ரஜினியின் சிவாஜி: கனவுகளை விற்பவன்
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இயக்குநர் ஷங்கர் இயக்கிய சிவாஜி படத்தை நீங்கள் தியேட்டருக்குச் சென்று பார்த்து விட்டீர்களா.? படம் திரைக்கு வந்து பத்து நாட்களுக்குப் பின் பார்க்கச் சென்ற எனக்குக் கிடைத்த அந்த அனுபவம் உங்களுக்கும் கிடைத்திருக்கக் கூடும். ஐம்பது ரூபாயக்கான வரிசையில் நின்ற என்னிடம் தரப்பட்ட டிக்கெட்டிற்கு வசூலிக்கப்பட்ட தொகை ரூபாய் நூறு. ஐம்பது ரூபாய் டிக்கெட் என்றில்லை எல்லா வகையான டிக்கெட்டு களுமே இரட்டை விலையில் தான் விற்கப்பட்டன; விற்கப்படுகின்றன. பல ஊர்களில் சில அரங்குகளில் இருமடங்கிற்குப் பதிலாக மும்மடங்கு விலையாகக் கூட விற்கப் பட்டதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.டிக்கெட் தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மட்டும் கேளிக்கை வரியைப் பெற்றுக் கொண்டு கூடுதல் விலை வைத்துக் கொள்ளவும் விற்றுக் கொள்ளவும் அரசே அனுமதிக்கிறது என்பது விநோதமான தகவல் அல்ல. இரண்டு மடங்கோ மும்மடங்கோ வைத்து விற்கப்படும் பணத்திற்கு அரசாங்கம் எப்படி வரி வசூலிக்கும்? என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. அதையும் தாண்டி சிவாஜி என்பது சுத்தமான தமிழ்ப் பெயர் என்பது உறுதியாகி விட்டால் கேளிக்கை வரியிலிருந்தும்...