்களைத் தங்களுக்குள்ளேயே கொன்று
சாகும்படி செய்கிறார்கள். ஏகாதிபத்தியம், அதன் கரங்களை ஆத்மாவின் மீது நீட்டும்பொழுது ரணங்களாகி விடுகிறது. அவர்கள் உங்களை உங்கள் சகோதரர்களைக் கொண்டே கொலை செய்கிறார்கள். (அமைதி)
உங்களில் எத்தனையோ சிவப்பிந்தியர்கள், அவர்கள் தானே இந்த மண்ணின் மைந்தர்கள்.
        தான்யா : எனக்கு என் நிறம் தெரியாது. என்னுடைய தாய் ஒரு சிவப்பிந்தியர். குடித்து வெளியேறிய வெள்ளைக்காரக்
கூட்டம் அவளைப் பலாத்காரம் செய்தது. வாழ்க்கை எங்களை முரடர்களாக மாற்றியது. நிச்சயமற்ற அனாதரவான வாழ்க்கை. அப்பொழுது வாழ்க்கையை எதிர்நிலையிலேயே அறிந்து கொண்டேன். ஆனால் இப்பொழுதோ எனக்கும் இந்த உலகத்திற்கும் பயன்படும்படியாக என்னை மாற்றிக் கொண்டேன். இந்தியர்கள் என்னை விரும்புவதில்லை. காரணம் என் நிறம். வெளுப்பு. வெள்ளைக்காரர்களும் வெறுக்கிறார்கள். ஏனென்றால் நான் ஒரு வெள்ளைக்காரியுமல்ல. நான் ஒரு இரண்டுங்கெட்டான்.  (அமைதி)
        சே.     நம்மிடம் ஒரேயொரு சிவப்பிந்தியன் தான் உள்ளான். இது ஒரு பிரச்சினை. நம்மிடையே ஒரு உண்மையான
சிவப்பிந்தியன் இல்லை. கியூபாவில் நாங்கள் புதிய நியமங்கள் செய்யும்போது அவர்களிடம் சொன்னேன். “ வெறுங்கையோடு முன்னணியில் செல்லுங்கள்; திரும்பி வரும்போது துப்பாக்கியோடு வாருங்கள்”
இங்கே உங்களிடம் சொல்கிறேன்: “ வெறுங்கையோடு முன்னணிக்குச் செல்லுங்கள்; திரும்பி வரும்போது ஒரு சிவப்பிந்தியனோடு வாருங்கள்; உடைக்க முடியாத பாறையாக அவன் இருந்தாலும் அவனோடு பேசுவோம்; அவனை ஏற்றுக் கொள்ளச் செய்வோம்”
சவப்பெட்டியில்
உள்ள முதியவன்: முகம் தெரியா விருந்தினர்களே! ஒருவர் இன்னொருவருக்காய் சாகத் தயாராவோம் நாம்.
கணப்பொழுதுகளின் வீச்சில் ஒருவரையொருவர் அறிந்திருக்கக் கூடும்.
அந்த அறிதல் கணங்களை அறிந்திருந்த பொழுதும் அறியாதவர்களாக நடிக்கிறோம்.
இது உடைக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள்.
ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஒவ்வொரு தோழனையும் நாம் அறிவோம்.

காட்சி.3
[அதே மேடை அமைப்பு. மேடையில் சே., தான்யா, மார்க்கோஸ், பாச்சோ, ஜீசஸ்…, கோகோவுடன் வரும் சிவப்பிந்தியன்..]
கோகோ   : இதோ நான்.. வந்து விட்டேன். ஒரு இந்தியத் தோழனோடும்  சிறு துப்பாக்கியோடும்..
மார்க்கோஸ்   : அவன் ஒரு தோழனென்று எப்படித் தெரியும். அவன் சொன்னானா?
கோகோ     : இல்லை. இந்தியத் தோழனோடு பேசியதை வைத்துச் சொல்கிறேன். நான் சத்திரத்திற்குப் போன போதுஅவன் அங்கே இருந்தான். ராணுவத்தினர் யாராவது இங்கே இருக்கின்றனரா என்று வெறுமனே கேட்டேன்.‘காத்திருங்கள்’ இந்த ஒரு வார்த்தை தான் அவன் சொன்ன பதில். பின்னர் உள்ளே போய் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்.
(ஒருத்தர் ஒருத்தராய் அறிமுகம் செய்கின்றனர். ஜீசஸும், சே..யும் ஒன்றும் பேசவில்லை. சே ஜீசஸைப் பார்த்து இருக்க, தான்யா, மார்க்கோஸ், பாச்சோ, கோகோ ஆகியோர் தங்கள் பெயரைக் கூறி அறிமுகம் செய்து கொள்கின்றனர்)
சே. : (அவனிடம் நடந்து) வரவேற்கிறோம் (ஜீசஸின் துப்பாக்கியைத் தொட்டு) இந்தத் தூக்கி.. (ஜீசஸ், சே’யின் கையைத் தட்டுகிறான்)
ஜீசஸ்  : இது என்னுடையது. (எல்லோரும் சிரிக்கிறார்கள். ஜீசஸ் எல்லோரையும் பார்க்கிறான். பார்த்து மெதுவாக) இது… என்னுடையது
சே..    : உன்னுடைய பெயரென்ன?
ஜீசஸ்  : (பேசவில்லை, மறுபடியும் சுற்றிலும் புதுமையாகப் பார்க்கிறான்)
சே.     : இங்கே இவர்களுக்கெல்லாம் ஒவ்வொரு பெயருண்டு. உனக்கு?
ஜீசஸ்  : (திரும்பவும் அமைதி)
கோகோ                : என்ன? உன் பெயர் என்ன?
     சே..    : ஏதாவது ஒரு பெயர் சொல்லு. உன்னை அழைப்பதற்காகத்தான்.
(மார்க்கோஸ் ஜீசஸிடமிருந்து துப்பாக்கியை வாங்க முயற்சி செய்ய, ஜீசஸ் தள்ளி விடுகிறான். இருவரும் மாறிமாறி இழுக்கின்றனர். முடிவில் மார்க்கோஸ் தளர்ந்து போன நிலையில் ’சே’ எனக் கூப்பிட ஜீசஸ் திடுக்கிட்டுத் திரும்புகிறான். சேயும் திரும்பிப் பார்க்கிறான். ஜீசஸ் தனது துப்பாக்கியை சேயும் தருகிறான்)
சே..    : (துப்பாக்கியைத் திருப்பிக் கொடுத்து) இது உன்னுடையது; உன் திறமைக்கானது.
ஜீசஸ்  : என்னுடைய பெயர் ஜீசஸ். ஜீசஸ் ஒரு மோசமான பெயர்.
சவப்பெட்டியில்உள்ள முதியவன்: நிலையானதும், உறைந்து கெட்டி தட்டிப் போனதுமான எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்த
பழைமையான தப்பெண்ணங்களும் கருத்துக்களும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாய் உருவாகும் ஒன்றும் கெட்டியாவதற்கு முன்னே பழைமையாகி விடுகின்றது. கெட்டியானவை எல்லாம் கரைந்து காற்றிலே கலக்கின்றன; புனிதமானவை. எல்லாம் புனிதம் இழக்கின்றன. கடைசியில் மனிதன் தெளிந்த புத்தியுடன் தனது வாழ்க்கையில் மெய்யான நிலைமைகளையும் தனது சகமனிதர்களிடமுள்ள உறவுகளையும் நேர்நின்று காண வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.

காட்சி.4
[அதே மேடை அமைப்பு. மேடையில் அதே நபர்கள். சே., குழுவினருடன் பேசிக் கொண்டிருக்கிறான்.]
சே.,  : உண்மையான புரட்சியாளனை அன்பே வழி நடத்துகிறது.    வாழ்தலின் மீதான பிரியம், அவனை
உண்மையான போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது. அப்போராட்டம் அவனுக்கானதாக இல்லாமல் எல்லோருக்குமானதாக இருக்கிறது. நம்முடைய போராட்டம் பகையினால் பிறந்ததல்ல; புதிய சமூக நிர்மாணத்திற்கானது; அங்கே தந்தையோ, சோதரியோ, துரோகியாக நினைக்கப்படுவதில்லை. வெறுப்பு நிரம்பிய உலகம், தனிச் சொத்துடைமையின் சொந்தம், தனிச் சொத்துடைமையின் வீழ்ச்சியில் தான் மனிதன், மதில்களிலிருந்தும் முள்வேலிகளிலிருந்தும் சுதந்திரம் பெறுவான். அவன தனது உலகத்தை அன்பினால் நிர்மாணம் செய்வான்.
(இண்டி ஒரு பைனாகுலருடன் மேடைக்கு ஓடி வருகிறான்)
        இண்டி  : நம்மை ராணுவம் முற்றுகையிட்டு விட்டது. தூரத்தில் புகையைக் கக்கிக் கொண்டு வரும் வண்டிகளைப்
பாருங்கள்
(எல்லோரும் திகைத்து நிற்கின்றனர். பதற்றத்துடன் ஓட எத்தணிக்கின்றனர். அனைவரையும் அமைதிப் படுத்தி சே பேசுகிறான்)
ம்.. ஆம்.. நம்மை நாலுபுறமும் சூழ்ந்து விட்டார்கள். (திரும்பவும் அமைதிப்படுத்தி) தோழர்களே! நாம் இரண்டு இரண்டு பேர்களைக் கொண்ட குழுக்களாகப் பிரிந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்வோம். மீண்டும் ஒன்றுபடுவோம். கூடுதலான பலத்தோடு. நேரத்தை வீணடிக்க வேண்டாம்..
(இரண்டு இரண்டு பேர்களாகப் பிரிகிறார்கள். சே’யின் கரத்தைப் பிடிக்க ஒவ்வொருவரும் முனைகின்றனர். கடைசியில் சே’யும் ஜீசஸும் மேடையில் உள்ளனர். ராணுவ அணிவகுப்பு ஓசை கேட்கிறது)
        ஜீசஸ்  : சே.. எனக்குத் தப்பித்துப் போக விருப்பம் இல்லை. தப்புதல்.. எதிலிருந்து ? சே.. என்ற பெயரை முதலில்
கேட்ட பொழுது என் மனம் என்னிடம் சொன்னது: ’சே.. எனக்குச் சுதந்திரம் தருவார்; நீதி தருவார்’
        சே..    : உன்னுடைய பெயரே உனக்கு விருப்பமானதாக இல்லை. ஒரே லட்சியத்திற்காக வாழ்பவர்களுக்கு ஒரே
மாதிரியான பிம்பம் வரும். உருவத்திலும் மனத்திலுமான பிம்பம். ஜீசஸ் அப்பொழுதே சொல்லியிருக்கிறார். ‘ நான் சமாதானம் கொண்டு வருவேன் அல்ல; ஒரு வாளொடு வருவேன்; பாவப்பட்ட ஜனங்களுக்கு புசிக்க அப்பம் தருவேன்; ஆடையில்லாதவனுக்கு ஆடையைத் தருவேன்; உங்களிடம் நான் எதிர்பார்ப்பதும் இதுதான். ஒரு வாள்; நீதியின் வாள்; நாம் இன்று ஒரே லட்சியத்திற்காகப் போராடுகிறோம்; லட்சியங்கள் யதார்த்தத்தின் கனவு உருவங்கள் தான். எனக்கு எதாவது நேர்ந்து விட்டதென்றால் என் பெயரை…
(வெளியில் சப்தங்கள் அதிகரிக்கின்றன. இருவரும் தப்பிக்க முயல்கின்றனர். துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் கிளம்பும் ஒலி)
சவப்பெட்டியில்
உள்ள முதியவன்: அங்கே ஒரு வாசல் உண்டு. திறக்க முயன்றேன். முடியவே இல்லை. கைப்பிடியைக் கூட என்னால் தொட
முடியவில்லை. என்னுடைய நரகத்திலிருந்து விடுபட ஏன் என்னால் முடிவதில்லை.?
நரகம் என்பது என்ன?தனிப்பட்டவர்களின் நரகம்.ஏகாந்தமானது நரகம்
நீங்கள் இந்த உலகத்தில் தனியாள் அல்ல.
ஆனால் நாம் இரண்டு பேர். ஒன்று பட்டோம்.
எனக்கு நீங்கள் யாரென்று தெரியும்.
காட்சி: 5
[1968,பொலிவியா, பள்ளிக்கூடம் ஒன்றின் வகுப்பறை. சே..’யும் ஜீசஸும் ஒரு ராணுவ அதிகாரியின்
பிடியில் உள்ளனர். இன்னும் இரண்டு ராணுவத்தினர் உள்ளனர்]
ராணுவ அதிகாரி: (கிண்டலாக) உங்களது துப்பாக்கிகள் எங்கே?
சே.     : நீங்கள் பாக்கியம் செய்திருக்கிறீர்கள் என் துப்பாக்கி வேலை செய்யவில்லை.
ராணுவ அதிகாரி: உங்களுக்கு எதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா?
சே.     :பெரிதாக ஒன்றுமில்லை. சிறியதுதான்
ராணுவ அதிகாரி: உன்னுடைய பெயரென்ன?
சே.     : ஒரு புரட்சியாளன்
ராணுவ அதிகாரி: சே.. நீ தானா?
சே.     : ஆம்.. ஏராளமான சே’க்களில் நானும் ஒருவன்
ராணுவ அதிகாரி: சரியாகச் சொல். உன்னைச் சொல்ல வைப்பது என்று எனக்குத் தெரியும்.
                [ ராணுவ அதிகாரி வெளியே போக ராணுவ வீரனும் சே’யும் மட்டும் மேடையில் உள்ளனர்]
சே.     : இது எந்த இடம்?
ராணுவ வீரன்  :  ஒரு பாதிரி நடத்துகின்ற பள்ளிக்கூடம் இது.
சே.     : அந்தப் பாதிரியைத் தவிர வேறு யாருமில்லையா?
ராணுவ வீரன்  :  ஜூலியா என்றொரு ஆசிரியை இங்கே இருக்கிறாள்
சே.     : அவளை இங்கே அழைக்க முடியுமா?
(அவன் வெளியே செல்ல, அதிகாரி மேடையில் வர அமைதி. ஜூலியா மகிழ்ச்சியாக வருகிறாள். ராணுவ அதிகாரி அவளை கூர்ந்து பார்த்து விட்டு வெளியேறுகிறான்)
பெண்ணே! என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் கட்டிப் போடப்பட்டுள்ளேன். பக்கத்தில் வா உன் பெயர் என்ன?
        ஜூலியா       : (பயந்தபடி) ஜூலியா.
ராணுவ அதிகாரி: (சுற்றியும் பார்த்து) இதென்ன ? வகுப்பறையா? மாட்டுக் கொட்டடியா? மின்சாரம் இல்லை.
பெஞ்சுகள் இல்லை, கரும்பலகைகள் கூட இல்லை
ஜூலியா: (தைரியத்தை வரவழைத்துக் கொண்டு) நான் கேள்வி கேட்பேன். அவர்கள் பதில் சொல்வார்கள்.
படிப்பதற்குக் கற்றுத் தருவேன். இதற்கு மேல் தகவல் வேண்டுமானால் ஷில்லர் பாதிரியைத் தான் பார்க்க வேண்டும். அழைத்து வரட்டுமா?
சே.     : (சிரித்து) வேண்டாம். அந்தப் பாதிரியைப் பார்த்தால் நான் மன்னிப்பு வேண்டினேன் என்று பூர்ஷ்வாப்
பத்திரிகைகள் எழுதும். ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். சகோதரர்களை நேசித்ததற்காகவா? ஒரு புதிய சமூகத்தை நிர்மாணம் செய்ததற்காகவா?
ஜூலியா: எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் போக விடுங்கள்
சே.     : ( விலங்கிடப்பட்ட மனிதனிடம் உங்களுக்குப் பயமா? ஆனால் நீங்களும் விலங்கிடப் பட்ட
மனிதர்களுக்கிடையில் தான் வழ்கிறீர்கள்
ஜூலியா: நீங்கள் சொல்கிறது. அதாவது நாம்.
சே.     : ஆம். சிலருக்குக் கூடுதலாகவும் சிலருக்குக் குறைவாகவும்… இன்னைக்கு வகுப்பில்லையா?
ஜூலியா: இல்லை
சே.     : குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் சத்தியத்தைக் கற்றுத் தர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
ஜூலியா: சத்தியம்?
சே.     : ஆம் அவர்களின் விலங்குகளைப் பற்றி.. சுற்றியுள்ள முள் கம்பிகளைப் பற்றிக் கற்பிக்க வேண்டும்.
சிலருக்கு மட்டும் சுகங்கள் அனைத்தும் சொந்தமாயிருக்கின்றன. பலருக்கோ அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன.
ஜூலியா: எங்களுடைய தேசம் ஒரு பாவப்பட்ட தேசம்.
சே.     ஆனால் இங்கே அதிகாரிகளும் நிலச்சுவான்தார்களும் மந்திரிகளும் வாழ்கிறார்கள். ஏவிய
வேலைகளைச் செய்ய வேலைக்காரிகள் இருக்கிறார்கள்
ஜூலியா: அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள்.
சே.     : சிலருக்கு அதிர்ஷ்டமாக அமைவது பாவப்பட்ட பலபேருக்கு துரதிர்ஷ்டமாக அமைந்து விடுகிறது.
ஜூலியா: எனக்கு ஒன்றும் தெரியாது. நான் ஒரு ஆசிரியை மட்டும் தான்.
சே.     : உன் மாணவர்களுக்கு உண்மையைக் கற்றுக் கொடு; உண்மையை மட்டுமே கற்றுக் கொடு.
உண்மையைத் தெரிந்து கொண்டால் விடுதலையின் வழியை அறிந்து கொள்வார்கள் ( ராணுவ வீரர்கள் இருவரும் வெளியேறுகிறார்கள்)
ஜூலியா: (பயத்துடன்) சரி நான் போகலாமா?
சே.     : சரி..ம்.. என்னுடைய சட்டைப் பையில் ஒரு காகிதம் இருக்கு. அதை ‘ லாப்பாஸ்’ பத்திரிகைக்கு அனுப்பி விட முடியுமா?
ஜூலியா: (பயத்துடன் சற்றுமுற்றும் பார்க்கிறாள். சே., தொடர்கிறான்)
சே.     : எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த யாரையாவது பார்த்தால் சே’ வை உயிரோடு பார்த்தேன் என்று சொல்.
ஜூலியா: (கண்களை அகலமாக விரித்து) நீங்கள் சே.. வா?
சே.     : மெதுவாகப் பேசுங்கள்.  (ஜூலியா அருகில் வருகிறாள். சே., தொடர்கிறான்) ஆம் சே’யை உயிரோடு
பார்த்தேன் என்று சொல்லுங்கள். காலிலும் தோளிலும் மட்டும் சிறிதளவு காயம். காயம் பெரிதாக எதுவுமில்லை. சரி இதை எடுத்துக் கொள் ( ஜூலியா சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொள்கிறாள்)
ஜூலியா : சரி (மெதுவாக) சிறிய காயம் என்பது உண்மைதான். நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன். சரி நல்லது. அவர்களிடம் சொல்கிறேன்
சே.     : நன்றி ஜூலியா
ஜூலியா: நல்லது. சே..
(ஜூலியா போகிறாள். தப்பித்துப் போன புரட்சியாளர்கள் அனைவரையும் அழைத்து வருகின்றனர். சே.. உட்பட புரட்சியாளர்கள் ஒரு வரிசையில் நிறுத்தப்படுகின்றனர். அதிகாரிகள் அவர்களைச் சோதனையிடுகின்றனர். ஓர் அதிகாரி கேட்கிறான்)
ராணுவ அதிகாரி       : உங்களில் யார் சே..’ (அமைதி) கோபத்துடன் அந்த சே’ யார்
குழுவில் ஒருவன்      : நான் தான் சே..’
இன்னொருவன்         : நான் தான் சே..’
(ஒவ்வொருவராகச் சொல்லி முடிந்ததும் மொத்தக்குழுவும் சொல்கிறது. நான் தான்
சே என்ற அந்தக் குரல் ஓங்காரமாக மாறுகிறது. அதைத் தடுத்து நிறுத்துவது போல அதிகாரி கத்துகிறான் )
ராணுவ அதிகாரி       : ஃபையர்
                        (ஒவ்வொருவராகச் செத்து விழுகின்றனர்)
சவப்பெட்டியில்
உள்ள முதியவன்  : கனவுகளின் வசந்தம் முடிந்து போனது. ஒரு முறை தடுமாறிய கால்கள் தினந்தோறுமா தடுமாறும்.
இல்லை… எப்பொழுதும் துயரக் கனவுகளையுடைய ராவுக்குப் பின்னே இளம்காலம் – எல்லா மரண அமைதிகளுக்கும் பின்னே ஒரு சங்கீதம். முதுவேனில் காய்கிறதென்றால் வசந்தம் வெகுதூரத்தில் இல்லை

காட்சி: 6
[காட்சி ஒன்றுக்கான மேடை. மூன்று விளக்குகளும் அடுத்தடுத்து எரிகின்றன. சே..’ யின் படம் பின் திரையில் தெரிகின்றது. ஒவ்வொரு தடவை ‘ எல்சே ‘ வரும்பொழுதும் ஒவ்வொருவராக வெளிச்சத்திற்கு வருகின்றனர். வருடங்களை மாற்றிக் கொள்ளலாம்.
ராணுவ அதிகாரி       : 1972. பங்களாதேஷ்
குழு    :’ எல்சே

ராணுவ அதிகாரி       : 19  , ஸால்வடார்
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : 19   பெரு
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : இண்டியா
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : 19 அல்பேனியா
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : 19 அல்பேனியா
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : 199 ,உருகுவே
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       :200 ஈழம்
குழு    :’ எல்சே
ராணுவ அதிகாரி       : 200  ,கிரெனடா
குழு    :’ எல்சே
போரின் ஓலம் கேட்கிறது; வெற்றியின் ஓசையும் கேட்கிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தி.சு.நடராசனின் திறனாய்வுப் பார்வைகள் :தமிழ் அழகியல், தமிழகத்தில் வைதீக சமயம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்