யதார்த்தா ராஜன் : மதுரைக்கு நல்ல சினிமாவைக் கொண்டுவந்தவர்

 


நேற்று (15/92020) முழுவதும் மதுரை நண்பர்களின் அஞ்சலிக்குறிப்புகள் வாசித்து வாசித்து மனம் தவித்துக்கிடந்தது.
முதல் தகவலாகப் பேராசிரியர் முரளி (மதுரைக்கல்லூரி)யின் நிலைத்தகவல் தான் சொன்னது. அவரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசியபிறகு ராஜனோடு பழகிய நாட்களையும் நட்பையும் அவரது வேலைகளையும் எழுத நினைத்து உட்கார்ந்த ஒவ்வொருமுறையும் எழுத முடியவில்லை.

எதை எழுதுவது ?எதை விடுவது ?  

இந்த உலகத்திற்கு நெருப்பைக் கொண்டுவந்த ப்ரமித்யூஸ் போல மதுரை மாநகரின் கலை ஆர்வலர்களுக்கு நல்லநல்ல சினிமாவின் அடுக்குகளைத் திறந்துகாட்டிய யதார்த்தா திரைப்படச் சங்கத்தின் ஒற்றைத்தூண் அவர்

உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை போட்டுக்காட்டிப் படம் பார்ப்பது எப்படி எனப் பேசிப் பேசிச் சலிக்காத யதார்த்தா ராஜன் என்னும் சேஷாத்ரி ராஜன் இனி இல்லை. கூட்டம் வராத ஒரு தியேட்டரை வாடகைக்கு எடுத்துப் படவிழா நடத்தும் ராஜனும் அவரது யதார்த்தா திரைப்படச் சங்கமும் 1980 - களின் மதுரை நவீன முகங்களில் ஒன்று.  ஒவ்வொரு ஆண்டும் அவர் நடத்தும் குழந்தைகள் திரைப்படவிழா இனி இல்லை. அவ்வப்போது திரையிடப்படும் படம் குறித்த விரிவான அறிமுகத்தோடு வரும் இணையக்கடிதங்கள் இனி வரப்போவதில்லை.  பார்த்தவுடனேயே என்னப்பா? எப்படி இருக்கெ.. ? பிள்ளைங்கெல்லாம் எங்க இருக்காங்க? என்று விசாரிக்கும் நீண்ட தாடியை இன்னொருதடவை தடவ முடியாது.

ராஜன் இல்லாத மதுரை....  

எனது இருபதுகளின் தொடக்கத்தில் அவரைச் சந்தித்தேன். அவரை முதன் முதலில் பார்த்தது மதுரை மிட்லேண்ட திரையரங்க வாசலில் என்றே நினைக்கிறேன் அல்லது அரசரடி வெள்ளைக்கண்ணுவாகக் கூட இருக்கலாம்.  திரைப்பட அரங்கின் பெயரைச் சொல்லி, அங்கே ஒரு திரைப்பட விழா நடக்கிறது போய்ப்பார் என்று சொல்லி அனுப்பியவர் ஆசிரியர் சாமுவேல் சுதானந்தா (அமெரிக்கன் கல்லூரி).  பெரிய தாடியோடு ஒருவர் இருப்பார்; அவரிடம் நான் அனுப்பி வைத்தேன் என்று சொல் என்றார். நான் போனபோது தாடிக்காரர் நின்றிருந்தார். சுதானந்தா அனுப்பி வைத்ததாகச் சொன்னேன்.  அப்படியா.. சுதா ஸ்டூண்டா? இங்கே வா.. என்று அழைத்துக் கையிலிருந்த துணிப்பதாகையின் ஒரு பக்கத்தைக் கொடுத்து தியேட்டரின் பக்கவாட்டுச் சுவரில் இருந்த ஆணியில் கட்டச்சொன்னார். இன்னொரு பக்கத்தைப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் சுற்றிக்கட்டினார். யதார்த்தா பிலிம் சொஷைட்டி வரவேற்கிறது என்று கட்டியவுடன் விழா களைகட்டத் தொடங்கியது போலச் சிலர் வந்தார்கள். வந்தவர்களுக்கு அவரே டிக்கெட் கொடுத்தார். என்னை டிக்கெட் எடுக்கவேண்டும் என்று சொல்லவே இல்லை. கொஞ்சநேரம் கழித்து டிக்கெட்டுகளை என்னிடம் கொடுத்துவிட்டு "வர்றவங்களுக்குக் கொடு; எனக்கு உள்ள கொஞ்சம் வேலை இருக்கு" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார். வேறு எதுவும் விசாரிக்காமலேயே, என்னை யதார்த்தாவின் உறுப்பினராக ஆக்கிக்கொண்டார்.

அதன் உறுப்பினர் அட்டை என்று ஒன்றைத் தருவார்; உடனே பணம் தரவேண்டும் என்றெல்லாம் வலியுறுத்த மாட்டார். கையில் பணம் இருக்கும்போது தருவதை வாங்கிக் கொள்வார். இருபது வயது இளைஞனாகக் கல்லூரியின் கடைசி ஆண்டில் இருந்த போது தொடங்கிய பழக்கம், முப்பது வயதில் புதுவைக்குப் போகும்வரையிலான பத்தாண்டுகளில் (1979-89) எவ்வளவு படங்களைக் காட்டியிருப்பார் ராஜன். எத்தனை வகையான சினிமாக்களைப்பற்றிப் பேசியிருப்பார். எத்தனை பேரை அழைத்துவந்து சினிமா ரசனை வகுப்புகளை நடத்தியிருப்பார். மதுரை மருத்துவக் கல்லூரிக்கருகில் இருந்த இந்திய மருத்துவக்கழகம் ( IMA HALL) சதீஷ் பகதூரும் நாயரும் புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டிலிருந்து வந்து வகுப்பெடுத்தார்கள். அமெரிக்கன் கல்லூரியின் பிலிம் கிளப்பிற்குப் படப்பெட்டியோடும் புரொசக்டரோடும் வருவார். மதுரையிலுள்ள கல்லூரிகள் மட்டுமல்லாது பக்கத்திலிருக்கும் கல்லூரிகள்,  பள்ளிகள் என அழைக்கக் கூடிய இடங்களுக்கெல்லாம் சினிமாவைக் கொண்டுபோனவர்.

******

அப்போதெல்லாம் வாரம் ஒருமுறையாவது அவரைச் சந்தித்துவிடுவேன். சினிமாவிற்காக மட்டுமாக இல்லை. நிஜநாடகச் செயல்பாடுகளுக்காகவும் அவரோடு சந்திப்பு நடக்கும். நவீன சினிமாவோடு நெருங்கிய உறவுடையதாக நாடகச் செயல்பாடுகளையும் அரசியல் செயல்பாடுகளையும் கருதிய ராஜன் மதுரையில் நடக்கும் எல்லாவற்றோடும் தன்னை இணைத்துக்கொண்டவர். மு.ராமசுவாமியோடும் அவரது துணைவியார் செண்பகத்தோடு ராஜனுக்கிருந்த நட்பும் உறவும் நிஜநாடக இயக்கத்தின் வேலைகள் பலவற்றில் ஈடுபடச் செய்தது. வீதி நாடகங்கள் போட்டுக்கொண்டிருந்த நிஜநாடக இயக்கம் மேடை நாடகங்களுக்குப் பழக்கமான போது நடிகர்களாக இல்லாமல் பின்னரங்க வேலைகளுக்கென்று சிலர் தேவைப்பட்டனர். எல்லாவகையான பொறுப்பையும் தயங்காமல் செய்தவராக ராஜன் இருந்தார். ஒத்திகைக்குத் தேநீர், வடை வாங்கிவருவதில் தொடங்கி பொருட்கள், துணிமணிகள் வாங்குவது, பராமரிப்பது என எதனையும் வேலை என்று பார்க்காமல் செய்வார். அவர் தங்கியிருந்த தனிப்பயிற்சிக் கல்லூரியின் விடுதிக்கு எப்போதாவது போவதுண்டு. அதன் அறையொன்றின் மூலையில் சுருண்டு  படுத்துக்கிடந்த ஒருவரைக் காட்டி அவர் யாரென்று தெரியுமா? என்று கேட்டார் ராஜன். தெரியாது என்று சொன்னபோது ‘அவர் தான் ஜி.நாகராஜன்’ என்று சொல்லிவிட்டு அவரது வாழ்க்கையைச் சொன்னவர் ராஜன் தான். அதற்கு முன் ஒன்றிரண்டு கதைகளை வாசித்துப் பெயர் மட்டுமே தெரியும்.

ராஜனின் அந்தக் கால வாழ்க்கையும்கூட ஒருவிதமான தனியனான வாழ்க்கைதான். அவரது குடும்பம் பற்றி எதுவும் சொன்னதில்லை. திருமணம்கூடச் செய்து கொள்ளவில்லை. என்னைவிட பத்துவயதாவது மூத்தவராக இருப்பார். எனக்குக் குழந்தைகள் பிறந்து பள்ளிக்குப் போன காலத்தில் தான் திருமணம் செய்துகொண்டார். ஒருவித நாடோடித்தனமான வாழ்க்கை மீது கொண்டிருந்த ஈடுபாடு எப்படி முடிவுக்கு வந்தது என்று தெரியாது. குடும்ப வாழ்க்கை தொடங்கிய பின்னரும் கூட நட்பு, சினிமா, நாடகம், அலைச்சல் எனத் திரிந்த மனம் அவருடையது.

மதுரைப் பல்கலைக்கழகத்தில் கல்வி ஒளிபரப்புக்காகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்புக் கூடமாக ஒலி ஒளிவள மையம் (AVRC) ஒன்றை முதலில் தொடங்கியபோது அவரைப் பல்கலைக்கழகம் சிறப்பு அழைப்பாளராக உள்வாங்கியது. அதுவே பின்னர் கல்வி ஒளிபரப்புக்கான பல்தொடர்பு வளமையமாக (EMRC) மாறியபோது நிகழ்ச்சித் தயாரிப்புக்குப் பொறுப்பான தயாரிப்பாளர்/ பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலத்தில் நான் புதுவையில் இருந்தேன். அவர் மதுரைப் பல்கலைக்கழக நிர்வாகத்தோடு முரண்பட்டுக்கொண்டு போராட்ட மனநிலையில் இருந்தார். அதனால் வழக்கம்போல வெளியே சினிமா ரசனையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டினார்.

********

நான் வார்சாவில் இருந்தபோது நவீன சினிமாவின் உச்சமான படங்கள் எடுத்த நாடு என்று சொல்லி படங்கள் பார்ப்பதோடு, சினிமாக்காரர்களையும் சந்திக்கச் சொல்லிக் கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார். போலந்தின் சினிமா நகரான ஊஜ் போய்விட்டு வந்த கதையைத் தொலைபேசியில் அழைத்துப் பேசிய நாட்கள் நினைவில் வருகின்றது. இங்கே இணையம் நல்ல வேகமாக இருக்கிறது. அத்தோடு இணையத்தில் பல படங்களைத் தரவிறக்கம் செய்யத்தடை இல்லை; அவற்றை உனக்காகத் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன் என்று சொன்னபோது அதற்காகக் காத்திருக்கிறேன் என்றார். என்னுடைய எண்ம வன் தட்டிலிருந்த 50 -க்கும் மேற்பட்ட படங்களைப் பிரதி எடுப்பதற்காக நெல்லைக்கு வருவேன் என்றார். அந்த நாள் தள்ளிக்கொண்டே போனது. ஆனால் அவரது வருகையைப் பயன்படுத்தி ஒரு சினிமா ரசனை வகுப்பை நடத்திவிடலாம் என்று திட்டமிட்டுத் தொடர்பியல் துறையோடு இணைந்து மூன்றுநாள் பட்டறை ஒன்றை நடத்தினேன். மூன்றுநாளும் அவர் ஒருவரே ஆசிரியர். நான் மூன்று நாளும் தொடங்கிவைப்பதோடு முடித்துக்கொள்வேன். ஒவ்வொரு படத்தின் நுட்பங்களையும் மாணாக்கர்களோடு விவாதித்த பாங்கும் ஆர்வமும் தீராத காமத்தின் பாற்பட்டது.

****


அவரும் நானும் நெருக்கமாக உணர்ந்த நாட்களாகச் சொல்ல வேண்டியவை அந்தப் பத்துநாட்கள் தான். மதுரையிலிருந்து ரயிலில் கிளம்பி தில்லிக்குப் போய்விட்டுத் திரும்பிய அந்தப் பயண நாட்களில் எடுத்த படங்களையே இங்கே தந்துள்ளேன். புதுடெல்லியின் ராஜபாட்டைக்குப் பக்கத்திலிருந்த புல்தரையில் ஒருக்களித்துப் படுத்திருந்த என்னைத் தன் காமிராவில் படம் பிடித்துவிட்டுக் கூப்பிட்டுக் காட்டினார். பின்னாலிருக்கும் இந்தியாகேட் நினைவில் இருக்கும் என்பதால் அதே பின்னணியில் அவரை நிறுத்தி ஒரு படம் எடுத்தேன். எடுத்த ஆண்டு 1985. ஜனவரி முதல் வாரத்தில் ஒருநாள். மதுரை நிஜநாடக இயக்கத்தின் துர்க்கிர அவலம் பெங்களூரில் நடந்த தென்மண்டல நாடகவிழாவில் தேர்வுபெற்று தேசிய நாடகவிழாவில் கலந்துகொள்ளப் போனது. நாட்டின் தலைநகரில் புகழ்பெற்ற நாடக அரங்கான கமானி ஆடிட்டோரியத்தில் மேடையேற்றம் கண்ட நாளுக்கு   பிறகு டெல்லியைச் சுற்றிப் பார்த்தபோது எடுத்த படம்.

நான் துர்க்கிர அவலத்தில் ஒரு நடிகன் என்பதோடு, அரங்கப் பொருட்களின் பொறுப்பாளரும் கூட. குழுநிர்வாகப் பொறுப்பு ராஜனுடையது. ஆனால் இருவரும் அவரவர் வேலையை மட்டும் செய்வதில்லை. என் வேலையை அவரும் அவர் வேலையை நானும் மாற்றிக் கொள்வோம். நாடக நடிகர்களுக்கான மானியவிலை டிக்கெட்டில் பயணம் செய்யவேண்டும் என்பது சங்கீத் நாடக அகாடெமியின் விதி. அதற்குமேல் உள்ள கட்டணத்தை அவர்கள் தரமாட்டார்கள். நாடகக் குழுவிற்கான சிறப்புச் சலுகையைப் பெற வேண்டுமென்றால் தமிழ்நாட்டு இயல் இசை நாடகமன்றத்தில் பதிவு செய்துகொண்டு குழுவினர் பெயரைத் தந்து அங்கீகாரம் பெறவேண்டும். குழுநிர்வாகி என்ற வகையில் அவர் தான் செய்ய வேண்டும். ஆனால் சென்னைக்கு டிக்கெட் போட்டு என்னை அனுப்பினார்கள் மு.ராமசுவாமியும் ராஜனும். எனக்கு அதுதான் தனியாகச் செல்லும் முதல் சென்னைப்பயணம். 

அதனைத் தொடர்ந்து நீண்ட பயணமாக அமைந்த புதுடெல்லிக்குப் போன அந்தப் பயணம் திகில் நிறைந்தது. ஒருவாரத்திற்கு முன்புதான் போபால் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் ரயில்கள் நிறுத்தப்பட்டுத் திரும்பவும் தொடங்கிய ஒன்றிரண்டு நாட்களில் எங்கள் பயணம். நள்ளிரவில் ரயில் போபாலைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட து. போபாலை நெருங்க நெருங்க ஒவ்வொருவருக்கும் அடிவயிறு கலங்கியது. ராஜன் இரண்டு தடவை கழிவறைக்குச் சென்று திரும்பினார். உயிர் போகும் வதை ஒன்று காத்திருக்கிறது என்ற நிலையில் மனிதர்கள் எவ்வாறு எதிர்கொள்வார்கள் என்பதைக் காட்டிய பயணம் அது.  திரும்பவரும்போது அந்த அச்சமும் பயமும் இல்லை. போபாலைப் பார்த்தபடி வந்தோம்.

திரும்பும்போது ஸ்ரீரங்கம் காவேரிப் பாலத்தின் மீது ரயில் தடதடத்துப் படபடத்தது. அந்த அதிர்வில் நான் எழுந்துவிட்டேன்.  ராஜன் எனக்கு முன்னரே எழுந்துவிட்டார். தனது தொளதொள சட்டைப்பைக்குள் கையைவிட்டுச் சில்லறைகளை அள்ளிக் காவேரியின் தண்ணீருக்குள் வீசினார். அவருக்குள் இருந்த நம்பிக்கையின் விசும்பைக் காட்டிய அந்தக் கணத்தை ஏற்றுச் சிரித்துவிட்டு ‘நீ சேஷாத்ரி ராஜன் இல்லையா?’ என்று சொன்னேன். ஆமாம் அதுவெல்லாம் அப்படித்தான் என்றார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்