ஒரு காலகட்டத்தில் எனது வாசிப்புக்குரிய எழுத்தாளராக இருந்த சிவசங்கரிக்கு சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதைப் பெற்ற இந்திரா பார்த்தசாரதியும் பேரா.அ.அ.மணவாளனும் கூட எனது வாசிப்புக்குரியவர்களாக இருந்தவர்கள். அவர்கள் விருதுபெற்றபோது மகிழ்ச்சியோடு வாழ்த்தியவன் என்ற நிலையில் இப்போது சிவசங்கரிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறுபத்திரிகை வாசிப்புக்கு முன்னால் -கல்லூரிக் காலத்திய வாசிப்புக்குரிய எழுத்தாளர்களாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்று. அந்தப் பட்டியலில் இரண்டு ஆண்களும் -சுஜாதா, பாலகுமாரந் இரண்டு இந்துமதி, சிவசங்கரி - தொடர்கதைகளால் வார இதழ்களை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். பதின் பருவத்தின் கடைசியில் இருந்தவர்களுக்கான எழுத்துகள். அதற்கு வரையப்பட்ட ஓவியங்கள் என வாசித்துத் திளைத்த காலம் அது. எழுத்தாளர்கள். கல்லூரி நூலகம், விடுதியின் படிப்பகம் என தேடி அலையாமலேயே கிடைக்கும். சினிமாக்காரர்களுக்கு இணையாக இந்த நான்குபேரின் படங்களும் பத்திரிகைகளில் இடம்பெறுவதும் வாசிப்பின் பின்னணியில் காரணங்களாக இருந்தன. அவர்களின் கதைகள் மரபான கூட்டுக் குடும்பங்களில...