சின்னத்திரைகளின் வண்ணக்கோலங்கள்
வாசிப்பதற்கு முன் ஒரு குறிப்பு
இந்தக் கட்டுரை 2006 இல் உயிர்மை மாத் இதழுக்கு எழுதப்பட்டது. வெகுமக்கள் ஊடகங்கள், பொதுமனநிலை உருவாக்கும் விதமாகக் கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன என்ற சிந்தனைப் போக்கின் பின்னணியில் ஐரொப்பியப் பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் நடந்தன. ரேய்மண்ட் வில்லியம்ஸ் போன்றோர் முக்கியமான முடிவுகளைச் சொன்னார்கள். அதனைப் பின்பற்றி அமைந்தது இந்தக் கட்டுரை. பல்கலைக்கழக ஆய்வு முறையியலை அப்படியே உள்வாங்காமல் இடைநிலை இதழியலின் தேவைக்கேற்ப எழுதப்பட்டது. பின்னர் ஆழி பதிப்பகம் வெளியிட்ட பெருந்தொகுப்பு ஒன்றில் இடம்பெற்றது. அதனைத் தொகுத்தவர் பத்திரிகையாளர் சி. அண்ணாமலை.
இப்போதும் இக்கட்டுரை விவாதிக்கும் எதுவும் மாறிவிடவில்லை. நிகழ்ச்சிகளின் பெயர்கள் மட்டும் மாறியிருக்கின்றன. இப்போது தொலைக்காட்சிகளில் இடம் பெறும் நிகழ்ச்சிகளின் பெயர்களை அந்த இடத்தில் மாற்றிப் போட்டு நீங்கள் வாசித்துக் கொள்ளலாம். இனிக் கட்டுரைக்குப் போகலாம்...
தினசரிப் பத்திரிகைகள் தவறாது வெளியிடும் தகவல் குறிப்புக்கள் சில உண்டு; தானிய விலை, காய்கறி விலை,தங்கம், வௌளி விலை விவரம் அடங்கிய மார்க்கெட் நிலவரம் தொடங்கி, கோடைகாலத்தில் இன்றைய வெப்ப நிலையையும், மழை காலமானால் அணைகளில் நீர்மட்ட உயரத்தையும், கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் பெய்த மழையின் அளவையும் சேர்த்துக் கொள்ளும். தவறவிடாமல் அச்சிடும் இவற்றுடன் முன்பெல்லாம் இரண்டு விவரங்கள் தவறாது இடம் பெற்றிருக்கும். ஒன்று வானொலி நிகழ்ச்சிகள்; இன்னொன்று நகரில் சினிமா அல்லது இன்றைய சினிமா எனத் தலைப்பிட்டுத் தரப்படும் திரைப்படங்களின் பட்டியல். இப்போது இவை இரண்டும் பின்னுக்குப் போய்விட்டன. வானொலி நிகழ்ச்சிகளைத் தினசரிகள் வெளியிடுவதை நிறுத்தியே விட்டன; திரை அரங்குகளில் நடக்கும் படங்களின் பெயர்களைத் தரும் பட்டியலைக் கூட எப்பொழுதாவது தான் வெளியிடுகின்றன. ஆனால் தொலைக்காட்சி அலை வரிசைகளின் நிகழ்ச்சி நிரல்கள் விவரம் எல்லா நாளிதழ்களிலும் தவறாது இடம் பிடித்துக் கொண்டுள்ளன.
தமிழ் நாளிதழ்கள் மட்டுமல்ல; ஆங்கில நாளிதழ்களிலும் கூட தொலைக் காட்சிகளின் அலைவரிசை நிகழ்ச்சிகள் முக்கியத்துவம் பெறும் விதமாகத் தரப்படுகின்றன. தொழில் நுட்பத்தின் வாடையற்ற பாராயணங்களையும், சங்கீத நாடகங்களையும், ஆட்டபாட்டங்களையும் தங்களின் கலை அனுபவத்திற்கான ஊடகங்களாகக் கொண்டிருந்த தமிழர்களின் வாழ்வில் வானொலியும், திரைப்படங்களும் முக்கியத்துவம் பெற்றது ஒரு காலகட்டம். ஆனால் தொண்ணூறுகளுக்குப் பிந்திய தமிழ் வாழ்வில் எல்லா ஊடகங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னுக்கு வந்துள்ளன. இருபத்தி நான்கு மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சி அலைவரிசைகள், தமிழ் பேசும் நிலப்பரப்பில் வாழும் மனிதர்களை எந்த இலக்கை நோக்கி நகர்த்த முயல்கின்றன என ஆராய்வது அவசியமான ஒன்று. அத்தகைய ஆய்வுகள் நிகழ்கால சமூகத்தை ஊடகங்கள் தங்கள் போக்கில் கட்டமைக்க முயல்வதைப் புரிந்து கொள்ளும் முயற்சியாக அமைவதோடு, நிகழ்வுகளின் ஊடாகப் பார்வையாளர்களின் பங்கேற்புகளின் தன்மைகளையும், அலைவரிசைகளின் நிலைபாடுகளையும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் நோக்கங்களையும் விளங்கிக் கொள்ள முடியும்.
மைய நீரோட்ட அலைவரிசைகளின் பொதுத் தன்மைகள்
இன்று தமிழ் நாட்டின் பெருநகரத்தில் வாழும் ஒரு மனித உயிரிக்கு 75 - லிருந்து 100 அலைவரிசைகள் வரை காண வாய்ப்பிருக்கிறது. சிறு நகரமொன்றில் இந்த எண்ணிக்கைப் பாதியாக இருக்கலாம். அவற்றுள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பிற மொழி அலைவரிசைகள் பாதிக்குமேல் இருக்கக் கூடும். தமிழ்ப் பேசும் அலைவரிசைகளிலும் உள்ளூர் அளவில் நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சிகளும் உள்ளன. சமய நிகழ்ச்சி களையும் , பிரசாரங் களையும் மட்டும் தரும் அலைவரிசைகளும் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்தே பார்வையாளர்களின் மனத்தைக் கட்டமைக்கும் பணியைச் செய்கின்றன என்றாலும் இவை எல்லாமே மைய நீரோட்ட அலை வரிசைகள் எனச் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தத் தமிழ் நாடும் பார்க்கத்தக்க நிகழ்ச்சிகளைத் தயாரித்துத் தரும் பொதிகைத் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சிக் குழுமத்தைச் சேர்ந்த கே.,சன் ம்யூசிக், ஜெயா தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, ராஜ், மக்கள் போன்றவற்றை முக்கியமான மைய நீரோட்ட அலைவரிசைகளாகக் கூறலாம். இவற்றோடு தமிழன், விண், கிருஷ்ணா போன்றனவும் இந்தப் போட்டியில் அவ்வப் போது நுழையப் பார்ப்பதுண்டு.
காலப்பகுப்பும் இலக்குப் பார்வையாளர்களும்
மைய நீரோட்டத் தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றின் ஒளிபரப்பு நேரத்தை இருபத்திநான்கு மணிநேரம் என்பதாக வைத்திருக்க விரும்புகின்றன. ஏழுநாள் X இருபத்திநான்கு மணி நேர ஒளிபரப்பு என்ற திட்டத்தில் வாரத்தில் சனி, ஞாயிறுகளுக்கென சில நிகழ்ச்சிகளையும் வார நாட்களுக்கெனப் பல நிகழ்ச்சிகளையும் திட்டமிட்டு ஒளிபரப்பு கின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கைப் பெருக்கம் உள்ள எல்லா நாடுகளிலும் ஒரு நாள் என்பது ஐந்து பகுதிகளாக- காலை ( 10 மணிவரை) , பகல் ( மாலை 5 மணி வரை, முன்னிரவு ( 7 மணி வரை), இரவு ( 10.30 வரை) பின்னிரவு ( 10.30-க்குப் பின்)எனப்¢ பகுக்கப்பட்டு , அக்காலப் பகுப்பில் பார்வையாளர்களாக இருக்கத் தக்கவர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டு நிகழ்ச்சித் தயாரிப்புகள் அமைகின்றன. தமிழ் அலைவரிசைகளில் காலை ஒன்பது மணி வரையிலான நேரமும், முன்னிரவு நேரமும் இலக்குப் பார்வையாளர்களைத் தவிர்த்த பொதுநிலைப் பார்வையாளர்களுக்கான நிகழ்வுகள் அமையும் நேரங்கள் எனலாம். இந்நிகழ்வுகள் இன்ன வகைப்பட்ட பார்வை யாளர்கள் என்றில்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள் , பெண்கள் என அனைத்துவகைப் பட்டவர்களுக்குமான நிகழ்ச்சிகளாக அவை அமைகின்றன. அப்பொதுநிலைப் பார்வையாளர்களுக்குப் போதனை, ஆன்மீகம், ஜோதிடம், அறிவுரை, விளையாட்டு, புதிர்போடல் தகவல் தெரிவித்தல், செய்தி கூறல் என நிகழ்வுக் கூறுகள் அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு கூறுகள் இலக்குப் பார்வையாளர்களை மையப்படுத்தாமல் பொது நிலைத் தன்மையுடன் இருப்பவை. ஆனால் பகல் மற்றும் முக்கிய நேரம் (Prime time ) எனப்படும் இரவுப் பகுதிகள் குறிப்பான பார்வையாளர்களை இலக்காகக் கருதுபவை. பகல் பொழுதுகள் அலுவலகப் பணிக்குச் செல்லாத நடுத்தர வர்க்க மனைவிமார்களைக் குறி வைப்பன என்றால், முக்கிய நேர நிகழ்வுகள் ஆண்களையும் உள்ளடக்கிய குடும்ப உறுப்பினர் களை இலக்குப் பார்வையாளர்களாக ஆக்குகின்றன. பின்னிரவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் திரைப்படக் காட்சி களாகவோ , பாடல்களாகவோ அமைந்து ஆண்களை இலக்காக்கி விரிகின்றன.
வாரநாட்களின் நிகழ்ச்சிகள் இத்தகைய பொதுத் தன்மைகளில் இருக்க சனி, ஞாயிறுகளான வார இறுதிநாட்களுக் கென சில பொதுத் தன்மைகளையும், புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், விநாயக சதுர்த்தி, குடியரசு, சுதந்திர தினம் போன்ற முக்கிய நாட்களுக்கென சில பொதுத் தன்மைகளைப் பின்பற்றுகின்றன. ஓராண்டின் மொத்த நிகழ்ச்சிக் காலப் பகுதியை மொத்தமாகக் கணக்கிட்டு அவற்றில், திரைப்படம் சார்ந்து தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் கணக்கிட்டால் அவை செம்பாதிக்கும் மேலான நேரத்தைத் தனதாக்கிக் கொள்வதை உறுதி செய்யலாம். திரைப் படங்கள் சாராத நிகழ்வுகளிலும் கூட திரைப்படத்துறைப் பிரபலங்களை மையப்படுத்திய நிகழ்வுகள் உண்டு. அரட்டை அரங்கம், பெண்கள் குறித்த விவாதம், காசுமழை, தங்க வேட்டை, பாட்டுக்குப் பாட்டு, ஜாக்பாட், கலக்கப்போவது யாரு போன்ற நிகழ்வுகள் எல்லாமே திரைப்படப் பிரபலங்களை மையப்படுத்தியன தான். திரைப் படங்களின் தாக்கம் அற்ற தொலைக் காட்சிக்கே உரிய தயாரிப்புகள் எவை எனத் தேடினால் மிஞ்சுவன தொடர்கள் மட்டும் தான். திரைப்படத் தொழிலுக்குச் சமமான நிலையில் ஒரு தொழிலாகவே ஆகி விட்ட தொடர் தயாரிப்புக்கள் தான் தமிழ் தொலைக் காட்சிகளுக்குத் தனியொரு அடையாளத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. அவை குறித்துப் பேசுவது மொத்தமாகத் தொலைக்காட்சி அலைவரிசைகளைப் பற்றிப் பேசுவதாகவே அமையும். தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கு முன்னாள், விழாநாள் (Festival days )நிகழ்ச்சிகளையும், வார இறுதி நாட்களின் நிகழ்ச்சிகளையும் காணலாம்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் : பங்கேற்பாளா¢களின் பரிமாணங்கள்
பார்வையாளனுக்குச் செய்திகளையும், உணர்வுகளையும், அனுபவத்தையும் தரும் ஒன்றை விமரிசகர்கள், கலை, ஊடகம், பொழுதுபோக்குச் சாதனம் எனச் சில வரையறைகளை முன்னிறுத்தி விளக்குவது உண்டு. தொலைக்காட்சி அலைவரிசைகள் என்பன இன்று உலகம் முழுக்க ஊடகங்கள் என்ற வகைப்பாட்டிற்குள் நிறுத்தப்பட்டே விவாதிக்கப் படுகின்றன.தகவல் தெரிவித்தல், களிப்பூட்டுதல் என்ற இரு அம்சங்களை முக்கியப்படுத்தும் மேற்கத்திய ஊடகங் களிலிருந்து இந்தியத் தொலைக்காட்சிகள் பெருமளவு மாற்றங்களைக் கொண்டிருக்கின்றன.குறிப்பாகப் பார்வை யாளர்களைப் பங்கேற்கச் செய்யும் வினையில் மேற்கத்திய அலைவரிசைகளிலிருந்து இந்திய அலைவரிசைகள் பெருமளவு மாறுபடுகின்றன.
மேற்கத்தியத் தொலைக்காட்சியின் பார்வையாளர்கள் பெருமளவில் தன்னுணர்வுடன் கூடிய பங்கேற்பை மட்டுமே நிகழ்த்துகின்றனர். அப்பங்கேற்பு ஒருவிதத்தில் ஊடகங்களில் பங்கேற்கும் மனநிலை அன்று.ஒரு கலையின் வினைப் பாட்டில் பங்கேற்கும் மனநிலை. ஒரு கலை நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது; அதன் பார்வையாளனாக நான் இருக்கிறேன் என்ற புரிதலுடன் நடக்கும் பங்கேற்பு. அக்கலை நிகழ்வு நாடகமாகவோ, நடனக் காட்சியாகவோ, ஓவியக் கண்காட்சியாகவோ, திரைப்படக் காட்சியாகவோ இருக்கலாம். தனிமனிதனின் தன்னுணர்வுப் பங்கேற்பு என்ற அளவில் ஐரோப்பியப் பார்வையாளன் அவற்றில் பங்கேற்கிறான். ஆனால் கீழ்த்திசை நிகழ்வுகள் என்பனவும், அவற்றில் பங்கேற்கும் கீழ்த்திசைப் பார்வையாள மனநிலை என்பதும், முற்றிலும் மாறுபட்டவை. அவை எப்பொழுதுமே தனிமனித நிலைபாட்டைத் தவறவிட்டுவிட்டு, குழு மனநிலைக்குள் நுழைந்து கொள்வனவாக இருக்கின்றன. இதனால் தான் கீழ்த்திசை நாடுகளின் பண்பாட்டு அம்சங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், வெகுமக்கள் பண்பாட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே பேசுகின்றனர். நிகழ்ச்சிகள் தயாரிப்பவர்களும் கூட வெகுமக்கள் பண்பாட்டுக் கூறுகளான, முன்னிலை எடுத்துரைப்பு, ஆட்டக் கோர்வைகளை மையப்படுத்துதல், இசைக் கலவைகளை உள்ளீடாக்குதல் எனச் செயல்படுகின்றனர்.
இந்தப் புரிதல் கொண்ட ஒருவர், இந்தியத் தொலைக்காட்சிகளில் நடக்கும் பார்வையாளர் பங்கேற்பை மூன்று வகைப் பங்கேற்பாகப் பாகுபடுத்திக் கூறலாம்.
1] விருப்பமும் தன்னுணர்வும் நிரம்பிய பங்கேற்பு
2] விலகல் பங்கேற்பு.
3] மறைமுகப் பங்கேற்பு.
முதல் வகைப்பங்கேற்பு பெரும்பாலும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளின் நிகழ்ச்சிகளில் வெளிப்படுகின்றன. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அல்லது மையப் பாத்திரம் என்பதாக ஒருவரை வைத்துக் கொண்டு நடக்கும் அரட்டை அரங்கம், பெண்கள் குறித்த விவாதம், காசுமழை, தங்க வேட்டை, பாட்டுக்குப் பாட்டு, ஜாக்பாட், போன்ற நிகழ்ச்சி களின் பேச்சு முறையையும், எடுத்துரைப்புக் கோணமும் நகரவாசிகளாகவும், நடுத்தரவர்க்கத்தினராகவும் உள்ள பார்வையாளர்களின் மூளைக்கு வேலை தருவனவாக அமைக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளில் நேரடியாகப் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுடன் வீட்டிலிருந்தபடியே மென்மையான அளவில் சிந்தித்துப் பங்கேற்க வேண்டியவர்களாக இந்நிகழ்வுகளின் பார்வையாளர்கள் கட்டமைக்கப்படுகின்றனர். ஜாக்பாட், காசுமழை, தங்க வேட்டை போன்றவற்றில் நேரடிப் பங்கேற்பாளர்கள் சொல்லும் விடைகளோடு தங்கள் விடைகள் பொருந்திப் போகும் நிலையில் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் சாத்தியங்கள் உண்டு. இப்படிப் பங்கேற்கும் பார்வையாளர்கள் மனதளவில் அந்நிகழ்வு களின் விளம்பரக் கம்பெனிகளின் தயாரிப்புக்களுக்கு வாடிக்கையாளர்களாக மாறுவது பக்க விளைவுகள் என்பது தனியாக ஆய்வு செய்ய வேண்டியன. அறிவார்த்தமும், தன்னுணர்வும் கொண்ட பங்கேற்பு மனநிலையை அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், மகளிர் அரங்கம், பட்டிமன்றம், பாட்டுக்குப் பாட்டு, போன்ற நிகழ்ச்சிகளிலும் வெளிப்படுவதைக் காணலாம்.
இவ்வகை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் பங்கேற்பைப் பலநிலைப் பரிமாணங்களில் வைக்கக் கூடியன. நிகழ்ச்சிகளில் நேரடியாகப் பங்கேற்பவர்களின் முன்னால் இருப்பன பரிசுப் பொருட்கள், பணம் , தங்கம் போன்றன. இவற்றைப் பெறு வதற்குப் பார்வையாளர்களின் அறிவும், புத்திசாலித்தனமும், திறமையும் சோதிக்கப்படுகின்றன என்பதாக அமைக்கப் படுகின்றன.நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்பவர்களின் அறிவு, புத்திசாலித்தனம், திறமை மட்டும் அல்ல, அவரவர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் அமர்ந்திருக்கும் பார்வை யாளர்களின் அறிவையும் திறமையையும் புத்திசாலித் தனத்தையும் கூடக் கண்ணுக்குப் புலப்படா நிலையில் நின்று சோதிக்கும் வாய்ப்பை உண்டாக்க வல்லன. அத்தகைய சோதனைகளின் வழியாக ஒவ்வொரு பார்வையாளர்களும் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கேற்றவர்களை விடப் புத்திசாலிகள் எனத் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்ளும் வாய்ப்பை உண்டாக்குகின்றன. தொடர்ந்து தாங்களும் அல்லது தங்கள் குடும்பமும் ஒருநாள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என்ற சாத்தியம் இருப்பதாக நம்புவதும் , பரிசுகளைப் பெறுவோம் எனக் கருதுவதும் கூடச் சாத்தியம் தான். அத்தோடு இன்று வளர்ந்துள்ள தகவல் தொழில் நுட்ப வாய்ப்பின் மூலம் தங்க வேட்டை போன்ற நிகழ்ச்சிகளில் வீட்டில் இருந்தபடியே குறுந்தகவல் (SMS)அனுப்பும் முறை மூலம் போட்டியில் பங்கேற்கவும் முடியும்.
இவ்வகை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பார்வையாளர்களில் அதிகம் பெண்களாக இருக்கிறார்கள், அதிலும் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கப் பெண்களாக இருக்கிறார்கள். அவர்களின் பங்கேற்பு அதிக பட்ச அலங்காரத்துடன் இருக்கிறது. இந்த அலங்காரங்களும் உரையாடல் தொனிகளும் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்தப் பார்வையாளர்களின் அடையாளம் அல்ல என்றாலும் கவனிக்கத் தக்க அடையாளமாகவும், அடைய விரும்பும் அடையாளமாகவும் இருக்கின்றன. வெளிப்படை யாக இல்லை என்றாலும் உள் மனம் விரும்பும் அடையாளம் அவை தான் .
தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க வாய்ப்புள்ள கீழ்நடுத்தர வர்க்கப் பெண்ணின் மனம் நடுத்தர வர்க்கக் குணத்திற்குள் நுழைவது இயல்பாக நடக்கக் கூடிய ஒன்று. நடுத்தர வர்க்கக் குணம் என்பது நுகர்வு விருப்பம் அதிகம் கொண்ட குணம் தான். ஒரு தடவை அதற்குள் நுழையும் எப்போதும் பின்வாங்குவதே இல்லை. தொடர்ந்து மேல் நோக்கிப் பயணிக்கவே செய்கிறது. நடுத்தர வர்க்க நுழைவு அடுத்த கட்டமாக மேல் நடுத்தர வர்க்க ஆசைகளுக்கு ஏங்கும்; அதன் பிறகு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ரம்யா கிருஷ்ணன்,குஷ்பு போன்றவர்களின் அலங்கார அடையாளத்திற்கும் கூட ஏங்கவே செய்யும். தனிமனிதனின் ஏக்கங்களுக்கு எல்லைகள் எதுவென யார் சொல்ல முடியும்.? இவையெல்லாம் உடனடியாக வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவே நடக்காது என்று மட்டும் சொல்லி விட முடியாது.
இரண்டாவது பங்கேற்பு முறையான விலகல் பங்கேற்பு முறையைப் புரிந்து கொள்ள நாம் விழா நாள் நிகழ்ச்சிகளையே உதாரணமாகக் கொள்ள வேண்டும். தீபாவளி , பொங்கல், புத்தாண்டு என விழாநாட்களுக்கெனத் தயாரிக்கப்படும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் திரைப்படங்களாகவும், திரைப்படத் துணுக்களாகவும், திரைப்படத்துறையினரின் நேர்காணல் களாகவும், திரைப்படத்துறை அல்லது ஊடகப் பிரபலங்களின் பங்கேற் பாகவும் தான் உள்ளன. காலையில் தொடங்கி விழா நாள் முடிய அவற்றையே காட்டும் தொலைக்காட்சிகள், விளம்பர இடைவேளைகளின் போதும், சிறப்புக் கூற்றுகளாகவும், அவ்விழா நாட்களின் சடங்குகளையும் காட்டத் தவறுவதில்லை. பொங்கல் எனில் நட்சத்திரப் பொங்கல், தீபாவளி எனில் நடிகை அல்லது நடிகர் பங்கேற்கும் வழிபாடு மற்றும் வெடி போன்றன தவறாது இடம் பெறும். தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கும் வாழ்த்துச் செய்திகள், சமயப்பெரியவர்களின் சொற்பொழிவு மற்றும் அந்நாளின் முக்கியத்துவம் குறித்த அறிவுரை போன்றனவும் இடம் பெறும். விழாநாளுக்கெனச் செய்யப்படும் வழிபாட்டுத்தல ஆராதனைகளையும் அலைவரிசைகள் காட்டத் தவறுவதில்லை. இப்படியான நிகழ்ச்சித் தயாரிப்புகள் பார்வை யாளர்களை முறையான சடங்குகளிலிருந்து ஒருவிதத்தில் விலக்கி வைக்கின்றன என்றாலும், அவர்களின் மனத்தில் சடங்குகளின் மீதான ஆழமான பிடிப்பை உறுதி செய்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அத்துடன் பல்வேறு வித்தியாசங்கள் கொண்ட வழிபாட்டுச் சடங்குகளைப் பின்பற்றும் பார்வையாளர்களிடம் பல்லினத் தன்மையை விலக்கி ஒற்றைத் தன்மைக்கு இட்டுச் செல்லவும் செய்கின்றன. இந்தப் பங்கேற்பு- விலகலும் ஈர்ப்பும் கொண்ட பங்கேற்பு ஊடகங்கள் உண்டாக்க வேண்டிய சிந்தனை பூர்வமான மாற்றத்திற்கு மாறாக, ஏற்கெனவே செல்லும் வழித் தடத்திலேயே பார்வையாளர்களைப் பயணிக்கச் செய்யக் கூடிய ஆபத்தைக் கொண்டது. ஒருவிதத்தில் பார்வை யாளர்களை விழா நிகழ்வுகளிலிருந்து தூரப்படுத்திவிட்டு, மனரீதியான ஒன்றிப்பை ஏற்படுத்தும் இந்த அம்சம் கீழ்த்திசை நாடுகளின் அரங்கியல் நிகழ்வுகள் அனைத்திலும் காணப்படுகின்ற ஒன்றே.
தொலைக்காட்சித் தொடர்களின் பார்வையாளர்களிடம் காணப்படும் பங்கேற்பு மறைமுகப் பங்கேற்பாகும். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட கால அளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளைத் தொடர்கள், மெகா தொடர்கள், என அழைக்கின்றனர். பெரும்பாலும் கதை தழுவிய காட்சிகளையும், புனைவுத் தன்மையையும், நிகழ்காலப் போக்கையும் கொண்ட தொடர்கள், தமிழ் வாழ்வின் முக்கியமான பொழுது போக்கு அம்சமாகவும், கருத்துருவாக்கக் கருவியாகவும் இருக்கின்றன. தனது பார்வையாளர்களைத் தொடர்ந்து பார்க்கும்படித் தூண்டியபடியே, தொடர்ந்து பார்க்க வேண்டிய அவசியத்தை வேண்டாத தொடர்கள் பற்றிய விவாதமே தொலைக்காட்சிகளைப் பற்றிய முக்கிய விவாதமும் கூட. விரிவாக அதனைக் குறித்து விவாதிக்கலாம்.
தொலைக் காட்சித் தொடர்கள்
தொலைக்காட்சி அலைவரிசைகளில் வரும் தொடர்களின் பொது இலக்கணம் என்ன என்று அறிய விரும்புகிறவர்களுக்காக ஒரு தகவல்.எபிசோடு ( Episode ) என்கிற ஆங்கிலச் சொல்லிற்கு உள்ள அகராதி அர்த்தத்திற்கும் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வட்டாரங்களில் பயன்பாட்டில் உள்ள அர்த்தத்திற்கும் எந்த உறவும் கிடையாது. இலக்கியத்துறை சார்ந்த சொல்லாடல்களில் எபிசோடு என்பது மையக் கதையிலிருந்து விலகிச் செல்லும் ஒரு கதையைக் குறிக்கும் ஒரு சொல் . உதாரணத்திற்கு ராமாயணத்தில் அகலிகை கதை ஒரு கிளைக்கதை. இந்தக் கதை இல்லையென்றாலும் ராமனின் கதையில் குறை வரப்போவதில்லை. ஆனால் ராமனின் குணாதிசயித்தைக் கூட்ட இந்தக் கதை உதவுகிறது. அந்த வகையில் அகலிகை கதை ராமாயணத்தோடு தொடர்புடைய கதை. தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை எபிசோடு என்பது கிளைக்கதை அல்ல; அது ஒரு அரை மணி நேர ஒளிபரப்பு; பாடலுடன் கூடிய எழுத்துக்களின் வருகை அதன் தொடக்கம், முந்தைய நாளின் தொடர்ச்சியைக் காட்டி அதனை நீட்டித்தல் முதல் பகுதி. விளம்பர இடைவேளை; அடுத்துக் கதைக்களன் மாற்றம்; விளம்பர இடைவேளை. அதனைத் தொடரும் கடைசிப் பகுதியில் கோபம் அல்லது வெறுப்பு அல்லது ஆச்சரியம் அல்லது .. .. .. என ஆவலைத் தூண்டும் மிகை உணர்வுடன் கூடிய முடிப்பு. இந்த இலக்கணம் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தமிழ்த் தொடர்களில் மாற்றமின்றியே உள்ளது.
தமிழ் பேசும் எல்லா அலைவரிசைகளுமே தொடர்களை ஒளிபரப்பிட விரும்புகின்றன. ஆனால் கதை தழுவிய மெகா தொடர்களை ஒளிபரப்பும் அலைவரிசைகளாக ஆறு மட்டுமே- பொதிகை, மக்கள், ராஜ், விஜய்,ஜெயா, சன் என- ஆறு மட்டுமே உள்ளன. இவ்வாறும் சேர்ந்து வாரத்திற்கு ஏறக்குறைய முப்பது தொடர்களை ஒளிபரப்புச் செய்கின்றன. கே.டி.வியில் , மறு ஒளிபரப்பாக வரும் தொடர்களும், சனி, ஞாயிறுகளில் ஒளிபரப்படும் வாராந்திரத் தொடர்களும் இதில் அடங்குவன அல்ல.ஒளிபரப்பப்படும் தொடர்களின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்துள்ள அலைவரிசை சன் தொலைக்காட்சி அலைவரிசைதான். நாள்தோறும்- வாரநாட்களில்- ஒவ்வொருநாளும் 13 தொடர்களை சன் தொலைக் காட்சி ஒளிபரப்புகிறது. அதனைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கை வரிசையில் இப்பொழுது நிற்பன விஜய், ஜெயா, ராஜ்,பொதிகை, மக்கள் தொலைக்காட்சிகள். ஒரு வார காலத்தைக் கணக்கிடும் காலமாகக் கொண்டு அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் ஒளிபரப்பாகும் தொடர்களைக் கணக்கிட்டால் மொத்த எண்ணிக்கை ஐம்பதை நெருங்கக் கூடும்.
ஒரு தமிழ் உயிரி விரும்பினாலும் ஒவ்வொரு நாளும் ஒளிபரப்பாகும் 35 தொடர்களையும் பார்த்துவிட முடியாது. வெவ்வேறு அலைவரிசைகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர்களின் விளம்பர இடைவேளைகள் கூட ஒரே நேரத்தில் வரும்படி ஒளிபரப்பாகின்றன. ஒவ்வொரு அரைமணி நேரமும் தொடருக்குரிய நேரமாகக் கணக்கிடப் பட்டு,அதுவும் மூன்று பகுதியாகப் பிர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்பா கின்றன. ஒரு தொடருக்கு அதிகமான விளம்பரங்கள் இல்லையென்ற போதிலும் ஒவ்வொரு அலைவரிசையும் தங்களது நிகழ்ச்சி பற்றிய விளம்பரங்களையாவது அந்த இடைவேளையில் ஒளிபரப்பி, இட்டு நிரப்பி, இலக்கணத்தை உருவாக்கிடவே முயல்கின்றன.
தொலைக்காட்சித் தொடர்கள் குறிப்பிட்ட கால அளவில் செய்து முடிக்க வேண்டிய அலுவலகப் பணிகள் என்று எதுவும் இல்லாத வீட்டுவேலைகளில் ஈடுபடும் பெண்களையே இலக்குப்¢ பார்வையாளர்களாகக் கருதுகின்றன. அவர்களே அந்த நேரங்களில் ஓய்வுப் பொழுதைக் கொண்ட- பார்ப்பதற்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடிய வெகுமக்கள் [ Mass audience] என்பதை உணர்ந்தே அத்தகைய இலக்கு தீர்மானமாகியுள்¢ளது. அதனுடன் தமிழ்ச் சினிமா தவறிவிட்ட ஒன்றைத் தொலைக்காட்சித் தொடர்கள் சரியாகப் பயன்படுத்துகின்றன என்பதையும் சொல்லியாக வேண்டும்.
நூறாண்டு வரலாறைத் தாண்டிவிட்ட தமிழ்ச் சினிமா படைத்திராத அளவுக்குத் தமிழ்ப் பெண்களின் பாத்திரங்களை இந்தத் தொடர்கள் உருவாக்கித் தந்துள்ளன. தமிழ்ச் சினிமா தமிழ்ப் பெண்களைப் படைத்துக் காட்டியதெல்லாம் வெறும் காதலிகளாகத்தான். லட்சியமும் வீரமும் கொண்ட ஆண்களால் காதலிக்கப்படுவதற்காகவும், அல்லது ஆண்களைக் காதலிப்பதற்காகவும் தான் தமிழ்ச் சினிமாவில் பெண்கள் கதாபாத்திரங்களாக வந்து போனார்கள். உருவாக்கி உலவவிட்ட கதாபாத்திரங்களில் எண்பது சதவீதம் காதலிகள் தான் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. எண்பது சதவீதக் காதலிகளுக்கிடையே அந்தக் காதலை எதிர்க்கின்ற அம்மாக்களாகவும் பாட்டி களாகவும் அத்தை களாகவும் அண்ணிகளாகவும் ஒரு பத்து சதவீதப் பெண்பாத்திரங்கள் வந்து போயிருப்பார்கள். இவர்கள் தவிர கதாநாயகனை மயக்கி வில்லனின் சதிவலையில் வீழ்த்திவிட விரும்பும் அடியாட்களில் ஒருத்தியாகச் சில பெண்கள் வந்து போயிருக்கிறார்கள்.
தமிழ்ச் சினிமாவின் வரலாற்றைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் பெண் தன்னிலை என்பது உடலால் ஆனது என்பது மட்டுமே அதன் கருத்தாகவும் நம்பிக்கையாகவும் , நடவடிக்கையாகவும் இருந்து வந்துள்ளது புரியக்கூடும். அதுவும் சமீபத்தில்- கடந்த பத்துப் பதினைந்தாண்டுகளில் வந்த வெகுமக்கள் ரசனைக்கான படங்கள் முழுக்க முழுக்கப் பெண்களை உடலால் ஆனவர்கள் மட்டுமே எனக் கருதியுள்ளது வெளிப்படையான உண்மை. இந்தப் பின்னணியில் யோசித்தால் தமிழ்ச் சினிமாவிற்கான நாயக நடிகைகள் தமிழ் பேசாத பிரதேசங்களிலிருந்து தேர்வு செய்கிற காரணங்கள் கூடப் புரிய வரலாம். மனம் / உள்ளத்தோடு தொடர்புடைய பேச்சு மொழியின் முக்கியத்துவம் தவிர்க்கப்பட்டு உடல்மொழியின் தேவை மட்டுமே போதும் எனக் கருதும் நிலையில் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் உடல்மொழியில் தேர்ச்சியும் லாவகமும் கட்டுப்பாடுகளுமற்ற மும்பை நடிகைகளைத் தேர்வு செய்வது இயல்பான ஒன்றே என்று கூடக் கூறலாம்.
தமிழ்ச் சினிமா, தமிழ்ப் பேசும் பெண்களைத் தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணி நடிகையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் தமிழ்மொழியைப் பேசாத- தாய்மொழியாகக் கொள்ளாத- பெண்கள் என்பது ஒரு விசயம் தான் என்றாலும் முதன்மையான புறக்கணிப்பு அதுவல்ல. நடப்பில் தமிழ் பேசும் பெண்கள் என்னவாக இல்லையோ அதையே அவர்களின் இருப்பாகக் காட்டிக் கொண்டேயிருந்தது. தமிழ்ப் பெண்களின் நடப்புக் கதாபாத்திரம் அல்லது தன்னிலை என்பது திரைப்படங்களில் வரும் காதலிகள் அல்ல என்பதை தமிழ்ப் பெண்கள் அறிந்தே இருந்தார்கள். அதன் காரணமாகத் தமிழ்ச் சினிமாவின் இயல்பான பார்வையாளர்களாக இருப்பதை அவர்கள் விருப்பத்துடன் தவிர்த்தும் வந்தார்கள்.குடும்பத்துடன் காணவேண்டிய படங்களுக்குக் கூட ஆணின் விருப்பம் காரணமாகவே சென்றார்கள்.தமிழ்ச் சினிமாவிற்கான பெண்பார்வையாளர் மனநிலை குறித்த இக்கூற்றுக்குத் தர்க்க பூர்வமான ஆதாரங்களைத் தரமுடியாது என்பது உண்மைதான். ஆனால் இன்று தொலைக் காட்சித் தொடர்களுக்குப் பெண்கள் இயல்பான பார்வையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவை அவர்களைப் புறக்கணிப்புச் செய்யாமல் என்னவாக இருக்கிறார்களோ அவ்வாறே காட்டிவருகிறது என்பதும் போதுமான ஆதாரங்களே.
தொலைக்காட்சி அலை வரிசைகளில் தற்சமயம் இடம் பெற்று வரும் தொடர்களின் பெயர்கள் வருமாறு; மனைவி, பந்தம், நிம்மதி, தீர்க்கசுமங்கலை, சொர்க்கம், கஸ்தூரி, ஆனந்தம், மலர்கள், அஞ்சலி, கோலங்கள், செல்வி, சூர்யா [ இவை சன் தொலைக்காட்சியில் வார நாட்களில் வரும் தொடர்கள்] வேப்பிலைக்காரி, ராஜராஜேஸ்வரி, [இவை வார இறுதி நாட்களான சனி , ஞாயிறுகளில் இடம் பெறும் தொடர்கள்]. ராஜ் டிவியில் கீதாஞ்சலி,கோபுரவாசல், சாரதா, விஜய் டிவியில் நதி எங்கே போகிறது, சலனம்,கண்டேன் சீதையை, காவ்யாஞ்சலி, ஜெயா டிவி யில் கல்கி , தகதிமிதா, கிரிஜா எம் ஏ.,கிருஷ்ணா காட்டேஜ், ஜெயம் ஆகியன வந்து கொண்டிருக்கின்றன. இத்தொடர்களும் சரி இதற்கு முன்பு வந்த தொடர்களும் சரி பெண்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டவை என்பதை அவற்றின் பெயர்களும் , அவற்றின் மையக் கதாபாத்திரங்களாக அமையும் பெண் பாத்திரங்களுமே உறுதி செய்கின்றன. இதற்கு முன்பு வந்து முதல் இடங்களில் இருந்த சில தொடர்களான சந்திரலேகா, அண்ணாமலை, பைரவி, ராகசுதா, மைதிலி, அண்ணி, அம்மா, மெட்டி ஒலி, தாய்மாமன், இணை கோடுகள், உணர்வுகள், மறுபக்கம், கேள்விகள் ஆயிரம், உறவு சொல்ல ஒருவன் போன்றனவும் கூட பெண் மையத்தொடர்கள் தான் என்பது கவனிக்க வேண்டியனவே.
இன்றைய தேதியில் பார்வையாளர்களின் விருப்பப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவை ஆனந்தமும் கோலங்களும் ஆகும். சன் தொலைக்காட்சியில் இடம் பெறும் இவ்விரண்டு தொடர்களைப் போல இரண்டு ஆண்டுகளுக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு தொடர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன. அவை மெட்டி ஒலி, அண்ணாமலை என்ற தொடர்களாகும். இன்று முதலிடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தம், கோலங்கள் தொடர்களுக்கும், முன்பு அந்த இடங்களைத் தக்க வைத்திருந்த அண்ணாமலை, மெட்டி ஒலி தொடர்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.
இருதளப்பார்வைகள்:
தமிழ்ச் சினிமா, தமிழ்ப் பேசும் பெண்களைத் தொடர்ந்து புறக்கணித்தே வந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் முன்னணி நடிகையாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் தமிழ்மொழியைப் பேசாத- தாய்மொழியாகக் கொள்ளாத- பெண்கள் என்பது ஒரு விசயம் தான் என்றாலும் முதன்மையான புறக்கணிப்பு அதுவல்ல. நடப்பில் தமிழ் பேசும் பெண்கள் என்னவாக இல்லையோ அதையே அவர்களின் இருப்பாகக் காட்டிக் கொண்டேயிருந்தது. தமிழ்ப் பெண்களின் நடப்புக் கதாபாத்திரம் அல்லது தன்னிலை என்பது திரைப்படங்களில் வரும் காதலிகள் அல்ல என்பதை தமிழ்ப் பெண்கள் அறிந்தே இருந்தார்கள். அதன் காரணமாகத் தமிழ்ச் சினிமாவின் இயல்பான பார்வையாளர்களாக இருப்பதை அவர்கள் விருப்பத்துடன் தவிர்த்தும் வந்தார்கள்.குடும்பத்துடன் காணவேண்டிய படங்களுக்குக் கூட ஆணின் விருப்பம் காரணமாகவே சென்றார்கள்.தமிழ்ச் சினிமாவிற்கான பெண்பார்வையாளர் மனநிலை குறித்த இக்கூற்றுக்குத் தர்க்க பூர்வமான ஆதாரங்களைத் தரமுடியாது என்பது உண்மைதான். ஆனால் இன்று தொலைக் காட்சித் தொடர்களுக்குப் பெண்கள் இயல்பான பார்வையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் அவை அவர்களைப் புறக்கணிப்புச் செய்யாமல் என்னவாக இருக்கிறார்களோ அவ்வாறே காட்டிவருகிறது என்பதும் போதுமான ஆதாரங்களே.
தொலைக்காட்சி அலை வரிசைகளில் தற்சமயம் இடம் பெற்று வரும் தொடர்களின் பெயர்கள் வருமாறு; மனைவி, பந்தம், நிம்மதி, தீர்க்கசுமங்கலை, சொர்க்கம், கஸ்தூரி, ஆனந்தம், மலர்கள், அஞ்சலி, கோலங்கள், செல்வி, சூர்யா [ இவை சன் தொலைக்காட்சியில் வார நாட்களில் வரும் தொடர்கள்] வேப்பிலைக்காரி, ராஜராஜேஸ்வரி, [இவை வார இறுதி நாட்களான சனி , ஞாயிறுகளில் இடம் பெறும் தொடர்கள்]. ராஜ் டிவியில் கீதாஞ்சலி,கோபுரவாசல், சாரதா, விஜய் டிவியில் நதி எங்கே போகிறது, சலனம்,கண்டேன் சீதையை, காவ்யாஞ்சலி, ஜெயா டிவி யில் கல்கி , தகதிமிதா, கிரிஜா எம் ஏ.,கிருஷ்ணா காட்டேஜ், ஜெயம் ஆகியன வந்து கொண்டிருக்கின்றன. இத்தொடர்களும் சரி இதற்கு முன்பு வந்த தொடர்களும் சரி பெண்களை இலக்குப் பார்வையாளர்களாகக் கொண்டவை என்பதை அவற்றின் பெயர்களும் , அவற்றின் மையக் கதாபாத்திரங்களாக அமையும் பெண் பாத்திரங்களுமே உறுதி செய்கின்றன. இதற்கு முன்பு வந்து முதல் இடங்களில் இருந்த சில தொடர்களான சந்திரலேகா, அண்ணாமலை, பைரவி, ராகசுதா, மைதிலி, அண்ணி, அம்மா, மெட்டி ஒலி, தாய்மாமன், இணை கோடுகள், உணர்வுகள், மறுபக்கம், கேள்விகள் ஆயிரம், உறவு சொல்ல ஒருவன் போன்றனவும் கூட பெண் மையத்தொடர்கள் தான் என்பது கவனிக்க வேண்டியனவே.
இன்றைய தேதியில் பார்வையாளர்களின் விருப்பப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவை ஆனந்தமும் கோலங்களும் ஆகும். சன் தொலைக்காட்சியில் இடம் பெறும் இவ்விரண்டு தொடர்களைப் போல இரண்டு ஆண்டுகளுக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரண்டு தொடர்கள் முதலிரண்டு இடங்களைப் பிடித்திருந்தன. அவை மெட்டி ஒலி, அண்ணாமலை என்ற தொடர்களாகும். இன்று முதலிடங்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆனந்தம், கோலங்கள் தொடர்களுக்கும், முன்பு அந்த இடங்களைத் தக்க வைத்திருந்த அண்ணாமலை, மெட்டி ஒலி தொடர்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.
இருதளப்பார்வைகள்:
நான்கு தொடர்களுமே நெருங்கிய உறவினர்களிடையே எழும் குடும்பப் பிரச்சினைகளைப் பற்றியன என்பது முதல் ஒற்றுமை. முன்பு அண்ணாமலையில் மையமாக இருந்தது சொத்துப் பிரச்சினைதான் என்றாலும் குடும்ப உறுப்பினர் களுக்கிடையே இருக்க வேண்டிய உறவுகள் பற்றியே அதிகம் விவாதித்தது. அதே போல் மெட்டி ஒலியில் மையமாக இருந்தது இரண்டு குடும்பங்களின் திருமணங்கள் தான். கணவன் இல்லாத குடும்பத் தலைவி, மனைவி இல்லாத குடும்பத் தலைவன் என்ற எதிர்வுகளுக்குள் இரண்டு குடும்பங்கள் கொண்ட உறவும் முரணும், விரிவான விவாதங்களுக்குள்ளானதே அம்மெட்டி ஒலியின் பரவலான கவனிப்புக் காரணங்களாக இருந்தன.
இந்தக் கவனிப்பை இன்று ஆனந்தமும் கோலங்களும் பெற்றுள்ளதோடு தக்க வைத்துக் கொண்டும் வருகின்றன. ஆனந்தம் தொடரில் மையமாக இருப்பது சொத்துப் பிரச்சினைதான். மூன்று பங்குதாரர்கள் பிரிந்த பின்பு ஏற்பட்ட வன்மம்,பகை, நட்பு போன்றன அடுத்த தலைமுறையினரிடையே எத்தகைய விளைவுகளை உண்டாக்குகின்றன என்பதைப் பேசும் ஆனந்தம், ஒருவிதத்தில் குடும்பத் தொடராகவும், இன்னொரு விதத்தில் துப்பறியும் தொடராகவும் திருப்பங்களோடு நகர்ந்து நீள்கிறது. துப்பறியும் கதைகள் எழுதும் தேவிபாலாவின் கதையில் குடும்ப உறவுகள் சார்ந்த விவாதங்களை உள்ளடக்கமாக ஆக்கியதே தொடர் இயக்குநரின் திறன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் மெட்டி ஒலி , அசலான குடும்பச் சிக்கல் மையத் தொடர். முதல் மனைவியைப் பிரிந்த சென்று வேறு திருமணம் செய்து கொண்ட ஒரு பணக்காரரின் மூத்த தாரX இளையதாரப் பிள்ளைகளின் மோதலாக வடிவமைக்கப் பட்டுள்ள கோலங்கள், அந்த ரகசியத்தைப் பாத்திரங்களிடையே தக்க வைத்து விட்டுப் பார்வையாளர் களுக்குத் திறந்து வைத்துள்ளது. பெண்ணின் தைரியம், தனித்திறன், ஆண்- பெண் நட்பு, தொழில் அறிவு, தன் காலில் தானே நிற்றல் என்ற குணங்களைப் பெண்ணுக்கு அளிக்க முனையும் கோலங்கள் ஒரு விதத்தில் பெண்களின் சிந்தனையில் நேர்மறை அம்சங்களை உண்டாக்கவல்ல தொடர் என்றே சொல்லலாம். புதிய உலகத்துப் பெண்களின் பிரதிநிதிகளாக வரும் அபி, உஷா, ஆனந்தி, ஆர்த்தி, போன்ற பாத்திரங்களின் வார்ப்பு ஒருவித வகைமாதிரிப் பாத்திரங்கள் என்றே சொல்லலாம்.
பகலில் காலை 11.00 மணி முதல் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் முன்னிரவு 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை ஒளிபரப்பாகும் தொடர்களுக்கும் உள்ளடக்கத்திலும், சொல்ல வரும் செய்திகளிலும், உண்டாக்கும் விவாதங்களிலும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.பகலில் வரும் தொடர்களின் பின்புலங்களும் நிகழ்வெளியும் குறிப்பான அடையாளங்களைத் தவிர்த்துப் பொதுநிலைப்பட்ட தன்மையில் அமைக்கப்படுகின்றன. குடும்பம், வீட்டு நிர்வாகம், மனைவி, மகள், மருமகள் என்ற பாத்திரங்களுக்குள்¢ளேயே அந்தத் தொடர்கள் வடிவம் பெற்றுள்ளன. அத்துடன் அலுவலகப் பணிக்காகவும் , தன்னடையாளத்தை நிறுவவும் வீட்டிற்கு வெளியே செல்ல நேர்ந்த பெண்களின் சிக்கல்களை அதிகமும் கவனப்படுத்துகின்றன அத்தொடர்கள். மனைவி, பந்தம், நிம்மதி, தீர்க்க சுமங்கலி, சொர்க்கம், மலர்கள், கஸ்தூரி போன்ற தொடர்களில் தியாகம் நிரம்பிய பெண்களையும், விட்டுக் கொடுத்து வாழும் பெண்களையும் அத்தொடர்கள் முன்னிறுத்துகின்றன. விஜய் தொலைக்காட்சியில் வரும் காவ்யாஞ்சலி, நதி எங்கே போகிறது போன்ற தொடர்களும் ராஜ் தொலைக்காட்சியின் கீதாஞ்சலி, கோபுர வாசலில், சாரதா போன்ற தொடர்களும் பெண்களின் தன்னிலைகளைப் பெரும்பாலும் தியாகம், நேர்மை, அன்பு, விட்டுக் கொடுத்தல், உழைப்பு என்பனவற்றின் வடிவங்களாகவே முன்னிறுத்துக் காட்டுகின்றன.
தொடர்களின் பார்வையாளர்களாகக் கிராமத்துப் பெண்களும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் அவர்களை ஒதுக்கியே வரும் தொடர்கள் யதார்த்தமாகக் கதைப்பின்னல்களை அமைத்தாலும் தமிழ் வாழ்வின் கதைகள் இவை அல்ல என்று கூறுவிடும் நிலையிலேயே உள்ளன.இந்த ஒதுக்குதலின் பின்னணியில் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பு வசதிகளும், நடிப்புத் தொழிலின் சாத்தியங்களும் குறுக்கிடு கின்றன என்பன ஓரளவு உண்மைதான். ஆனால் தனது பார்வையாளப் பரப்புக்கு நம்பிக்கையூட்டுவதையும் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை உண்டாக்க விரும்புவதையும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு படைப்பாளி கடினமான சில தேர்வுகளைச் செய்து தான் ஆக வேண்டும். ஆனால் தொடர்களின் இயக்குநர்கள் அத்தகைய தேர்வுகளைச் செய்வதே இல்லை. அவர்களின் தேர்வுகள் எல்லாம், பெருநகரம், மற்றும் நகரம் என்பதான வெளி சார்ந்த தேர்வு களாகவும், நடுத்தர வர்க்கம், மற்றும் மேல் நடுத்தர வர்க்கம் என்பதான பொருளாதார நிலை சார்ந்த தேர்வு களாகவுமே இருக்கின்றன.
பெரும்பாலும் குடும்பவெளி என்ற எல்லைக்குள் நின்று ஆண், பெண் உறவுகள், குடும்பங்களுக்கிடையேயான சிக்கல்கள், ஓரளவு பொருளாதார முரண்கள் என்ற எல்லைக்குள்ளேயே நிற்கும் தொடர்கள், குறிப்பான இந்திய சமூகத்தின் பிரச்சினைகளைப் பேசத் தயாராக இல்லை என்பதைக் கடந்த காலத் தயாரிப்புக்களிலும் காண முடிந்தது; நிகழ்காலத் தயாரிப்புகளிலும் காண முடிகின்றது. இதுவரை வந்துள்ள தொடர்கள் - அவை மெகாத் தொடர்களாயினும் சரி ,குறுந்தொடர்களே ஆயினும் சரி , இந்திய சமூகத்தின் அடிப்படை முரண்பாடுகளான சாதிய ,சமய, மொழி சார்ந்த முரண்பாடுகளையெல்லாம் ஒருசதவீதம் கூடப் பேசத் தொடங்கவில்லை என்பது மறைக்க முடியாத- மறுக்க முடியாத உண்மை. மறைமுகமாகக் கூட சாதி வேறுபாடுகளின் குறியீடுகளை இத்தொடர்கள் கொண்டுவரவில்லை என்பதே அவை உண்மையான முரண்பாடுகளைக் கண்டு எவ்வளவு தூரம் பயப்படுகின்றன என்பதைக் காட்டக்கூடிய ஒன்றாகும்.
புதிய வரவும் வரவேற்கத்தக்க மாற்றங்களும்
தொலைக்காட்சிப் பெட்டித் தமிழ் பேசத் தொடங்கி கால் நூற்றாண்டுக்கு மேலாகி விட்டது. அரசின் தொலைக்காட்சி அலைவரிசையான தூரதர்ஷனின் தமிழ் வெளிப்பாடான பொதிகை என்ற பெயரைச் சூட்டிக் கொண்டதற்கு முன்பே தமிழ் அலைவரிசையாக அறியப்பட்ட தொலைக்காட்சி நிறுவனம் சன்.ஏறத்தாழ அதன் தோற்றம் முதலே அதற்குப் போட்டியாக ஒரு அலைவரிசையை தமிழ் நாட்டில் இன்னொரு நிறுவனம் உண்டாக்க இயலவில்லை. அதற்குப் பின்பு தோன்றிய ராஜ், ஜெயா, தமிழன்,விண் , விஜய் போன்ற அலைவரிசைகள் எல்லாம் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்காமல் சன் தொலைக் காட்சி போட்ட பாதையிலேயே பயணம் செய்தன. திரைப்படங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள்,பிரபலங்களின் சந்திப்புகள், பேட்டிகள், எனத் தொடங்கி, சன் தொலைக்காட்சி ஒளிபரப்பும் குறுந்தொடர்கள், மெகா தொடர்கள் எனக் காட்டி வருகின்றன.
அலுப்பூட்டும் இந்தப் போலச் செய்தலிலிருந்து மாற்றத்தை உண்டு பண்ணும் நோக்கத்தோடு விஜய் தொலைக்காட்சி மெல்ல மெல்லப் புதிய பாதைகளைத் தெரிவு செய்து வருகிறது. தொடக்கத்தில் தமிழகத் தனியார்களின் உடைமையாக இருந்த விஜய் தொலைக்காட்சி பல தனிநபர்களிடம் கைமாறிய பின் இப்பொழுது பன்னாட்டு ஊடக வலைப்பின்னல்களில் ஒன்றான நட்சத்திரக் குழுமத்தின் ( Star group) வசம் வந்துள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை உருவாக்கிவரும் அந்தக் குழுமம், தமிழ் நாட்டின் தொலைக்காட்சிப் பார்வையாளர்களை மேற்கத்திய மனநிலையுடன் ஒத்த நிலைக்கு மாற்றும் விதமாக நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளதற்கான அடையாளங்களை வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக முக்கிய நேரம் ( Prime time) எனப்படும் இரவு 8.00 மணி முதல் 10.30 வரையிலான நேரத்தில் விஜய் தொலைக்காட்சி புதிய புதிய நிகழ்ச்சிகளைத் தந்து பார்வையாளர்களைத் தொடர்களின் பிடியிலிருந்து மாற்றி வருகிறது. முழுக்கவும் பொழுது போக்கு என்ற அம்சத்திலிருந்து விலகியனவாகவும், அதிகமான பங்கேற்பாளர்களை உள்வாங்கும் தன்மை யுடையனவாகவும் அமைக்கப்படும் அதன் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் சிந்தனை பூர்வப் பங்கேற்பை வேண்டுவனவாக உள்ளன. அறிவூட்டலை முக்கிய நோக்கமாகக் கொண்ட வசூல் ராணி, யார் மனசிலே யாரு? போன்ற நிகழ்ச்சிகளைத் தயாரித்த விஜய் தொலைக்காட்சி திறமையாளர்களை அடையாளப்படுத்தும் கலக்கப் போவது யாரு, EQ, ஜோடி நம்பர் ஒன் முதலான நிகழ்ச்சிகளைத் தயாரித்துத் தனது தனி அடையாளத்தை நிறுவி வருகிறது. பிரபலங்களைச் சந்தித்துப் பேசும் விதமாக அமைக்கப்படும் காபி வித் அனு, இளைஞர்கள் சந்தித்துத் தங்களின் காதல் அனுபவங்களை விவாதிக்கும் ஜில்லென்று ஒரு காதல் போன்ற நிகழ்ச்சிகளும் புதிய அனுபவங்களையும் எல்லைகளையும் திறக்கின்ற நிகழ்ச்சிகள் என்றே சொல்லலாம். மிக நீண்ட காலமாக வந்து கொண்டிருக்கும் குற்றம்.. ! நடந்தது என்ன? போன்ற சமூக அக்கறை கொண்ட துப்பறியும் தொடர்நிகழ்ச்சிகளையும் விஜய் தொலைக்காட்சியில் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடுநிலையுடன் கூடிய செய்திகளையும் விவாதங்களையும் ஒருங்கிணைத்த விஜய் தொலைக்காட்சியின் ஊடக அறம் (Media ethics)வரவேற்கத்தக்க அறம் என்பதை அதன் தொடர் பார்வை யாளர்களாக இருப்பவர்கள் ஒத்துக் கொள்ளவே செய்வர்.
2006 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சி அலைவரிசை செய்துவரும் மாற்றங்களைப் பற்றிப் பேசும் வேளையில் இந்த ஆண்டில் நடந்துள்ள இன்னொரு புதிய வரவையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியுள்ளது. மக்கள் தொலைக்காட்சி என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்ததாக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று இந்த ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிகளாக மாறி மாறித் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற அச்சு ஊடகங்களையும் தொலைக்காட்சி ஊடகங்களையும்¢ பயன்படுத்தியதைப் போலப் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் ஒரு அலைவரிசை தேவை என அக்கட்சி கருதியதின் விளைவாக இருக்கலாம். மக்கள் தொலைக் காட்சியின் நோக்கமும் விருப்பமும் அரசியல் அதிகாரம் சார்ந்ததாக இருந்தாலும், அதன் நிகழ்ச்சி வெளிப்பாடுகளில் முற்றிலும் அரசியல் சாயம் வெளிப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் மொழி, பண்பாடு, தமிழ்நாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் பாட்டாளி மக்கள் கட்சியின் பார்வைகளுக்கேற்ப மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன. நூற்றுக்கு எண்பது சதவீதத்திற்கும் மேலான திரைப்படங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளை மற்ற அலைவரிசைகள் ஒளிபரப்பும் நிலையில் மக்கள் தொலைக்காட்சி, திரைப்படங்களையும், திரைப்படத் துணுக்குகளையும், திரைப்பிரபலங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு சொந்தத் தயாரிப்புகளையே ஒளிபரப்பி வருகிறது. வாசிப்பை ஊக்குவித்தல், கல்வி, கலை, அறிவியல், சமூகப்பணி சார்ந்த துறைகளில் முக்கியப் பங்காற்றிய மனிதர்களோடு சந்திப்பு என அதன் நிகழ்ச்சிகள் அமைந்து வருகின்றன. அதன் செய்திகளிலும் கூட அதிகச் சார்பை வெளிப்படுத்தாமல், மக்கள் குறைகள், தேவைகள் எனக் கவனஞ்செலுத்தி செய்திகள் உருவாக்கப்பட்டு வாசிக்கப் படுகின்றன. இவையெல்லா வற்றையும் விட மக்கள் தொலைக் காட்சியின் தேர்வுகள் முழுக்கவும் சென்னையை மையமிட்டதாக இல்லாமல், தமிழ்நாட்டின் பிற நகரங்களையும், கிராமங்களையும் மையமிட்ட நிகழ்ச்சிகளாக இருக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அதன் பின்னணியில் கலை, இலக்கியம், சமூகப் பொறுப்பு, மாற்றத்தை மையமிட்ட அரசியல் உணர்வு எனத் தங்களை வெளிக்காட்டி வந்த நபர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாக இருப்பது காரணமாக இருக்கலாம்.
நிறைவுரை
மொழி என்பது தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே என்று நம்பப்பட்ட காலம் முடிந்து சில பத்தாண்டுகள் கடந்து விட்டன. குறிப்பாக மொழியியல் துறையின் வளர்ச்சியும், அதன் அங்கமாக சமுதாயமொழியியல், அமைப்பியல், பின்னை அமைப்பியல் , குறியியல் எனப் புது புதுக் கிளைகள் பிரிந்து வளர்ந்ததன் விளைவாக, மொழி என்பதற்குத் தரப்பட்ட வரையறைகள் மாறியதோடு, மொழியின் கூறுகள் எவை என்பதை விளக்குவதிலும், மொழியின்¢ சாத்தியங்கள் எத்தகையன என்பதைப் பேசுவதிலும் கூடப் பலவிதமான புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன. மனித அறிவு பற்றிய வரையறைகளும் நம்பிக்கைகளும் தொடர்ந்து மாற்றம் பெற்று வருகின்றன. இந்த மாற்றங்களின் விளைவாகத் தகவல், தகவல் திரட்டு, அவற்றை நுகர்வோருக்குப் பரப்பி வைத்தல் என்ற தொடர் வினைகளிலும் கூடக் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மொழி பற்றிய வரையறைகள் மாறிவிட்டது போலவே எல்லாவற்றையும் கலை என்ற பொதுச் சொல்லால் குறிப்பிட்ட காலமும் முடிந்து விட்டது. ஒன்று கலையாக இருக்கும் அதே நேரத்திலேயே ஊடகமாகவும், ஊடகங்களை வளர்த்தெடுக்கும் வணிக விதிகளோடும் விளங்குகின்றன. கலை, ஊடகம், வணிகம் ஆகியவற்றிற்கிடையே பருண்மையான வேறுபாடுகளும் குறிப்பான வித்தியாசங்களும் உண்டு. எழுத்துக்கலைகளான இலக்கியங்களுக்குள்ளும் வேறுபாடுகள் இருப்பதுபோல நிகழ்த்துக் கலைகளுக்குள்ளும் தனித்த வேறுபாடுகள் உண்டு. வித்தியாசங்களோடும் வேறுபாடுகளோடும் கலை வடிவங்களில் மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்பட்டது போலவே, தகவல்களைத் தனிமனிதனுக்கும் கூட்டத்திற்கும், பெருங்கூட்டத்திற்கும், கூட்டமல்லா கூட்டத்திற்கும் கொண்டு சேர்க்கும் ஊடகங்களின் தொழில் நுட்ப வளர்ச்சியும் கூடவே வளர்ந்துள்ளன. இந்தப் பின்னணியில் தமிழ் அலைவரிசைகளின் இயங்குநிலையை, அதன் வெகுமக்கள் பண்பாட்டு உருவாக்க அம்சங்களோடு புரிந்து கொள்வதும், அவற்றில் பங்கேற்பதும், பங்கேற்காமல் ஒதுக்குவதும் எனச் செயல்படுவதே புத்திபூர்வமான மனித உயிரியின் வினைகளாகவும், எதிர்வினைகளாகவும் இருக்கக் கூடும்.
===========
தமிழ்க் கொடி 2006 என்ற தொகுப்பு நூலுக்காக 19-12-2006 அன்று எழுதப்பட்ட கட்டுரை
கருத்துகள்