கோவையில் பார்த்த நாடகங்கள்


2022-மார்ச் 27 இல் உலக அரங்கியல் நாள் கொண்டாட்டங்களுக்கு வாழ்த்துச் சொன்ன பிறகு சென்னையிலும் கோவையிலும் சில நாடகங்கள் பார்க்கக் கிடைத்தன. சென்னையில் பிரசன்னா ராமஸ்வாமி மேடையேற்றிய இமையத்தின் கதைகளைத் தழுவிய நாடகங்களைத் தனியாக எழுதியுள்ளேன். இங்கே கோவையில் பார்த்த நாடகங்கள் பற்றிய குறிப்புகளை மட்டும் தொகுத்துத் தருகிறேன்.கோவை நகரில் பார்க்கக் கிடைத்தவை மட்டுமே. 
மேக்பெத் - ஒரு பார்வையாள அனுபவம்

 நான் இருக்கும் கோவை குமரகுரு கல்வி வளாகத்தில் வில்லியம் சேக்ஸ்பியரின் மேக்பெத் நடந்தது (16, மே,2023). 50 மாணவர்கள் நடிகர்களாகவும் பின்னரங்கப்பணியாளர்களாகவும் பங்கேற்றனர். இயக்கம் முனைவர் மணீஸ்குமார். புதுவை நாடகப்பள்ளியிலும், தேசியநாடகப் பள்ளியிலும் பயின்றவர். அவருக்கு உதவியாக ஒளி அமைப்புக்கும் இசைக் கோர்வைகளுக்கும் புதுச்சேரி முன்னாள் மாணவர்கள் வந்திருந்தனர். குமரகுரு கல்லூரிகளின் நாடகமன்றத் தயாரிப்பு. என்ன நாடகத்தை எடுத்துக்கொள்ளலாம்; யாரை இயக்குநராக அழைக்கலாம் என்ற ஆலோசனையோடு என்னுடைய வேலை முடிந்தது. பின்னர் அவர்களின் வேலைகளில் யாரும் தலையிடுவதில்லை. முழுவதும் நாடகமன்றப் பொறுப்பாளர்களும் வருகைதரும் இயக்குநரும் மட்டுமே பொறுப்பேற்று மேடையேற்றுகிறார்கள்

நேற்று நிகழ்வுக்கு முன்னால் நடந்த முழு ஒத்திகையைப் பார்த்தேன். பிறகு நிகழ்வைப் பார்த்தேன். மேக்பெத் நாடகத்தை ஆங்கிலத்திலும் போல்ஸ்கியிலும் பார்த்துள்ளேன். இந்திய மொழிகளில் மலையாளம், கன்னடம், தமிழ், இந்தி நான்கு மொழிகளில் பார்த்திருக்கிறேன். ஐரோப்பியர்கள் அப்படியே சேக்ஸ்பியரை மேடையேற்றுகிறார்கள். ஆனால் இந்திய மொழிகளில் மேடையேற்றம் செய்பவர்கள் இந்தியச் சொல்முறையான கதைகூற்றுச் சொல்முறையில் நிகழ்த்துவதை விரும்புகிறார்கள். கட்டியங்காரப்பாத்திரங்களை உருவாக்கி அவற்றின் வழியாகவே மேற்கத்திய நாடகஙகளை நிகழ்த்த முயல்கிறார்கள். அந்த முயற்சி மேற்கத்திய நாடகங்களைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையைச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மேற்கத்திய நாடகங்களில் இருக்கும் ரகசியம்- விடுவிப்பு என்னும் முக்கியமான உத்தியைக் கெடுத்துவிடக்கூடிய ஒன்று மறந்து விடுகிறார்கள். மணீஸ்குமாரின் நாடகத்தை அப்படித்தான் தொடங்கினார். ஆனால் அத்தோடு நிறுத்திக்கொண்டு சேக்ஸ்பியரின் கட்டமைப்பிலேயே நிகழ்த்தினார்.

நீதிபதி மகராஜனின் மொழிபெயர்ப்பைப் பயன்படுத்திய ஆற்றுகைப் பிரதியில் சூனியக்காரிகளின் இருப்பும் அவர்களின் ஏவுதல் வழியாக மேக்பெத்தை இருட்டின் பக்கம் நகர்த்தும் காட்சிகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. இருள் - ஒளி என்ற இருண்மையும் ஆசையின் ஆதிக்கமும் அச்சமும் வெளிப்படும் பாவனைகளை நடிகர்கள் செம்மையாகவே வெளிப்படுத்தினார்கள். ஆனால் வசனங்களைப் பேசும்போது போதிய உச்சரிப்புப் பயிற்சியும் குரல் பயிற்சியும் இல்லை என்பதால் தொய்வாக இருந்தன. சேக்ஸ்பியர் நாடகங்களில் முதன்மையாக இருக்கும் தனியுரைகள் நடிகர்களின் நடிப்புக்கும் குரல் வெளிப்பாட்டுக்கும் சவால் விடுபவை. அதனைக் கொண்டுவருவதில் நடிகர்களுக்குப் பயிற்சி போதவில்லை. இயக்குநரும் பெரிதாக அக்கறைப்பட்டதாக இல்லை. அதே நேரம் குழ்வுக்களாகவும் இசைக்கேற்ப அசையும் உடல்களாகவும் தோன்றும் காட்சிகள் பார்வையாளர்களின் கைதட்டலை அள்ளிக்கொண்டன.

நிகழ்கலைப் பள்ளியில் நாடகம் பயின்று வருபவர்கள் தங்கள் படிப்புக் காலத்தில் நிகழ்த்தப்பெற்ற நாடகங்களின் காட்சிக்கோர்வை, சமநிலையாக்கம், ஒளிக்கலவை என்பதைப் பிரதியெடுக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள். அதனைச் சுட்டிக்காட்டி விமரிசிக்காத நிலையில் அதனையே தொடர்வார்கள். ஆனால் விமரினங்களுக்குச் செவிசாய்க்கும் மாணவர்கள் நான்கைந்து நாடகங்களுக்குப் பிறகு தங்களின் தனித்தன்மையை நோக்கி நகர்வார்கள். இந்த மேடையேற்றத்தில் தனித்தன்மையான காட்சிகளும் ஆற்றுகையும் குறைவாக இருந்தன.
செவ்வியல் கலைகளின் பார்வையாளர்களாக எப்போதும் தங்களை மாற்றிக்கொள்ளும் குமரகுரு வளாக மாணவர்கள் மாக்பெத்தையும் ரசித்துக் கொண்டாடினார்கள்.

=========
உங்கள நீங்க எப்டிப் பாக்க விரும்புறீங்க – இந்தத் தலைப்பில் ஓராள் நாடகமொன்றைச் செப்டம்பர் 25, பீளமேடு, ஜி.18. பொதுமக்களுக்கான அறக்கட்டளை வளாகத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பார்த்த நிகழ்வு, கோவை நகரில் நான்காவது மேடையேற்றம் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே சென்னை தொடங்கி வெவ்வேறு நகரங்களில் இதுவரை 45 தடவை மேடையேற்றம் கண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. கோவை நகரில் நவீன நாடகச் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டுவரும் பூசாகோ கலைக்கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் ராமராஜின் முன்னெடுப்பில் தான் இந்நாடகம் இங்கே வந்தது. தனியாள் நாடகங்களைத் தானே தரும் வல்லமை கொண்டவர் ராமராஜ். பிறரது நாடகங்களைத் தனது மாணாக்கர்களுக்கும் தான் வாழும் நகரத்துப் பார்வையாளர்களுக்கும் வழங்கும் ஆர்வம் கொண்டவர். ஆங்காங்கே இருக்கும் தனிநபர்களின் அரங்கியல் ஆர்வங்களுக்குக் கிடைக்கும் ஆதரவு அக்கலையையும் அக்கலையில் ஈடுபடும் மனிதர்களின் ஈடுபாட்டையும் தொடரச் செய்யும்.

நமது நிகழ்காலம் கண்காணிப்பின் காலம். குறிப்பாக முதலாளியின் அதன் அடுத்த கட்டப் பாய்ச்சலாகப் பன்னாட்டு வணிக வலைப்பின்னலுக்குள் நகர்ந்தபோது அனைவரையும் கட்டுக்குள் வைப்பதற்குக் கண்டுப்பிடித்த பேராயுதம் ”அட்டைகள்( ID CARDS)” குடிமைப்பொருட்கள் வாங்குவதற்கு ஒரு குடும்பத்தின் உறுப்பினராக ஆகவேண்டும் என்ற வலியுறுத்தலின் வழியாக உருவான “அடையாள அட்டை”ப் பண்பாட்டை தேசத்தின் உறுப்பினர் என்ற பேரடையாளமாக மாற்றியிருக்கிறது. அவ்வகையான அட்டைகள் இல்லாதவர்கள் நாடற்றவர்களாகக் கருதப்பட்டுத் தனியான முகாம்களில் அடைக்கப்படும் காலத்தில் வாழ்கிறோம். ஒரு நாட்டிற்குள் இருப்பவர்களையே சிலவகையான தகவல்களைத் தரமுடியவில்லை என்றால் அட்டை வழங்காமல் சிறப்பு முகாம்களுக்குள் தள்ளிவிடும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கின்றன நவீன அரசுகள்.

தனது கதையைத் தானே நிரல்படுத்திச் சொல்லும் (Self Narrative ) பாணியில் தொடங்கிய நாடகம் முதலில் ஒரு சீனப் பன்னாட்டுத் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளியின் அனுபவங்கள் சிலவற்றைக் காட்சிப் படுத்தியது. தனி அடையாளங்கள் அழிக்கப்பட்டுப் பொது அடையாளத்திற்குள் வாழப்பழக்கப்படுத்தப்படும் வாழ்க்கையில் நிலவும் பாரதூரமான வாழ்க்கைத் தர வேறுபாடுகளையும் பொருளியல் சுரண்டலையும் காட்சிப் படுத்தியதின் பின்னணியில் கண்காணிப்பு என்பது ‘நெருப்பை உமிழும் ட்ராகனின்’ கண்காணிப்பாக எப்போதும் சுட்டெரித்துக்கொண்டிருப்பதை எந்திரமாக மாறும் உடல் மொழியாலும் குரல் வெளிப்பாட்டாலும் பார்வையாளர்களுக்குக் கடத்தினார்.

பின்னரங்கில் ஒரு நாற்காலி, ஒரு துணிப்பை, தண்ணீர்க்குடுவை, ஒரு பல்பயன்பாடு அலைபேசி என்ற அரங்கப்பொருட்களைக் காட்சிப்படுத்தித் தொடங்கிய நாடகம், அப்பொருட்களுக்குள் இருந்த ஆடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொள்வதின் வழியாகக் காட்சி மாற்றங்களையும் பாத்திர மாற்றங்களையும் உருவாக்கிக் கொண்டது. கிராமத்தையும் தனது தாயையும் பிரிந்துப் பல்லாயிரம் மைல்கள் தாண்டிப் பெருநகரங்களின் கட்டட வேலைகளுக்குள் தள்ளப்படும் இன்னொரு மனிதனின் வாழ்க்கை விரித்த அடுத்த கதையாடல், சொந்த நாட்டிலேயே அகதி முகாம் வாழ்க்கையை வாழ நேரும் அவலத்திற்குள் பார்வையாளர்களைக் கடத்திச் சென்றது. இறந்த ஒருவனின் அட்டையைத் தனது அட்டையாக மாற்றிக் கொண்டு தன்னைத் தொலைந்துபோக -இறந்துபோக நெருக்கித் தள்ளும் சூழலைத் தனது உடல் மொழியாலும் குரலாலும் பார்வையாளர்களை உணர வைத்தார் ஆனந்த்சாமி.

புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ, அதன் ஒரு பக்கம் பூக்களும் மாலைகளும் விற்கும் பூக்கடை, இன்னொரு பக்கம் குளிர்சாதன வசதிகொண்ட பிணவறைப் பெட்டிகளை வாடகைக்குவிடும் கடை மூன்றையும் அருகருகே காட்சிப்படுத்தி மனிதர்களின் இருப்புக்கும் இல்லாமல் போவதற்குமான தூரத்தையும் மகிழ்ச்சிக்கும் துயரங்களுக்கும் இடைவெளிகள் உருவாக்க முடியாத அவலத்தையும் நாடகக்கட்டமைப்பில் விவரித்துக் காட்டியது. ஆடை, செருப்பு மாற்றம், அலைபேசியில் பதிவுசெய்யப்பட்ட இசைக் கோலங்களை இயக்குவதன் வழியாக உருவாக்கப்பட்ட இடைவெளிகள் போன்றன நாடகத்தின் வடிவத்தில் திட்டமிட்டு உருவாக்கப்படும் இடைவெளிகளாக இருந்தன. பிரெக்டின் காவியபாணி அரங்கில்(Epic theatre) உருவாக்கப்படும் தூரப்படுத்துதல் என்னும் உத்தியை நினைவூட்டிய இவ்விடைவெளிகள், பார்வையாளர்களை நடப்பு வாழ்க்கையில் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை நினைத்துக்கொள்ளத் தூண்டின. இதனை நாடகத்திற்குப் பின் நடந்த உரையாடல்களின் போது சிலர் குறிப்பிட்டுப் பேசினர்.

இந்திய அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கும் அட்டையில்லாதவர்களுக்கு உருவாக்கிக் கொண்டிருக்கும் முகாம், ஏற்கெனவே இந்தியாவில் ஈழ அகதிகளுக்காக இயங்கும் அகதி முகாம்களின் இருப்பு போன்றவற்றை ஞாபகப்படுத்தியதை உணரமுடிந்தது. எனக்குப் புலம்பெயர் எழுத்தாளர்களின் புனைவுகளில் அந்நாட்டு அகதியாக மாறுவதற்கு அட்டை பெறும் வழிமுறைகளின் விவரிப்பு நினைவுக்குள் வந்துகொண்டே இருந்தன.

தனியாள் அல்லது ஓராள் நாடகம் தொடங்கும்போது கதைசொல்லும் பாணியாகவே பெரும்பாலும் தொடங்கும். ஆனால் அவ்வோராள் பாத்திரமாக மாறிவிடுவதும், கதைசொல்லியாக ஆகிவிடும் என்னும் கூடுவிட்டுக் கூடுபோயும் நடிப்புக்கலையின் திறனைக் கைப்பிடித்துவிட்டால் பார்வையாளர்கள் தங்களை மறக்கத் தொடங்கி நாடகம் முன்வைக்கும் காட்சிகளோடும், கருத்துகளோடும் உரையாடலைத் தங்கள் மனதுக்குள்ளே நட த்த ஆரம்பித்துவிடுவார்கள். ஒவ்வொருவரும் தங்களைப் படமாக எடுத்துப் பார்க்கும் ஆர்வம் எப்போதும் குறையப்போவதில்லை. அதுவும் அவரவர் கைகளில் இருக்கும் அலைபேசிக் காமிராவில் தற்படங்கள்(Selfie) எடுத்துப் பார்த்துக் கொள்ளும் இந்தக் காலத்தில் ‘நாம் நம்மை எப்படிப் பார்க்க விரும்புகிறோம்? என்ற கேள்வியைக் கேட்டு விசாரணையாக நகரும் பின் பாதி நாடகம் பார்வையாளர்களோடு – அவர்களின் அகத்தோடு உரையாடலை நடத்துகிறது. நடிப்புக்கான அரங்க வெளியிலிருந்து, பார்வையாளர்களின் இருப்பிட வெளியை நடிப்பு வெளியாக மாற்றிவிடும் நடிகர், பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் படம் எடுத்துக்கொள்ள வந்தவர்களாக மாற்றி, அவர்களோடு சேர்ந்து ஒரு குழுப்படம் எடுத்துக்கொள்வதோடு முடிக்கிறார். இத்தகைய வாய்ப்பு, தனியாள் நாடகம் தரும் சிறப்பான வாய்ப்பு. நடிகர் -பார்வையாளர் உறவில் நெருக்கத்தை (Intimacy) உருவாக்கும் இந்த அம்சத்தை இந்த மேடை நிகழ்வு கச்சிதமாக உருவாக்கித் தந்தது. நடித்த ஆனந்த்சாமியும் நாடகத்தை வடிவமைத்து இயக்கிய ராஜீவ்கிருஷ்ணாவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

நீண்டகாலமாக அரங்கியல் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுவரும் ஆனந்த்சாமியின் நடிப்பில் ராஜீவ்கிருஷ்ணன் இயக்கிய இந்நாடகத்தின் மூல வடிவம் ஒரு தென்னாப்பிரிக்க நாடகம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எனக்கு இந்நாடகத்தின் மூலம் அதற்கு முந்திய ஒன்று என்று தோன்றியது. இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் சாமுவேல் பெக்கட் எழுதிய ஒரு நாடகம் இதே கட்டமைப்பு கொண்டது. தனது ”ஒலிநாடாப் பதிவுகளைத் தொலைத்த கிராப்” (Krap’s lost Tape) அந்நாடகத்தை வாசித்து அதே கட்டமைப்பில் எழுதப்பெற்றதே எனது ‘ஒரு நூற்றாண்டுக்கிழவனின் நினைவுக்குறிப்புகள்’ அதுவும் ஓராள் நடிப்புக்குரிய ஒன்றே.
===============

கோவையில் சிறுவாணி இலக்கியவிழாவையொட்டி, அவ்விழா நடந்த பூசாகோ கலை அறிவியல் கல்லூரி வளாகத்தின் திறந்த வெளியொன்றில் இரண்டு நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. இலக்கியவிழாவில் கலந்துகொண்ட இலக்கியவாதிகள் பெரும்பாலோர் சென்றுவிட, விழா அமைப்புக்குழுவினரும், ராம்ராஜின் நாடகங்களைப் பார்க்கும் ஆர்வம் கொண்ட பார்வையாளர் களுமாக ஒரு 100 பேர் அந்த நாடகங்களைப் பார்த்தோம். அன்று நிகழ்த்தப்பெற்ற இரண்டில் ஒன்று சிறுகதையைத் தழுவிய நாடகம்; இன்னொன்று கவிதையைத் தழுவியது. இரண்டும் சேர்ந்து ஒருமணி நேர நிகழ்வு. கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு..’ சிறுகதையின் கதைப் பின்னலையும் நிகழ்வுகளையும் எடுத்துக்கொண்டு புதுமைப்பித்தன் தனது மனைவி கமலாவுக்கு எழுதிய (கண்மணி கமலாவுக்க்கு..) கடிதவரிகளை உரையாடலாக – தனிமொழி வடிவத்தில் பயன்படுத்திச் சென்னை நகரத்தில் வீடுதேடிய ஒரு எழுத்தாளரின் வலியையும் வேதனையையும் மேடையில் கொண்டுவந்தார். வீடென்பது மனிதர்களின் வாழிடம் என்ற நினைப்பைத் தவிடுபொடியாக்கிய நிகழ்வு அது. கிடைக்கும் இடத்தில் தங்களை இருத்திக்கொள்ளத் தயாராகும் மனிதர்களின் முதுகெலும்புகள் தொலைந்துபோகும் சித்திரத்தை முன்வைத்த காட்சி அனுபவங்கள் பார்வையாளர்களைப் பெரும் குற்றவுணர்வுக்குள் நகர்த்தும் சாத்தியங்களைக் கொண்டிருந்தது. ஓரறை வீடென்பது விசாலமானது என்ற நிலையிலிருந்து மெல்லமெல்லக்குறுக்கிக் கொண்டே வந்து முழுக்காலையும் மறைக்கும் காலனிக்குள்ளும் வாழ்ந்துவிட முடியும் என்ற நெருக்கடிக்குள் நகரும்போது உண்டாகும் மன உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தனது உடல் மொழியால் கடத்தினார் ராம்ராஜ்.




தனியொரு மனிதரின் நெருக்கடியான வெளிப்பாட்டைப் பேசிய தங்க ஒரு.. நிகழ்வுக்கு மாறாக நம் காலத்தின் –தேசத்தின் விவாதப்பொருளைக் காட்சிப்படுத்தியது ‘பதிமூன்று அற்புத விளக்குகள். கவி.வெயிலின் கவிதை வரிகளையே உரையாடல் மொழியாகப் பயன்படுத்திய அந்நிகழ்வில் வேளாண்மையின் நசிவும், வேளாண்மையைத் தொடரமுடியாமல் தற்கொலைக்கு நகரும் குடும்பம் ஒன்றின் கதையும் பேசப்பட்டது. இந்நாடகத்தின் நடிகர்கள் பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்களும் மாணவிகள். அவர்களின் உடல்மொழியும் குரல்மொழியும் இணைந்து உருவாக்கிய சோகச் சித்திரங்களின் பின்னணி இசையாக ஒப்பாரியும் தாலாட்டும் கலந்த அவலக்குரல் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திக் கொண்டது. உருவாக்கப்பட்ட மேடையில் மட்டுமல்லாமல் பார்வையாளர்களுக்குள்ளும் நுழைந்து நெருங்கிப் பேசும் உத்தியைக் கடைப்பிடித்த அந்நாடகம், அகஸ்டோ போவலின் விவாதமேடையின் உத்திகளைக் கொண்டதாக இருந்தது.
============================

சிறுவாணி இலக்கியவிழா நடந்த இரண்டு நாளில் முதல் நாளில் ( பிப்ரவரி25) பார்த்த கையோடு அடுத்த நாள் நான் பணியாற்றும் குமரகுரு கல்லூரியின் ராமானந்தா அரங்கில் மிகப்பிரமாண்டமான நாட்டிய நாடகம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பை எமது கல்லூரி நிர்வாகம் உருவாக்கித்தந்தது. திருச்செந்தூர் எனப் பெயரிடப்பட்ட அந்நாடகப் பின்னல் கச்சிதமான நற்றிறக் கட்டமைப்புக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மனித குணத்திற்கும் தெய்வக்குணத்திற்குமான முரணை நாடகமுரணாக்கி தொடக்கம், சிக்கல், வளர்ச்சி, உச்சநிலை, முடிவு என்ற வடிவத்தில் ஒவ்வொரு அங்கத்திலும் வெவ்வேறு வகையான நடனக்கோர்வைகளால் நாட்டியக்காட்சிகள் நிகழ்த்தப்பெற்றன. இசைவேறுபாட்டாலும் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளின் உள்கட்டமைப்புக்குள்ளேயே உருவாகித் தெறித்த உணர்வுக் கோர்வைகளாலும் பார்வையாளர்களாக வந்திருந்த 1200 பேரையும் அசையாமல் பார்க்க வந்தனர் நடனக் குழுவினர். கந்தபுராணம், கந்தசஷ்டிக்கவசம் ஆகியவற்றில் இருக்கும் தத்துவச் சாரத்தை உள்வாங்கி நாட்டிய நாடகக் கட்டமைப்பை வடிவமைத்துத்தந்தவர் கருணா சாகரி என்ற நடன வல்லுநர்.கோவையில் நிகழ்த்தப்பெற்ற முதல் நிகழ்வைத்தொடர்ந்து தமிழர்கள் வாழும் உலகநாடுகளில் மேடையேறவுள்ள அந்நாடகத்திற்கான தயாரிப்புச் செலவு பல லட்சங்களைத் தாண்டியதாக இருக்கும். ஒளியமைப்பும் இசைக்கோர்வைகளும் நடன அசைவுகளும் இணைந்து நின்ற துல்லியத்தன்மையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கமுடிந்தது.

********
இந்நிகழ்வுகள் தந்த அரங்க நிகழ்வு அனுபவங்களுக்கு இணையாக இணையவழிச் சந்திப்பாக நடந்த உரையாடல்கள் தந்த அனுபவங்களையும் இங்கே குறிப்பிட வேண்டும். இலங்கையின் மட்டக்களப்பில் இயங்கும் ஸ்ரீவிபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவகத்தின் நாடகத்துறை மாணவர்கள் 30 பேர் எழுதிய நாடகப்பனுவல்களை வாசித்து விவாதிக்கும் வாய்ப்பொன்றை அங்கு பணியாற்றும் விமல்ராஜ் ஏற்படுத்தித்தந்தார். ஒருவகையில் அது

நாடகப்பனுவலாக்கப் பட்டறையாகவே அமைந்தது. 2022 , நவம்பர் நான்கு அமர்வுகளாக நடந்த அந்தப் பட்டறையில் ஒவ்வொருவரும் தங்கள் பனுவல்களை முன்வைக்க, நாடகப்பனுவலில் இருக்கவேண்டிய கூறுகளைக் குறித்த ஐயங்கள், வினாக்கள் எழுப்பி மறுகட்டமைப்புச் செய்தோம். அதன் பிறகு மாற்றி எழுதிய நாடகப்பனுவல்களை மேடையேற்றும் பணியைத் தங்களின் தேர்வுப்பணியாகச் செய்திருந்தனர். அத்தகைய மேடையேற்றத்தின் காணொளியைச் சிலர் அனுப்பி வைத்தனர். அவற்றைப் பார்த்தபின்னரும் அவர்களோடு உரையாடி விவாதிக்கமுடிந்தது.

இவையெல்லாம் நினைவலைகளாக ஓடி, எனது நாடகக்காரன் அடையாளத்தை – ஆர்வத்தை நீட்டித்துத் தருகின்றன. அரங்க நிகழ்வு என்பது எல்லாவகை மொழிக்கூறுகளையும் – எழுத்துமொழி, உடல்மொழி, வண்ணக்கலவைகளின் மொழி, ஒளியின் மொழி, ஓசையின் மொழி என எல்லா மொழிக்கூறுகளையும் ஒருங்கிணைத்து உருவாகும் கூட்டுமொழி. அந்த அனுபவம் கிடைக்கும்போதே நாடகக்காரன் தன்னை உணர்கிறான். பார்வையாளன் என்ற அடையாளத்தைத் தக்கவைக்க விரும்பினால் கூட அந்தக் கூட்டுமொழியின் கலவை நிகழிடத்திலிருந்து வந்து சேரவேண்டும். அந்தக்கடத்தலின் வேதிவினையில் தான் அரங்க நிகழ்வு உயிருள்ளதாக மாறிக்கொண்டே இருக்கிறது.

இப்போதும் என்னை ஒரு நாடகக்காரனாக நினைத்துக்கொள்கிறேன். மார்ச் 27 உலக நாடக தினத்திற்கு வாழ்த்துச் சொல்வதின் மூலம் அந்த நினைப்பைப் புதுப்பித்துக்கொள்கிறேன். இப்படி நினைத்துக்கொள்வது அபத்தம் என்ற போதிலும் அதிலிருந்து விலகிவிட முடியவில்லை.கடைசியாக ஒரு நாடகக்காரனாக என் உடலை அசைத்தும் ஆட்டியும் பார்வையாளர்கள் முன்னால் நின்று ஐந்தாண்டுகள் முடிந்துவிட்டன. 2019 டிசம்பர் 15 தொடங்கி 20 நாட்கள் இலங்கையில் பயணம் செய்தபோது மலையகத்தின் நுவரெலியாவிலும் திரிகோணமலையிலும் பள்ளி மாணவர்களுக்காக ஒருநாள் நாடகப்பயிற்சிப்பட்டறையில் முழுநேரப் பயிற்சியாளனாக இருந்து தன்னெழுச்சியாக உருவாக்கப்படும் குறுநாடக நிகழ்வுகளை (Improvised plays) உருவாக்கிக் காட்டும் பயிற்சிகளை அளித்தேன். அதே வகையான பயிற்சியை யாழ்ப்பாணம் செம்முகம் கலைக்குழு நடிகர்களுக்கும் வழங்கினேன். அதற்குப் பிறகு நாடகப் பயிலரங்குகளைக் கூட நடத்தவில்லை. அங்கிருந்து திரும்பிய இரண்டு ஆண்டுகள் கோவிட் -19 நோய்த் தொற்றுக் காலத்தில் அரங்க நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பே இல்லை.

************

புதுச்சேரி நாடகத்துறையிலிருந்து விலகித் திருநெல்வேலிக்கு வந்தபிறகும் கூட நாடகங்களை இயக்குவது, பயிற்சிப்பட்டறைகளை நடத்துவது, நாடக எழுத்துருவாக்க வகுப்புகளை நடத்துவது எனத் தொடர்புகள் விட்டுப் போனதில்லை. அதேபோல் தமிழ்நாட்டில் மேடையேற்றப்பட்ட முக்கியமான நாடகங்களைப் பார்த்து விமரிசனக் கட்டுரைகளையும் எழுதுவதையும் தொடர்ந்து செய்துகொண்டிருந்தேன். பார்வையாளனாக இருந்து பார்த்து எழுதிய கட்டுரைகளை மட்டும் தொகுத்து நூலாக்கும் அளவிற்குக் கட்டுரைகள் எனது வலைப்பக்கத்தில் இருக்கின்றன. அண்மைக்காலத்தில் பார்வையாளராக இருந்து நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புகூடக் கிடைக்கவில்லை. 2022 மார்ச் 27 –க்குப் பிறகு பார்த்த நாடக நிகழ்வுகள் ஐந்து தான்.

2022, ஏப்ரல் 2 ஆம் தேதி, சென்னை ஆழ்வார்பேட்டை மேடை அரங்கில் ப்ரசன்னா ராமசாமியின் இயக்கத்தில் நிகழ்த்தப்பெற்ற “கதையல்ல; வாழ்க்கை” என்ற நிகழ்வைப் பார்ப்பதற்காகத் திருமங்கலத்திலிருந்து சென்னை போனேன். “என்னுடைய ‘ஆஃபர், மணலூரின் கதை, வீடும் கதவும், நன்மாறன் கோட்டைக்கதை’ என்ற நான்கு சிறுகதைகளையும் இணைத்துக் “கதையல்ல வாழ்க்கை” என்ற தலைப்பில் பிரசன்னா ராமசாமி நாடகமாக்கியிருக்கிறார்; வாய்ப்பிருந்தால் வந்து பாருங்கள்” என்று இமையம் தகவல் அனுப்பியிருந்தார் இமையம். அந்தத் தகவலே சென்னைக்கு என்னை இழுத்துச்சென்றது. அந்நிகழ்வைப் பார்த்துவிட்டு எழுதிய கட்டுரை நீலம் இதழில் வந்தது. எனது வலைப்பக்கத்திலும் உள்ளது. அதற்குச் சில மாதங்கள் முன்பு பிப்ரவரியில் மணல் மகுடியின் இடாகினி கதாயஅரத்தம் நாடகம் கோவில்பட்டியில் நடக்கிறது என்ற தகவல் கிடைத்தது. மதுரைக்கருகில் உள்ள கருமாத்தூர் கல்லூரி வளாகத்தில் நடக்கப்போகிறது என்ற தகவலும் கிடைத்தது. ஆனால் போகவில்லை.

முருகபூபதியின் பெரும்பாலான நாடகங்களைப் பார்த்து விரிவாக எழுதியவன். ஆனால் இந்த நாடகத்தைப் பார்க்கப் போகவில்லை. குகைமரவாசிகள் நாடகத்திற்குப் பின்னர் முருகபூபதியின் நாடகங்களைப் பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது. நாடக இலக்கியத்தின் உரையாடல் மொழியைக் கைவிட்டுவிட்டுக் கவிதைமொழியைச் சுமக்கும் நடிக உடல்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் நிகழ்வுகள் அவை. இந்த விமரிசனப்பார்வையை அடைந்தபின்பு ஒரே வகையான பொருண்மையில் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளைத் திரும்பத்திரும்பப் பார்க்கும்போது என்ன உணர்வும் அனுபவமும் புதிதாகக் கிடைத்துவிடப்போகிறது என்ற காரணமே முருகபூபதியின் நாடகங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கும் ஆர்வத்தைத் தடுத்தது. இந்தப் போக்கை உருவாக்குவதில் கோணங்கியின் பங்களிப்பு இருக்கிறது என்ற சுட்டிக்காட்டலையும் முன்பே செய்திருக்கிறேன். கோணங்கியின் புனைகதைகளை வாசிக்கவேண்டியதில்லை என்ற முடிவோடு சேர்ந்து மணல் மகுடி நாடகங்களைப் பார்க்கவேண்டியதில்லை என்ற முடிவும் எடுக்கப்பட்டது.

“சொந்த பூமிக்குத்திரும்புதல் – சொந்த அடையாளத்திற்கு – பழைய வாழ்முறைக்குத் திரும்புதல் என்பதில் உறுதியான தொனியைக் கொண்டிருக்கும் நாடகங்கள் அவை. முருகபூபதிக்கும் அவரது சகோதரர் கோணங்கிக்கும் இருக்கும் அந்த உறுதியில் – நம்பிக்கையில் –நுழைய மற்றவர்கள் விரும்ப வேண்டியதில்லை; விட்டு விடலாம்” என்று சொல்லிவிட்டே நிறுத்திக்கொண்டேன்.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்