இன்று களப்பலி நாள்:தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் 2017 இல் சிதைக்கப்பட்டது. சிதைத்தது தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதம்.

பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப்பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத கூட்டத்தின் முதல் அடையாளம் ஆனவர் அனிதா(அரியலூர், குழுமூர்)

பள்ளிக்கல்வியில் ஒருவர் கற்ற கல்விமுறையையும் தேர்ச்சிமுறையையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டுச் சிறப்புப்பயிற்சிகள் வழியாக, தே.த.நு.தே.(NEET)வை எதிர்கொண்டு இடம்பிடிக்கச் சொல்லும் இம்முறை, இந்தியாவிலிருக்கும் நகர்ப்புறச் சூழல் - கிராமப்புறச் சூழல் என்ற பாரதூரமான வேறுபாட்டையும், பணமுடையவர் - பணமற்றவர்கள் என்ற வேறுபாட்டையும் கவனத்தில் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டரசின் கல்வி வாரியப்பாடத்திட்டம், மைய அரசின் கல்வி வாரியம், மெட்ரிக் பாடத்திட்டக் கல்வி, முன்மாதிரிப் பள்ளிகளுக்கான பாடமுறை, ஓரியண்டல் கல்வி வாரியம், மாண்டிசோரி கல்வி வாரியம் என வேறுபட்ட பாடமுறையில் பாடங்கள் நடத்தப்படுகின்றன என்ற உண்மையையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. பல தலைமுறைகளாகக் கல்வியைப் பெற்றுக் கொண்டதன் வழியாகக் கிடைத்த உலக அறிவைப் பெற்று அமெரிக்கா போன்ற செழிப்பான நாட்டில் வாழும் இரட்டைக் குடியுரிமையுடைய இந்தியர்களின் பிள்ளைகளையும் ஒரு மலையோரக் கிராமத்தில் பத்துக்குப் பத்து குடிசையில் வாழும் குடும்பத்தின் முதல் தலைமுறைப் பிள்ளையையும் ஒன்றுபோலக் கருதும் நோக்கம் கொண்டது. இந்தியப் பரப்பு நிலவியல், சமூகவியல், பொருளியல், வாழ்வியல் எனப் பல தளங்களிலும் வேறுபாடுகளால் ஆனது. அதைக்களைய வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் கணக்கில் கொள்ளவில்லை. அதற்கு மாறாக ”அவையெல்லாம் இருக்கும்; கண்டுகொள்ள வேண்டியதில்லை” என்ற மனநிலையோடு இருப்பவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது இந்த நுழைவுத்தேர்வு.
இந்தியா ஒரேநாடு; இந்தியாவில் இருக்கும் எல்லாக் கல்வி நிறுவனங்களும் அனைவருக்கும் பொதுவானது என்ற கருத்தின்படி, கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குள் நகர்த்திய நாள் தொடங்கி, அதனையும் மறந்து மையப்பட்டியலில் இருப்பதாக நினைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கிய போதே இவையெல்லாம் நடக்கும் என்பதை ஊகித்திருக்கவேண்டும். தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்கள் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதியைக் கொண்டு உருவாக்கப்பெற்ற மருத்துவக் கல்லூரிகளிலும் தொழில் கல்லூரிகளிலும் பிற மாநிலங்களின் மாணவர்கள் நிரப்பப்பட இருக்கிறார்கள். அதைத் தடுக்கும்விதமாக மாநில உரிமையை நிலைநாட்டும் மாநில அரசுகள் இப்போது தேவை. நீதிமன்றம் முடிவுசெய்தால் நாங்கள் ஏற்போம் என்ற சட்டவாதத்தில் ஒதுங்கிக் கொள்ளாத ஆட்சியாளர்களின் தேவையை இந்தத் தேர்வை மையமிட்டு நடக்கும் நிகழ்வுகள் உறுதிசெய்கின்றன. நீதிமன்றங்களைவிட மக்களின் உறுப்பினர்களால் உருவாக்கப்படும் சட்டமன்றங்களுக்கே பொறுப்பு கூடுதல் என்பது உணரப்பட வேண்டும்.
கொள்கைப்படி எதிர்க்கிறோம் எனக் காட்டிக்கொண்டே அதனை எதிர்கொள்வதற்கான பாடங்களையும் பயிற்சி மையங்களையும் தொடங்கியது அரசு . அரசின் நிலைபாட்டை நன்குணர்ந்த வியாபாரிகள் ஓரடி பின்னால் வைத்து விட்டு மூன்றடி முன்னேறி அடித்து ஆடுகிறார்கள். பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுத்தால் தொழிற்கல்விக்கான போட்டிகளில் முன்னேறிவிடலாம் என்ற நிலை இருந்தபோது அதற்கான பள்ளிகளைத் தொடங்கியவர்கள் – கோழிப்பண்ணை வியாபாரிகள் - இப்போது தேசியத்தரத் தேர்வு ‘நீட் கோச்சிங்’ – மையங்களைத் தொடங்குகிறார்கள். அதற்கான விளம்பரங்களை முழுப்பக்கங்களில் பத்திரிகைகளில் வெளியிட்ட கல்வி நிறுவனங்கள் கல்விக்கட்டணத்தைத் தாண்டி பயிற்சிக்கட்டணங்களை வசூலிக்கின்றன.
பணம் இருப்பவர்கள் அவற்றில் சேர்கிறார்கள் என்று இந்தப் போக்கைக் கவனிக்காமல் விலகிப்போய்விட முடியாது. இந்தப் போக்கு நீட் தேர்வு மட்டும்தான் ஒரே பாதை என்ற மனப்பாங்கை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்தத் தேர்வில் நுழைந்து அதன் வழியாகச் சேரும் கல்வி மட்டுமே தரமானது என்ற நம்பிக்கை உருவாக்கப்படுகிறது. அனைவரும் மருத்துவராகி விடவேண்டும் என்ற போட்டியில் இறங்கும் போட்டியின் விளைவுகள் ஒட்டுமொத்த சமூகத்தின் – இளையோரின் மனப்பாங்கைக் குலைத்துவிடும். இந்த நம்பிக்கையும் மனப்பாங்கும் கல்வியின் பலதள அறிவையும் தேடுதல் முயற்சிகளையும் தடுத்துவிடும்.
அனிதா ஏற்படுத்திய அந்தத்துயரத்தின் பிரதிமைகளும் வடுக்களும் ஒவ்வோராண்டும் தொடர்கின்றன. தேர்வு முடிவுகள் வந்தபின் பலியெடுத்த தே .த. நு.தே. என்னும் குரூர நிகழ்வு இந்த ஆண்டு நடப்பதற்கு முன்பே தலைவிரிகோலமாக அரங்கேற்றத்தைக் காட்டிவிட்டது. தேர்வுக்குத் தயாரான நிலையில் எப்படி எதிர்கொள்வேன்; வெற்றி கிடைக்குமா? கிடைக்காமல் போனால் எனது பெற்றோர்களின் கனவை நிறைவேற்றாத நான் ஏன் இருக்கவேண்டும் என்ற கொந்தளிப்பு மனநிலையில் மூன்றுபேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலையில் பெண்பிள்ளைகளின் எண்ணிக்கையே தொண்ணூறு சதவீதம் என்பது கவனிக்கப்படவேண்டியத்.
இன்று தேசியதர மதிப்பீட்டிற்கான தேர்வுநாள். அடுத்து தேர்வு முடிவுகள் வரும் நாள் என ஒவ்வொருநாளும் இந்தத் தேர்வு உருவாக்கப் போகும் மன அழுத்தங்கள் உருவாக்கப்போகும் நெருக்கடியை நினைத்தால் மனம் பதைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசியத்தர மதிப்பீட்டிற்கான நுழைவுத்தேர்வு நடக்கும் ஒவ்வொரு நாளும் கொண்டாட்ட நாளாக இல்லாமல் களப்பலி நாளாக மாறுவது தடுக்கப்பட வேண்டும்.

"அடுதலும் தொலைதலும் புதுவதன்று
இவ்வுலகத்தியற்கை"
என்ற புறநானூற்று வரிகளைப் பண்டைத்தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொண்டு எல்லா நேரமும் போரில் ஈடுபட்டுக்கொண்டே இருந்ததுபோலக் காட்சிச் சித்திரங்களை எழுதிக்காட்டிய புறநானூற்றை முன்மாதிரிகளாகக் கொண்டவர்கள் நாம். அதையே கொண்டாடத்தக்கதாக நினைத்ததால், அப்புறக் கவிதைகளுக்குள் இருந்த போர்மறுப்புக் குரல்களைக் காண மறந்தவர்கள் நிகழ்காலத்தமிழர்கள். ‘பொய்கையும் தீயும் ஒன்று’ என வேதனைப்பட்ட கோப்பெண்டுவின் குரலை நாம் கேட்கவில்லை. ‘கடந்த மாதம் முழுவெண்ணிலாவின்போது எம் குன்றும், எம் தந்தையும் உடனிருந்தபோது இருந்த மகிழ்ச்சி, இந்த வெண்ணிலாவின்போது காணாமல் போய்விட்டது;எம்குன்றும் பிறர்கொண்டார், யாம் எந்தையும் இலமாய் ஆனோம்; காரணம் இடையில் நடந்த போர் எனப் போரைச்சாடிப் பின் வாடி வதங்கிய பாரிமகளிரின் குரல்களுக்குச் செவிகொடுத்ததில்லை.
அனிதாவின் மரணத்தையும் ஒவ்வோராண்டும் மருத்துவக்கனவோடு தயாராகித் தங்களின் இயலாமைக்குத் தங்களை மாய்த்துக்கொள்வதே ஒரேவழியென நினைக்கும் இந்தப் பெண்பிள்ளைகளை மறந்துவிட்டு நமது வீரத்தைப் பேசிக் கொண்டே இருக்கிறது தமிழ்ச்சமூகம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

தணிக்கைத்துறை அரசியல்

நவீனத்துவமும் பாரதியும்