பாரதியென்னும் சி. சுப்ரமணிய பாரதி


31.08.2000 இல் திரையரங்கிற்கு வந்து விட்ட பாரதியை 12.09.2000 இல் பார்த்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 11.09.2000 அன்று அம்ஷன்குமார் இயக்கத்தில் வந்திருந்த சி. சுப்ரமணிய பாரதியைப் பார்த்து விடும் வாய்ப்பொன்றிருந்தது. நான் பணி செய்யும் பல்கலைக்கழகம் எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தைத தத்தெடுக்கவும், எட்டையபுரத்தில் “பாரதி ஆவணக்காப்பகம்“ ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு, பாரதி நினைவு நாளில் (11, செப்டம்பா்) விழாவொன்றை நடத்தியது. அந்த விழாவின் ஒரு பகுதியாக அம்ஷன் குமாரின் சி. சுப்ரமணிய பாரதி காட்டப்பட்டது. அன்றும் அதற்கடுத்த நாளும் எனது மாணவிகள் மாணவா்களுடன் சி. சுப்ரமணிய பாரதியையும், ஞான. ராஜசேகரன் இயக்கிய “பாரதி“ யையம் பார்த்துவிடுவதாகத் திட்டம்.
அம்ஷன்குமாரின் படம் விவரணப்படம். ஞான. ராஜசேகரனின் படம் கதைப்படம். இரண்டிற்குமான வேறுபாடுகளை அறிதல் இங்கு முதன்மையான நோக்கம் அல்ல என்றாலும் அதையும் பேசிக் கொள்ளலாம். திரைக்கதையென எதையும் எழுதித் திட்டமிடாமல் எடுத்துத் தொகுக்கும் திரைப்படம் விவரணப்படமாக அறியப்படும் சாத்தியங்கள் உண்டு. இந்த வரையறை எல்லாவகையான விவரணப் படங்களுக்குமானதல்ல. திடீரென்று நிகழும் ஒரு சம்பவத்தை விவரணப் படமாக்குவதில் மட்டுமே இவ்வாறு திரைக்கதையை உருவாக்கும் சாத்தியங்கள் உண்டு. ஒரு நிறுவனத்தைப் பற்றியோ, ஒரு நடனத்தைப் பற்றியோ விவரிக்கும் விவரணப்படம் திரைக்கதையின் வழியாகவும் எடுக்கப்படலாம். திரைக்கதையை எழுதிக் கொள்ளாமலும் எடுக்கலாம். பாரதி மாதிரியான கடந்த கால மனிதா்களைப் பற்றிய படங்களிலும் இவ்விரு சாத்தியங்களும் உண்டு. விவரணப்படங்களில் அப்படத்தின் தொகுப்பாளர் (Editor) நல்ல திரைக்கதை ஆசிரியரின் வேலையைச் செய்பவராக இருக்கிறார்.

இந்திராபார்த்தசாரதியின் திரைக்கதையின் மேல் உருவாக்கப்பட்டுள்ள அம்ஷன்குமாரின் படம், பாரதி குறித்த அனைத்து ஆவணங்களையும் நம்முன் விரிக்கிறது. ஆண்டு வரிசைப்படியும் அவன் பெயா்ந்த ஊா்களின் வரிசைப்படியும். எட்டயபரம், திருநெல்வேலி, காசி, எட்டயபுரம், மதுரை, சென்னை, கல்கத்தா, புதுச்சேரி, கடையம், சென்னை எனக் கவனமாக வரிசைப்படுத்தப்பட்டு பாரதியின் ஈடுபாடுகள், பணிகள், தொடா்புகள், சந்திப்புகள் என ஒரு நபரின் வாழ்க்கை வரலாற்று விவரங்கள் தரப்படுகின்றன. இடையிடையே ஞானக்கூத்தன் என்கிற கவிஞா், ராஜம் கிருஷ்ணன் என்கிற நாவலாசிரியா், வ.கீதா என்கிற சமூகவியல் ஆய்வாளா் ஆகியோர் பாரதியைப் பற்றிய தங்கள் கருத்துகளை அல்லது பாரதிமீதான தங்கள் ஈடுபாட்டைக் கூறுகின்றனா். பாரதியோடு நேரடிப் பழக்கம் கொண்ட ரா. அ. பதம்நாபனும், கடையத்தில் பாரதியோடு சிறுவனாய்ச் சுற்றித் திரிந்த ஒருவரும் தங்கள் நினைவுகளை விவரிக்கின்றனர்.

அம்ஷன்குமாரின் படத்துக்கான தரவுகள் (Source) புகைப்படங்கள், ஓவியங்கள், கையெழுத்துப்பிரதிகள் அச்சுப்பிரதிகள், புழங்கிய பொருட்கள் என்பனவற்றோடு அவரோடு தொடா்புடைய இடங்களும் மட்டுமே. படத்தில் அதன் நகர்வில் ஒரு உத்தி படம் முழுக்கப் பயன்பட்டுள்ளது. வாழ்க்கை நிகழ்ச்சிகளை அப்படியே சொல்லும் போது பழைய படத்தின் கறுப்பு x வெள்ளை, நிலைப்படம் (Still) ஆகியவற்றை கையாள்கிறது. மேல் விவரங்களையோ, கருத்துக்களையோ, அபிப்பிராயங்களையோ சொல்லும்போது சலனமாகவும் வண்ணங்களாகவும் (Movie and Colours) மாறிக்கொள்கிறது. இந்த உத்தி, விவரணப் படங்கள் உண்டாக்கும் சலிப்பை ஒரளவு குறைக்கப்படும் உத்தி. அதனோடு எல். வைத்தியநாதனின் இசையும் சோ்ந்துகொள்கிறது.

அம்ஷன்குமாரின் படத்தோடு ஞான. ராஜசேகரனின் படம் ஒத்துப் போகும். அம்சம் ஒன்றே ஒன்றுதான். இரண்டு படங்களிலும் இடம் பெறும் ஊா்கள் அதே ஊா்கள்; ஊா்கள் மட்டும்தான். அதிலும் ராஜசேகரனின் படத்தில் மதுரை, திருநெல்வேலி இடம் பெறவில்லை. ஒரு நபரின் வரலாற்றினைக் கதையாக்க அவை மட்டுமே போதுமானவைதான். அதன் மேல், கதையாக்குபவனின் நோக்கத்திற்கேற்ப, அந்த நபா் வாழ்ந்த வெளிகளில் நடந்த நிகழ்வுகளைத் தனது கற்பனையான காட்சிகள் மூலம் நிறைவடையச்செய்யலாம். ஞான. ராஜசேகரனின் பாரதி அவ்வாறுதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வுகள் பாரதியின் வாழ்க்கை நிகழ்வுகள்தான் என்று சொல்வதற்கோ, இவ்வாறெல்லாம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்வதற்கோ ஆதாரங்கள் எதுவும் இல்லை. இருக்கின்ற ஆதாரங்கள் அவனது படைப்புகள்தான். பாரதியின் கவிதைகள் மட்டுமல்லாது, அவனது கட்டுரைகள், கதைகள், கருத்துப்படங்கள் பத்திரிகை எழுத்துகள் என எல்லாம். இவைகள் எல்லாம் சேர்ந்து நமக்குள் தமிழ்ப் பார்வையாள – வாசக மனத்துக்குள் அல்லது மூளைக்குள் தங்க வைக்கப்பட்டுள்ள பாரதி பற்றிய சித்திரங்கள், இந்தப் படத்தின் சம்பவக் கோர்வைகளை, அவனது வாழ்க்கை சார்ந்த உண்மை நிகழ்வுகள் எனச் சுலபமாக நம்ப வைக்கும் வாய்ப்புகள் கொண்டவை.

இசைக்கு இளையராஜா, ஒளிப்பதிவுக்குத் தங்கா்பச்சான், படத்தொகுப்புக்கு லெனின், செல்லம்மாவாக நடிக்கத் தேவயானி என வா்த்தகச் சினிமாவின் தோ்ந்த கலைஞா்களின் ஒத்துழைப்பு இருந்தும், இடைவேளையில் வெளியே வரும் பார்வையாளனிடம் கவிந்திருப்பது அலுப்பும் சலிப்பும்தான். பாரதியாக நடித்துள்ள சாயாஜி ஷிண்டேயின் ஈடுபாட்டுடன் கூடிய நடிப்பையும் தாண்டித் தொற்றித் கொள்ளும் அலுப்புக்குக் காரணம் இயக்குநா் அளித்துள்ள ஏமாற்றங்கள்.

ஞான. ராஜசேகரனால், தனக்கு நன்கு அறிமுகமான ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாற்றைத் துண்டுதுண்டாகத்தான் சொல்ல முடிந்திருக்கிறது. அவரது படங்களைப் பெரும்பாலும் பார்த்திருக்கிறேன்; அவை ஒவ்வொன்றும் எனக்கு ஏமாற்றத்தையே தந்தன. தி. ஜானகிராமனின் பல தளங்களில் ஏதொன்றையும் தனது குவிமையமாக்காத மோகமுள், வாசிப்பில் தந்த சுவாரசியத்தைக் கூடத் தராமல் போனது. சினிமாவின் மொழிக்கேற்ற கதைப் பின்னலை உருவாக்கிக் கொள்ளாத முகம் தந்ததும் ஏமாற்றம்தான். அவ்விரண்டு படங்களிலும் இல்லாமல் போனது இயக்குநரின் படைப்பு நோக்கம்தான். தனக்கான “படைப்பு நோக்கம் இதுதான்” எனத் தெளிவுபடுத்திக் கொள்ளும் ஒரு இயக்குநரால் மட்டுமே, அது சார்ந்த மா்மத் தொனிகளை முதலிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த மா்மத் தன்மையே எல்லாவகையான பார்வையாளனையும் வசப்படுத்துவதற்கான அடிப்படையாக இருக்கிறது. இதனை முற்றிலும் நிராகரித்திருந்த அவரது முகம் ஒரு தோல்விப் படமாக முடிந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. பாரதிக்கும் அந்தக் கதிதான் என்பதை இடைவேளை வரையிலான படம் உறுதி செய்கிறது.

ஆனால், இடைவேளைக்குப் பின் படத்தில் ஒரு மாற்றம். இதுவரை பாரதியின் அறியப்பட்ட பிம்பமான மகா கவிஞன் என்ற தளத்திலிருந்து விலகும் மாற்றம். சில உறுதியான முடிவுகளை நோக்கிப் படத்தை நகா்த்துகிறது. ஒரு மணி நேரம் ஓடும் அம்ஷன் குமாரின் விவரணப்படம் தந்த பிம்பம் பாரதி ஒரு தேசியக்கவி என்பதுதான். தேசியக் கவியாகத் தன்னை நிலைநிறுத்தும் போக்கில், பெண்களின் முன்னேற்றத்திற்கும், சமூகக் கொடுமைகளை எதிர்த்தும் குரல் கொடுத்தவன் என்ற மரபான பார்வையே அந்தப்படத்தின் ஒட்டு மொத்த நோக்கம். ஞான. ராஜசேகரனின் பாரதி, அவனது “தேசியக்கவி” என்ற பிம்பத்தை அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை என்பதைக் குறிப்பாகச் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டுச் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அறிந்துள்ள “விடுதலைக்கவிஞன் பாரதி” என்ற பிம்பம் விலக்கப்பட்டு, தனது எழுத்துக்கும் சொந்த வாழ்க்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க முயன்று தனியனாக்கப்பட்டு, தோல்வியின் விளிம்பில் நின்ற படைப்பாளியாகப் பாரதி இப்படத்தில் பரிமாணம் பெற்றுள்ளான். இப்பரிமாணத்தை அழுத்தமாகச் சொல்வதற்காக, இதுவரைக் கண்டு கொள்ளப்படாத அவனது பரிமாணங்கள் படத்தில் விரிவான காட்சிகளாக ஆக்கப்பட்டுள்ளன.

இதற்கேற்ப பாரதியின் புதுவை வாழ்க்கையும், (நான்கு ஆண்டுகள்) கடைசிக்கால கடையம் வாழ்க்கையும் விரிவாக்கப்பட்டுள்ளன. சாதி வேறுபாடுகளைச் சாடும் போதும், அவ்வமைப்பு உருவாக்கியிருந்த விதிகளையும் சடங்குகளையும் மீறும்போதும் பாரதிக்கு அவன் சார்ந்த உறவினா்களும் சாதியினரும் எழுப்பிய தடைகளும் புறக்கணிப்புகளும் படத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன. அதே போல் பெண்களுக்கெதிரான மனோபாவத்தைக் கொண்டுள்ள சமூகத்தை அவன் உதாசீனம் செய்ய, அந்தச் சமூகம் அவனை உதாசீனம் செய்து, விரட்டியடித்தது என்று படம் அழுத்தமாகவே சொல்கிறது. மாற்றத்தை விரும்பாத அவா்களிடம் பாரதி, சமரசத்திற்கு உட்பட்டான் என்பதை விமரிசனமாக அல்லாமல் வேதனையுடன் சொல்கிறது.
இடைவேளைக்குப் பின்பு சில உறுதியான முடிவுகளை நோக்கிப் படம் நகரத் தொடங்கிய பின்பு, சினிமாவின் கூற்றுமுறையும் கூட மாறியுள்ளதைக் கவனிக்கலாம். அதுவரைத் துண்டு துண்டுகளாக மெதுவாக அடுக்கப்பட்ட நிகழ்வுகள், இடைவேளைக்குப் பின் வேகம் பிடித்துக் கொள்கின்றன. தரமான சினிமாவின் மொழி வேகமின்மை என்றுதான் பலரும் இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனா். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுகள்தான் மோகமுள்ளும் முகமும்; பாரதியின் முதல் பாதியும் கூட. ஆனால் பின்பாதி தனதாக்கிக் கொண்ட வேகமும், தெளிவான நோக்கமும் சோ்ந்து பாரதியின் வாழ்க்கையாக இதுவரை அறியப்பட்ட தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்குள் பார்வையாளா்களை அழைத்துச் செல்கின்றன. அந்த நுழைவு உண்டாக்கும் சோக உணா்வு, பாரதிமீதான இரக்க உணா்வாக மாறி, காலம் கவனிக்கத் தவறிய கலைஞன் புத்துயிர்ப்புப் பெறும் சாத்தியங்கள் எழுகின்றன. தேசியக் கவியாக அறியப்பட்ட பாரதியை முழுமையான சாதி எதிர்ப்புக் கவிஞனாகவும் பெண் விடுதலைக் கவிஞனாகவும் நிறுத்தியதில் ஞான. ராஜசேகரனுக்கு வெற்றியே கிட்டியுள்ளது.

காலச்சுவடு/ 2000

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்