இரண்டு படங்கள்- ஒரு நினைவு

ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு மதுரையில் ஒருவாரம் நடந்தது (1981 ஜனவரி, 4-10) அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையில் முதுகலை படித்துக்கொண்டிருந்தேன். ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் அமர்வுகள் எல்லாம் பெரும்பாலும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த மு.வ.அரங்கிலும் துறைகளின் கருத்தரங்க அறைகளிலும் நடந்தன. கலை நிகழ்ச்சிகள் எல்லாம் மதுரைக் கல்லூரி மைதானத்தில் நடந்தன. அவற்றில் எல்லாம் பங்கேற்கும் வாய்ப்புகள் இளம் மாணவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குக் காரணம் மாநாட்டிற்கு வரும் திரளான மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிதான்.