ஊடகப்பேச்சுகளும் ஊடகத்தைப் பற்றிய பேச்சுகளும்


ஒவ்வொரு தேர்தலும் அதற்கு முந்திய தேர்தலைவிட - அதுவரை இல்லாத மாதிரி- விசித்திரமாக மாற்றப்பட்டு வருகின்றன . முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் 90 நாட்களுக்கு முன்பே அறிவிக்கிறது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கி விடுகின்றன. படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தலைக் காட்சிப்பொருளாக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் பல நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாக்களிக்கச் செய்வோம்; வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதை எளிமையாக்கிவிட்டோம்; வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகிறோம்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும்; ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசிவிடும்; நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டுவோம்; நெருக்கடியில்லாமல் நீங்கள் வாக்களிக்கலாம் என உத்தரவாதங்களைத் தந்துகொண்டிருக்கிறது.

சரியாகச் சொன்னால், அரசியல் கட்சிகள்  தேர்தலுக்குத் தயாராவதற்கு முன்பே ஊடகங்கள் தயாராகின்றன.  தங்களின் உரிமையாகவும் இருப்பாகவும் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் வலிமையைக் கையளிக்கப்போகும் வாக்காளர்களும் தேர்தலை எதிர்கொள்ளப்போகும் கட்சிக்காரர்களும் தேர்தலைப் பற்றிச் சிந்திப்பதற்கு முன்பே  ஊடகங்கள் சிந்திக்கத் தொடங்குகின்றன. ஊடகங்கள் ஆறுமாதத்திற்கு முன்பே தேர்தலை அறிவிப்புச் செய்கின்றன. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையம் மூன்று மாதத்திற்கு முன்பே அறிவிப்புச் செய்கிறது. இந்த அறிவிப்புக்கான காரணங்கள் என்னவாக இருக்கும்? இரண்டின் நோக்கங்கள் நல்லாட்சியை உருவாக்கி மக்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்ற அக்கறையின் பாற்பட்டதா? எனக்கு அப்படித்தோன்றவில்லை

இப்படி நான் நினைப்பதற்கு அடிப்படையான காரணம், தேர்தலை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகக் கருதுகிறார்கள் என்ற நினைப்பதுதான். அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே அணுகுகிறார்கள்; செயல்படுகிறார்கள். என்னைப் பொருத்துத் தேர்தல் நிகழ்வை நீண்டகாலம் நினைத்துக் கொள்ள வேண்டியவர்கள் வாக்காளர்கள். அதற்கடுத்து அரசியல்வாதிகள். மூன்றாவதாக கவனத்தைத் திருப்ப வேண்டியது தேர்தல் ஆணையம். கடைசியாக வரவேண்டியது ஊடகங்கள். இந்தவரிசை இங்கே நேர்மாறாகத் திரும்பி நிற்கிறது.


ஊடகங்கள் தேர்தலை விற்பனைப் பண்டமாக நினைக்கின்றன. அதனால் தான் அதன் அனைத்துக் கணபரிமானங்களையும் முன்வைத்து விளம்பரப்படுத்தி விற்கும் வேலையை முன்கூட்டியே தொடங்கி விடுகின்றன. செய்தித்தாள் என்னும் அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்த காலகட்டத்தைவிடவும் முன்பே திட்டமிடும் வேலையைக் காட்சி ஊடகங்கள் செய்கின்றன. இந்த உண்மையை இந்தத்தேர்தலை முன்கூட்டியே அறிவித்த ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன.

நவீன வணிகக் கட்டமைப்பைக் கொண்ட காட்சி ஊடகங்கள் ’தேர்தல்’ என்ற காட்சிப்படுத்த முடியாத சொல்லைக் காட்சிப்படுத்திக் களிப்பூட்டும் நிகழ்ச்சியாக மாற்றிவிட்டன. களிப்பூட்டும் காரணிகளைக் கண்டறிந்து கண்டறிந்து தேர்தல் நாள்வரை அவை தக்கவைக்கப்பாடுபடும். தக்கவைப்பதில் தான் அவற்றின் வணிகவெற்றி தங்கியிருக்கிறது. தேர்தல் முடிவிற்குப் பின் ஊடகங்கள் இன்னொரு விற்பனைப் பண்டத்தைத் தயாரிக்கப் போய்விடும்

ஊடகங்களைப் போலல்லாமல் ஆணையம் ‘தேர்தல்’ என்பதை ஒரு திருவிழாவாக நினைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தவேண்டிய திருவிழாவைத் திட்டமிடும் தற்காலிக உறுப்பினர்களைக் கொண்ட திருவிழாக்கமிட்டியைப் போலத் தங்களைக் கருதிக் கொண்ட மிகச்சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்திக் காட்டவேண்டும் என்ற அக்கறைதான் அதன் செயல்பாடுகள். ஊர்க்கூட்டம் நடத்தி, வரிவசூல் செய்து பணம் பிரிக்கும் வேலையில்லாததால் கொடியேற்றத்தில் தொடங்குகிறது தேர்தல் ஆணையம். நாள் குறித்தவுடன் ஒவ்வொருவரும் கிராம எல்லைக்குள் சுத்தபத்தமாகவும் கட்டுப்பாட்டோடும் இருக்கவேண்டுமென உத்தரவுபோடும் ஊர்ப் பெரியவர்களைப் போலக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு கண்காணிப்புப் பணிகளைச் செய்கிறார்கள். திருவிழாக்காலக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி தங்களைப் பிரபலப் படுத்திக்கொள்ளும் நபர்களையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். தேர்தல் ஆணையமும் தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டுப் பெட்டியைக் கட்டிக் கொண்டு காணாமல் போய்விடும். அடுத்த ஐந்தாண்டுவரை அவர்களுக்கு அடையாளமே இருக்காது.

அரசியல்வாதிகள் அப்படிக்காணாமல் போகமுடியாது. ஏனென்றால் தேர்தல் என்பது அரசியல்வாதிகளுக்குப் போட்டிக்களன். வாழ்வா? சாவா? என்னும் போட்டிக்களன். வாக்குக் கேட்பதில் தொடங்கி வெற்றிபெற்றாலும் தோற்றாலும் அவர்கள் வரவேண்டிய இடம் மக்களிடம்தான். வெற்றிபெற்றவர்களும்சரி தோற்றவர்களும்சரி அடுத்த தேர்தலை நினைத்துக் கொள்ளாமல் தப்பிவிடமுடியாது. வெற்றிபெற்றவர்கள் ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்கவைக்க வேண்டும். தோற்றவர்கள், தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்துச் சரிசெய்யவேண்டும். நடந்த தவறுகள் இனித் தொடராது என்ற உத்தரவாதத்தைத் தரவேண்டும்.

தேர்தல் என்னும் திருவிழா நிகழ்வில் வடம்பிடித்துத் தேரை நிலைநிறுத்தும் பொறுப்புடையவர்கள் வாக்காளர்கள். அவர்களின் கால்கள் ஆழமாகத் தரையில் ஊன்றி நிற்கவேண்டும். ஆறுமாதத்திற்கு முன்னால் ஊடகங்களால் பண்டமாக ஆக்கப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கும் அந்தப் பொருளை ஊதிப் பார்க்க வேண்டும்; உரசிப்பார்க்கவேண்டும், முட்டிப்பார்க்கவேண்டும்; மோதிப் பார்க்க வேண்டும்; வெந்நீரில் விட்டுக் கலக்கிப் பார்க்கவேண்டும்; தண்ணீரில் விட்டுத் தடவிப்பார்க்கவேண்டும்.

நம்முடைய பிரதிநிதிகளை எடைபோட்டுத் தேர்வு செய்யவேண்டியவர்கள் வாக்காளர்கள் தான். அந்தப் பிரதிநிதிகள் தங்களுக்காக இருப்பார்களா? தங்களுக்கான நிர்வாகத்தைத் தரும் அறிவும் திட்டமிடலும் உடையவர்களா? என்றெல்லாம் யோசித்து முடிவு செய்யவேண்டியவர்கள்.

 ஐந்தாண்டுக்கொருமுறை வரும் தேர்தல் ஊடகங்கள் முன்வைப்பது போல் பண்டமல்ல. தேர்தல் ஆணையம் நடத்துவதுபோலத் திருவிழா அல்ல. அரசியல்வாதிகள் அணுகுவதுபோல போட்டிகளும் அல்ல. வாக்காளர்களின் வாழ்வு அது. மக்களாட்சி என்னும் உயரிய அரசியல் தத்துவத்தில் அதுதான் உயிர். நம் உயிரை ஏழுகடல் தாண்டி, ஏழுமலைதாண்டி, ஏழு மரங்கள் கடந்து, ஒரு மரத்தின் பொந்தில் வைத்துப் பாதுகாப்பதுபோலப் பாதுகாத்தால் மட்டும் போதாது. அந்த அரிய உயிரின் மதிப்புணர்ந்து பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையையும் திட்டமிடும் அரசு நிர்வாகத்தை உருவாக்கும் மதியாளர்களை, செயலாளிகளை, நம்பகத்தன்மை கொண்ட இயக்கத்தை, அந்த இயக்கத்தில் இருக்கும் மனிதர்களைக் கண்டறிந்து வாக்களிக்கவேண்டும். வாக்காளர்களின் பொறுப்பு அளவிடமுடியாது. பொறுப்பான அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது.


வென்றிலன் என்றபோதும்’

வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்க முடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

மோதி வீழ்ந்த போர்க்களக்காட்சியின் கூற்றாகவே கம்பன் ‘வென்றிலென் என்றபோதும்’ என்ற சொல்லாடலை அறிமுகம் செய்கிறான். அந்தச் சொல்லாடல் அறிமுகமாவதற்கு முன்பே எனக்கு “வென்றெடுத்தல்” என்ற சொல்லாடல் அறிமுகம் ஆகிவிட்டது. நம்முடைய கருத்தோடு உடன்படாத நபர்களிடம் உரையாடி, விவாதித்து நமது கருத்தை ஏற்கச் செய்து நாம் நம்பும் இயக்கத்திற்குரிய நபராக மாற்றும் வேலையைச் செய்தலைக் குறிக்க வென்றெடுத்தல் என்னும் இந்தச் சொற்றொடரைப் பயன்படுத்துவார்கள்.

கம்பனின் ‘வென்றிலன் என்றபோதும்’ என்ற அந்தப் புகழ்பெற்ற சொல்லாடலைச் சொல்லும் பாத்திரம் ராவணன். யுத்தத்தை உண்மையான யுத்தமாக நினைத்தால் ஒரு பாத்திரம் இப்படிப் பேசும் வாய்ப்பே இல்லை. ‘தனது எதிரி அபாரசக்தி வாய்ந்தவன் என்பதும், அவனது பேரும்புகழும் இங்கே கருத்தியல் ரீதியாக ஆட்சிசெய்யும் வேதங்கள் நிலைபெற்றுள்ள காலம்வரை நிலைபெற்று இருக்கப்போகும் ஒரு பெயர்’ என்பதும் தெரிந்தபின் ராவணன், ராமனை எதிர்த்துப்போரிட்டான் என்பதாக இந்தப் பாடல் அர்த்தப்படுகிறது.

சாதாரண மனிதர்கள் இன்று இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள். ஆனால் புகழ்பெற்ற மனிதர்களுக்கு முடிவு - இறுதி என்பது இல்லை.இந்தப் போரில் நான் ராமனை வெற்றிக் கொள்ளாமல் போகலாம். ஆனால் நான் தோற்று, ராமன் வென்றாலும், அந்த ராமனை நினைக்கின்ற மனிதர்கள் என்னையும் நினைக்கவே செய்வார்கள்; ராமனை எதிர்த்ததன் மூலம் நான் சாதாரணன் என்ற நிலையிலிருந்து புகழுக்குரிய எதிரியாக ஆகிவிட்டேன் என்னும் மனநிலையில் ராவணன் பேசுவதாகக் கம்பர் எழுதுகிறார்.

வென்றிலென் என்றபோதும் வேதம் உள்ளளவும் யானும்
நின்றுனென்அன்றோ, மற்றுஅவ் இராமன் பேர் நிற்குமாயின்?
பொன்றுதல்ஒரு காலத்தும் தவிருமோ? பொதுமைத் தன்றோ?
இன்றுளர் நாளை மாள்வார்; புகழுக்கு இறுதி யுண்டோ?

நிகழ்காலப் போர்க்களமாக ‘ ஊடகவிவாதங்கள்’ நடக்கின்றன. தொலைக்காட்சி ஊடகங்களில் நடக்கும் விவாதங்களைப் பார்க்கும்போது பங்கேற்கும் நால்வரும் ஒருவரையொருவர் வென்றெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகச் சொல்லமுடியாது. அவர்களெல்லாம் ஏற்கெனவே வென்றெடுக்கப் பட்டவர்கள்; விவேகமானவர்கள். அவர்களின் முயற்சி தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களை வென்றெடுக்க வேண்டும் என்பதாகவே இருக்கின்றது. பங்கேற்பவர்களின் வென்றெடுப்போடு, தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்துபவர்களின் வென்றெடுப்பும் அதன் பின்னணியில் இருக்கவே செய்யும். வென்றெடுக்கத் தேவை போராட்டங்கள் அல்ல; புத்திசாலித்தனம்.

தொலைக்காட்சி அலைவரிசையை நடத்துபவர்கள் எப்படியாவது திரளான பார்வையாளர்களைத் தங்கள் பக்கம் திருப்பவேண்டும்; திரும்பி வந்தவர்களைத் தக்கவேண்டும் என்பதாக இருக்கும் என்பது பொதுவான பார்வை. இதற்கு மாறான பார்வையும் உண்டு. ஏற்கெனவே தங்களது தொலைக்காட்சிக்கு நிலையான பார்வையாளர்கள் உண்டு என நினைப்பவர்கள், அவர்களைத் தக்கவைப்பதற்கான தகவல்களையும் நிகழ்ச்சிகளையும் மட்டுமே தருவார்கள். செய்தி அலைவரிசையல்லாத தொலைக்காட்சிகள் அதனதன் உள்ளடக்கங்களைத் தருவதன் வழியாக இந்த வேலையைச் செய்கின்றன.

நியூஸ் -18 தமிழ் - தொலைக் காட்சியிலிருந்து அதன் முதன்மைச் செய்தி ஆசிரியர் மு.குணசேகரன் வெளியேறினார்.அவரைத் தொடர்ந்து அரசியல் பிரிவுச் செய்தி ஆசிரியர் செந்தில்வேலின் வெளியேற்றம். இவர்களிருவரையும் பின்பற்றினார் ஜீவசகாப்தன். இம்மூவருக்கும் முன்பே ஆசிஃப். ஒரு தொலைக்காட்சி ஊடகத்திலிருந்து நான்குபேர் வெளியேறியது பரவலான செய்திகளாக மாறுகிறது. சமூக ஊடகங்களில் அவர்களது வெளியேற்றங்கள் பேசப்பட்டன; விவாதிக்கப்படுகின்றன. இதேபோல அரசியல் விவாதங்களுக்கு ஓர் முறைமையையும் வடிவத்தையும் உருவாக்கித் தந்த திரு ஜென்ராம் அவர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்படாமல் கைவிடப் பட்ட நிகழ்வுகள் சின்னச் சின்ன முணுப்புகளாகவும், காவேரி தொலைக்காட்சி தொடங்கப்பட்டு அதன் முதன்மைச் செய்தி ஆசிரியராகப் பொறுப்பேற்று அவர் விலகியதும் பேசப்பட்டன. புதிய தலைமுறையில் விவாத ஒருங்கிணைப்பாளராக இருந்த தியாகச்செம்மலின் விலகலும்கூட விவாதப் பொருளானது நினைவில் இருக்கிறது.

கரோனா கால நெருக்கடியை முன்வைத்து அச்சு ஊடகங்களான விகடன் குழுமத்திலும் புதிய தலைமுறை குழுமத்தில் ஆட்கள் வெளியேறினார்கள்; வெளியேற்றப்பட்டார்கள். அவைகளும் செய்திகளாக வந்தன. இந்த விலகல்களும் வெளியேற்றங்களும் விவாதப்பொருளானது என்பதோடு கண்டனங்களையும் சந்தித்திருக்கின்றன. இவையும் இவைபோன்றனவும் செய்திகளாக மாறுவதின் பின்னணியில் முகநூல், வாட்ஸ் அப், யூ ட்யூப் போன்ற சமூக ஊடகங்களின் வரவும் பரப்பலும் காரணங்களாக இருக்கின்றன.

இவ்வெளியேற்றங்களும் விலகல்களும் நிர்வாகத் தரப்புக்கும் அதன் பணியாளர்களுக்குமிடையேயான உறவுநிலையில் ஏற்படும் முரண்பாடுகள் அல்லது பணித் திறனின்மை போன்ற காரணிகளால் நடக்கும்போது இவ்வளவு விமரிசனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்துவதில்லை. நியூஸ் 18 தொலைக்காட்சியிலிருந்து விலகல்கள் நடந்ததின் பின்னணியில் வெளியிலிருந்து தரப்பட்ட அழுத்தம் காரணமாக இருந்தன என்பதாகச் செய்திகள் பரவியிருக்கின்றன. ஆனால் அச்சு ஊடகங்களின் வெளியேற்றம், மற்றும் வெளியீடுகள் நிறுத்தம் என்பன, அவை இதுவரை பொதுவெளியில் என்னவகையான அமைப்பு சார் அறங்களை வலியுறுத்தி செய்திகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டனவோ, அவற்றைக் காற்றில் பறக்க விட்டுவிட்டுத் தனது பணியாளர்களின் வாழ்க்கையோடு விளையாடிவிட்டன என்ற பொதுமனப்போக்கிலிருந்து கண்டனங்களைச் சந்திக்கின்றன.

மொத்தமாக உலகமே கரோனா எனும் பெருந்தொற்றால் அவதியான வாழ்க்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மனிதாபிமானம் இல்லாமல் தொழிலை நிறுத்துவது; தொழிலாளர்களில் ஒரு பகுதியினரை வேலையிலிருந்து நீக்குவது போன்றன ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதேபோல் பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் இதுபோன்ற வேலை நீக்கங்களும் தொழில் முடக்கங்களும் நடந்தபோது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பக்கம் நின்று குரல் கொடுத்த ஊடக தர்மத்தை தங்கள் நிறுவனத்தில் கடைப்பிடிக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. இருவகைச் சிக்கல்களும் வெவ்வேறாகத் தோன்றினாலும் ஊடக அறம் சார்ந்து இரண்டும் ஒன்றுதான். இவற்றைக் கண்டித்துப் பலரும் பலவிதமாகச் செயல்பட்டார்கள். அவரவர் செயல்படும் சமூக ஊடகங்களில் எழுதினார்கள் . இதுபோன்ற தவறுகள் செய்த நிறுவனங்களைச் சுட்டிக் கட்டுரைகள் வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி அறம்பிழைக்கலாமா? எனச் சிலர் கேள்வி எழுப்பினர். விகடன் குழுமம் வழங்கிய விருதுகளைத் திரும்பத் தந்து சிலர் தங்கள் கண்டனங்களையும், பாதிக்கப்பட்ட அதன் பணியாளர்களுக்குத் தார்மீக ஆதரவு நிலைபாட்டையும் காட்டினார். சாகித்திய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர்கள், கலைஞர்களைக் கொன்றவர்களைப் பாதுகாக்கும் அரசின் போக்கைக் கண்டித்து அரசின் விருதுகளைத் திருப்பிய நிகழ்வுகளை நினைவூட்டின இவையெல்லாம்.

நியூஸ் 18 தொலைக்காட்சி நிர்வாகம் என்ன நெருக்கடி கொடுத்தது என்று தெரியாத போதும் வெளியிலிருந்து வந்த அழுத்த த்திற்கு – அதுவும் திரு மாரிதாஸ் போன்ற தனிநபர்களின் தவறான பார்வை வழியாக உருவாக்கப்பட்ட விமரிசன அழுத்தத்தை ஏற்று நெருக்கடி தரப்பட்டதாக சந்தேகங்கள் கிளம்பின. அப்படி நடந்திருந்தாலும் அது ஊடக அறம் சார்ந்த செயல் அல்லதான். இப்போது வெளியேறியவர்களைப் பணிக்கு எடுக்கும்போது அவர்களின் அரசியல் மற்றும் சமூகவியல் பார்வையைத் தெரிந்துதான் பணிக்கு எடுத்திருப்பார்கள். அவர்களின் பார்வையும் செய்திகளை முன்வைக்கும் முறையும் தமிழர்களின் வெகுமக்கள் மனத்தோடு ஒத்துப்போகக் கூடியன; அதனால் நமது அலைவரிசையின் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருக்கம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்ற புரிதலின் அடிப்படையில் அந்தத் தெரிவுகள் நடந்திருக்கும். அப்போது தெரியாது; இப்போதுதான் தெரியும் என்று சொல்வார்களேயானால், அவர்களின் தெரிவுக்குழுவின் திறன் கேள்விக்குரிய ஒன்று. ஏனென்றால் இப்போது வெளியேறியிருக்கும் அனைவரும் ஏற்கெனவே வெவ்வேறு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றித் தங்களை நிரூபித்தவர்கள். நிரூபித்தல் என்பதில் அவர்களின் பணியாற்றும் திறனோடு சமூகம் மற்றும் அரசியல் பார்வையும் அடங்கும். பெரிய அளவு கட்சி அரசியல் சார்பை வெளிப்படுத்தாமல், தமிழ்நாட்டின் பெரும்போங்காக இருக்கும் சமூகநீதி, மதச்சார்பின்மை, பகுத்தறிவு சார்ந்த பகுப்பாய்வு போன்றவற்றைக் கடைப்பிடிப்பதையே இதழியல்/ ஊடக அறமாக நம்பியிருந்தவர்கள்; வெளிப்படுத்தியவர்கள். அப்படி வெளிப்படுத்தியவர்களைத் தெரிவுசெய்து விட்டு இப்போது அதிலிருந்து திசைமாறும் நோக்கத்தோடு அவர்களை வெளியேற்றும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது அதன் நிர்வாகம். இதன் மூலம் வெளியிலிருந்து தரப்பட்ட நெருக்கடிக்கு அந்நிர்வாகம் பணிந்ததாகப் பரவும் செய்திகள் ஓர் ஊடகத்தின் நம்பகத்தன்மையைக் கொன்றுவிடும், அதன் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பது மட்டுமே நினைக்கப்பட வேண்டிய ஒன்று.

********* ****************

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் களங்கள் தயாராகின்றன. நவீனத் தேர்தலின் களங்களில் முதன்மையாக இருப்பன ஊடகங்கள். ஊடகங்களிலும் திரள் மக்களை நோக்கிக் காட்சியும் பேச்சும் அசைவுமென இருபத்திநான்கு மணி நேரமும் நீளும் செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் முதலில் நிற்கின்றன. தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திகளைத் தரும் எல்லா அலைவரிசைகளும், முன்னிரவு நேரத்தில் ஏற்பாடு செய்யும் விவாதங்களின் வழி பொதுத்திரளைக் கவனிக்கும்படி செய்ய நினைக்கின்றன. சன் நியூஸ், புதிய தலைமுறை, தந்தி, நியூஸ் 7, கலைஞர் செய்திகள், ஜெயா செய்திகள், தொலைக்காட்சி, நியூஸ் 18 போன்றன போட்டியில் இருக்கின்றன. ஆனால் எல்லா அலைவரிசைகளையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாத நிலையில் பார்வையாளத்திரள்கள் அவரவர் நோக்கத்திற்கேற்பப் பிரிந்து நின்றே பார்க்கின்றன; கேட்கின்றன.

இவையல்லாமல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் சன், ராஜ், ஜெயா, கலைஞர், கேப்டன், மக்கள், இமையம், வெளிச்சம் போன்ற தொலைக்காட்சி அலைவரிசைகளும் செய்திகளைத் தருகின்றன. செய்தி மற்றும் பொழுதுபோக்கு அலைவரிசைகளில் பாதிக்கும் மேல் குறிப்பிட்ட கட்சிகளின் ஆதரவை எடுப்பதில் தயக்கம் காட்டாதவை. ஏனென்றால் அவை அந்தந்தக் கட்சிகளின் பரப்புரைகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டவை. அவற்றில் நடக்கும் விவாதங்களும் அந்த நோக்கத்திலேயே இடம் பெறும் என்பதையும் திரள் பார்வையாளர்கள் அறிந்தே இருக்கின்றனர். அதனால் அவற்றின் பார்வையாளர்களாக இருப்பதைவிடப் பொதுப்படையான – நடுநிலையான தொலைக்காட்சி விவாதங்களை நாடுகின்றனர்.

நடுநிலையான அல்லது பொதுப்படையான விவாதங்களை நடத்தும் செய்தி அலைவரிசைகளின் முன்னோடி புதிய தலைமுறை. அதன் உரிமையாளரும் ஒரு கட்சியின் நிறுவனத்தலைவரே என்றாலும் அக்கட்சியை மாநிலக் கட்சியாகவோ, தேசியக்கட்சியாகவோ மாற்றி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் அவருக்கில்லை. அவரது தொழில் நிறுவனங்களின் பாதுகாப்பிற்காகவும் சிலவகையான சமூகசேவை செய்யும் நோக்கத்துடனும் அக்கட்சி சிறிய வட்டாரக் கட்சியாக இருக்கிறது. அதனால் அவரது புதிய தலைமுறை தொலைக்காட்சியும் ஒரு வணிக நிறுவனமாகவே நடத்தப்படுகிறது. வெற்றிகரமான வணிக நிறுவனம் தரமான பொருட்களைத் தருவதில் கவனம் செலுத்தும் என்ற வணிக விதிக்கேற்ப நடுநிலையான செய்தி என்னும் பொருளைக் கவனமாக விற்கிறது. அந்த அலைவரிசை அதன் தொடக்கத்திலிருந்தே உரையாடல்கள், நேர்காணல்கள் விவாதங்கள், பார்வையாளர்கள் பங்கேற்பு, கள ஆய்வு எனப் பேச்சு மொழியின் சாத்தியப்பாடுகளை அதிகமும் நம்பியதோடு, அதனை விதம்விதமாக வழங்கி முன்மாதிரியாக மாறிக்கொண்டது. அதற்கும் முன்பே சன் செய்திகள், ஜெயா செய்திகள் போன்ற அலைவரிசைகள் இருந்தபோதும் புதிய தலைமுறை அளவுக்குத் திட்டமிட்டுப் பேச்சுகளைப் பண்டமாக மாற்றவில்லை.

நவீனத் தொலைக்காட்சிப் போட்டி வியாபாரத்தில் புதிய தலைமுறையின் நோக்கமும் தீர்மானமும் தெளிவானவை. இந்தத் தெளிவோடும் நோக்கங்களோடும் களமிறங்கியனவாகச் சில செய்தி அலைவரிசைகளை வரிசைப்படுத்தலாம். ஆனால் அவை அவற்றின் இலக்குகளைச் சென்று சேர்ந்துள்ளனவா என்பது கேள்விக்குரியது. புதிய தலைமுறையைத் தொடர்ந்து தந்தி தொலைக்காட்சி, நியூஸ் 7 போன்றன அப்படிப்பயணம் செய்தன. அந்த வரிசையில் வந்து போட்டியில் முதலிடத்தை நோக்கி நகர்ந்த அலைவரிசை நியூஸ் 18. செய்தி அலைவரிசைகளின் முதலிடப் போட்டியில் அதன் நிறுவனர்களின் முதலிடும் வல்லமை, மேலாண்மைத் திறன் போன்றன இருந்தாலும் அவற்றின் தொடர்பியல் முகமாக அறியப்படுகிறவர்கள் தலைமைச் செய்தி ஆசிரியர்களே. தமிழ் செய்தி அலைவரிசைகளில் அவற்றின் தலைமைச் செய்தி ஆசிரியர்களே விவாத ஒருங்கிணைப்பாளர்களாக இருந்து தலைப்புத் தேர்வைச் செய்வது தொடங்கி, விவாதத்தின் போக்கைத் திசை திருப்புபவர்களாகவும் விவாதத்திற்கு நம்பகத்தன்மையை உண்டாக்கு பவர்களாகவும் தமிழ்ச் சமூகத்தின் பொது உளவியலுக்குள் நிலவும் பொதுப்புத்தியை அசைத்துப் பார்த்துச் சார்புநிலையைத் திணிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனைச் சரியாகச் செய்யும் செய்தி ஆசிரியர்களே வெற்றிகரமான ஒருங்கிணைப்பாளர்கள்.

செய்தி ஊடகங்களின் முதன்மை ஆசிரியர்களும் விவாத ஒருங்கிணைப்பாளர்களும் களநாயகர்களாகக் கவனம் பெறுகின்றனர். ஒவ்வொரு கட்சியின் அதிகாரப் பூர்வத் தொலைக்காட்சிகளாகக் கருதிக்கொள்ளும் செய்தி ஊடகங்களை விடவும், நடுநிலை ஊடகங்களாகக் காட்டிக்கொள்ளும் செய்தி அலைவரிசைகளுக்குத் தேர்தல் காலத்தில் மதிப்பு கூடுகின்றன. அவை உருவாக்கும் கருத்தியல் மாற்றம் தேர்தல் அரசியலில் அலைகளை உருவாக்கும் என்றும் அதன் மூலம் கட்சிசாராத பொதுநிலை வாக்குகள் திசைமாற்றம் அடையும் என்றும் நம்ப்பப்படுகின்றது. அதன் காரணமாகவே நடுநிலை வகிக்கும் ஊடகங்களின் மையக்குழுக்களில் தங்கள் நிலைபாட்டை முன்னெடுக்கும் ஆளுமைகளை உட்கார வைக்க ஒவ்வொரு கட்சிகளும் நினைக்கின்றன. அதன் விளைவே நியூஸ் -18 தமிழில் நடக்கும் வெளியேற்றங்கள்; தடுமாறல்கள்.

*********************

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்