ஒற்றைக் கவிதையை எழுதுவதற்கு முன்...


இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத் துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் 50 ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக்கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.

இலங்கைப்பிரச்சினை 1980 -வரை இடம்பெயர்க்கப்பட்ட இந்தியர் பிரச்சினையாக இருந்தது. காலனிய காலத்தில் தோட்டத் தொழிலாளர்களாக இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கான வாழ்க்கையை நிலைநிறுத்துதல், அவர்களுக்கான வாழ்வாதாரத்தை அங்கோ அல்லது இங்கோ உருவாக்குதல் என்ற அளவில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவர்களை 1983 - இன் கலவரங்களும் உரிமைகோரல்களும் வேறுவிதமாகச் சிந்திக்க வைத்தன. தோட்டத் தொழிலாளர்களுக்கான தீர்வோடு ஈழப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்ட ஒன்றாக மாற்றியது. வங்கதேசத்தினரின் இந்திய நுழைவைக் காட்டித் தனிநாட்டை உருவாக்கிய வழிமுறை இலங்கையிலும் பயனளிக்கும் என்ற நம்பியிருக்கலாம். பக்கத்துநாட்டுப் பிரச்சினையாக மட்டுமல்லாமல், இந்திய மாநிலமொன்றோடு மொழிவழி உறவுகொண்ட கூட்டத்தின் சிக்கலைத் தீர்க்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகவும் நினைத்தது. நிர்ப்பந்தத்தைச் சந்தித்தது. வங்கதேச உருவாக்கப் போரில் இலங்கை வழியாகப் பாகிஸ்தான் விமானங்கள் வந்தன; அனுமதித்தது இலங்கை என்ற கோபம்கூட அன்றைய பிரதமர் இந்திராவுக்கு உண்டு திசைமாற்றத்தின் பின்னிருப்புக் காரணங்கள் இப்படிச் சில இருந்தன.

இருநாடாக்குவதைவிட ஒற்றை நாடாக வைத்திருந்து உரிமைகள் பெற்றுத் தரமுடியும் என்ற கருத்துடன் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடந்தன. அமைதிப் படையை அனுப்புதல் கூட அப்படித்தான் நிகழ்ந்தது. ஆனால் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் வன்மரணம் எல்லாவற்றையும் சிதைத்துப் போட்டது. இதனோடு, சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குப்பின் தீவிரப்பட்ட உலகப் பொருளாதார மாற்றம் நிலவியல் அரசியலுக்குள் ஈழத்தையும் கொண்டுவந்தது; இந்தியாவையும் இணைத்தது. கைகுலுக்கவும் கட்டித் தழுவவும் முடியும் என்றிருந்த சாத்தியங்கள் 1997 க்குப்பின் காணாமல் போயின.

எண்ணெய் வளங்களைக் கண்டறிதல், செயற்கைக் கோள்களை ஏவி, தகவல் தொடர்பு சாதனங்களைப் பெருக்குதல், வாகனங்களை உற்பத்திசெய்து பெருஞ்சாலைகளில் ஓடச்செய்தல் எனக் கவனம் செலுத்திய இந்தியப் பெருமுதலாளிகளோடு, தமிழ்ப் பெருமுதலாளிகளும் இணைய நினைத்தார்கள்; இணைந்தார்கள். அதுதொடங்கி இலங்கை, இந்தியப் பெருமுதலாளிகளின் சந்தைவெளியாக மாறிப்போனது. சந்தைக்குத் தேவை சின்னச்சின்ன வெளிகள் அல்ல; பெருவெளிகளே. ஈழம் உள்ளிட்ட இலங்கை ஒற்றைவெளியாக இருப்பதின் அனுகூலங்களே முதன்மையாக நினைக்கப்பட்டது; நினைக்கப்படுகிறது.       
###
நவீன முதலாளியம் தேர்தலை மட்டுமே ஜனநாயகத்தின் அடையாளமாக முன்வைக்கிறது. தேர்தல் நடத்திப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு பெற்றவர்களோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தமுடியும்; நடத்தவேண்டும் என அது நம்புகிறது. பேச்சுவார்த்தைக்குள் கொண்டுவரத்தக்க தலைமைகள் மட்டுமே தேசங்களை ஆளவேண்டும் என விரும்புகிறது. இப்படி வருபவர்கள் ஜனநாயகவாதிகளாக இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் வைக்கப்படுவதில்லை. மதவாதம், பேரினவாதம் பேசும் அடிப்படைவாதிகளாக இருந்தாலும் கவலையில்லை. ஒரே நிபந்தனை குறிப்பிட்ட கால அளவில் தேர்தல்கள் நடத்தப்படவேண்டும். அப்படி வருபவர்களைப் பங்காளிகளாக்கிக் கையெழுத்து வாங்கும் கலை அல்லது திறமை கைவந்த ஒன்று. நேரடியாக இல்லையென்றால் நண்பர்களின் வழியாகவோ, கூட்டணிக்கட்சிகளின் வழியாகவோ நெருக்கடி தரலாம். சொகுசு வாழ்க்கையை- ராஜவாழ்க்கையைப் பல தலைமுறைக்கு உத்தரவாதமாக்குவது முதல்கட்டம். உள்நாட்டிலோ அல்லது அயல்நாட்டிலோ பெருஞ்சொத்துகளுக்கு அதிபதியாக்கிக் காட்டுதல் அடுத்த கட்டம்.                                                                            ###
ஈழத்தில், பெருங்கூட்டத்தைப் பின்னிறுத்தி, முன்படையாக நின்ற ஒத்தைப்புலியோடு பேசுவதற்கான மொழியைப் புதிதாகக் கற்றுக்கொள்ளப் பன்னாட்டுக் குழுமங்கள் தயாராக இல்லை. அல்லது இவர்களின் மொழியை அவர் கற்றுக்கொள்ள மாட்டார் என எதிர்நிலையாகவும் கருதியிருக்கலாம். சொல்வதைக் கேட்கும் கூட்டத்தின் தலைவனாக உயர்ந்து நின்றார். கடல்வழிகளைக் கண்ணிவைத்துத் தாக்கியழிக்கும் சக்தியோடு வான்வழிப் பரவும் வித்தைகளும் அவருக்குக் கைவந்த கலையாக இருந்தது. ஆயுதருசி கண்ட அவர் தேர்தல்கள் நடத்தமாட்டார் எனக் கருதும்படி நடந்துகொண்டார். என்றாலும் தான் ஒரு சிறுபரப்பின் அரசன் - பறம்பு மலைத் தலைவன் பாரியைப்போல வேளிர்குலத்தலைவன் என்பதைப் புரியாமல் இருந்தார். ஆகவே பேச்சுவார்த்தைக்கான மொழியின் அமைப்பை மாற்றினார்கள். அவர் பேசிய - அவரின் பின்னிருந்த கூட்டம் பேசிய- மொழியின் நாவுகள் அறுக்கப்பட்டன. நந்திக்கடலிலும் முள்ளிவாய்க்காலிலும் சங்கமங்கள் நிகழ்ந்தன. தொடர்நடவடிக்கைகளாக ராஜபக்ஷேவுக்கு ஓய்வளிப்பும், மைத்ரிபாலாவுக்குப் பணி வாய்ப்புகளும் கூடக் கிடைக்கலாயிற்று.       

###
இவ்வளவும் நடந்த பின்பும் 35 ஆண்டுகளாகத் ‘தொப்புள்கொடி உறவு’ என்ற ஒற்றைச் சொல்லால் திரும்பத்திரும்ப உச்சரித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். அந்தச் சொல் திசை திருப்புச்சொல் என்றாக்கப்பட்டுவிட்டது என்பதுகூட இங்கே உணரப்படவில்லை. உணர்த்தும் அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்தியத் தமிழர்களில் சிலரை இங்கே அரியணையில் ஏற்றவும், இறக்கவும் பயன்படும் சொல்லாடல்களில் ஒன்றாக மாறிப்போனது ஈழ ஆதரவு. இச்சொல்லின் பயன்மதிப்பு தமிழக அரசியலுக்கு மட்டும் உரியதல்ல என்பதைக் கடந்தகாலமும் நிகழ்காலமும் உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

தொப்புள்கொடி என்ற சொல்லோடு, ஈழம், புலம்பெயர்வு, அகதிவாழ்வு என்பனவும் மதிப்புக் கூட்டப்பெற்ற சொற்களே. இப்போது உச்சபட்ச மதிப்புடைச் சொல்லாக ஒண்டிப்புலி ஆகியிருக்கிறது. மதிப்புடைச் சொல்லால் மதிப்பிழந்த கவிதைகள் எழுதிப்பார்க்கப்படுகின்றன. அவ்வப்போது நாகைக்கரையிலிருந்தும் ராமேஸ்வரம் தீவிலிருந்தும் பார்த்துத் திரும்பிய தமிழ்க் கவிகளுக்கு அந்தக் கடலில் நீந்திப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது. ஆசையை நிறைவேற்றக் கவிகள் தயாராகிவிட்டனர். கட்டுமரமேறிச் செல்வதா? கப்பலேறிப் போவதா? வானூர்திப் பயணமா? தேர்வு செய்யும் அதிகாரம் அவர்களிடமில்லை; அவர்கள் எழுதும் கவிதைக்குள் இருக்கக்கூடும்.  
###

‘தொப்புள்கொடி உறவு’ எனத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ‘வாயும் வயிறும் வேறுதான்’ இது தமிழர்களுக்குத் தெரியாத சொலவடையல்ல. பங்காளிச் சண்டையில்,வாய்க்கால் தகராறைத் தொடர்ந்து வரப்புவெட்டு மட்டுமா நடக்கிறது. கால்மாறிக் கைமாறிக் களைந்துபோடுவதும் கூட நடப்பதுதானே? அதை நமது மாண்பு; நமது மறம் என்று கொண்டாடும் பெருமையுடைத்தல்லவா நமது இனம். சொந்த ஊரில் சேரிகளாகவும் ஊர்களாகவும் பிரிந்துகிடக்க, உலகநியாயம் பேசும் நமக்கு உண்மைகள் உறைக்கவே வாய்ப்பில்லை. 

இந்தியர்களாகிய நாம் அந்நியர்கள் (outsiders); நமது பார்வை அந்நியர்களின் பார்வை; நமது புரிதல் அந்நியப்புரிதல். அழிவைக்கண்டு அழவும் கலங்கவும் விரும்பினால் அவற்றைச் செய்யலாம். அழுவதிலும்கூட ‘அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்... இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இலமே; எம்குன்றும்” எனப் பாரியின் பிள்ளைகள் அழுது சொன்னபோதுதான் துயரத்தை உணர்ந்தோம். அவர்களுக்கு ஆறுதலும் தேற்றதலும் கிடைத்தது. நாமும் ஆதங்கத்தோடு ஆறுதல் சொல்லலாம். அதுதான் நமக்குச் சாத்தியம். ஒற்றைக்கவிதையால் பகடி செய்து மகிழ்தல் பெருமையன்று; பீடு.

ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, உரிமை, போராட்டம், வெற்றி அல்லது தோல்வி, மறுபரிசீலனை அல்லது முன்னெடுப்பு , கொண்டாட்டம் அல்லது விமரிசனம் என எதுவாயினும் அவர்களுடையதாகத் தானே இருக்கமுடியும்?உணர்ச்சி வசப்படாமல் ஈழம் என்ற சொல்லைத் தமிழ்நாட்டுத் தமிழர்களால் சொல்ல முடியவில்லை என்பது இன்னுமா புரியவில்லை. இப்போது அந்தச் சொல் உச்சரித்தவுடன் நம்மை அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பதையாவது புரிந்துகொண்டால் நல்லது. ஆம். அரசியல்வாதிகளாயாயிருந்தால் அவர்களது அரசியல் காணாமல் போகும். சினிமாக்காரராக இருந்தால் அவர் நம்பிய சினிமா தொலைந்துவிடும். ஓவியனாக இருந்தால் இருந்தால் ஓவியம் சிதைந்துபோகும். அரங்கியலாளனாக இருந்தால் அரங்கமே கிட்டாது. விமரிசனமாக இருந்தால் விதண்டாவாதமாகிவிடும். எல்லாம் தெரிந்துகொண்ட பின்பு இப்போது கவிஞர்கள் கவிதை தொலைக்கிறார்கள். 

  ###

சாம்ராஜ் எழுதிய அந்த ஒற்றைக்கவிதை
------------------------------------------------------------------------
ஒண்டிப்புலி சர்பத் அந்தத் தீவில்
மிகப் பிரபலம்
சீறும் அதன் சிவப்பு முகமே குப்பியில் லட்சினை
அது பெயருக்குப் பொருத்தமாய் ஊரில் வேறு எவரும்
தலையெடுக்காது பார்த்துக்கொண்டது
கூழ் பதநீர் கள் எல்லாவற்றிக்கும் தடை சர்க்கஸிலும் கூட புளிக்குழம்பு தேச விரோதம் மொழியிலிருந்து குதித்தோடியது அந்த நான்கு கால் மிருகம்.
கால் நூற்றாண்டு காலத்தில் அதற்கு சர்பத்திற்கும் ரத்தத்திற்கும் குழப்பம் ரத்தத்தை சர்பத் என்றது சர்பத்தை ரத்தம் என்றது
தீவின் அக்கரையில் வாழும் அதன் கழுதைப்புலி முகவர்கள் விற்று வாழ்ந்தனர் வெகுகாலமாய் அதை
ஒரு வைகாசி மாதத்தில் ஒண்டிப்புலி ஒண்டிப்புலியாய் கடற்கரையில் மரித்தது
இறக்கும் மதியப் பொழுதிலும் கடலின் சிவப்பை
அது சர்பத் என்றே
இறுதிவரை நம்பியது."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்