அழகர்சாமியின் குதிரை:வட்டார சினிமாவிலிருந்து இந்திய சினிமாவை நோக்கி:
புதுவகை சினிமாக்களைத் தமிழ்ப் பார்வையாளர்களுக்குத் தரும் முயற்சியில் திரைப்படப் படைப்பாளிகள் ஆர்வமோடு இருக்கிறார்கள் என்பதற்கு இன்னுமொரு அடையாளம் அழகர்சாமியின் குதிரை என்று சொல்லி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்க விரும்புகிறேன். தமிழின் பெருவாரியான சினிமா, திரும்பத் திரும்பச் சுற்றிச் சுழலும் ஒரு வகைச் சூத்திரக் கட்டமைப்பு சினிமா என்பதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை... எல்லாக் காலங்களிலும் காதல் தான் தமிழ்ச் சினிமாவின் கச்சாப்பொருள். அதிலிருந்து யாராவது ஓரிருவர் எப்போதாவது அத்திபூத்தாற்போல
விலகிச் சென்றுள்ளதை நாம் அறிவோம். அந்த விலகல்களை இருகை விரல்களைக் கொண்டே பட்டியலிட்டு விட முடியும். நான் பார்த்த வரையில் உன்னைப் போல் ஒருவன், அவள் அப்படித்தான், உதிரிப் பூக்கள், மறுபக்கம், கல்லுக்குள் ஈரம், மகாநதி, கன்னத்தில் முத்தமிட்டால், நான் கடவுள் போன்ற படங்கள் அப்படி விலகிச் சென்ற படங்கள். இந்த விலகல்களின் பின்னணியில் ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். திரைப்படத் தொழில்நுட்பம் தெரிந்தவர்களோடு எழுத்துக் கலைஞர்களும் இந்தப் படங்களில் இணைந்து பங்களிப்பு செய்திருந்தார்கள் என்பதுதான் அந்தக் குறிப்பு.தொழில்நுட்பம் எப்போதும் தனது உருவாக்கத்திற்குக் காரணமான முதலீட்டிற்குப் பங்கம் வராமல் இருக்க வேண்டும் என்ற நியதியைக் கடைப் பிடிக்கிறதென்றால், எழுத்துக் கலை தனது உருவாக்கத்திற்குக் காரணமான சமூக இருப்புக்கும், இயக்கத்திற்கும் பொறுப்புடை யதாகவும் பங்கம் வராமலும் பார்த்துக் கொள்ள விரும்புகிறது. அப்படி இருப்பதுதான் எழுத்துக்கலையின் நியதி. இவ்விரு நியதிகளும் இணைகின்ற போது பொறுப்பான சினிமா உருவாகும் என்பதற்கு ஓரளவு உத்தரவாதம் உண்டு. அழகர்சாமியின் குதிரையில் இவ்விரு நியதிகளும் - சினிமாத் தொழில் நுட்பம் தெரிந்த சுசீந்திரனும் எழுத்துக் கலையின் நியதிகள் அறிந்த பாஸ்கர் சக்தியும் சரிசமமாக இணைந்திருக்கிறார்கள்; அதனால் இந்தப் படம் முக்கியமான படமாக ஆகியிருக்கிறது கதை சொல்லிய விதம், கதை நிகழ்வுகளில் பாத்திரங்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பாத்திரங்களை ஏற்று நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர்கள், காட்சிகளுக்கான ஒலி மற்றும் இசைக்கோர்வை, ஒட்டுமொத்தப் படத்தின் வழியாகப் பார்வையாளர்களுக்கு உணர்த்தும் கருத்தியல் எனப் பல தளங்களிலும் இதுவரையிலான தமிழ்ச் சினிமாக் களிலிருந்து முக்கியமான வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது அழகர்சாமியின் குதிரை. அதனால் தமிழ்ச் சினிமா வரலாற்றில் அழகர்சாமியின் குதிரை முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொள்ளும் எனச் சொல்வதற்கு தயக்கம் எதுவும் இல்லை.
சமயம் சார்ந்த நம்பிக்கை ஒரு கிராமத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கிறது என்பதை இரண்டு அடுக்குகள் கொண்ட கதையாக எழுதிய பாஸ்கர் சக்தி அக்கதையைப் படமாக்க விரும்பிய இயக்குநர் சுசீந்திரனுக்குக் கதைவசனம் எழுதிக் கொடுத்த எழுத்தாளராக ஒதுங்கிக் கொள்ளாமல் உடன் வேலை செய்யும் துணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். தான் எழுதிய கதையின் பின்னணியாக அவர் மனதிற்குள் நினைத்திருந்த வெளியையும், அவ்வெளியோடு இணைத்துத் தங்கள் மன அமைப்பை உருவாக்கிக் கொள்ளும் மனிதர்களையும் திரையில் அசையும் பிம்பங்களாகத் தருவதற்குப் பாஸ்கர் சக்தியின் உடனிருப்பு அவசியம் என்பதை இயக்குநர் உணர்ந் திருக்கிறார். இந்த ஏற்பும் ஒத்துழைப்பும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான சினிமா ஒன்றைத் தருவதற்குப் பயன்பட்டிருக்கிறது; மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று.
சாகசங்கள் நிகழ்த்தும் நாயகர்களின் கதையைச் சொல்வதிலிருந்து விலகித் தமிழ்ச் சினிமாவை கிராமத்து வீதிகளின் புழுதிக்கும், வயல் வரப்புகளுக்கும் கால்வாய்களுக்கும் கொண்டு சென்ற பாரதிராஜா கூட ஒரு கிராமத்தின் கதையைச் சொல்லவில்லை. அதற்கு மாறாகக் கிராமத்தில் இருந்த அல்லது அந்தக் கிராமத்திற்கு வந்த ஒன்றிரண்டு மனிதர்கள் அல்லது அவர்களின் குடும்பங்களை மையப்படுத்தியே சினிமாவைத் தந்தார். அவரது சினிமாக்களின் தொடக்கம் கிராமங்களின் முக்கியமானவர்களைப் பற்றிய சினிமா அல்ல (16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் வரை) என்றாலும், பிந்திய சினிமாக்கள் பெரிய தேவர்களாகவும் பசும்பொன்களாகவும் மலைச்சாமிகளாகவும் முக்கியப் பட்ட மனிதர்களையே முன்னிறுத்தின. அவர் மட்டுமல்ல அவரைத் தொடர்ந்து கிராமங்களுக்குக் காமிராவோடு போன பல இயக்குநர்களும் நேர்மை, நடுநிலை தவறாமை, பெருந்தன்மை, வள்ளல்தன்மை, தனிமனித ஒழுக்கம் பேணும் குணம், ஒடுக்கப்பட்ட மக்களிடம் காட்டும் இரக்க குணம் என கிராமத்துக் கனவான்களின் நேர்மறைப் பக்கங்களை மட்டுமே காட்டினார்கள். சின்னக் கவுண்டர் களாகவும், நாட்டாமைகளாகவும், எஜமான்களாகவும், ஐயாக்களாகவும் அறியப் பட்ட இடைநிலைச் சாதிக் கனவான்களின் ஆதிக்க உணர்வை மறைத்துப் போற்றிப் பாடிய படங்களையே இங்கு மண்வாசனை சினிமாக்களாகப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போக்கிலிருந்தும் அழகர்சாமியின் குதிரை முற்றிலும் விலகிச் சென்று ஒரு வட்டார சினிமாவை அடையாளப்படுத்தியிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
அழகர்சாமியின் குதிரையில் எந்தவொரு மனிதனின் கதையும் சொல்லப்படவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு குதிரைகளின் கதைகள் சொல்லப்படுகின்றன. ஒன்று கடவுள் அழகர்சாமி பவனி வரும் மரக்குதிரை; இன்னொன்று வேட்டுச் சத்தத்தில் கயிறை அறுத்துக் கொண்டு மலையில் இருந்து ஊருக்குள் வந்து விட்ட மட்டக்குதிரை. மலைப்பிரதேசத்தில் பொதி சுமக்கும் மட்டக்குதிரையின் சொந்தக்காரன் பெயரும் அழகர்சாமி என்பதே கதைக்குள் இருக்கும் ரகசியம்.
மழையில்லாமல் ஊரில் ஏற்பட்டுள்ள வறட்சிக்கும், ஊர் மக்கள் பஞ்சம் பிழைக்கத் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு இடம் பெயர்வதற்கும் காரணம் பாதியில் நின்று போன திருவிழாவும், அழகர்சாமியின் வாகனமான மரக்குதிரை வெட்டுப்பட்டதுமே என நம்பும் ஊர்க்காரர்கள் எப்பாடுபட்டாவது திருவிழாவை நடத்திவிட நினைக்கிறார்கள். வறுமையிலும் திருவிழாவிற்கான வரிவசூல் நடத்திச் சித்திரா பௌர்ணமியன்று திருவிழாவை நடத்திவிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் கோயிலில் இருந்த அழகர்சாமியின் வாகனமான மரக்குதிரை காணாமல் போய்விடுகிறது. இந்த முறையும் திருவிழா நடக்கவில்லையென்றால் சாமி குத்தமாகி ஊருக்குப் பெருங்கேட்டினைக் கொண்டு வந்து சேர்த்து விடும் எனப் பதற்றத்தோடு - காவல்துறை, கேரள மாந்திரீகம் எனப் பல வழிகளிலும் மரக்குதிரையைத் தேடும் கிராமத்து மனிதர்களின் செயல்பாடுகள் ஒரு புறம். காணாமல் போன தனது குதிரை வரும் பௌர்ணமிக்குள் கிடைக்கவில்லை என்றால் நிச்சயமான தனது கல்யாணம் நின்று போகும் என்பதை விட, தனது அழகின்மையையும் பொருட்படுத்தாமல் நேர்மையான மனதை விரும்பி ஏற்றுக் கொண்ட அந்தப் பெண் செத்துப்போனாலும் போவாள் என்ற பதற்றத்தோடு தனது குதிரையை மீட்கப் போராடும் மட்டக் குதிரையின் சொந்தக் காரனான அழகர்சாமியின் பதற்றமும் முரட்டுத்தனமும் நிரம்பிய செயல்பாடுகள் இன்னொரு புறம். இவ்விரண்டையும் இணைப்பது சித்திரா பௌர்ணமியன்று சிக்கல் இல்லாமல் நடந்து முடிவது போலத் தோன்றும் திருவிழா தான். திருவிழா நடந்து கொண்டிருக்கும் போதே தான் விரும்பிய சாமியாடியின் மகளைக் காவல் நிலையத்தில் வைத்துக் கல்யாணம் செய்து கொண்ட தனது மகனின் செயலால் திரும்பவும் சாமி குத்தம் ஏற்படப் போகிறது எனக் கூக்குரல் இடும் பஞ்சாயத்துத் தலைவரின் உடல் நனையும் விதமாக மழை பெய்வதாகப் படம் முடிகிறது. பெய்யும் மழை காதல் கல்யாணத்தை- தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணை ஆதிக்க சாதிக்காரன் கல்யாணம் செய்து கொண்டதை-சாமி குற்றமாகக் கருதவில்லை எனக் குறிப்பால் உணர்த்துவதுபோல படம் முடிகிறது. இந்தக் குறிப்பான முடிவு இயக்குநரின் கருத்தியல் வெளிப்பாட்டு அடையாளம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
#########################
தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையோரத்துத் தேனி மாவட்டம், மல்லையாபுரம் கிராமத்தில் முப்பதாண்டுகளுக்கு முன்னால் ஆதிக்கசாதிப் பஞ்சாயத்துத் தலைவரின் மகன், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமியாடியின் மகளைக் காதலித்துத் தந்தையின் எதிர்ப்பை மீறிக் காதலை நிறைவேற்றினான் எனச் சுருக்கிவிடக் கூடிய கதை அம்சம் இந்தப் படத்தில் இருந்த போதிலும் அதனை மையப்படுத்தி நிகழ்வுகளை அமைக்காமல் காணாமல் குதிரை வாகனத்தை மையப்படுத்தி நிகழ்வுகளை அமைத்ததின் மூலம் பல பரிமாணங்கள் கொண்ட திரைப்படமாக ஆக்கப்பட்டிருப்பதே இப்படத்தின் சிறப்பு. காணாமல் போன தனது குதிரையைத் தேடி வந்த அழகர்சாமி மல்லையாபுரத்தில் தங்க நேர்வதும், அவன் மீது இரக்கங்காட்டும் விதவைப் பெண்ணின் பாசமும் ஒருசில காட்சிகளே இடம் பெற்றாலும் கிராமத்து வாழ்க்கைக்குள் இருக்கும் அசலான உணர்வுகளின் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. அதே போல் அழகர்சாமிக்கும் குதிரைக்கும் இடையே உள்ள நீண்ட உறவைக் காட்ட ஒரு பாடல் பாடப்படும் காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ள உத்தியும் குறிப்பிட வேண்டிய ஒன்று. காதல் காட்சியும் நகைச்சுவைக்காட்சியும் இருந்தால் தான் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என்ற பொது மனோபாவத்தை நிரப்புவதற்காகப் பஞ்சாயத்துத் தலைவரின் மகனும், சாமியாடியின் மகளும் காதலர்கள் என்பதைக் காட்டப் பாடல் காட்சி சேர்க்கப் பட்டுள்ளது. அதுபோல மலையாள மாந்திரீகன் கிராமத்திற்குள் வந்தான் எனக் காட்டுவதன் மூலம் நீளமான நகைச்சுவைக் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் இந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றியடையத் தேவையான அம்சங்கள் என இயக்குநரும் தயாரிப்பாளரும் கருதியிருக்க வாய்ப்புண்டு. புதுவகை சினிமாவிற்கு இவையெல்லாம் தேவையில்லை என்று மட்டுமே சொல்ல முடியும். படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் சரியாகச் செய்துள்ளனர் எனச் சொல்ல முடியாது. நடிப்பனுபவமில்லாத பலரின் உடல் மொழி செயற்கையாக இருக்கிறது. ஆனால் குதிரைக்காரன், அவனைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராகும் சரண்யா மோகன், சாமியாடி, அவளின் மகளாக நடித்திருக்கும் பெண், போலீஸ் மற்றும் இன்ஸ்பெக்டராக நடித்திருப்பவர்கள், எனச் சிலர் தேவையான நடிப்பைத் தரவே செய்துள்ளனர்.
முப்பதாண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த கதையை அங்கேயே நிறுத்திக் கடந்த காலக் கிராமம் ஒன்றைப் பாருங்கள் எனச் சொல்வது போலப் படத்தை முடிக்காமல் நிகழ்காலத்தின் வழியாகப் பார்வையாளர்களைப் பார்க்கும்படி ஏதாவதொரு உத்தியைக் கையாண்டிருக்கலாம் எனச் சொல்லத்தோன்றுகிறது. அப்படிச் செய்திருந்தால் சமகாலப் பொருத்தம் கொண்ட படமாக ஆகியிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கக் கூடும்.
########################## ##########################
இதுவரை மூன்று படங்களைத் தந்துள்ள இயக்குநர் சுசீந்திரன் இரண்டு படங்களில் குறிப்பான வட்டாரத்தைப் பின்னணியாக்கியுள்ளார். முதல் படமான வெண்ணிலா கபடிக் குழுவின் பின்னணியாகக் காட்டப்படும் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, ஒட்டன் சத்திரம் பகுதியில் ஒவ்வொரு கிராமத்திலும் கபடிக் குழுக்கள் செயல்பட்டதை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல்லில் பள்ளி மாணவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். கபடி விளையாட்டு சார்ந்த வட்டார அடையாளம் ஒன்றைத் தரவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் அந்தப் பகுதிக்குத் தான் தர முடியும். அதேபோல பெருமாளைக் குதிரை வாகனத்தில் ஏற்றி ஆற்றில் இறக்குவது பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த தேனி வட்டாரத்தின் பண்பாட்டு அடையாளம் என்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அறிவார்கள். மதுரை நகரில் பெருந்திரள் கூடி அழகரை வைகை ஆற்றில் இறக்கும் அதே நேரத்தில் சித்திரா பௌர்ணமியன்று கிராமங்களில் இருக்கும் பெருமாள்கள் குதிரை வாகனங்களில் ஏறி அந்தந்த ஊர்களில் இருக்கும் சிற்றாறுகளில் இறக்கப்படுவார்கள். இறங்கும் போது பெருமாள் அல்லது அழகர் என்ன வண்ணத்தில் பட்டுடை உடுத்தி வருகிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டின் பலாபலன்கள் இருக்கும் என்பது கிராமிய நம்பிக்கை மட்டும் அல்ல. தினசரிச் செய்தித்தாள்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் நம்பிக்கையும் கூட. ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குறிப்பை நீங்கள் தினசரிகளில் வாசிக்கலாம். மதுரை மாவட்டம் முழுவதும் சித்திரா பௌர்ணமியன்று பெருமாள் கோயில்களில் சித்திரைத் திருவிழா நடப்பது நடைமுறை. பெருமாள் கோயில்கள் இல்லாத கிராமங்களில் அம்மன் கோயில்களில் சித்திரை திருவிழாவைப் போலவே சிறப்பான விழாக்களை சித்திரை கடைசி, வைகாசி மாதங்களில் நடத்துவார்கள். அப்படி நடத்துவதன் தொடர்ச்சியாக ஆனி, ஆடி மாதங்களில் நல்ல மழை பொழியும் என்பதும், ஆடிப்பட்டம் தேடி விதைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதும் அந்தக் கிராம மக்களின் நம்பிக்கையும் வாழ்க்கையும் ஆகும்.
மதுரை மாவட்டத்தின் பரி எடுப்பைப் படமாக்கியதன் மூலம் வட்டாரப் பண்பாட்டோடு கூடிய திரைப்படத்தை உருவாக்கியுள்ள சுசீந்திரன் அதன் வழியே இந்திய அடையாளத்திற்குள் நுழைந்துள்ளார் என்பதை இங்கே சுட்டிக் காட்ட வேண்டும். ஏனென்றால் இத்தகைய நம்பிக்கைகள் மதுரை மாவட்டத்தில் மட்டும் தான் இருக்கின்றன என்பதில்லை, மழையையும் மழையால் நடக்கும் விவசாயத்தையும் நம்பி இருக்கும் இந்தியக் கிராமங்கள் எல்லாவற்றிலும் இப்படியான நம்பிக்கைகளும் வாழ்க்கை முறையும் இருக்கவே செய்கின்றன. ஆற்றங்கரைகளில் பெருமாள்கள் குதிரை வாகனங்களில் பவனி வந்து ஆற்றுக்குள் இறங்குவது போல, மானாவரிக் கிராமங்களில் மாரியம்மனோ, இசக்கியம்மனோ கிணற்றுக்குள் இறக்கப்படுவார்கள். அவ்வளவு தான் வேறுபாடு. விவசாயத்திற்குத் தேவையான மழையைத் தரும்படி தங்களின் காவல் தெய்வங்களுக்குத் திருவிழா எடுப்பதும், அந்தந்தப் பகுதியின் ஆற்றுக்குள்ளோ, கிணற்றுக்குள்ளோ இறக்குவதும் இந்தியக் கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நடக்கும் ஒன்று. திருவிழாக்களை நடத்தலாம்; ஆனால் அத்திருவிழாக்கள் சார்ந்த நம்பிக்கைகள் இன்னும் தொடரவேண்டுமா? என்ற கேள்வியைக் குறிப்பாகக் கேட்டுள்ள அழகர்சாமியின் குதிரை என்ற திரைப்படம் இந்தியக் கிராமங்களின் வகைமாதிரியொன்றை நம்முன் நிறுத்தியுள்ளது. இத்தகைய படங்களைப் பார்த்து வைப்பது நமது பண்பாட்டுப் பரப்புக்குள் ஒருமுறை பயணம் செய்துவிட்டு வருவது போன்றது,
பின் குறிப்பு: கடந்த இதழில் எழுதிய மதிப்புக் கூட்டப்படும் உள்ளூர் சரக்குகள் என்னும் கட்டுரை எழுப்பிய கேள்விகளுக்கு இந்தப் படம் சில பதில்களைச் சொல்லியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. யாராவது படத்தைப் பார்த்துவிட்டு விவாதிக்க முன் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.
================================= நன்றி : அம்ருதா,ஜூன் ,2011
கருத்துகள்