மறதியின் புதை சேற்றில் :பொதுத்தேர்தல்கள் குறித்த ஒரு பரிசீலனை


2011,மார்ச்,19 – நடக்கப்போகும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வமான பணிகள் தொடங்கும் நாள். “தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதிகாரம் செலுத்தப் போகும் அரசமைப்பின் அடித்தள உறுப்பினருள் ஒருவராக இருக்க நான் விரும்புகிறேன்” எனத் தன்னை முன் மொழிந்து வேட்பு மனுத் தாக்கல் செய்யும் முதல் நாள். அன்று தொடங்கும் இந்த முன் மொழிதல்கள் ஒருவார காலத்திற்குத் தொடரும். பின்னர் விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலிக்கப்படும்; தகுதியுடைய மனுக்கள் ஏற்கப்படும்; தகுதியற்றவை தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியான மனுக்களையும் கடைசி நேர மனமாற்றத்தின் அடிப்படையில்- வேட்பாளரின் விருப்பத்தின் பேரில்- திருப்பி வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளும் தரப்படும். இந்த நடைமுறைகள் எல்லாம் வெகுசுலபமாக, எந்தவிதத் தடையுமின்றி நடந்து கொண்டிருக்கும்போது இந்திய மக்களாட்சியின் அடித்தள கட்டமைப்பும் செயல்படுத்துதலின் சீர்மையும் ஒவ்வொரு இந்திய மனதிற்குள்ளும் கொஞ்சம் புளகாங்கிதத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.
தேர்தல் நடைமுறைகளுக்கான அறிவிக்கையைச் சொன்ன நாள் முதல் அரசாங்கம் என்பதே தேர்தல் ஆணையம் தானோ என்ற ஐயம் வருகின்ற அளவிற்கு அண்மைக் காலத்தில் ஆணையத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. சுவர்களில் எழுதப்படும் விளம்பரங்களை அழிப்பது தொடங்கி, வரிசைகட்டும் கார்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, வினயல் தட்டிகளை வைப்பதைக் கட்டுப்படுத்துவது, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்யும் விளம்பரங்களைக் கண்காணிப்பது எனத் தேர்தல் ஆணையம் தன் இருப்பைக் காட்டுவதின் உச்சமாக ஒவ்வொரு நெடுஞ்சாலைகளிலும் காவல் துறையினரை நிறுத்திப் பணப்பரிமாற்றம் நடப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருந்தொகைகளைக் கைப்பற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அரசமைப்பை விடக் கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதாகப் பாவனை செய்கிறது. தேர்தலில் வேட்பாளர்களாகப் பங்கேற்க விரும்பும் அரசியல் வாதிகளிடம் காட்டும் அதிகாரத்தை மெதுவாக நகர்த்தி வாக்காளர்களுக்கும் உணர்த்துகிறது ஆணையம். கட்டுப்பாடுகள் சார்ந்த அரசின் இருப்பை தனது இருப்பாகக் காட்டும் தேர்தல் ஆணையத்தின் மீது தேர்தல் காலத்தில் ஏற்படும் நன்மதிப்பின் பின்னணியில் அதன் வேறுசில செயல்பாடுகளும் பாராட்டத்தக்கதாகவே உள்ளது.

தனக்கென விரிவான கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லாமலேயே நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கண்டறிந்து வாக்குரிமையை, அடையாள அட்டையோடு வழங்குகிறது. ஒரு நூறு எண்ணிக்கைக்குள் அடங்கும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பகுதிகளாக இருக்கக் கூடிய கல்வித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை போன்றவற்றின் உதவி யோடு மாநில அளவிலான தேர்தல்களையும், தேச அளவிலான தேர்தல்களையும் நடத்து கிறது நமது தேர்தல் ஆணையம். அதற்கு உதவும் விதமாக அரசுத்துறைகளிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இணக்கமும் கூட நமது மக்களாட்சியின் மெச்சத்தக்க தன்மையே..

மெச்சத்தக்க பணிகளைச் செய்து காட்டும் தேர்தல் ஆணையத்தின் வாழ்நாள் தேர்தல் காலம் மட்டும்தானா? அல்லது புதுடெல்லியில் நெடிதுயர்ந்து நிற்கும் வெறும் கட்டடமா? என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்கத் தோன்றுகிறது. தேர்தல் காலங்களில் கட்டுப்பாடுகள் காட்டுவதும் இறுக்கத்தை உணரச் செய்வதுமாக வெளிப்படும் அதன் இயக்கம், மற்ற காலங்களில் கண்ணுக்குப் புலப்படாத ஒன்றாக இருப்பது ஏன்? தேர்தல் காலத்தில் அதன் கையில் இருப்பதாகத் தோற்றம் தரும் அதிகாரம் தேர்தலுக்கு முன்னால் எந்த அமைப்பிடம் இருக்கிறது? அதைத் தேர்தல் ஆணையத்திற்கு கைமாற்றித் தரும் நடைமுறை எதுவும் பின்பற்றப்படுகிறதா? தேர்தல் முடிந்து மக்களின் பிரதிநிதிகளிடம் அவற்றை அப்படியே ஆணையம் கைமாற்றுகின்றதா? கைவரப் பெற்றனவற்றைத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் இறுக்கமும் கட்டுக் கோப்பும் அற்றதாகத் தளர்வடையச் செய்யும் மாயத்தை எப்படி மேற்கொள்கிறார்கள்?

இப்படியான கேள்விகளை மக்களாட்சியின் தற்காலிகக் காவலர்களாகக் காட்டிக் கொள்ளும் தேர்தல் ஆணையத்திடம் இந்த நேரத்தில் கேட்கலாம். நேரம் வரும்போது, அவ்வப்போது தங்களை முன்னிறுத்துக் கொள்ளும் நீதிமன்றங்கள், இந்திய அரசின் நிதி மற்றும் கணக்குத் தணிக்கைத் துறைகள் போன்ற அமைப்புகளையும் நோக்கிக் கேட்கத் தோன்றுகிறது. இப்படிக் கேட்பதன் வழியாக அவற்றை அம்பலப்படுத்த வேண்டும் என்பதல்ல நோக்கம். தவறுகள் அனைத்தும் நடந்து முடிந்த பின்னால் சுட்டிக் காட்டும் இடத்தில் இருக்கும் இந்த அமைப்புகளை, தடுத்து நிறுத்தும் இடத்தில் இருக்கும் அமைப்புகளாக மாற்ற வேண்டும். அதற்காகவே இத்தகைய கேள்விகளும், அவற்றிற்கான விடைகளும் அவசியம்.

நல்நோக்கங்களும் இயலாமையும்

இந்தியாவின் மையத்திலும் மாநிலங்களிலும் ஜனநாயக அரசுகளை உருவாக்கும் பணியில் முக்கியப் பங்காற்றுவதாக நம்பப்படும் தேர்தல் ஆணையம் தனது அதிகாரம் செல்லுபடியாகும் காலமாக 45 நாட்களைத் தனதாக்கிக் கொள்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த 45 நாட்களில் நடக்கும் அனைத்துக்கும் தன்னைப் பொறுப்பாக்கிக் கொள்ளும் தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தில் எத்தகையவர்கள் இடம் பெற வேண்டும்; எத்தகையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்; தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அரசை உருவாக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்துகின்றது. வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லும் பிரச்சாரத்தை மெல்லிய குரலில் உச்சரிக்கும் ஆணையம், அரசியல் கட்சிகளின் பிடியிலிருந்து வாக்காளர்களை விடுவித்து, அவர்களின் விருப்பப்படி, சுதந்திரமான மனநிலையுடன் வாக்களிக்கும் வாய்ப்புகளை உருவாக்கித்தரவேண்டும் என நினைக்கிறது; முயற்சிக்கிறது.

இந்நடைமுறைகளுக்குப் பின்னே ஜனநாயக அமைப்புதான் ஆகக்கூடிய சிறந்த அமைப்பு என்பதை முன்னிறுத்தும் கருத்தியல் சார்ந்த விளக்கங்களும் சித்தாந்தங்களும் இருக்கின்றன என்றாலும் அவற்றை வெளிப்படையாகக் காட்டிக் கொள்வதில்லை. அதற்குப் பதிலாக நடைமுறைசார்ந்த கட்டுப்பாடுகளால் மட்டுமே தேர்தல் ஆணையம் தனது இருப்பைக் காட்ட முயல்கிறது. தேர்தல் கால நடத்தை விதிகளை முன்மொழிவதன் மூலம் அரசுத் துறைகளுக்கும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், அவற்றின் உறுப்பினர்களுக்கும் கட்டுப்பாடுகளை உண்டாக்குகிறது. வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க உதவ வேண்டும் என்பதற்காக ஆணையம் மேற்கொள்ளும் பணிகள் அதனைச் செயல்பாடுகள் மிக்க அமைப்பாகக் காட்ட உதவுகின்றன என்றாலும், அதன் செயல்பாடுகள் நிரந்தரமாகப் பலனளிப்பன அல்ல என்பதும், கருத்தியல் சார்ந்த ஆபத்துகளைக் கண்டு கொள்ளாமல் விலகிச் செல்லும் இயல்புகொண்டவை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஏன் அப்படியான நடைமுறையைத் தேர்தல் ஆணையம் கொண்டிருக்கிறது? அல்லது அப்படியான அமைப்பாகத் தேர்தல் ஆணையத்தை உருவாக்கியதின் நோக்கம் என்ன? என்ற கேள்விகளுக்கும் விடை தேடும் விதமாக இப்போது நடக்கப் போகும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை குறுக்கும் நெடுக்குமாக விசாரணை செய்யலாம்.

வாக்காளர்களின் வாக்குகள் விலை மதிப்பில்லாதவை; அவற்றின் தொகுதிதான் ஜனநாயக அரசை உருவாக்குகிறது. எனவே அவற்றை பணம் கொடுத்து வாங்குவதும், சாதி, மதம், வட்டாரம் என்னும் குறுகிய மனப்பான்மைகளின் அடிப்படையில் வாக்காளர்களைத் திரட்டுவதும் குற்றம் எனத் தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கைகள் கூறுகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், அரசியல் கட்சிகளும் மேற்கொள்ளும் எந்தச் செயல்பாடுகளும் இக்குற்றச் செயல்பாடுகளுக்குள் அடங்கி விடுவனவாக அமையக் கூடாது என்பதற்காகவே தேர்தல் ஆணையம் கண் கொத்திப் பாம்பாய் எல்லா வற்றையும் கண்காணிக்கிறது. திட்டமிட்ட விழாக்கள் தள்ளிப் போடப் பட்டதைக் கூடப் புரிந்து கொள்ளலாம்; தொடங்கப்பட்ட அரசு விழாக்கள் நிறுத்தப்பட்டது இந்த் தேர்தலின் சிறப்பம்சங்கள். நடத்தப்பட்ட அரசுத்துறைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை; முடிவுகள் தெரிந்தபின்பு நடத்த இருந்த நேர்காணல்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. மொழி வளர்ச்சிக்காக நடத்தப்பட இருந்த கருத்தரங்குகளும் கண்காட்சிகளும் கூட தேர்தல் நடத்தைவிதிகளுக்குள் அடங்கும் என்ற விநோதங்கள் இப்போது நடைமுறையில் உள்ளது. நடத்தை விதிகள் அமுலில் இருக்கும் காலத்தைக் கர்ப்ப காலம் போல் கருதி பொத்திப் பொத்திப் பாதுகாப்பதாகப் பாவனை செய்கிறது நமது தேர்தல் ஆணையம். ஆம் இவையெல்லாமே பாவனைகள் தான் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகின்றன நமது அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள்.

மறதியிலிருந்து கிளம்பி வரும் நினைவுகள்

மக்களாட்சி என்னும் அரசமைப்பு அடிப்படையில் புறநிலை யதார்த்தத்திற்கேற்பத் தன்னிலையை மாற்றிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் பொது மனிதனாக ஆவது என்ற உயரிய சிந்தனையை முன் வைக்கும் ஒரு கோட்பாடு. நான், எனது, என்ற அகம் சார்ந்த தன்னிலை உருவாக்கக் கூறுகளை ஒரு மனிதனிடமிருந்தால் அதைக் குறைத்துப் பொதுநிலைப் பட்ட மனிதனாக ஆக்கும் நோக்கம் கொண்டது. அதன் மூலம் அம்மனித ஆன்மாவை விடுதலை அடையச் செய்யும் பாதையே மக்களாட்சியின் பாதை. ஒருவனது சுயத்தை அழிக்க இறைவன் மீது கொண்ட பக்தி உதவும் எனப் பக்தர்கள் நம்புவது போல நான், எனது என்ற தன்னலம் சார்ந்த இருப்பை அழிக்க தேர்ந்த அரசியல் கட்சியின் – மக்கள் நலனை முன்னிறுத்தும் கட்சியின் – கொள்கை உதவும் என்பது மக்களாட்சி அரசியலின் சித்தாந்தம். அந்த அடிப்படையில் தான் தேர்தல் அரசியலுக்கு வருபவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எனக் குறிக்கப்படுகிறார்கள். ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் அத்தகைய தரத்தில் இல்லை என்பதை விடவும், ஜனநாயகத்தின் ஆகக்கீழான எதிர்நிலைப்பாடுகளில் இயங்குகிறார்கள் என்பதை இன்று ஒவ்வொரு வாக்காளர்களும் அறிந்தே இருக்கிறார்கள்.

கொள்கை சார்ந்த கட்சி அரசியலிலிருந்து விடுபட்டு அதிகாரத்தைப் பங்கு போடும் கூட்டணி அரசியலுக்குள் இந்திய அரசியல் நுழைந்த பின்னர் இந்தப் போக்கு இன்னும் அதிகமாகி விட்டது என்பதற்கு தமிழகத்தில் நடக்கப் போகும் சட்டமன்றத்தேர்தல் ஆகச் சிறந்த உதாரணம். கொள்கைகள், செயல்பாடுகள் என எதனையும் முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்ய முடியாது என்ற தேக்க நிலைக்கு வந்துவிட்ட தமிழகத்தின் அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையம் எவற்றையெல்லாம் செய்யக் கூடாது எனச் சொல்கிறதோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எதுவும் ஆணையத்தின் கண்காணிப்புக்குள் அடங்காது என்பது போலவும்; அதைத் தடுத்துநிறுத்தும் பணி தங்களுடையதல்ல என்பதாகவும் ஆணையம் கண்களைக் கறுப்புத்துணியால் கட்டிக் கொண்ட நீதிதேவதையைப் போல நின்றிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் ஓரணியும் ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் ஆளுங்கட்சியாக இருந்த அஇஅதிமுகவின் தலைமையில் இன்னோர் அணியும் களத்தில் உள்ளன என்றாலும் இரண்டிற்கும் பெரிய அளவில் வேறுபாடுகள் இல்லை. இரண்டு கட்சிகளும் ஒரு மரத்தின் இருகிளைகள் என்ற நிலையில் வேறுபாடுகள் இல்லை என்பது மட்டுமல்ல. இரண்டு கட்சிகளும் ஏற்படுத்தியுள்ள கூட்டணிகளிலும் கூட வேறுபாடுகள் இல்லை என்பதுதான் இந்தத் தேர்தலின் புது விநோதம்.

திமுகவின் தலைமையில் தேசிய கட்சியான காங்கிரஸ் இருக்கிறது என்றால் அஇஅதிமுகவின் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என இரண்டு தேசிய கட்சிகள் இருக்கின்றன. தலித் அடையாளத்திற்கு அங்கே தொல். திருமாவளவன் தலைமையில் இயங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருக்கிறது என்றால் இங்கே டாக்டர் கே. கிருஷ்ணசாமியின் புதிய தமிழகமும் செ.கு. தமிழரசனின் குடியரசுக் கட்சியும் அதனை ஈடு செய்கின்றன. டாக்டர் சேதுராமன் தலைமையில் ஓரணிக்கு முக்குலத்தோர் அடையாளம் கிடைக்கிறது என்றால் இன்னொரு புறம் வாண்டையார் தலைமையில் அதே அடையாளம் கிடைத்து விடுகிறது. முஸ்லீம் லீக் இரண்டு தொகுதி களைப் பெற்று திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்றால் ஜவாஹருல்லா மூலம் இந்தப் பக்கமும் வந்து இசுலாமிய அடையாளத்தைத் தந்து விடுகிறார். அனைத்து நாடார்களின் கட்சி என்ற பெயரில் நடிகர் சரத்குமார் ஜெயலலிதாவிடமிருந்து இரண்டு தொகுதிகளை வாங்கிப் போட்டியிட்டால் பெருந்தலைவர் என்ற பெயரில் இன்னொரு கட்சி ஆரம்பிக்கப் பட்டவுடன் அதற்குத் திமுக ஒரு தொகுதியை ஒதுக்கு கிறது. வட்டாரக்கட்சியாகவும் சாதியமைப்பாகவும் உருவாகி தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பா.ம.க.வின் பாணியில் தோன்றி, பாராளுமன்றத் தேர்தலில் கொங்குமண்டலத்தில் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்கு வங்கியை உருவாக்கிய கொங்கு வேளாளர்களின் பேரவைக்கு ஏழு தொகுதிகளைத் திமுக ஒதுக்கியவுடன், அதே வட்டார சாதிப் பின்னணி யுடன் கொங்கு இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டு அஇஅதிமுக விடமிருந்து ஒரு தொகுதி தர்ப்படுகிறது.

திமுகவின் தலைமையில் அணி சேர்ந்திருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையும், அ இஅதிமுகவின் தலைமையில் அணி சேர்ந்திருக்கும் கட்சிகளின் எண்ணிக்கையும் ஏறத்தாழ ஒன்று போல இருக்கும்படி எண்ணிக்கைக் குழப்பம் ஒவ்வொரு வாக்காளருக்கும் வருவது தவிர்க்க முடியாத ஒன்று. ஒவ்வொரு அணியிலும் தேசியக் கட்சி, மாநிலக் கட்சி, வட்டாரக் கட்சி, சாதிக்கட்சி, மதக் கட்சி, உள்ளூர் கட்சி எனப் பல பரிமாணங்கள் இணைந்திருப்பது எல்லாவற்றையும் தெளிவாக்குவதற்குப் பதிலாகக் குழப்புவதற்காக என்பதை ஒவ்வொரு வாக்காளரும் உணர்வார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் தேர்தல் ஆணையம் இந்தக் குழப்பத்தால் ஜனநாயகத்திற்கு ஏற்படப் போகும் ஆபத்தை ஆழ்ந்த பார்வையோடு நோக்க வேண்டும் என்பதை உணரவில்லை என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இந்த அணிச்சேர்க்கைகள் ஒவ்வொரு வாக்காளர்களின் மனத்திலும் எதனை நினைவூட்டும் நோக்கம் கொண்டவை என்பதை விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. ஜனநாயகத்திற்கு ஆபத்து விளைவிக்கும் காரணிகள் எனச் சொல்லப்படும் சமயம், சாதி, வட்டாரம் என்னும் குறுகல் மனப்பான்மைகளை அன்றி வேறொன்றுமில்லை.

பேரரசியல் களத்தில் தேசப்பற்று, தேசிய அடையாளம், மொழிப் பற்று, தேசிய இனப் பாதுகாப்பு எனப் பேசும் நமது மாநில, தேசியக் கட்சிகள் ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் போது அந்தத் தொகுதியின் பெரும்பான்மைச் சாதிக்காரரையே வேட்பாளராக நிறுத்தும் நடைமுறையை எப்போதும் கைவிட்டவையல்ல என்பதை நாமறிவோம். அத்தகைய போக்கைத் தடுத்து நிறுத்தாமல் விட்ட தேர்தல் ஆணையம் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், வட்டாரத்தின் பெயரால், ஆரம்பிக்கப்பட்டுள்ள இயக்கங்களும் கட்சிகளும் எதனை மறக்கச் செய்யும்; எவற்றை நினைவூட்டும் என்பதைத் தேர்தல் ஆணையம் உணர வேண்டும்; தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்களின் மனம் பரந்து பட்டதாக இருந்த நிலை மாறி உள்ளூர் மனநிலைக்கும் சொந்த சாதி அடையாளத்துக்கும் உரியதாக ஆக்கப்படுவதின் அடையாளமாகவே திமுகவின் தலைவர் மு.கருணாநிதி திருவாரூரில் போட்டியிடுவதையும், அஇஅதிமுகவின் தலைவி ஜெ.ஜெயலலிதா திருவரங்கத்தில் போட்டியிடுவதையும் கணிக்கத் தோன்றுகிறது. இவ்விரு அணிகளிலும் சேராமல் தனித்து நிற்கும் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சியும் நாடாண்ட பாரதீய ஜனதாக் கட்சியும் எந்த அணியின் வாக்குகளைப் பிரித்தார்கள்; யாருடைய வீழ்ச்சிக்குக் காரணமானார்கள் என்பது தேர்தலுக்குப் பிந்திய புள்ளிவிவரக் கணக்கு வழக்குகளில் அலசப்படலாம்.

அழிக்கப்படும் நினைவுப்பாதை


அணிச்சேர்க்கை வழியாக இந்தத்தேர்தல் நினைவூட்டும் சாதி, மதம், வட்டாரம், ஆதிக்க உணர்வு என்பன ஒருவரின் தன்னிலையைப் பழைமைக்குள் நகர்த்திக் கொண்டு போகும் நோக்கம் –ஞாபகங்களைக் கிளறி எழுப்பும் நோக்கம் கொண்டவை என்பது ஒரு ஆபத்து என்றால் இந்த அணிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் அண்மைக்கால நடப்புகளை எல்லாம் அழித்துப் பரப்பும் நோக்கம் கொண்ட இன்னொரு பேராபத்து.2006 தேர்தலில் வெற்றியைத் தேடித்தந்த தேர்தல் அறிக்கையைக் கதாநாயகன் எனவும் இப்போது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையைக் கதாநாயகி எனவும் வர்ணித்துக் காட்டி அறிக்கையை வெளியிட்டுள்ளார் திமுகவின் தலைவர் மு.கருணாநிதி. இதில் உள்ள கவர்ச்சி அம்சங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத கவர்ச்சி அம்சங்களோடு தான் எதிரணியான அ இஅதிமுகக் கூட்டணியின் தேர்தல் அறிக்கையும் இருக்கும். திராவிட இயக்க வேர்களிலிருந்து உருவான இவ்விரு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் கடந்த இரண்டு மூன்று தேர்தல்களாகவே திராவிட இயக்கச் சிந்தனைகளை மையப் படுத்திய அறிவிப்புகள் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. இரண்டு அணிகளுமே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பொருட்களை இலவசங்களாகத் தருவோம்;எந்த அளவுக்கு மானியங்கள் வழங்கப்படும் எனச் சொல்வதையே தேர்தல் அறிக்கையாக வெளியிடுகின்றன. தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணம் அல்லது பொருள் தரப்படுவது குற்றம் என்றால், தேர்தலுக்குப் பின் அரசாங்கப் பணத்தில் இன்னின்ன தருவேன் எனச் சொல்லி ஆசை காட்டுவதும் குற்றமாகத் தானே கருதப்பட வேண்டும்..வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகள் ஒருவிதத்தில் நடத்தைவிதிகளை மீறி வாக்காளர் களின் வாக்குகளை அபகரிக்கச் செய்யும் தவறான வழியாகவே இருக்கின்றன என்பதைத் தேர்தல் ஆணையம் உணர வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த வேண்டும்; அந்தப் போக்கில் செல்லாமல் தடுக்க வேண்டும்.

இலவசங்கள் மற்றும் மானியங்கள் பற்றிய பட்டியலாக இருக்கும் தேர்தல் அறிக்கைகளை வெற்றுத்தாளாகவோ, அச்சடிக்கப்பட்ட காகிதமாகவோ ஆணையம் கருதலாம். ஆனால் நமது அரசியல் கட்சிகள் அப்படிக் கருதாது என்பது தான் உண்மை. அவை காற்று நிரப்பப்பட்ட வண்ணப் பலூன்கள் என்றே நினைக்கின்றன. ஆளுங்கட்சி மீதும், அதற்கு முன்பு ஆண்ட கட்சி மீதும் இருக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளை அதிகம் பேசாமல் தேர்தல் அறிக்கையை முன்னிறுத்தி மட்டுமே இப்போது அணிகள் பேசப்போகின்றன. அறம் சார்ந்த அரசியலையோ, மக்கள் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்ட சொல்லாடல்களையோ அவை பேசப் போவதில்லை.. ஏனென்றால் இவ்விரு அணிகள் மீதும் ஊழல் குற்றச் சாட்டுகள் இருக்கவே செய்கின்றன. ஐந்தாண்டுகால இடைவெளி என்பது ஆகப் பெரும் இடைவெளி அல்ல. ஒன்றின் ஊழல்கள் அண்மையது என்றால், இன்னொன்றின் ஊழல் சேய்மையது அத்தோடு திரும்ப ஆட்சிக்கு வரும்போது இத்தகைய ஊழல்கள் நடக்காது என்பதற்கான அறிகுறிகள் இவ்விரு அணிகளின் செயல்பாடுகளில் எப்போதும் வெளிப்பட்டதில்லை என்பது தான் கடந்த ஐம்பதாண்டு தமிழக வரலாறு.

ஊழல் பற்றிய வரையறைகளை மாற்றவும், அதன் ஞாபகங்களை அழிக்கவும் தான் ஒவ்வொரு அணியுக் தேர்தல் அறிக்கைகள் என்னும் வண்ணப் பலூன்களை பறக்க விடுகின்றன. இலவசங்கள், மானியங்கள் என்னும் காற்று நிரப்பப்பட்ட வண்ணப்பலூன்களைத் தட்டிப் பார்க்கும் வாக்காளப்பெருமக்கள் மறக்கப்போவது அணிகளின் ஊழல்களை மட்டுமல்ல.மிக அண்மைக்கால கூட்டணிக் கோலங்களையும் அலங் கோலங் களையும் கூட மறந்தாக வேண்டும். இந்தப் பலூன்கள் அந்தந்தக் கட்சி சார்ந்த தொலைக்காட்சி ஊடகங்களிலும் அரசியல் பிரச்சார மேடைகளிலும் நிச்சயமாக ஊதி அனுப்பப்படும். அப்படி அனுப்பப் படும் போது இந்தியாவையே உலுக்கிய 2ஜி பேரங்கள் மறக்கப்பட வேண்டும் என்பதோடு காங்கிரஸும் திமுகவும் நடத்திய மூணு சீட்டு விளையாட்டும், அதற்காக டெல்லிக்கும் சென்னைக்குமிடையே நடந்த பயணங்களும் அவமானங்களும் கூட மறந்து போக வேண்டும் என்பதே அந்த அணியின் எதிர்பார்ப்பு. அதே போல் எதிர் அணியின் வண்ணப் பலூன்கள் பறக்கும் போது 2001-2006 ஆம் ஆண்டுக்கால ஊழல்கள் மறந்து போக வேண்டும் என்பது மட்டும் தான் விருப்பம் எனக் கருத வேண்டாம். இடதுசாரிக் கட்சிகளையும், தேமுதிகவையும் சட்டை செய்யாமல் தொகுதிகளை அறிவிப்பு செய்ததும், பின்னர் இறங்கி வந்து பேசித்தீர்த்ததும் மறக்கப்பட வேண்டும். ஆம் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும். வைகோவின் மதிமுகவைத் தற்கொலை முடிவெடுக்குத் தூண்டியதையும் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் தற்கொலை செய்து கொண்டதையும் கூட மறந்தாக வேண்டும்.
============================ நன்றி: உயிர்மை, ஏப்ரல்,2011


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

புள்ளிவிவர ஆய்வுகளின் தேவை.

நவீனத்துவமும் பாரதியும்

மன்மோகன் சிங் மட்டும் தான் பொறுப்பா?…