நான் அறிந்த மனிதர்களும் எனக்குத் தெரிந்த கதைகளும் நீங்கள் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்த நாவல் எது? என்ற கேள்விக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ”கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் ” என நான் சொன்ன போது எனக்கு வயது 21. நிகழ்கால அரசியல், பொருளாதாரச் சமூகச் சிக்கல்களைப் பேசும் விதமாகப் பாத்திரங்களை உருவாக்கி, அவற்றின் உளவியல் ஆழங்களுக்குள் செல்வதன் மூலம் வாசகர்களையும் உடன் அழைத்துச் செல்லும் தன்மையிலான எழுத்தே சிறந்த எழுத்து எனவும், நாவல் என்னும் விரிந்த பரப்பில் தான் அதற்கான சாத்தியங்கள் அதிகம் எனவும் எனக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களும், நான் படித்திருந்த இலக்கியத் திறனாய்வு நூல்களும் சொல்லியிருந்தன. ஆனால் அவை எதுவும் இல்லாத கோபல்ல கிராமம் எனக்குப் பிடித்த நாவலாக அப்போது தோன்றியதற்கு முக்கியக் காரணம் அதன் நிகழ்வுகளும், அந்நிகழ்வுகளில் இடம்பெற்ற பாத்திரங்களும் எனக்கு அறிமுகமானவர் களாகத் தோன்றினார்கள் என்பது மட்டும் தான்.