சொல்முறைமைகள் : ஒற்றை நோக்கும் பல்நோக்கும்



எழுதப்பெற்ற - சொல்லப்பட்ட முறையால் சிறப்பாகிவிடும் கதைகள் இப்போது அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் சொல்முறைமையில் புதிய மாதிரிகளை உருவாக்குகிறார்கள். இந்தமாத (ஜனவரி, 2023) அம்ருதாவில் அச்சேறியுள்ள இரண்டு சிறுகதைகளுமே சொல்முறையால் வாசிப்புத்திளைப்பை உண்டாக்கும் கதைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம் கதைகளை எழுதிய இந்திரா பார்த்தசாரதிக்கும் கவி.கருணாகரனுக்கும் எழுத்தில் இருக்கும் நீண்ட பயிற்சிகளே என நினைக்கிறேன். இந்திரா பார்த்தசாரதியின் கதையின் தலைப்பு: இறுதிமுடிவு. கருணாகரனின் கதையின் தலைப்பு: சித்தா. இவ்விரு கதைகளில் ஒன்று ஒற்றை நோக்குடன் நேர்கோட்டுக் கதைக் கூற்றாகவும்(Linear narration), இன்னொன்று பல்நோக்குடன் வரிசைமாற்றுச் சொல்முறை ( Non -Linear narration ) அமைப்பிலும் எழுதப்பெற்றுள்ளன. இவ்விரு சொல்முறைகளில் நேர்கோட்டுச் சொல்முறை மரபான கதைசொல் முறையாகவும், வரிசையற்ற சொல்முறை நவீனத்துவச் சிக்கலை எழுதுவதற்கு ஏற்ற வடிவமாகவும் கருதப்படுகிறது.
”வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா?”

டாக்டர் ஆச்சரியப்பட்டார்கள். “இவ்வளவு பெரிய அட்டாக் நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்”

என்று தொடங்கும் இ.பா.வின் கதைத் தொடக்கம் முதுமைக்கால மனிதர் ஒருவரை முன்னிறுத்தப்போகிறது என்பதைக் காட்டுகிறது. தொடர்ந்து அந்த முதியவர் -நடேசனுக்கும் அவரது அமெரிக்க வாழ் மகனுக்கும் இடையே நடக்கும் உரையாடலாகவே நீண்டுகொண்டே போகிறது. தந்தையைத் தனியாக விட்டுவிட்டு அமெரிக்காவில் இருக்கும் தனக்குள் உருவாகும் குற்றவுணர்வைப் போக்கிக்கொள்ள வேண்டும் மகனுக்கு. அதற்கு ஒரே வழியாக அவன் நினைப்பது சகல வசதிகளுடன் கூடிய முதியோர் காப்பகத்தில் தந்தையை இருத்திவிட்டுச் செல்வது. அதற்கான ஒப்புதலைப் பெறுவது மகனின் நோக்கம். அந்த ஒப்புதலை - இறுதி முடிவைத் தந்தாரா என்பதுதான் கதை. மகனுக்கும் தந்தைக்கும் நடக்கும் உரையாடல்களும் ஒற்றை நிகழ்வுமே கதை. இந்தக் கதையை வாசித்துக்கொண்டிருக்கும்போதே எனக்குள் ஓடிய எண்ணங்கள் இப்படி இருந்தன.

மற்ற ஊர்களின் வணிகப்பண்பலை வானொலிகளின் விளம்பரங்களில் அதிகம் இடம் பிடிப்பவை வீடுகள், மனைகள் சார்ந்த விளம்பரங்களே. கோவையில் அனைத்துத் தரப்பினருக்கான தனி வீடுகளாகவும் அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் கட்டி விற்கும் கட்டுமானத் தொழில்களின் விளம்பரங்களில் இப்போது கூடுதலாக முதியவர்களுக்கான வீடுகள், அவற்றில் கிடைக்கும் வசதிகள், மனம் லயிப்பதற்கான வாய்ப்புகளைத் தரும் கூறுகள் அழுத்தமாகச் சொல்லப்படுகின்றன.தொடர்ந்து கேட்கும் அந்த விளம்பரங்களின் அழுத்தமான படிமங்களைப் பற்றிய காட்சிகளை நேரிலும் பார்க்கிறேன்.

கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பே முதியோர் இருப்பு நிலை குறித்த விவாதங்களை ஐரோப்பியப் புனைகதையாளர்கள் பேசத்தொடங்கிவிட்டார்கள். இந்திய மொழிகளில் தமிழ் முந்திக்கொண்டு விவாதங்களைத் தொடங்கி இருக்கிறது. அதன் பின்னணியில் உலகமயம் ஏற்படுத்தித் தந்துள்ள வாய்ப்புகளும் நெருக்கடிகளும் உள்ளன.

தகவல் தொழல்நுட்பக்கல்வி வளர்ச்சி இந்திய மனிதவளத்தை உலகப்பொதுமை ஆக்கியிருக்கின்றது. அதனால் ஏற்பட்ட புலப்பெயர்வுகள் குடும்ப உறவுகளில் ஏற்படுத்தியுள்ள பிளவுகள் பாரதூரமானவை. முதியவர்களுக்கு தனிமையையும் அதன் தொடர்ச்சியில் அச்சத்தையும் கையறுநிலையையும் உண்டாக்கியிருக்கிறது. அவர்களின் வாரிசுளைக் குற்றவுணர்வுக்குள் நிறுத்தித் தவிக்கவிடுகிறது.

இருதலைமுறைகளும் இந்த உணர்வுநிலையை எதிர்கொள்வதை யார் எழுதினால் சரியாக இருக்கும்? இருதரப்பையும் சமநிலைப்படுத்தி எழுத முடியும் எனக்காட்டுகிறார் இந்திரா பார்த்தசாரதி. முதியவரின் கோணத்தில் சொல்லப்படும் கதையின் முடிவு எதிர்பாராத திருப்பம். மகனின் விருப்பத்தை நிறைவேற்றாமல், இப்போது அவர் இருக்கும் அந்த வீட்டையே ஒரு முதியவர்களின் இடமாக மாற்றிச் சில முதியவர்களை இலவசமாகத் தங்கவிடலாம் என்ற முடிவை -இறுதிமுடிவாக எடுக்கிறார் நடேசன்.

கதையைத் தொடங்குவதிலிருந்து முடிக்கும்வரை கதைசொல்லியோடு அல்லது மையப்பாத்திரத்தோடு ஒன்றி வாசிக்கும் வாசிப்பைக் கோருவது இ.பா.வின் கதை. ஆனால் அதற்குப் பதிலாக நிதான வாசிப்பைக்கோரும் நவீனத்துவக் கதையாடலின் வடிவத்தில் எழுதியிருக்கிறார் கருணாகரன்.

“ மழைவிடாது பெய்து கொண்டிருந்த ஒரு பின்னேரம் தேவை சித்தியை மணம் முடித்து வந்தார் சித்தப்பா”

என்று தொடங்கும் இந்தக் கதையின் தொடக்கமும் ஒருவரின் கதையைச் சொல்லும் தொனியையே கொண்டிருக்கிறது. ஆனால் காலமாற்றத்தில் முன்னும் பின்னும் நிகழும் நிகழ்வைச் சொல்வதும், இடையில் நடந்த நிகழ்வொன்றை விவரிப்பதுமான சொல்முறையால் தனிமனிதர் ஒருவரின் கதையைப் பெரும் அரசியல் காலகட்டத்தின் கதையாக மாற்றிவிடுகிறார்.

முதல் நிகழ்வு தேவி சித்தியை மணம் முடித்த சித்தப்பாவின் கடந்த கால வாழ்க்கை இயக்கத்தோடு தொடர்புடையது என்பதைச் சொல்கிறது. ஈழப்போராட்ட த்தில் இயக்கம் என்பது விடுதலைப்புலிகளின் இயக்கத்தையே குறிக்கும். அதில் முழுமையாக ஈடுபடும் ஒருவர் தனது உடைமைகள் அனைத்தையும் -உயிரையும் இயக்கத்திற்காகத் தரத் தயாரானவர்கள் என்பதை விவரிக்கும் விதமாக அவரது பெயரே இப்போது இல்லை; மறந்துவிட்ட நிலை என்பதாகக் கதை விவரிக்கிறது. கெட்டிக்காரியான தேவி சித்தியோடு சேர்ந்து அவரது வாழ்க்கை மீட்டெடுக்கப்படும் நிலை அடுத்த நிகழ்வு. விளம்பன் என்ற இயக்கப்பெயரில் இருந்த சித்தப்பா, கதைசொல்வதில் கெட்டிக்காரர் என்ற தகவலைத் தருவதின் மூலமாக போர்க்கால அனுபவங்களைக் கதைக்குள் கொண்டுவரும் வாய்ப்பை உருவாக்குகிறார். இயக்கத்தில் அவரது வேலைகளையும் மற்றவர்கள் செய்த வேலைகளையும் தன்னுணர்வு கூடிய சொல்முறையாக இல்லாமல் விவரிக்கும் விதத்தில் கதைநிகழ்வுகளாக ஆக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கம் இயங்கிய விதம், சாகசங்கள், அரச படைகளின் இயக்கத்தை எதிர்கொண்டவிதம், சிங்களப் பொதுமக்களிடம் இருந்த தமிழர் மீதான வன்ம ம், அதனையும் நிதானமாக எதிர்கொண்ட விதம் எனப் பலவற்றைக் கதைக்குள் கொண்டுவர சித்தப்பாவின் கதை சொல்லும் திறனைப் பயன்படுத்திக்கொள்கிறார் கருணாகரன்.

மொத்தக் கதையிலும் சித்தப்பாவின் கதையே சொல்லப்படுகிறது. ஆனால் அவர் வாழ்க்கையை எதிர்கொண்ட நிலையை விவரிப்பதின் வழியாகக் கதையின் தலைப்பான “சித்தா” என்பதற்கு வேறொரு அர்த்தத்தை உருவாக்குகிறார். சித்தி, சித்தப்பா என்ற உறவுமுறைப் பெயர்களில் தொடங்கும் கதையின் தொடக்கம் ஒரு குடும்ப நிகழ்வுகளின் அடுக்குகளாக விரிவடையப்போகிறது என்ற எண்ணத்தை கதையில் அடுத்தடுத்த இடம்பெறும் நிகழ்வுகள் மாற்றுகின்றன. அவர் சொல்லும் நிகழ்வுகளின் வழியாகச் சித்தப்பாவின் வாழ்க்கை பற்றிய நோக்குநிலையை வெளிப்படுத்துகிறார். அவரது வாழ்வியல் பார்வையை மாற்றியதில் போர்க்காலமும் இயக்கமும் செலுத்திய பங்களிப்பு விவரிக்கப்படுகிறது. சித்தி,சித்தப்பா என்ற உறவுமுறைப்பெயர்களில் தொடங்கும் கதையின் மையப்பாத்திரம் வாழ்க்கையை அணுகும் போக்கில் ஒரு சித்தரின் நோக்குநிலையைக் கொண்டதாக மாறுவதைக் கதையாக்கியிருக்கிறார் கருணாகரன். "போரின் முடிவு எப்படி யெல்லாம் ஆட்களை மாற்றி யாருக்கும் பாத்தியளா " என்ற உரையாடல் வரியொன்றை வாசித்துவிட்டுக் கதையின் தலைப்பை அதனோடு இணைத்து நோக்கும்போது, கதைத்தலைப்பான “சித்தா” ஒரு குறியீட்டுத்தலைப்பாக முன்னிற்கிறது.

இரண்டு கதைகளும் வாசிக்க வேண்டிய கதைகள்; வாசித்துப் பாராட்டவேண்டிய கதைகள்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்