சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் உள்ளிருப்போரும் கேட்போரும்



மேற்கத்திய கவிதைகளில் மேற்கத்திய விமர்சகர்கள் கண்டு
பிடித்த சிறப்புகளைத்தமிழ்க் கவிதையின் மீது யந்திரரீதியாகப் பிணைப்பது தமிழ்த் திறனாய்வு ஆகிவிடாது’

நம் இலக்கியச் செல்வங்கள் நமக்குத் தரும் அனுபவங்களின் சாரங்களிலிருந்து நம் இலக்கியக் கோட்பாடுகள் உருவாகி வரவேண்டும்”
(ப.22,25/ ந.பி. கலை: மரபும் மனிதநேயமும்.)
இந்தக் குறிப்புகள் என்னுள் நிலைகொள்வதற்கு முன்பாகவே வேறு ஒரு கேள்வி அலையடித்துக்கொண்டே இருந்தது. இப்போதும் இருக்கிறது. அந்தக் கேள்வியை நான் எழுதும் இலக்கிய இதழ்கள் கட்டுரை எதிலும் எழுப்பவில்லை. கல்வியியல் புலம் சார்ந்த பேராசிரியர்கள் வாசிக்கக் கூடிய நூலொன்றிற்காக எழுதிய கட்டுரையில் எழுப்பியிருக்கிறேன்.

இலக்கியம் வெறும் தகவல்களின் களஞ்சியமாகவும் விவரணத் தொகுப்புக்களாகவும் கணிக்கப்படும் நிலை இன்று தூக்கலாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக இலக்கியம் சமூகத்தின் பிரதிபலிப்பு, காலக் கண்ணாடி என்ற திறனாய்வுக் கருத்தியல்களுக்குள் முடங்கிப் போனதாக ஆகிவிட்டது. மொழியின் இலக்கணத்தை பேசும் தொல்காப்பியத்தையும் அதற்குள் கவிதைகளை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான இலக்கணங் களாகத் திணைக் குறிப்புக்கள், அவற்றின் பல்வேறு நிலைகளான துறைக்குறிப்புக்கள், கவிதைகளில் இடம்பெறும் புனைவுப் பாத்திரங்கள், அக்கவிதையின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் பற்றியெல்லாம் கற்றுத் தேர்ந்துள்ள மரபுத்தமிழ் வாசகர்கள் இலக்கியத்தை இவ்வாறு வாசிக்க நேர்ந்தது எப்படி என்பது சிந்திக்க வேண்டிய கேள்வி.” சுட்டி ஒருவர் பெயர் கொளப்பெறாஅர்” எனவும், அகம், புறம் எனவும் களவு, கற்பு எனவும், செவ்வியல் இலக்கியக் கோட்பாட்டையும், கவிதை அழகியலாக ’நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இணைந்த புலனெறி வழக்கம்’ பற்றியெல்லாம் படித்துள்ள தமிழ் மாணவனின் ரசனையை வெறும் தகவல் சார்ந்த ரசனையாகவும், இடம் பெறும் குறிப்புக்களின் விளக்கங்களாகவும், மாற்றிய அம்சங்கள் எவை எனச் சிந்திக்க வேண்டிய கட்டாயம் நம்முன் இருக்கிறது. அழகியலின் நுட்பங்களாக உள்ளுறை, இறைச்சி, உவமம், வண்ணம், நோக்கு எனச் சிந்தித்துக் கவிதை எழுதி ரசித்த வளமான கவிதைப் பாரம்பரியத்தில் வந்த தமிழ் மாணவனும் ஆய்வாளனும் இன்று கவிதையைப் பற்றிய படிப்பை வெறும் அர்த்தம் சொல்லும் படிப்பாகப் பார்க்கும் அவலம் எவ்வாறு நிகழ்ந்தது எனக் கண்டறிய வேண்டியது அவசியம்.
இத்தகையதொரு அவலம் நேர்ந்ததின் பின்னணியில் ஆங்கிலேயரின் வருகையும் அதனால் ஏற்பட்ட மரபுத் தொடர்ச்சியின் விலகலும் முக்கியதொரு காரணம் எனக் கூறத் தோன்றுகிறது. கற்கை நெறியிலும் கற்பித்தல் நெறியிலும் மேற்கத்திய முறையியல்களைப் பின்பற்றத் தொடங்கிய தமிழ்க்கல்வி எல்லா இலக்கிய வடிவங்களையும் ஒன்றெனக் கருதத் தொடங்கி பொதுவான கற்கை நெறியையே கைக் கொண்டது இந்நூற்றாண்டில் நடந்த பெருந்தவறு எனலாம். இப்படிச் சொல்வதால் இத்தகைய தவறான முறையியல் ஐரோப்பியக் கற்பித்தல் முறையிலும் கற்கை நெறியிலும் இருப்பதாகக் கருதி அதைக் கைவிடுவதைப்பற்றிச் சிந்தித்து விட வேண்டியதில்லை. யோசித்துப் பார்த்தால் தவறு அதில் இல்லை என்பதும், நம்மவர்கள் கைக் கொண்ட விதத்தில் இருக்கிறது என்பதும், புரிய வரலாம். அந்நியர்களின் மொழியான ஆங்கில மொழி மற்றும் இலக்கியக் கல்வியல் அர்த்தம் சொல்வதும் உள்ளுறைந்து கிடைக்கும் தகவல்களைத் தேடுவதுமே முக்கியப் பணியாக இருக்கலாம். ஆனால் தாய்மொழிக் கல்வியிலும் சொந்த மொழியின் இலக்கியக் கல்வியலும் கூட சொல்லுக்கு அர்த்தம் தேடுவதும் அதையே கற்பிப்பதும்¢ இலக்கியக் கல்வியாக இருக்க முடியுமா….? நிச்சயமாக இருக்க முடியாது.
(களனும் காலமும், தொ-ர். தொ.பரமசிவன், ஞா.ஸ்டீபன், ம.சு.பல்கலைக்கழக வெளியீடு 2005)

இந்தக் குறிப்பு அடங்கிய கட்டுரையை வாசித்தவர்களாகக் காட்டியக் கல்விப் புலத்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்ல இரண்டு கைகளின் விரல்கள் தேவை இல்லை. வாசித்தவர்களில் என்னோடு விவாதம் மேற்கொண்டவர் ஒரேயொருவர் தான். காலஞ்சென்ற பேரா.லூர்து அவர்கள் அரைமணி நேரத்தை ஒதுக்கி என்னோடு விவாதித்தார். அவரும் தான் இயங்கிய நாட்டுப் புறவியலிலும் பல்வேறு கோட்பாடுகளை விளக்கிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதிய பின்னரும் இலக்கிய ஆய்வுகளைச் செய்வது போலவே தகவல்களை மையப்படுத்தியே ஆய்வுகள் நடக்கின்றன என்ற ஆதங்கத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளும் பொருட்டே விவாதித்தார். அந்த விவாதம் என் கட்டுரையின் மையத்தை உள்வாங்கிய ஆதங்கத்தின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. கல்விப் புல ஆய்வுகளைச் சரி செய்வது பற்றி இங்கே விவாதிக்க வேண்டியதில்லை; விட்டுவிட்டு சுந்தரராமசாமியின் கவிதைகளுக்கு வரலாம்.
பசுவய்யா என்ற புனைபெயரில் சுந்தரராமசாமி எழுதியுள்ள 107 கவிதை களையும் தமிழின் – தமிழ்க் கவிதையின் சாரம் தரும் விமரிசன அளவு கோல்களைக் கொண்டு-. தமிழின் ஆதிக் கோட்பாட்டு நூலான தொல்காப்பியத்தின் கவிதையியலை வைத்துக் கொண்டு வாசிக்க முயன்றேன். செவ்வியல் கவிதைகளுக்கான கறாரான வரையறையை வைத்துக் கொண்டு புனைவியல், இயற்பண்பியல் காவியவியல், நடப்பியல், மிகை நடப்பியல், குறியீட்டியல், இருத்தலியல் என மேற்குலகில் தோன்றிய பலவகையான இலக்கிய இயக்கங்களின் அறிமுகங்கள் தமிழுக்குள் வந்த பிறகு எழுதப்பட்ட கவிதையை வாசிக்க முடியும் என நினைப்பது அபத்தத்தின் உச்சம் என இங்கே இருப்பவர்கள் சொல்வார்கள் என்பதை நானறிவேன். என்றாலும் அந்த அபத்தத்தைச் செய்து பார்க்கலாம் எனத் தூண்டியது. அப்படித் தோன்றியதற்குக் காரணம் சுந்தரராமசாமி பற்றி அவரது நீண்ட நாள் நண்பரும் புதுக்கவிதைகள் குறித்து அதிகம் எழுதியவருமான கவி ராஜமார்த்தாண்டனின் இந்தக் குறிப்புத் தான்:

தமிழ்க் கவிதையை மையமாக வைத்துத் தமிழ்ப் பின்னணியிலேயே நமது விமர்சனம் அமைய வேண்டும்’ என்று வலியுறுத்தியவர் சுந்தர ராமசாமி. நவீன கவிதைபற்றியோ, சிறுகதை பற்றியோ, நாவல் பற்றியோ, விமர்சனம் பற்றியோ பேசிய-எழுதிய எந்தச்சந்தர்ப்பத்திலும் மேற்கத்திய விமர்சகர்களின் மேற்கோள்களைக்கூட அவர் பயன்படுத்தியதில்லை- [ப.59, சுந்தரராமசாமியின் கவிதைக்கலை ராஜமார்த்தாண்டன்].

பசுவய்யாவின் 107 கவிதைகளையும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் செய்யும்- சி.சு.செல்லப்பாவின் வார்த்தையில் சொன்னால் அஞ்சறைப் பெட்டி ஆய்வு முறையியலான பிரித்துப் போடும் -வேலையைச் செய்ய முயற்சி செய்து அக்கவிதைகளுக்குள் முதல் பொருளையும் கருப் பொருளையும் உரிப் பொருளையும் தேடினேன். அப்படித் தேடித் தொகுத்துத் திணை அடையாளத்தை உருவாக்கித் தரலாம் என்பது ஆசை. ஆனால் அந்த ஆசை முழுமையாக நிறை வேறவில்லை. பெரும்பாலான கவிதை களில் திணையின் அடையாளமான கருப்பொருள் பற்றிய தகவல்கள் கிடைக்க வில்லை. அதே போல் முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் அடையாளப்படுத்தவும் முடியவில்லை.

எல்லாக் கவிதைகளிலும் இவை மூன்றுமோ, அல்லது மூன்றில் ஒன்றோ கிடைத்து விடும் என்பது தொல்காப்பியம். அதாவது உரிப் பொருள் இல்லாமல் கவிதை இல்லை என்பது அடிப்படை விதி. இந்த விதி சுராவின் கவிதைகளுக்கு மட்டுமல்லாமல் தமிழில் எழுதப் பட்டுள்ள எல்லா நவீனக் கவிதைகளுக்கும் பொருந்தும் எனச் சொன்னால் ஏற்றுக் கொள்ளாமல் மறுப்பவர்கள் யார் இருக்கிறார்? நவீனத்துவக் கவிதைகள் எல்லாவற்றிலும் உரிப்பொருள் இருக்கவே செய்கிறது. ஓர் உணர்வு அல்லது செயல் மட்டுமே கவிதை என்பதல்ல. அதற்கான அல்லது அவற்றிற்கான நிமித்தங்களே கூட உரிப்பொருள் தான். பூவின் வருடலை எழுத வேண்டும் என்பதில்லை; அதற்கான நிமித்தத்தை எழுதினால் போதும். புன் சிரிப்பை எழுதாமல் புன்சிரிப்புக்கான நிமித்தத்தை சொன்னால் போதும் கவிதை கிடைத்து விடும் என்ற மரபு கட்டுப் பெட்டியான மரபல்ல என்பதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

சுந்தரராமசாமியின் கவிதைகளில் மட்டுமல்லாது நவீனத்துவ கவிகளின் கவிதைகளில் செவ்வியல் உரிப்பொருள்கள் இடம் பெறுவதில்லை; அவற்றிலிருந்து விலகிய உரிப்பொருள்களோடு தமிழ்க் கவிதைகள் வெகுதூரம் வந்துவிட்டன; வெவ்வேறு காலப் பின்னணியில், எவை யெல்லாம் உரிப்பொருட்களாக ஆக்கப்படுகின்றன; ஏன் ஆக்கப் படுகின்றன; இப்படி ஆக்கப் பட்டதற்கும் அக்காலகட்டங்களில் உருவான சமூகக் கட்டமைப்பிற்கேற்கும் தொடர்பு உண்டா? தொடர்பில்லாமலேயே அவ்வாறு ஆக்கப்படுகின்றனவா? என்பதைக் கண்டடைய வேண்டியது கவிதை வாசகன் முன் உள்ள சவால். இதனைக் கண்டடைகிற வாசகர்களாகச் சிறுபத்திரிகை வாசகர்களும், அந்தச் சிரமமான வேலையைச் செய்யாமல் ஏற்கெனவே அறிமுகமான உரிப்பொருட்களைப் பேசும் புதுக்கவிதைகளைக் கொண்டாடும்வாசகர்களாகக் கல்வித்துறை சார்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதும் கடந்த ஐம்பதாண்டுகளாக விரித்துப் பேசப்பட்ட ஒன்று.

உரிப்பொருள் சார்ந்த விலகல் இருபதாம் நூற்றாண்டு விலகல் அல்ல. பல நூற்றாண்டுகளில் பலவிதமான கவிதை இயக்கங்களால் நிகழ்த்தப்பட்டு வந்த ஒன்று. உரிப்பொருள் விலகலின் வழியாகத் தமிழ்க் கவிதை இயக்கம் நீதி நூல்களாகவும், பக்திக்கவிதைகளாகவும், காப்பியக் கதைகளாகவும், சிற்றிலக்கியங்களாகவும், தனிப்பாடல்களாகவும் மறுமலர்ச்சிக் கவிதைகளாகவும் வளர்ந்தது. அப்படியான வளர்ச்சியின் ஊடாகச் செவ்வியல் வரையறைகள் ஒவ்வொன்றும் விலகிக் கொண்டே போய்க் கடைசியில் கவிதை சொல்லியை மட்டும் தக்க வைத்த கவிதைப் போக்காக நவீனத்துவக் கவிதை வந்து சேர்ந்தது. இப்படியான வரவிற்குள் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தாக்கத்தால் உருவான மாற்றமும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டாடிய நவீனமும், நவீனத்தின் விளைவான நவீனத்துவமும் இருந்தது என்பது பலபேருடைய நம்பிக்கை. அந்த நம்பிக்கை முழுமையான உண்மை அல்ல. ஏனென்றால் தமிழின் நவீனத்துவக் கவிகளில் பெரும்பாலோர் இந்திய மரபின் மீது தீராக் காதலும் பற்றும் கொண்டவர்கள். நவீனத்துவக் கவிதையின் தொடக்கமாக முன் வைக்கப் பட்ட ந.பிச்சமூர்த்தியும் அவரது வழித் தோன்றல்களான எழுத்துக் கவிஞர்களும் இந்திய மரபின் மீது – ஆன்மீக மரபு சார்ந்த இந்தியக் கவிதையியலை- முக்கியமாகக் கருதியவர்கள். அக்கவிதையியல் பேசுபவனை மட்டும் மையப்படுத்தி, அவனது ஆன்மீகத்தேடலை உரிப்பொருளாக்கும் சொல் முறையையும் முதன்மையாகக் கருதுபவை. இத்தகைய கவிதையியல் தமிழ்க் கவிதை வரலாற்றுக்குள் எப்போது முக்கியமான போக்காக இருந்தது எனப் பின்னோக்கிப் போனால் பக்திக் கவிதைகளை எழுதிய நாயன்மார்களும் ஆழ்வார்களும் நம்முன்னே வந்து நிற்பார்கள். அவ்விரு குழுமங்களிலும் ஆழ்வார்களின் கவிதைகள் திணை சார்ந்த தமிழ்க் கவிதையியலை விலக்கிவிட்ட ஆன்மீகத் தேடலை முதன்மைப் படுத்திய குழுமம் என்பது தெரியவரலாம். அந்த மரபின் தொடர்ச்சிப் பின்னர் சிற்றிலக்கியங்களிலும் தனிப் பாடல்களிலும் சிற்சில மாற்றங்களை அடைந்து தமிழின் நவீனத்துவக் கவிதைகளில் வந்து நிலைகொள்வதை நாம் உணர முடியும். இப்படி நினைப்பது இப்போதைக்கு என்னுடைய கருதுகோள் மட்டுமே. இக்கருதுகோளை விளக்கி, எடுத்துக்காட்டுகளின் வழி விவரித்து எழுதுவதன் மூலம் தமிழின் கவிதை வரலாற்றை வேறு விதமாக எழுதலாம். பிறகொரு நேரம் அதைச் செய்யலாம்.

இப்போது சுராவின் கவிதைகளுக்கு வருவோம். சுந்தரராமசாமியின் கவிதை களுக்குள் இடம் பெற்ற மனிதர்களைத் தேடும் போது தட்டுப்பட்ட வெளிகள், காலம் பற்றிய குறிப்புகள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் போன்ற விவரங்கள் கவிதைக்குள் நுழைவதற்கான வாசல்களைக் காட்டவே செய்தன. சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் இருக்கும் உரிப் பொருளைக் கண்டடைவதற்காக அவற்றில் இடம் பெறும் முதல் பொருளையும் கருப்பொருளையும் அடையாளப்படுத்துவது முற்றிலும் விரயமான செயல் எனத் தள்ளக் கூடாது என்ற எச்சரிக்கையை அவை ஏற்படுத்தின. அவரது பல கவிதைகளில் திரும்பத் திரும்ப வரும் இடப் பின்னணியாகக் கடலும் கடற்கரையும் இருப்பதைக் காண முடிகிறது. கடலில் ஒரு கலைஞன், கன்னியாகுமரியில், கடலுக்குத் தெரியாது, விம்மச் செய்யும் கடல், பசுஃபிக் கடலோரம், கொந்தளிக்கும் குடல் எனத் தலைப்பிலேயே கடல் என்னும் வெளி இடம்பெற்ற போதிலும் நெய்தல் திணையின் கடலாக இல்லை சுராவின் கடல். அவரது கவிதைக்குள் விரியும் கடலும் கடல் சார்ந்த பரப்புகளும் கடல் என்னும் பிருமாண்டத்தின் முன் மனிதன் என்னும் அற்பம் அல்லது சிறுமையின் நிலை என்பதான பேச்சுக்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக வாசிப்பவன் முன் நிற்கின்றன.

அதே போல் பல கவிதைகளில் திரும்பத்திரும்ப இடம் பெறும் படிமமாகக் கதவும் காற்றும் உள்ளன. கதவைத் திற. காற்று, சாத்திக் கிடக்கும் கதவுகள், இல்லாதபோது வரும் நண்பன், கதவைச் சுண்டாதே தயவு செய்து, மின்விசிறிகள் சம்பந்தமாக, பறக்கத்துடி, சிதறும் கண்ணாடிகள், மௌன ஒளி, காற்றைத் தேடி போன்ற கவிதைகளில் கதவை தடையின் அடையாளமாகவும் காற்றை தடைகளுக்கு எதிரான சுதந்திரத்தின் குறியீடாகவும் ஆக்கி இருப்பதை வாசிக்கலாம். விலங்குகளில் நாய்கள் அதிகமாகவும் - நாய்க்குரைப்பின் காலங்கள், நடுநிசி நாய்கள், நான் கண்ட நாய்கள், என மூன்று கவிதைகளிலும், பூனைகள் பற்றி இரண்டு கவிதைகளிலும் (ஒரு குறிப்பு என்ற கவிதையிலும் வித்தியாசமான மியாவ்) ஆந்தைகள்,மண்ணாந்தைகள் என்ற தலைப்பிட்ட இரண்டு கவிதைகளில் ஆந்தைகளும் இடம் பெறுகின்றன. இவ்விலங்குகள் விலங்குகளாக இல்லாமல் மனிதர்களின் செயல்பாடுகளோடு நிரல்படுத்தப்பட்டு – குறியீடுகளாகவும், படிமங்களாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பொது அமைதியைக் குலைத்துத் தங்கள் சுயத்தை நிலைநாட்டும் கும்பல்களின் காட்டுக் கத்தலின் வெளிப்பாடாகவே நாய்களும் நாய்களின் குரைப்பும் இடம் பெற ஆந்தைகள் குறிவைத்துத் தாக்கும் தனிநபர் தாக்குதலின் குறியீடாக இடம் பெற்றுள்ளன. ஆனால் பூனை மனிதர்களின் அடையாளமாக இல்லாமல் வாழ்தலின் காலமாகவும், நகரும் காலமாகவும், முடிவுறும் காலமாகவும் கடந்த, நிகழ், எதிர் என நாம் அறிந்துள்ள முக்காலங்களின் பிரக்ஞையோடு தொடர்புபடுத்தப்பட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது. இத்தகைய குறிப்புகள் மிகக் குறைவான கவிதைகளிலேயே இடம் பெற்றுள்ளதால் அவற்றைத் தேடும் முயற்சியைக் கைவிட வேண்டிய நெருக்கடியைக் கவிதை ஆய்வாளன் சந்திக்க நேர்கிறது. ஆனால் அவன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தியனின் வழித்தோன்றலாக இருக்கும் தருணத்தில் வேறு எதாவதொன்றைக் கைப்பிடிப்பதைச் செய்து தொடரத்தானே செய்வான்.

கவிதையை வாசிக்க உதவும் காலம், வெளி, கருப்பொருள் என்ற அடை யாளங்களை நவீன கவிதைகளுக்குள் தேடுவதைவிட அக்கவிதைக்குள் இருக்கும் மனிதர்கள் அல்லது பாத்திரங்கள் யார்? அவர்களின் இடம் என்ன? என்ற கேள்வியோடு தேடினால் கவிதைக்குள் நுழைவது சற்று எளிமையாகி விடும். கவிதைக்குள் பாத்திரங்கள் அல்லது மனிதர்கள் மூன்று விதமாக இடம் பெற வாய்ப்புண்டு. சொல்கிறவர்களாக இருப்பது ஒரு நிலை என்றால், அதன் எதிராகக் கேட்கிறவர்களாக இருப்பது மறு நிலை. இவ்விரண்டிற்கும் இடையே சொல்லப் படுகின்றவர்களாகவும் மனிதர்கள் இருக்க முடியும். முதலிரண்டும் – சொல்கிறவனும் கேட்கிற வனும் ஒரு கவிதைக்குள் முக்கியமான கூறுகள். ஆனால் சொல்லப் படுகிறவர்களாக மனிதர்கள் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.


சுந்தரராமசாமியின் கவிதைகளுக்குள் மேஸ்திரிகள்(மேஸ்திரிகள்),ரிஷி (ரிஷிமீது கவிழ்ந்த ஜுவாலை), குருஜி, (குருஜி) மனிதாபிமான பாசிஸ்ட் (மனிதாபிமான பாசிஸ்டின் ஜனநாயகக் குரல்), ஒரு படையின் மேலதிகாரி,(ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு) போன்ற மனிதர்கள் சொல்லப்படும் பாத்திரங்களாக இடம் பெறுகிறார்கள். இவர்கள் அல்லாமல் இவர்களைப் போலவே நிறுவனங்களின் அதிகார அடுக்கில் அதிகாரத்தைச் செலுத்தும் மனோபாவத்தோடு இயங்கும் பல மனிதர்கள் குறிப்பான அடையாள மின்றிக் கவிதைக்குள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இடம் பெறும் கவிதையின் மொழியை அங்கதமாக்கியும் எள்ளலாக்கியும் அவர்களைப் பற்றிப் பேசுவதன் வழியாக சுந்தரராமசாமி வைக்க விரும்பிய விமரிசனங்களை வாசிக்க முடிகிறது. சுரா கவிதைகளில் சொல்லப்படும் நபர்களாக மூன்று பெண்களைச் சந்திக்க முடிகிறது. தொடர்ந்து தன்னுடன் இருந்து விட்டு இப்போது இல்லாமல் போய்விட்ட பெண் பற்றிய பிரமையை (பிரமைகள் ) ஒரு கவிதையிலும், மணமாகிப் பிரியும் பெண்ணை (பூக்கள் குலுங்கும் கனவு) ஒரு கவிதையிலும் திரும்பத் திரும்பச் சென்று பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வங்கியில் பணி புரியும் பெண்ணொருத்தியை (பூர்த்தி செய்யாத இடம்) ஒரு கவிதையிலும் சந்திக்கும் வாய்ப்பை கவிதை வாசகன் முன் நிறுத்தியுள்ளார். இம்மூன்று பெண்களில் முதல் பெண் தருவது அச்ச உணர்வு, இரண்டாவது பெண் உண்டாக்குவது பிரிவின் துயரம், மூன்றாமவள் காத்திருத்தலின் சுகத்தையும் வலியையும் உண்டாக்குகிறாள்.


சுந்தரராமசாமியின் கவிதைக்குள் சொல்லப்படுகிறவர்களாக இருக்கிறார்களா? கேட்கும் இடத்தில் இருக்கிறார்களா? எனத் திட்டமாகக் கூற முடியாத நிலையில் விமரிசகர்களும், சக படைப்பாளிகளும் இடம் பெறுகிறார்கள். அவர்களைச் சக படைப்பாளிகள் எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்வதை விட அமைப்புகள் சார்ந்த கொள்கைகளையும் முன் முடிவுகளையும் வைத்துக் கொண்டு விமரிசனம் செய்பவர்கள் எனவும், அக்கொள்கைகள் ஈடேறும் பொருட்டுப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளைத் தர வேண்டும் என வலியுறுத்தும் நிலைபாட்டினர் எனவும் சொல்லலாம். அத்தகைய விமரிசகர்களாக – படைப்பாளிகளாக சுந்தரராமசாமியின் காலத்தில் அதிகம் குரல் கொடுத்தவர்கள் இடதுசாரிகளே. இடதுசாரிகளாக அறியப்பட்டுப் பின்னர் தங்களின் வளர்ச்சியாகக் கருதி நகர்ந்த தலித் மற்றும் பெண்ணிய விமரிகர்களையும் புதிதாகத் தோன்றிய பின்நவீனத்துவ, விளிம்புநிலை விமரிசகர்களையும் வாசகர்களையும் அவர்களோடு சேர்ந்து கொள்ளலாம். இவர்கள் அனைவருக்கும் சுந்தரராமசாமியின் பதில்கள் பலவிதமாகப் பல கவிதைகளுக்குள் இடம் பெற்றுள்ளன என்றாலும் முக்கியமான கூற்றாக “உன் கவிதையை நீயே எழுது என்பதும், உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு” என்பதும் தான்.

கடைசியாகச் சுந்தரராமசாமியின் கவிதைகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் ‘ஒருமனிதனு’க்கு வரலாம். தன்மைக் கூற்றில் அமைந்திருக்கும் பசுவய்யாவின் எல்லாக் கவிதைகளுக்குள் இருக்கும் கவிதை சொல்லி என்னும் எடுத்துரைப்பாளனே அந்த மனிதன். நான், எனது, எனக்கு, என்னை என்பதான நிலைபாட்டிற்குள் நிறுத்திக் கொண்டு தனது நண்பர்களோடும் எதிரிகளோடும் வாய்ப்பேச்சும் வாள்வீச்சுமாக நகரும் ஒரு அகத்தை சுந்தரராமசாமியின் ஒவ்வொரு கவிதையிலும் வாசகன் சந்திக்க வேண்டியுள்ளது. அந்த அகன் தான் இப்படி இருக்க நேர்வதைப் பற்றித் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறது என்றாலும் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எதையும் சொல்லாமல், ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு வெளியிலும் ஒவ்வொரு நகர்விலும் ஒவ்வாமையை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. மிகுந்த ஆயாசத் தோடும், விச்ராந்தியாகவும், தனிமையிலும், தன்னைப் புரிந்து கொண்டோரோ, ஏற்றுக் கொள்வோரோ? ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி விடுவாரோ என்ற ஆதங்கத்தோடும், வாழ்க்கையின் மீதான கொண்டாட்ட மனநிலை எதையும் வெளிப்படுத்தாமல் தொடர்ச்சியான சலிப்போடும், சலிப்பூட்டும் விதமாகவும் பேசிக் கொண்டே இருக்கும் அந்த மனிதன் யார்? கவிதைக்குள் கவிதை சொல்லியாக இருக்கும் அந்த நான் அல்லது கவிஞன் தொடர்ந்து தனது அகந்தையின் வெளிப்பாடாகவே தனது கவிதையை எழுதித் தந்துள்ளானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. தொடர்ச்சியாக யோசித்தால் இந்த வெளிப்பாடு சுந்தரராமசாமி என்ற நானின் பிரச்சினையா? அல்லது நவீனத்துவக் கவிதை என்னும் வடிவத்தின் பிரச்சினையா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியாது.

தன்னையும் தன்னுடைய நிலைபாட்டையும் சரியானது என நம்பும் ஒரு அகன், அதனை நிறுவுவதற்காகச் சமகாலத்தில் கவனப்படுத்தும் விதமாக இருக்கும் பெரும்பான்மையின் அல்லது பாதிக்கப்பட்டோரின் பக்கம் நிற்பதாகக் காட்டிக் கொள்ளும் ஆதாரங்களைத் தனது படைப்புக்குள் அல்லது செயல்பாட்டிற்குள் கொண்டு வரும் வேலையைச் செய்யும். அப்படிச் செய்யத் தொடங்கும் நடைமுறைகள் கொஞ்சம்கொஞ்சமாக நகர்ந்து பாசிசத்தின் குரலாக செயல்பாடாக ஆகி விடும் வாய்ப்பும் உண்டு. ஆனால் சுந்தரராமசாமியின் கவிதைக்குள் இருக்கும் அந்தக் குரலுக்குரிய நபர் அந்த எல்லையைப் பல இடங்களைத் தொட்டுவிடுகிறார். சுற்றி இருக்கும் எல்லாம் சரியல்ல; நான் மட்டுமே சரியாக நிற்கிறேன்; நகர்கிறேன்; நடக்கிறேன்; உண்கிறேன்; உறங்குகிறேன் என்று சொல்லும் உச்சநிலையைப் பல கவிதைகள் வெளிப்படுத்துகின்றன என்பதைத் தனித்தனியாக எடுத்துக் காட்டிப் பேசும் வாய்ப்பை அக்கவிதைகள் கொண்டுள்ளன. தனிநபர்களின் அதிகாரக் குரலைத் தொடர்ச்சியான விமரிசனத்தின் வழியாகக் கேள்விக்குள்ளாக்கும் அந்த அகன் கவிதைக்குள் இருக்கும் தன்னையும் விமரிசனத்திற்குள்ளாக்கும் என எதிர்பார்ப்பது நவீன கால வாசகனின் ஒரு நிலைப்பாடு. ஆனால் அந்த எதிர்பார்ப்புள்ள வாசகனுக்குக் கிடைப்பது ஏமாற்றம் மட்டுமே.


தன்னையும் தனது நம்பிக்கையையும் செயல்பாடுகளையும் நிறுவதற்கு பாசிஸ்டுகள் கைக்கொள்ளும் உத்தி ஒன்று உண்டு. தனக்குத் தோதான பழைமையை விதந்து பேசி, அதனைக் கைக்கொள்ளாவிட்டால் நமது மரபும் நமது பெருமையும் நமது வாழ்க்கையும் காணாமல் போய்விடும். அதைக் காக்க வேண்டும். அந்த வேலையையே நான் செய்கிறேன். ஆகவே என்னைப் பின் தொடருங்கள் எனப் பேசுவார்கள். கூட்டங்களைக் கூட்டுவார்கள்; அக்கூட்டங்கள் அவரது வழிநடத்தல்களின்படி செயல்படும்படியாகப் பார்த்துக் கொள்வார்கள். அத்தகைய நோக்கம் எதேனும் சுந்தர ராமசாமியின் கவிதைகளுக்குள் வெளிப்படுகின்றனவா? எனத் தேடும் போது அதற்கான ஆதாரங்களும் கிடைக்கவில்லை.கும்பல்களைத் தவிர்க்கும் மனநிலையோடு அலையும் மனிதனையே அவரது கவிதைகள் நம்முன் நிறுத்தியுள்ளன. மலைப் பிரதேசத்திலும், ரயிலடியிலும், ஆற்றங்கரையிலும், கடலோரத்திலும், கதவைகளைத் திறந்து வைத்துக் கொண்டு ஜன்னல் வழியாகவும், கதவிடுக்கின் ஊடாகவும் வெளியுலகத்தைப் பார்த்துப் பதற்றப்படும் மனிதனையே நாம் சந்திக்கிறோம்.

இந்தத் தனிமனிதன் நீண்ட நெடுங்காலம் கூட்டு வாழ்க்கையை அனுபவித்த சமூகத்திலிருந்து பிய்த்தெறியப்பட்ட மனிதனா என்றால் அவனும் அல்ல. அப்படி எறியப்பட்ட மனிதன் எறிந்தவர்கள் மீது, எறியப்பட்ட சூழலின் மீது, அமைப்புகளின் மீது கோபத்தை வெளிப் படுத்துவான். கோபமே இல்லாமல் நக்கலோடும், எள்ளலோடும் தனது தனிமையின் நியாயங்களை விளக்கிப் பேசிக்கொண்டே இருக்கும் அந்த நபரை யார் என அடையாளப்படுத்துவது எனக் கேட்டால், தனது இருப்பை எப்படி விளக்குவது எனத் தெரியாமல், முடிவற்ற தேடலைச் செய்பவன்; முடிவற்ற வாக்கியங்களைப் பேசுபவன்; தனது மரபை முற்றாகத் தொலைக்கவும் விரும்பாமல் நவீனத்துவத்தின் தனிமை தரும் இன்பத்தையும் பயத்தையும் ஒரு சேர அனுபவித்துக் கொண்டிருப்பவன் . அத்தகையவனும் இருத்தலியல் பிரச்சினைகளோடுதான் அலைகிறான். ஆனால் அது இந்தியத் தன்மைகொண்ட இருத்தலியல் பிரச்சினை. இந்தியத்தன்மையை உருவாக்குவதில் இந்தியச் சாதியமைப்புக்கு முக்கியமான பங்கிருக்கிறது. ஆனால் எழுதும் கவிகளோ, அதற்கு முகம் கொடுக்காமல் விலகிச்செல்லப் பார்த்து, வாழ்க்கையை அர்த்தமற்றதாக நினைத்துக்கொள்கிறார்கள்.
=========================================================================

2011,ஜூன் 3,4,5 தேதிகளில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தில்
காலச்சுவடு அறக்கட்டளை நடத்திய சுரா-80 என்ற கருத்தரங்கில் வாசித்த கட்டுரை.
வாசித்த நாள்: 05-06-2011





கருத்துகள்

ராம்ஜி_யாஹூ இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழ்க் கவிதையை மையமாக வைத்துத் தமிழ்ப் பின்னணியிலேயே நமது விமர்சனம்அமைய வேண்டும்’ - சுந்தர ராமசாமி
இது ஒரு விசாலமான பார்வையை தராதே. பிற சூழலில் உள்ள படைப்புக்களுடன் ஒப்பிட்டு பார்த்தல் வளர்ச்சிக்கு உதவுமே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்