கோடைகாலக் குறிப்புகள் -1


போன வருடத்தை விட இந்த வருட வெயில் கூடுதல் - ஒவ்வொரு வருடக் கத்திரி வெயிலின் போதும் இந்த வாக்கியத்தை யாராவது சொல்லக் கேட்டிருக்கிறேன். கோவையிலும் அந்தச் சொற்களைக் கேட்கிறேன். கோவையின் கோடை காலம் முழுப்பங்குனி மாதமும் என்கிறார்கள். சித்திரை பாதியில் வெயில் குறைந்துவிடும். சில்லென்ற மேலைக்காற்று நீலகிரி மலையிலிருந்து இறங்கிவருவதை உணரமுடியுமாம். போனவருடம் உணரவில்லை. இந்த ஆண்டு உணரும் வாய்ப்புண்டு. 

கடந்த ஆண்டு அக்கினி முடிந்த வைகாசியின் முன்பாதியில் (23-05-22)  கோவைக்கு வந்தேன். திருமங்கலத்தில் கடும் கோடையின் வெளிப்பாடாக இருந்த நாள். ஆனால்   அதற்கு மாறாக ஒரு குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் இருப்பதுபோல இருந்தது கோவை. இரண்டு ஊர்களுக்கும் இடையில் 6 டிகிரி செல்சியஸ் வேறுபாடு இருந்தது.  வியர்வை இல்லாத முதுவேனில் காலம். வைகாசி, ஆனியில் சாரலோடு கூடிய பகல் நேரங்கள் எனக் கழிந்தது.  
 
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரக் காலத்தில் முக்கியமான வேலைகளைச் செய்யாமல் தள்ளிப் போடுவது தமிழர்களின் வழக்கம். பதினெட்டாம் பெருக்கு என அழைக்கப்படும் ஆடி பதினெட்டில் முதல் ஏர் வைத்து முதல் விதை பாவும் பழக்கம் உள்ள நமது முன்னோர்கள் முதல் கூடலை- புதுமணத் தம்பதிகளின் முதல் புணர்ச்சியை- ஆடி மாதத்தில் வைத்துக் கொள்வதில்லை என்பதற்குக் கூட இந்த அக்கினி நட்சத்திரம் தான் காரணம். ஆடியில் புணர்ந்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும். சித்திரை வெயிலில் - அதிலும் கத்திரி வெயில் பிள்ளை பெறும் வலியை மற்றவர்கள் சொல்ல முடியாது. பெறுபவருக்குத் தான் தெரியும்.

அக்கினி நட்சத்திரத்தின் கால அளவு மொத்தம் பதினான்கு நாட்கள். பின்னேழு முன்னேழு என ஒரு வழக்குச் சொல்லால் குறிக்கப்படும் கத்திரி வெயில் காலம் என்பது சித்திரை மாதத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் ஏழு நாட்களும். அந்தப் பதினாலு நாட்களுக்குப் பின் குறையத் தொடங்கும் வெயில் வைகாசி கடைசியில் கார்காலமாக மாறி ஆடியில் பரபரக்கும். இந்தப் பதினான்கு நாட்கள் என்பது இப்போதெல்லாம் நீண்டுகொண்டே இருக்கிறது.

சில ஆண்டுகளாகக் கால மாற்றத்தை அவ்வளவு சுலபமாக ஊகித்துவிட முடியவில்லை. திடுதிப்பென்று ஒரே நாளில் வெப்ப நிலை அடியோடு மாறிப் போகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் தான் கால நிலை மாற்றம் இப்படித் தாறுமாறாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பாண்டிச்சேரிக்குப் போன போது அங்கேயும் அப்படித் தான் இருக்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் கால நிலை மாற்றம் மனிதர்களின் முன் அறிவுக்கு மாறாகவே இருக்கின்றது. எல்லாவற்றையும் முந்திரிக் கொட்டை மாதிரி அவசரமாகச் செய்து பார்க்கும் மனித ஆசை இயற்கைக்கும் வந்து விட்டது என்றே தோன்றுகிறது. ஆனால் விஞ்ஞானிகள் வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காரணம் தெரியவில்லை.?

நகரத்தின் விரிவாக்கப் பகுதி என்ற பெயரில் மனைகள் விற்ற போது ஒரு மனையை வாங்கிச் சொந்த வீடு கட்டிக் குடி போனேன். ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய வங்கித் தவணையை ஓரளவு மறக்கச் செய்வது காலை நடையின் போது கிடைத்த அந்த இதமான காற்றும் விதம் விதமான ஒலிகளும் தான். ஏப்ரல் மாத இறுதியில் நள்ளிரவில் தகிக்கும் வெக்கை கூட அந்தக் காலை நேரம் கிளம்பும் மெல்லிய காற்றில் மறந்து போகும். நான் வீடு கட்டிக் கொண்டு போன போது பக்கத்தில் தொடர்ச்சியாக வீடுகள் இருந்ததில்லை. இரவில் பார்த்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கும். தூரத்தில் கண்மாய்க் கரையில் இருந்த பெரிய ஆலமரம் அதிகம் சப்தம் எழுப்பாது ; ஆனால் அதன் முன்பாக இருந்த தென்னந்தோப்பு அசையும் சப்தம் விநோத ஒலிகளோடு இருக்கும்.

மரம் உரசும் ஒலியா? பறவைகளின் பிரசவ வேதனையா? என்று தெரியாது. அந்த சப்தங்களின் தொடர்ச்சி சொல்லும் கதைகள் சுவாரசியமானவை. இந்த ஒலிகளையெல்லாம் இளமைப் பருவத்தில் எனது கிராமத்தில் கேட்டிருக்கிறேன். எங்கள் ஊருக்கு வடக்கே இருந்த மலைக் குன்றிலிருந்து ஓர் அருவி கிளம்பிப் பாறைகளில் மோதித் தரையிறங்கும். தாழம்பூக்கள் அடர்ந்த ஒரு காட்டுப் பகுதிதான் அதன் மூலம் என்பதால் அந்த அருவிக்குப் பெயர் தாழையூத்து எனச் சொன்னார்கள். தாழையூத்துக்கும் மேலே போனால் குறிஞ்சிக் காடு ஒன்று பரந்து விரியும்.

குறிஞ்சி மலர் அபூர்வமாகப் பூக்கும் பூவகை என்பதெல்லாம் அந்தச் சின்ன வயதில் எனக்குத் தெரியாது. எனது கிராமத்து மனிதர்களுக்குமே அது தெரிந்திருக்கவில்லை. இன்றே அடுப்பெரிக்க வேண்டும் என்றால் அந்தக் குறிஞ்சிக் காட்டுப் பகுதிக்குச் சென்று காய்ந்து நிற்கும் குறிஞ்சிமார்களை வெட்டி எடுத்துக் கொண்டு வருவார்கள். படபடவெனப் பற்றியெரியும் குறிஞ்சிச் செடியிலிருந்து வரும் நாற்றம் பலருக்கும் பிடிக்காது என்பதால் அதை அடிக்கடி எரிக்கும் விறகாகக் கூட பயன்படுத்தியதில்லை.
எழுபதுகளில் வந்த பசுமைப் புரட்சியும் வெண்மைப் புரட்சியும் நாட்டில் மின்சாரத்தின் பயன்பாட்டை அதிகப் படுத்தியதின் விளைவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் கிராமம் அனுபவித்து முடித்து விட்டது. அறுபதுகளின் இறுதியில் ஐந்து மோட்டார் தோட்டத்துடன் இருந்த அந்தச் சின்ன கிராமம் எழுபதுகளின் இறுதியில் நூறு மோட்டார் தோட்டங்கள் கொண்ட கிராமமாக மாறியது. கிராமத்தை விட்டு வெளியேறி தோட்டங்களை நோக்கிப் போனால் தாழையூத்தின் அருவி ஓசை கேட்பதற்குப் பதிலாக மின்சார மோட்டார்களின் உறுமும் ஓசைகளும் கொட்டும் நீரின் சப்தமும் மட்டுமே கேட்டன.

கிணறுகளில் இருந்த கமலைக் கால்கள் கழற்றப்பட்டு விட்ட நிலையில் கொட்டங்களில் கட்டிய மாடுகளின் எண்ணிக்கை குறைந்து போய்விட்டன. மாடுகள் போட்ட சாணி உரத்துக்குப் பதிலாக யூரியா, பாஸ்பேட், சல்பேட், எனச் செயற்கை உரங்கள் வாங்கவும், பூச்சி மருந்துகள் வாங்கவும் உரக் கடைகளில் வரிசையில் நின்றார்கள் எங்கள் ஊர் விவசாயிகள். இவற்றுக்கெல்லாம் அரசுகள் வழங்கிய பயிர்க்கடன்களும் உரக்கடன்களும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தன. மின்சார மோட்டார்கள் வந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் எங்கள் ஊர் மாறித்தான் போனது.

அதுவரை பயிரிட்டுக் கொண்டிருந்த உணவுப் பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, சாமை போன்றன அரிதாகிப் போய்விட்டன. எல்லாரும் பருத்தியும் மிளகாயும் பயிரிட்டுப் பணம் பார்ப்பது என்று மாறினார்கள். சிலர் கரும்பு போடத் தொடங்கினர். உணவுப் பயிர்களைப் பயிரிடாத நிலையில் கையில் காசும் புரண்டது. ஆனால் கிணறுகளில் நீரின் அளவு குறைந்து கொண்டே போனது. கமலையிலிருந்து குதித்து நீச்சல் அடித்து மகிழ்ந்த சிறுவர்கள் இப்போது குதித்தால் தரை தட்டி விடும் நிலை தோன்றியது.

மின்சார மோட்டாரின் தேவையைப் பூர்த்தி செய்ய கிணறுகள் ஆழப் படுத்தத் தொடங்கிய போது விவசாயிகளின் துயரம் தொடங்கியது. கிணற்றடி நீர் இறங்க இறங்க தாழையூத்து அருவியும் வறண்டு போய்விட்டது. மலையின் வளம் குறைந்ததின் சாட்சியாக இருந்த குறிஞ்சிக் காடு கூட இப்போது இல்லை. தாழையூத்து அருவி தொடங்கிய இடத்தில் இருந்த தாழம்பூப் புதர்களும் இப்போது இல்லை. ஒன்றிரண்டு செடிகள் மட்டுமே இப்போது நிற்கின்றன.
வீட்டிலிருந்து சூரியன் வரும் முன்பே ‘வாக்கிங்’ செல்லும் பழக்கத்தை ஆரம்பித்தேன்.காலையில் எழுந்து தேநீரைக் குடித்துவிட்டு நடக்கத் தொடங்கினால் அந்த ஆலமரம் வரை நடந்து விட்டு வருவதற்குள் கேட்கும் பறவைகளின் ஒலிகள் மெல்ல மெல்லக் குறைந்து விடும். சூரியன் வரும் போது பறவைகள் இரைதேடத் தொடங்கி விடும். ஆனால் சில் வண்டுகளின் ரீங்காரம் இடைவிடாது கேட்டுக் கொண்டே இருக்கும்.

வைகறையிருளில் நடக்கத்தொடங்கி வெளிச்சம் வரும்போது கண்மாய்க் கரைக்குப் போய்விடுவேன். அப்போது தூரத்தில் மயில்கள் நின்று வேடிக்கை பார்த்தபடி கால்களை அசைத்து வைத்துக் கொண்டு மெல்ல நடக்கத் தொடங்கும். என்னோடு பழக வேண்டும் என்று சில மயில்கள் விரும்புவது போல என்னருகில் வந்து விட்டுச் சிறு தாவலுடன் பறந்து போய் விடும். எனது வீட்டிற்கு வரும் பெரியவர்களுக்குத் தர எதுவும் இருப்பதில்லை. ஆனால் நண்பர்களின் குழந்தைகள் அந்த மயிலிறகுகளை வாங்கிக் கொண்டு போகும்போது அடையும் சந்தோசம் சொல்லிப் புரிய வைக்க முடியாத ஒன்று. மயிலிறகு தரும் சந்தோசம் எங்கிருந்து கிளம்புகிறது. அந்த மென்மையிலிருந்தா? நீண்டு வளைந்து நிற்கும் சாயலில் இருந்தா? பிரித்துக் காட்ட முடியாத வண்ணங்களிலிருந்தா? விளக்கிச் சொல்ல முடியாததுதான் அழகும் அதுதரும் சந்தோசமும் போலும்.

மயில்கள் உதிர்த்து விட்டுச் செல்லும் இறக்கைகளை மட்டும் நான் எடுத்து வந்து பத்திரமாகப் பாதுகாத்தேன். வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல வளர்ந்த பெண்களுக்கும் கூட மயிலிறகு பிடித்தமான ஒன்றுதான். ஆனால் ஆண்கள் இதுபோன்ற மென்மைகளை விரும்பாதவர்களாக ஆகி விட்டார்களா? அல்லது அப்படியான பாவனைக்குள் இருக்கிறார்களா? என்று தெரியவில்லை. ஒரு நண்பரின் மனைவி இரண்டு மூன்று தடவை எங்கள் வீட்டிலிருந்து மயில் தோகைளை வாங்கிச் சென்று அவர்கள் வீட்டின் கண்ணாடிக்குள் அழகுப் பொம்மைகளுடன் வைத்திருந்தார்.இந்த முறை வந்த போது திரும்பவும் மயில் தோகைகள் கேட்ட போது தான் காலை நடையின் போது மயில்கள் காணப்படாத சோகம் பெரியதாக மாறிவிட்டது.
விரிவாக்கப் பகுதியாக இருந்த கட்டபொம்மன் நகர், தனிநகராக ஆகிவிட்டது. தொடர்ச்சியாக வீடுகள் வரிசையாக வந்து விட்டன. மனிதர்களும் ஏராளமாக வந்து விட்டனர். முருகன் கோயில் பூசாரி ஐந்து மணிக்கே மணியை ஒலிக்கத் தொடங்கி விடுகிறார்.மாதா கோயில் மணி ஓசையும் மசூதியின் சங்கொலியும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் மனிதர்களை எழுப்பிக் கடவுளிடம் அழைக்கின்றன. இந்த ஓசைகளுக்கிடையில் பறவைகளின் ஓசை எங்கே கேட்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் இப்போதெல்லாம் நள்ளிரவிலேயே பறவைகள் கூட்டம் கூட்டமாக எங்கோ போய்க் கொண்டே இருக்கின்றன. காலையில் என்னிடம் சிநேகம் காட்டிய அந்த மயில்கள் எங்கே போயிருக்கும்?

கோவையில் நான் குடியிருக்கும் சுவாகத் அடுக்குமாடிக்குடியிருப்புப் பகுதியிலும் சரி, பணியிலிருக்கும் குமரகுரு பன்முகக்கல்லூரியிலும்சரி மயில்களின் நடனத்திற்குக் குறைவில்லை. காலை நடையிலும் வளாகத்தைச் சுற்றிவரும்போதும் பலவிதமான பறவைகளோடு மயில்கள் நடைபழகிக்கொண்டிருப்பதை நின்று வேடிக்கை பார்த்துவிட்டே நகர்கிறேன்.
=============================================
சுகுமாரனின் கவிதை
---------------------------------------
ஒரு பிரம்மாண்ட சிலந்தி போல
கான்கிரீட் காடுகளுக்கு மேல் அசைகிறது சூரியன்
வெயில்
எலும்புகளுக்குள்ளும் நுழைந்து கருணையைக் கொல்கிறது
என் நம்பிக்கைகள் வற்றிக் கொண்டிருக்கின்றன
பறவைகள் உலர்ந்த குரலில் புலம்புகின்றன
காலிக் குடங்கள் அலறுகின்றன
கோபத்துடன் நிமிரும் கைகளில் விலங்குகள்
பளபளக்கின்றன
வயிற்றிலடிக்கப்பட்டவர்களின் ஊர்வலங்கள் நகர்கின்றன
தார்ச்சாலை உருகி
பாரவண்டிக்காரனின் கால்கள் புதைகின்றன
காற்றைக் கடந்தன யாருடையதோ சொற்கள்:
'கொடுமையானது
இந்த கோடைக் காலம்'
இல்லை
எப்போதும் நாம் வாழ்வது கோடை காலத்தில்..."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்