ஒற்றை ரீல் இயக்கம்: மாற்று ரசனைக்கான முயற்சி


 மாற்றுகளை முன்வைத்தல்

வெகுமக்கள் பண்பாடு வெறும் நுகர்வுப் பண்பாடாக மாறிவருகிறது; அதற்கு வெகுமக்களைத் தேடிச் செல்லும் ஊடகங்களும் நாடகங்களும் துணையாக இருப்பதோடு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.வெகுமக்கள் இதழியலுக்கு மாற்றாகச் சிறுபத்திரிகைகள் என்ற கருத்தோட்டத்தின் தொடர்ச்சியாக, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் என்ற கருத்துக்களும் செயல்பாடுகள் முன் வைக்கப்பட்டன.

நவீனச் சிந்தனை, நவீன இலக்கியம் ,நவீன ஓவியம், நவீனக் கலை என விவாதிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக நாடகத்துறையில், வேடிக்கைத் தோரணங்களாக இருந்த சபா நாடகங்களுக்கு மாற்றாக நவீன நாடகம் என்ற கருத்தியல் முன் வைக்கப்பட்டது.நவீன நாடகங்களில் செயல்பட்ட ஞாநி, பத்திரிகைத்துறையிலும்,  சினிமாவிலும் மாற்றுமுயற்சிகள் வேண்டும் என வலியுறுத்தியவர்.முயற்சி செய்தவர். தீம்தரிகிட போன்ற பத்திரிகை முயற்சிகள் சரியாக இருந்தபோதிலும் வெற்றிபெறவில்லை. சினிமாவில் அவர் செய்துள்ள முயற்சி தான் ஒற்றை ரீல் இயக்கம்.  

தமிழ்ச் சினிமாவின் தொடக்ககாலப் படங்களில் பெரும்பாலானவை நாடகமேடையில் அரங்கேறிய புராணக் கதைகளும், சமூக நாடகங்களும் தான். மக்களுக்கு நன்கு அறிமுகமான கதைகளையே நாடகமாக ஆக்கி மேடையேற்றி வந்த பார்ஸி நாடகக் கம்பெனிகள் நாடகங்களைத் தயாரிப்பதற்கென வைத்திருந்த நாடகக் குழுக்களோடு நடிகர்களை உருவாக்க பாலர் சபைகளையும் வைத்திருந்தன. எல்லாவிதமான பாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் விதமாக இளம் நடிகர்களைப் பாலர் சபைகள் உருவாக்கித் தந்தன.

நாயகக் கதாபாத்திரங்கள் முதல் பபூன் காமிக் வரை ஏற்று நடித்ததோடு ஸ்திரி பார்ட் என அழைக்கப்பெற்ற பெண்பாத்திரங்களையும் பாலர் சபை நடிகர்கள் ஏற்று நடித்துக் கொண்டிருந்த போது தான் சினிமா என்னும் தொழில் நுட்பம் சார்ந்த கலைவடிவம் இந்தியாவிற்கு அறிமுகம் ஆனது. சினிமா வந்த போது அதற்கெனக் கதைகளையும் கருக்களையும் தேடிக் கொண்டிராமல், ஏற்கெனவே மக்கள் பார்த்து ரசித்த நாடகங்களையே சினிமாவாக எடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர். அதனால் தொடக்க கால நடிகர்களில் பெரும்பாலோர் நாடகத்திலிருந்து வந்தவர்களாக இருந்தனர். பாலர் சபைகளில் பயிற்சி பெற்று நாடகத்தின் வழியாகச் சினிமாவிற்கு வந்து நீண்டகாலம் நின்றவர்கள் பலருண்டு. கடைசி எச்சமாகப் பலரைச் சொல்லலாம் என்றாலும் நாயக நடிகர்களில் சிவாஜி கணேசனைத் தான் அந்தப் போக்கின் உச்சம் எனச் சொல்ல வேண்டும். 

நடிகர்களைப் போல மேடை நாடகத்திலிருந்து திரைப்படத்துரைக்குள் வந்து தங்களை நிலை நிறுத்திய இயக்குநர்கள் அதிகம் இல்லை. பிரபலப் பத்திரிகையாளராக அறியப்பட்டுள்ள அரசியல் விமரிசகர் சோ, தனது அரசியல் அங்கத நாடகங்களான யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலை என்ன? , முகமது பின் துக்ளக் போன்றனவற்றைத் திரைப்பட மாக்கினார். அவையெல்லாம் நாடகமாகப் பார்த்த பார்வை யாளர்களின் வட்டத்தைத் தாண்டிக் கவனிக்கப்படவில்லை. ஆனால் இயக்குநர் கே. பாலச்சந்தர் மட்டும் விதிவிலக்கு. 

பாலச்சந்தரின் நாடகங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் வியாபார ரீதியாக லாபத்தினையும் சம்பாதித்துத் தந்தன. கே.பாலச்சந்தரின் முதல் கட்டப் படங்கள் அனைத்தும் நகைச்சுவை கலந்த தனிநபர் சோக நாடகங்கள் தான். சர்வம் சுந்தரம், அனுபவிராஜா அனுபவி , பாமா விஜயம், நூற்றுக்கு நூறு, நீர்க்குமிழி போன்ற திரைப்படங்கள் மேடையில் அரங்கேற்றிச் சென்னையின் நடுத்தர வர்க்கத்தின் கவனிப்பைப் பெற்ற நாடகங்களே. அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம், அவர்கள், அபூர்வ ராகம், நூல்வேலி போன்ற அவரது இரண்டாம் கட்டப் படங்களிலும் நாடகக்கூறுகள் தூக்கலாக வெளிப்பட்டுள்ளன நாடகங்களை சினிமாவாக ஆக்கும் ஆசை அவருக்குள் தணியாத தாகமாக இருந்ததை இன்னொரு உதாரணத்தின் வழியாகவும் உணரலாம். கோமல் சுவாமிநாதன் எழுதி மேடையேற்றிய தண்ணீர் தண்ணீர் நாடகம் தமிழகத்தின் பல மேடைகளில் - குறிப்பாக இடது கம்யூனிஸ்டுக் கட்சி சார்ந்த மேடைகளில் அதிகம் பார்வையாளர்களைச் சென்றடைந்த நாடகம். அந்நாடகத்தைப் பாலச்சந்தர் அதே பெயரில் சினிமாவாக எடுத்து அரசின் பரிசைக் கூடப் பெற்றார்.

1970களின் இறுதி ஆண்டுகளில் சென்னையை மையமாகக் கொண்டு கூத்துப் பட்டறை, பர்க்ஷா, என்ற இரண்டு குழுக்களும் மதுரையில் நிஜநாடக இயக்கம் என ஒரு குழுவும் தோன்றின. கூத்துப் பட்டறையின் தோற்றத்தில் நாடகாசிரியர் ந.முத்துசாமியும், நிஜநாடக இயக்கத்தின் பின்னணியில் பேரா.மு.ராமசாமியும் இருந்தனர். பரிக்ஷா குழுவைத் தோற்றுவித்த முன்னோடியாக இருந்தவர்களுள் முக்கியமானவர் பத்திரிகையாளர் ஞாநி. இம்மூன்று குழுக் களின் செயல்பாடுகளின் வீச்சால் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் எண்பதுகளில் பல நாடகக்குழுக்கள் தோன்றி நவீன நாடகச் செயல்பாடுகளை ஓர் இயக்கமாக மாற்றின. நாடகத் தயாரிப்புக்கான செலவைக்குறைத்தல், பார்வையாளர்களை நோக்கி நாடகங்களைக் கொண்டு செல்லுதல், புதிய சிந்தனை, புதியநாடக உத்தி, புதியரசனை,புதிய சமூகத்தின் தேவை என்ற கருத் தோட்டத்துடன் செயல் பட்ட நவீன நாடகக்குழுக்களின்¢ தாக்கம் தொண்ணூறுகளின் இறுதியில் குறைந்து பலமிழந்தன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அவற்றின் செயல் பாடுகள் திசை மாறி விட்டன.

மாற்று நாடகங்களையும் மாற்றுச் சிந்தனைகளையும் முன் வைக்க விரும்பி உருவாக்கப் பட்ட நவீன நாடகக் குழுக்களின் செயல்பாடுகள் மைய நீரோட்டத்தின் பலத்தினால் காணாமல் போய்விட்டன. நவீன நாடகக் காரர்களில் பலர் திரைப்படத்துறையின் கதவுகளைத் தட்டிச் சின்ன சின்ன வேடங்களை ஏற்று நடிக்கும் நடிகர்களாக உலாவந்து கொண்டிருக்கின்றனர். நிஜநாடக இயக்கத்தைத் தோற்றுவித்த பேரா.மு.ராமசாமி ஒரு பாடலின் முதல் அடியை எடுத்துக் கொடுக்கும் வயதானவர் வேடத்திலும்(பருத்தி வீரன்), ஒரு சாதித்தலைவரின் அடியாட்களில் ஒருவராகவும் (சண்டைக்கோழி) நடிக்கும்படி நேர்ந்துள்ளது நவீன நாடக இயக்கத்தின் துயரங்களில் ஒன்று.

பெரும் பணச்செலவில் எடுக்கப்படும் திரைப்படத்துறைக்குள் நவீன நாடகத்தின் உறுப்பினர்கள் வெறும் நடிகர்களாக இருந்து மாற்றுச் சினிமாவையோ மாற்றுச் சிந்தனையையோ உருவாக்கி விட முடியாது. என்றாலும் அவர்கள் தங்களின் மாற்று முயற்சிகளைக் கைவிடுவதில்லை. தனது முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்தனைப் போல ஏதாவதொன்றைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். அதன் சமீபத்திய வெளிப்பாடாக பரிக்ஷா ஞாநியின் ஒற்றை ரீல் இயக்கம் வந்துள்ளது. வணிகப் படங்களுக்கு முன்னால் ஒற்றை ரீல் இயக்கத்தின் குறும்படம் ஒன்றை இலவசமாகக் காட்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சியும் கூட ஒரு வணிகச் சினிமா நிறுவனத்தின் உதவியோடுதான் செயல்படுத்தப்படுகிறது. 

எழுத்து - நாடகம் - சினிமா
திரைப்படத்தின் அடிப்படை வணிகத்தின் மேல் எழுகிறது என்பதால் வெகுமக்களைச் சந்திக்க வணிக நிறுவனங்களைச் சார்ந்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்றே சொல்ல வேண்டும்.மூன்று மணி நேரம் ஓடும் படத்திற்கு முன்னால் ஒற்றை ரீல் இயக்கத்தின் குறும் படம் ஒன்றைக் காட்டுவதற்குப் பிரமிட் & சாய்மீரா நிறுவனம் முன் வந்துள்ளது. தமிழகத்தின் முப்பது நகரங்களில் முக்கியமான திரை அரங்குகளை எடுத்து நடத்தும் பிரமிட்& சாய்மீரா நிறுவனம் ஞாநியின் ஞானபானு அமைப்புடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி முதல் குறும்படமான திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்ற படம் 28-12-2007 அன்று தமிழகம் முழுவதும் காட்டப்பட்டது.  அதன் வெளியீட்டு நிகழ்வில் ஒவ்வொரு நகரங்களிலும் அவரது நண்பர்களைக் கலந்துகொண்டு பேச அழைத்தார். நான் நெல்லையின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான ராம்/ முத்துராம் அரங்கில் கலந்துகொண்டேன். இரண்டில் சிறியதான முத்துராமில் படம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்டதற்கு முன்பு நிகழ்வு. பின்னர் படம்.

படத்தில் மூலக்கதை தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவரான திலிப்குமாரின் நிகழ மறுத்த அற்புதம். இரண்டே பாத்திரங்களைக் கொண்ட - ஜேம்ஸும் திருமதி ஜேம்ஸும் அந்தக்   கதை    குடும்ப அமைப்பில் ஆண்- பெண் உறவில் ஏற்படும் அடிப்படையான ஒரு சிக்கலை விவாதத்திற்குள்ளாக்கும் கதை. மலட்டுத்தன்மையும் அதன் தொடர்ச்சியாக குடும்ப உறவில் உருவாகும் சிக்கலையும் பேசும் அந்தக் கதை ஒருவித ஓரங்க நாடகத்தன்மை கொண்டது. நான் அந்தப் பிரதியை ஓரங்க நாடகமாக மாற்றி எழுதியுள்ளேன்.  திருமதி ஜேம்ஸாக நடிகை ரோகினி ஏற்றிருந்தார்..ஜேம்ஸாக நடித்த நீல்சனை இதற்கு முன் அறிமுகம் இல்லை.  ஞாநியின் கலைமுயற்சிகளில் தூக்கலாக இருப்பது உணர்வு வழியான கடத்தல் என்பதாக இருப்பதில்லை. செய்தியைச் சொல்லிவிடவேண்டும் என்று தவிப்பே கூடுதலாக இருக்கும். இந்தப்படத்திலும் அதுதான் முதன்மைப்பட்டிருக்கிறது.

 அழகிய தமிழ் மகனையோ பில்லாவையோ பார்க்கச் செல்லும் ரசிகர்கள் திருமதி ஜேம்ஸ் எடுக்க வேண்டிய முடிவைப் பற்றியும் யோசித்து விட்டு வரலாம். திரைப்படத்தைப் பார்த்து விட்டு யோசிக்கச் சொல்லும் ஒற்றை ரீல் இயக்கம் தமிழ்நாட்டில் வளர வேண்டும்.
===============================================================
படத்திற்கான இணைப்பு: 
https://www.youtube.com/watch?v=5GKzFoyt4lw&ab_channel=ohpakkangal
நாடகப்பிரதிக்கான இணைப்பு: 
https://ramasamywritings.blogspot.com/2009/07/blog-post_09.html


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்