சிவசங்கரிக்கு வாசகனின் வாழ்த்து

 


ஒரு காலகட்டத்தில் எனது வாசிப்புக்குரிய எழுத்தாளராக இருந்த சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதைப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியும் பேரா.அ.அ.மணவாளனும் கூட எனது வாசிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள். அவர்கள் விருதுபெற்றபோது மகிழ்ச்சியோடு வாழ்த்தியவன் என்ற நிலையில் இப்போது சிவசங்கரிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறுபத்திரிகை வாசிப்புக்கு முன்னால் -கல்லூரிக் காலத்திய வாசிப்புக்குரிய எழுத்தாளர்களாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்று. அந்தப் பட்டியலில் இரண்டு ஆண்களும் -சுஜாதா, பாலகுமாரந் இரண்டு இந்துமதி, சிவசங்கரி - தொடர்கதைகளால் வார இதழ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பதின் பருவத்தின் கடைசியில் இருந்தவர்களுக்கான எழுத்துகள். அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என வாசித்துத் திளைத்த காலம் அது. எழுத்தாளர்கள். கல்லூரி நூலகம், விடுதியின் படிப்பகம் என தேடி அலையாமலேயே கிடைக்கும்.
சினிமாக்காரர்களுக்கு இணையாக இந்த நான்குபேரின் படங்களும் பத்திரிகைகளில் இடம்பெறுவதும் வாசிப்பின் பின்னணியில் காரணங்களாக இருந்தன. அவர்களின் கதைகள் மரபான கூட்டுக் குடும்பங்களிலிருந்து தனிக்குடும்பங்கள் உருவானதில் காரணங்களை நியாயப்படுத்தி எழுதின. கதைக்குள் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களுக்குச் சார்பாகப் பேசும் சாயல்கள் இரு பெண் எழுத்தாளர்களிடம் வெளிப்பட்ட தூக்கலான அம்சங்கள். புதுவகைக் குடும்பங்கள் வேண்டும்; பெண்களின் தனித்தன்மை பேணப்பட வேண்டும்; எல்லா நேரமும் காதலிக்கப்படுபவளாகப் பெண் இருக்க விரும்புகிறாள் போன்ற உரையாடல்களைக் கொண்டிருந்தன. பாலகுமாரன் எழுத்துகளில் பெண்ணின் உடல்சார்ந்த அற்புதங்களும் ரகசியங்களும் தூக்கலாக வெளிப்பட்டன. ஆனால் சுஜாதா அதையே எழுதிக் காட்டிவிட்டு நக்கலடித்துவிட்டு விலகிக் கொள்ளும் தொனியைக் கொண்டிருந்தார். பட்டப்படிப்பின் இறுதியாண்டுகளில் சிறுபத்திரிகைகள் வாசிப்பும் அரசியல் ஈடுபாடும் கூடிய நிலையில் இவர்களின் கதைகளைத் தொடர்கதைகள் என்று நிலையில் உறுதிப்படுத்திக்கொண்டு - பொழுதுபோக்குக்காக எழுதப்படும் அவற்றை வாசிக்கவேண்டியதில்லை என்று நகர்ந்தவன் நான்.
பட்டியலில் இருந்த நால்வரின் இந்துமதியோடும் பாலகுமாரனோடும் நெருங்கிய தொடர்பு கிடையாது. ஆனால் சுஜாதாவோடும் சிவசங்கரியோடு சில தொடர்புகள் உண்டு. சிவசங்கரி அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்திக்கு நண்பராக இருந்தார். அவரது வெளிநாட்டுப் பயணங்களில் உடன் செல்லும் பத்திரிகையாளர்/ எழுத்தாளர் என்ற வகைப்பாட்டில் பலநாடுகளுக்குச் சென்று அதனைத் தொடர் கட்டுரைகளாக அப்போது எழுதினார். அதன் தொடர்ச்சியில் அவரைக்குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவரது எழுத்துகள் குறித்துக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. அப்போது நான் அங்கு ஆய்வாளர். அதனால் கருத்தரங்கப்பணியில் பங்குண்டு. அந்தக் கருத்தரங்க நாளில் தற்செயலாகச் சி.சு.செல்லப்பா பல்கலைக்கழகம் வந்தார். எனக்குச் செல்லப்பாவோடு பழக்கம் இருந்ததால், அவரிடம் ஆசி வாங்க வந்த சிவசங்கரி என்னோடும் பேசினார். அது குறித்து எழுதிய கட்டுரை ஒன்று எனது வலைப்பக்கத்தில் உள்ளது ( பின்னூட்ட இணைப்பு)
பின்னர் சில ஆண்டுகள் கழித்துத் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமகாலத் தமிழ் இலக்கியங்கள் குறித்து நடந்த கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் வந்தார். அவரோடு விரிவான நேர்காணல் செய்ய சுபமங்களாவின் ஆசிரியர் கோமலும் வந்திருந்தார். இளம்புகைப்படக் கலைஞர் ரவிசங்கர் பிரமாதமான படங்களை அங்கே எடுத்தார். அதற்காக மூன்று நாட்கள் அங்கே இருந்த நினைவு. அக்கருத்தரங்கில் நான் சமகாலத் தமிழ் நாடகங்கள் குறித்துக் கட்டுரை படிக்கப் புதுச்சேரியிலிருந்து வந்திருந்தேன். பல்கலைக் கழகச் சாலைகளிலும் அறையிலும், அரங்கிலும் இருந்து உரையாடியன இப்போது நினைவில் வருகின்றன. இலக்கியம் வழியாக இணைப்பு என்னும் திட்டத்திற்காகப் பலரையும் சந்தித்துக் கொண்டிருந்தார். அதற்காகப் புதுச்சேரி வந்தபோதும் சந்தித்துப் பேசியதுண்டு.
தமிழ்ப்புனைவுக்கான மொழிநடையில் பாத்திர வர்ணனை, இடவர்ணனை, இயற்கை வர்ணனை போன்றவற்றில் வேகமும் துள்ளலும் கொண்ட மொழிநடையைப் பயன்படுத்தியவர்களாக இந்த நான்குபேரையுமே சொல்லலாம். குறிப்பாகப் பெண்களை - பெண்களின் உடலை - அதன் பாகங்களை - அசைவுகளை எழுதும்போது விதம் விதமான உவமைகளையும் உருவகங்களையும் பயன்படுத்துவார்கள். இரண்டு முயல்குட்டியின் துள்ளலோடு டீ-சர்ட்டுக்குள் அசையும் மார்பகங்கள் என்று வாசித்த நினைவு இப்போதும் இருக்கிறது. அதையெல்லாம் குறிப்பேட்டில் குறித்து வைத்துத் திரும்ப எடுத்து வாசித்த வயது அது. திரும்பவும் வாழ்த்துகிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்