நவீன நாடகங்கள்: மேடையேற்றப் பிரச்சினைகள்
உள்ளடக்கம் தான்ஆதாரமானது. பெரும் தடைகளை எதிர்த்து அங்கீகாரம் பெற்று
விட்டனவும்,பெறப் போராடிக் கொண்டிருப்பனவும் மட்டுமே நவீன என்பதில் அடங்கும்; பழைமைக்கு
நவீனத்தில் இடமே இல்லை என்ற வரையறையில் கூட நவீன உள்ளடக்கம் பற்றி மட்டுமே கூறியிருப்பதாக
நினைக்கிறேன். அப்படியானால் ‘நவீன வடிவம், நவீன மேடையேற்ற ரூபம் என்பவை என்ன..?
நீங்கள் நினைப்பது சரிதான். அந்த வரையறை உள்ளடக்கம் பற்றியதுதான். ஓரளவு மற்றவைகளுக்கும் பொருந்தக்கூடியதே.
இந்த நிலையில் தான் புரிதல் பிரச்சினை எழுகிறது என நினைக்கிறேன். முதலில்
மேடையேற்றத்தில் நவீனத்துவம் என்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.
நவீன மேடையேற்ற ரூபம்
என்பது காலம் ( time) இடம் (place) வினை
(action) என்ற மூவொருமை ( unities) களை நிராகரித்து விடுகிறது என்பதை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும். இந்த நிராகரிப்போடு, மேடையைப்
பார்வையாளனின் கண்களுக்கு முப்பரிமாண நிலையில் தரமுயல்கிறது. கற்பித யதார்த்தம் (
illusional reality), புனைவு யதார்த்தம் ( fictional reality) என்பதையும் தாண்டிப்
படைப்பாக்க யதார்த்தத்தை முன்னிறுத்துகிறது. இதன் மூலம் பார்வையாளனின் இருப்பை உணரச்செய்வதும்,
நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்கிற
உணர்வை உண்டாக்குவதும் சாத்தியம். இதற்காக நவீன நாடகக்காரர்கள் பல்வேறு ரூபங்களைக்
கையாளுகிறார்கள்.உடைகளில் , ஒப்பனைகளில், மேடையமைப்பில், மேடைப் பொருள்களில், மேடையை
நிராகரிப்பதில், ஒளி, ஒலியைப் பயன்படுத்துவதில், நடிகனின் அசைவுகள் முதலான எல்லாவற்றிலும்
அத்தகைய முயற்சிகளைக் காணலாம். நாடக முழுமையின் ஒட்டுமொத்த அர்த்தத்திற்கு இவையெல்லாம்
உதவ வேண்டும்; அதல்லாமல் விலகி நின்று வேறு அர்த்தத்திற்கு இட்டுச் செல்லக் கூடாது.
அத்துடன் கதை கூறல் முறை, இடையீடு செய்யும் குழுவினர் அல்லது கதாபாத்திரம் போன்ற சோதனைகளையும்
நவீன நாடகத்தில் காணலாம். இத்தகைய சோதனைகள் எல்லாம் ஏதோ திடீர் முளைப்பு என்று எண்ண
வேண்டியதில்லை. இந்தியப் பாரம்பரியக் கலைகளில் இருப்பவைகளின் நீட்சிதான். இடையில் ஏற்பட்ட
தொடர்பின்மையில் நமக்கு அவை அந்நியமாகப்படுகின்றன. ஒலி, ஒளி அமைப்புகள் வேண்டுமானால்
புதியவைகளாகப் படலாம். ஆனால் வண்ணங்களையும் , மேடைப் பொருட களையும், கைப்பொருட்களையும
( stage and hand properties), குறியீடுகளாகப் பயன்படுத்துவது நம்முடைய மரபின் தொடர்ச்சியே
அல்லாமல் வேறில்லை.
தெருக்கூத்து , கதகளி போன்ற பாரம்பரியக் கலைகளில் வண்ணங்களின் பயன்பாடு
பல்வேறு அர்த்தத் தளங்களில் உள்ளதை நாம் அறிவோம்.
வண்ண வேறுபாட்டால் மட்டுமல்ல, பல்வேறு
வித அடவு முறைகளினால் கூட அர்த்த தளங்கள் மாற்றப்படுவதைத் தமிழ் நாட்டின் தெருக்கூத்தில்
காணலாம். ஒரு அடவு மூலம் வட்டமடித்து , அஸ்தினாபுரத்திலிருந்து இந்திரப் பிரஸ்தத்திற்குச்
சென்றதாக நம்ப வைப்பது கூத்தின் இயல்பு. ‘விசுப்பலகை’ பிருமாண்டமான சிம்மாசனமாவதும்,
கையில் உள்ள துண்டுத் துணி ரதமாவதும் அதில் நடக்கும். இவற்றின் நீட்சியாகவே நவீன நாடகங்களின்
சோதனைகள் இருக்கின்றன. அதனை அறியாத நிலையிலும், பாரம்பரியக்கலையின் பங்களிப்போடு நாடக
வடிவமும் மேடையேற்ற ரூபமும் மாறியுள்ளன என்பதை உணராத நிலையிலுமே நவீன நாடகத்தைக் காணப்
பார்வையாளர்கள் வருகிறார்கள். வந்து பார்த்துவிட்டுப் ‘புரியவில்லை’ என்கிறார்கள்.
இப்படிச் சொல்வதால், இதையெல்லாம் தெரிந்து கொண்டபின் தான் , நவீன நாடகங்களைப் பார்க்க்
வரவேண்டுமா என்று கேட்கலாம். இதற்கு அப்படிப் பொருள் இல்லை. பார்வையாளன் தன்னைக் கொஞ்சம்
தயாராக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
புதிதாக மார்க்கெட்டில் வரும் ஒரு வீட்டு உபயோகப் பொருளைப் பற்றி - மிக்ஸி,
வாஷிங்மெஷின் பற்றி - எல்லாம் தெரிந்து கொள்ள முயல்கிறோமே அதே போன்று முயற்சி இருந்தால்
போதும். பொருளை உற்பத்தி செய்பவன் அதைப் பரிச்சயப் படுத்த எடுத்¢துக்கொள்ளும் அதே முயற்சிகளை
நவீன நாடகக்காரர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். பரஸ்பரம் கற்றுக் கொள்ளூதல் தான்
புரிதல் பிரச்சினையைத் தீர்க்கும். இந்தப் புரிதல் பிரச்சினையைத் தீர்ப்பதில் பத்திரிகை
விமரிசனங்கள், விவாதங்கள், கலந்துரையாடல்கள் அதிக அளவு உதவும்.
வீட்டு உபயோகப் பொருளான மிக்ஸியைப் பற்றி அறிந்து பின் வாங்குகிறோம் என்பது
உண்மைதான். அவற்றை நேரடியாகத் தெரிந்து கொள்ளலாம். ஒரு கம்பெனியின் ஒரு மிக்ஸியைத்
தெரிந்து கொண்டால் அதே மாடலில் தான் மற்றவை இருக்கும். ஆனால் நவீன நாடகம் பற்றிய புரிதல்
அப்படிப்பட்டது அல்லவே.. ஒவ்வொரு தயாரிப்பிலும் வேறுபாடுகள் இருக்குமே.. அத்தோடு மிக்ஸியைப்
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் , அம்மியையும் ஆட்டுக் கல்லையும் பற்றித் தெரிந்து
கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆனால் இப்போதைய நவீன நாடகம் பற்றிய புரிதலுக்கு , பழைய
விஷயங்களுக்கும் போக வேண்டியுள்ளதே…
நுகர்பொருளையும் கலைப்படைப்பையும்
ஒப்பிட்டதற்காக என்னை மன்னிக்க வேண்டும் . ஒரு கலைப்படைப்பும், நுகர் பொருளும் எப்படி
வேறுபடுகின்றன என்பதற்கான பதில் இதற்குச் சரியான விடையாகும் என நினைக்கிறேன். நுகர்பொருள்,
நுகர்வோரை எளிதில் தன்வசப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்படுகிறது. ‘எளிமையான நுணுக்கம் தான்; உபயோகிப்பது சுலபம்;
பலன் அதிகம் ‘ என்று விளம்பரப்படுத்தப் படும். அடிப்படையில் , நுகர் பொருள் இப்போதைய
மனிதனின் உடனடி மனநிலையைத் தூண்டுவதாக உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஆனால், கலைப்படைப்பின் நோக்கம்
உடனடி விற்பனையோ, மனநிலையோ அல்ல. பார்வையாளன் அல்லது கலைஞனின் ஆழ்மனத்தைத் தொடும் நோக்கம்
கொண்டது. அவனது இருப்பை உணர்த்துவதாக , கேள்விக்குள்ளாக்குவதாக , மாற்றத்திற்குத் தூண்டுவதாக
இருக்க வேண்டும். இதற்காக அவனது கருத்தியல் தளத்தைத் தொட அது முயல்கிறது. ஒருவனது கருத்தியல்
தளம் அவன் வாழும் நிகழ்கால சமூக , அரசியல் , பொருளாதாரப் பின்னணிகளால் கட்டமைக்கப்
படுகிறது. அதிலும் தற்கால மனிதனுக்கான பின்னணிகளின்
எல்லைகள் விரிந்து விட்டன. புவியியல் எல்லைக் கோடுகளும் உற்பத்தி சார்ந்து கட்டமைக்கப்
படும் அரசு (State ) என்கிற நிறுவனத்தின் தன்மைகளும் மாறிப் போய்விட்டன. இதனைச் சாதித்தது
தகவல் தொடர்பு வலைப்பின்¢னல்கள். அவை உருவாக்கும் கருத்தியல் தளம் இன்றைய மனிதனை- மனிதனின்
ஆளுமையை- அவனது இயக்கத்தைத் தீர்மானிக்கும் சக்தி¢யாக மாறி விட்டதை நாம் அறிவோம் .
இந்த வலைப்பின்னலின் ஊடாக அவனது பாரம்பரிய உறவுகளும் அவை சார்ந்து பிம்பங்களும் ஆட்டிப்
படைக்கின்றன. எனவே தான் நவீன நாடகத்தை - நவீன கலை வடிவங்கள் எதையும் புரிந்து கொள்ள
அவற்றின் முந்தைய வடிவங்களையும் அறிய வேண்டியதாகிறது. நேற்றின் தொடர்ச்சி இன்றில் இருக்கும்
என்பது கலையில் தவிர்க்க முடியாது.
கருத்துகள்