கதவைத் திறந்து வையுங்கள் ; காற்றுக்காக மட்டுமல்ல.


அதைப் பயணம் எனச் சொல்வதை விடப் பங்கேற்பு என்றே சொல்ல வேண்டும். அந்தக் கல்லூரிக்குத் தரப்பட்ட   தன்னாட்சி நிலையை மேலும் தொடரலாமா? இல்லையென்றால் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் பழையபடி கொண்டு வந்து விடலாமா? எனப் பரிந்துரைக்கும் பல்கலைக்கழகக் குழு ஒன்றின் உறுப்பினராகச் சென்றிருந்தேன். நான் அந்தக் கல்லூரிக்குப் புதியவன். பிற பல்கலைக்கழக வல்லுநர் என்ற வகையில் அக்குழுவில் இடம் பெற்றிருந்தேன்.   
பொதுவாகப் பல்கலைக்கழகங்களுக்கும் கல்லூரிகளுக்கும் இடையேயுள்ள உறவுகளில் தேர்வுகள் சார்ந்த உறவுகளே அதிகம். ஒரு கல்லூரியில் பல்கலைக்கழகங்களின் அனுமதி பெற்றுத் தொடங்கப்படும் பல்வேறு பாடங்களுக்கும், பாடத் திட்டக்குழுக்கள் தயாரித்தளித்துள்ள பாடங்களின் அடிப்படையில் தேர்வுகள் நடத்தி, மதிப்பீடு செய்து, மதிப்பெண்களை வழங்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கும். மாணாக்கரின் படிப்புக் காலம் முடியும் போது பட்டங்களை வழங்கும். கல்லூரிகள் தனியாகப் பட்டங்களை வழங்கிக் கொள்ள முடியாது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களே செல்லுபடியாகும்.
தேர்வுகள் சார்ந்த பணியோடு ஆசிரியர்களின் தகுதி, கல்லூரியின் வேலை நாட்கள், நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் சிக்கல்கள் போன்றவற்றில் ஆலோசனைகளை வழங்கும் வேலையையும் பல்கலைக்கழகங்கள் செய்து வருகின்றன. ஒரு கல்லூரிக்குத் தன்னாட்சி வழங்கப்பட்டு விட்டால் அந்தக் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்குப் பல்கலைக்கழகம் பட்டத்தை மட்டும் வழங்கும். மற்ற பணிகள் அனைத்தையும் அந்தக் கல்லூரி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளும்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்னாள் தன்னாட்சிக் கல்லூரி என்ற கருத்துருவை அறிமுகம் செய்தவர்கள் அதன் சாதகமான அம்சங்களை மட்டுமே முன்மொழிந்து வரவேற்பளித்தனர். ஜனநாயக சமூகத்தின் பொதுநியதியே அதுதான். சாதகமான கூறுகளுக்காகப் பலதிட்டங்களையும் கருத்துருக்களையும் சோதனை செய்து பார்ப்பதும் நேர்மறை விளைவுகளைத் தரும்வரை தொடர்ந்து செயல்படுத்துவதும், எதிர்மறை விளைவுகள் அதிகம் என்றால் கைவிடுவதும் தான் அதன் நடைமுறை. தன்னாட்சிக் கல்லூரி என்ற கருத்துரு தொடக்க நிலையில் அதிகப் பலன்களைத் தந்தது என்பது உண்மைதான். ஆனால் அடிப்படைவாதக் கருத்தியல்களான உள்ளூர் ஆதிக்கவாதம், சாதியம், மதம், இனம் சார்ந்து யோசித்து முடிவுகள் எடுக்கப்படும் இந்தியாவில் எந்தவொரு ஜனநாயகக் கருத்தியலும் ஆரம்பிக்கப்பட்ட சிலகாலங்களிலேயே எதிர்மறை விளைவுகளை நோக்கியே பயணம் செய்கின்றன.
அந்தக் கல்லூரியின் தேர்ந்த ஆசிரியர்களும் நிர்வாகமும் அக்கல்லூரியில் நீண்ட நெடிய வரலாற்றையும், தற்போதைய தன்னாட்சியால் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் விளக்கும் அறிக்கைகளை எங்கள் குழுவினர் ஒவ்வொருவரிடமும் வழங்கினர். கல்லூரியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் திரையில் படங்களாகவும் நகர்த்திக் காட்டப்பட்டன. அதன் பின்னர் குழுவின் உறுப்பினர்கள் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து அக்கல்லூரியின் துறைகளைப் பார்வையிடச் சென்றனர்.
துறைசார்ந்த அடிப்படை வசதிகள் இருக்கின்றனவா? எனப் பார்ப்பதோடு, அத்துறையின் மாணாக்கர்களையும், ஆசிரியர்களையும் நேரடியாகச் சந்தித்து நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையின் உண்மைத்தன்மையை அறியும்-  கண்காணிப்பின் ரகசிய முடிச்சுகளை அவிழ்க்கும் – நோக்கம் இந்த நேரடிப் பார்வையில் உண்டு. நீண்ட காலமாக –பொன்விழாவைத் தாண்டி இயங்கும் அக்கல்லூரியில் அடிப்படைக் கட்டுமானங்களும் தேவைகளும் போதுமான அளவு இருப்பதாகவே குழு உறுப்பினர்கள் திருப்தி பட்டுக் கொண்டோம். மாணாக்கர் சந்திப்புக்குப் பின் ஆசிரியர்களோடு சந்திப்பு தொடங்கியது.
இதுவரை இருந்த இறுக்கம் குறைந்து சாதாரணமான உரையாடலாக மாறும் வாய்ப்புக் கொண்டது. நாங்கள் வெளியே இருந்து வந்திருக்கும் ஆசிரியர்கள்; அவர்கள் உள்ளே இருப்பவர்கள். இது ஒன்றுதான் வேறுபாடு. துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேநீரைப் பருகியபடி பேச்சுக்கள் தொடங்கின. எங்கள் குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் அந்தத்துறையின் ஆசிரியர்களைச் சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளும்படி சொல்லிவிட்டு அமைதியானார். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பெயர், கல்லூரி ஆசிரியராகத் தங்கள் அனுபவம், தங்களது சிறப்புப் பாடம் என அறிமுகம் செய்த போது நீங்கள் பயின்ற கல்லூரிகளையும் சொல்லுங்கள் என்றார் அந்த மூத்த உறுப்பினர்.
இந்தக் கேள்விக்கு அந்தத்துறையின் தலைவர் மிகுந்த மகிழ்ச்சியோடு “எங்கள் துறையில் மொத்தம் 21 பேர். அதில் இரண்டு பேர் தான் வேறு கல்லூரிகளில் படித்துவிட்டு இங்கே பணியாற்றுகின்றனர். மற்ற அனைவரும் எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் தான் என்றார். தங்கள் கல்லூரியிலேயே பட்டப்படிப்பு, பட்ட மேல்படிப்பு வசதிகளோடு ஆய்வுப் பட்டம் பெறும் வசதியும் இருக்கிறது. எங்கள் துறையில் யாராவது ஒருவர் பணி ஓய்வு பெறும்போது எங்கள் கல்லூரியின் முன்னாள் மாணவர்களில் ஒருவருக்கே அந்த வாய்ப்பை வழங்குகிறோம்” என்றார். அப்படிச் சொல்லும்போது தன் மகனுக்குச் சொத்துச் சேர்த்து வைத்துக் கைமாற்றிக் கொடுக்கும் தந்தையின் மகிழ்ச்சி  இருந்தது அவரிடம்.
”முன்னாள் மாணவர்களுக்கு வேலை தரும் திட்டம் உங்கள் துறையில் மட்டும் இருக்கிறதா? உங்கள் கல்லூரியின் அனைத்துத் துறைகளிலும் இதே திட்டம் தான் செயல்படுகிறதா?” எனத் திரும்பவும் கேட்டார் எங்கள் குழுவின் உறுப்பினர். ”எல்லாத்துறைகளிலும் இப்படி இருக்கிறது எனச் சொல்ல முடியாது; சில துறைகள் முன்னாள் மாணவர்களை எடுப்பதே இல்லை; ஆனால் நாங்கள் அப்படி இல்லை, முன்னாள் மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற திட்டத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறோம்; கல்லூரி நிர்வாகம் இந்தத் திட்டத்தை வரவேற்கவே செய்கிறது“ என்றார். சொன்னவர் அப்படி வேலை வழங்குவதால் உள்ள சாதகமான கூறுகளை எல்லாம் அடுக்கத் தொடங்கினார். அறிமுகமான இடம், அறிமுகமான மனிதர்கள், இருக்கும் வேலைகள் என எல்லாம் ஏற்கெனவே நன்கு அறிமுகம் என்கிறபோது வேலை வாங்குகிறவர்களுக்கும் வேலை பார்க்க வருபவர்களுக்கும் சிக்கல்கள் இல்லாமல் இருக்கும் தானே என்றார். அவர் சொன்ன கருத்துக்கள் எனக்குச் சரியென்றே பட்டது. நான் படித்த கல்லூரி எனக்கு வேலை தராமல் வெளியில் அனுப்பியபோது நான் அடைந்த வருத்தம் எனக்கு நினைவுக்கு வந்தது. தொடர்ந்த உரையாடல் இன்னும் பல செய்திகளை எங்களுக்குச் சொன்னது.
கடைசியாக ஒரு கேள்வி என்றார் குழுவின் மூத்த உறுப்பினர்.  ”இந்தக் கல்லூரிக்கு உங்கள் துறையின் முக்கியமான பங்களிப்பு என்ன என்று சொல்ல முடியுமா?”. அந்தக் கேள்வி துறையின் தலைவரை நோக்கிய கேள்வி என்பதால் அவரே தொடர்ந்தார். பல்கலைக்கழகப் பிரதிநிதி உள்படப் பலரும் இருக்கும் பாடத்திட்டக் குழு தயாரிக்கும் பாடத் திட்டத்திற்கேற்ற பாடங்களை எங்கள் துறை ஆசிரியர்களே எழுதித்  தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறோம். அதன் மூலம் வரும் வருமானம் எங்கள் கல்லூரிக்குச் சேர்கிறது”  என்றார். இந்த இரண்டு கூறுகளும் முழுவதும் நேர்மறையான அம்சங்கள் கொண்டதுதானா? என்ற கேள்வியைக் கேட்டு விவாதிக்க விருப்பம் இருந்தாலும் இப்போது இங்கே அதைச் செய்யக் கூடாது என்று சொன்னார் எங்கள் குழுவின் தலைவர் போலச் செயல்பட்ட அந்த மூத்த உறுப்பினர்.
ஏன் இதைத் தவிர்க்க வேண்டும் என்ற வினா எனக்குள் ஓடிக் கொண்டே இருந்தது. விவாதத்தைக் கிளப்பித் தெளிவு படுத்தலாமே என்று எனக்குப் பட்டது. ஆனால் வந்த் வேலை அவர்களுக்கு வழிகாட்ட அல்ல; இருப்பதைப் பார்க்கவும், அதைப் பற்றிய மதிப்பீடுகளைத் தரவும் தான் என்பதால் நாங்கள் கிளம்பத்தயாரானோம். எழுந்து நின்ற பின் அந்த மூத்த உறுப்பினர், “ கடைசியாக ஒரு கேள்வி ” என்றார். இந்தக் கேள்வி துறை சார்ந்த கேள்வி அல்ல; உங்கள் சிந்தனைக்கானது என்று சொல்லி விட்டு அந்தக் கேள்வியை முன் வைத்தார்.
“ ரத்த உறவுடைய ஒரே குடும்பத்திற்குள் திருமண உறவு கொள்ளும் குடும்பங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” இந்தக் கேள்விக்கு அங்கிருந்த இளைய ஆசிரியர் ”அது சரியல்ல; உடல் குறையும் மூளைவளர்ச்சியும் அற்ற சந்ததிகளையுமே அத்தகைய திருமணங்கள் உருவாக்குகின்றன” என்றார். அத்தோடு மூத்தவர்களின் ஆதிக்கத்தால் இளையவர்களின் வளர்ச்சியும் தனித்தன்மையும் அழிக்கப்படுகின்றன என்றும் சொன்னார். உங்கள் துறையின் செயல்பாடுகளை அதோடு பொருத்திப் பாருங்கள் என்று சொல்லிவிட்டு ”நாங்கள் வருகிறோம் “ என்று வெளியேறினார்.
நான் படித்த கல்லூரி எனக்கு வேலை தராததால் நான் மூன்றாவது இடத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்; அடுத்து இதைவிட நல்ல இடம் கிடைத்தால் தாவி விடும் மனநிலையில் நான் இருக்கிறேன். இதற்கும் அதற்கும் தொடர்பு இருக்கக் கூடும் என மனம் சொல்லியது. காற்று உள்ளே வருவதற்காக மட்டுமல்ல; உள்ளே இருப்பவர்கள் வெளியே சென்று மலைக்காற்றையும் கடல்காற்றையும் சுவாசிக்க கதவுகள் திறக்கப்பட்டாக வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

நவீனத்துவமும் பாரதியும்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…