தொல்காப்பியத் திணைக்கோட்பாடும் அகநெடும்பாடல்களும்
முன்னுரை:தொல்காப்பியப் பொருளதிகாரத்தை மையப்படுத்திச் சிந்திக்கும்போது அதன் முதன்மை நோக்கம் பாவியல் அல்லது கவிதையியல் என்பதற்கான வரையறைகளை உருவாக்குவது எனக் கருதத்தோன்றுகிறது. அக்கருத்தின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகின்றது. கருத்தரங்கின் பொதுப்பொருள் தொல்காப்பிய மரபும் செவ்வியல் (சங்க இலக்கியங்களும்) என்பதனை மனங்கொண்டு, தொல்காப்பியர் கூறும் திணைப்பொருள் மரபை நவீன இலக்கியக் கோட்பாடான நிலவியல் பண்பாட்டியலோடு தொடர்புபடுத்தி அமைகிறது இக்கட்டுரை. தொல்காப்பியம் மூன்று பொருட்களைக் கவிதையின் உள்ளடக்கமாகக் கூறியுள்ளது இக்கட்டுரை கருப்பொருளின் இடம் பற்றிய நிலையை விவாதிக்கிறது. கட்டுரை உருவாக்கிக் கொண்ட கருத்தியல் நிலைபாட்டைப் பொருத்திப் பார்க்கும் தரவுகளாகத் தமிழ்ச் செவ்வியல் கவிதைகளில் அகநெடும்பாடல்கள் இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகளாக அமைகின்றன. தொல்காப்பியரின் பாவியல் கோட்பாடு தொல்காப்பியம் ஒரு பாவிற்குள் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கைப் பொருளையும் அந்த பாவின் அர்த்தங்களையும் விளங்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை பொருளதிகாரத்தில் விளக்குகிறது. பொருளை அகப்பொருள், புறப்பொருள் என பிரித்துக் காட்டு...