கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப்போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத்திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டுவிட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலை வாய்ப்பை நோக்கமாகவும் கொண்டு தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் திட்டத்தை முன்வைத்துப் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. பன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக வடிவமைத்தது. இதனைச் செயல்வடிவம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தடங்கல்கள் ஆசிரியர்களிடமிருந்தே உருவானது என்பது தனிக்கதை. புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்காக இதனைத் தருகிறேன். ******* எண்பதுகளில் கல்வியைக் குறிக்கும்போது சந்தை அதனோடு இணையும் சொல்லாக இருந்ததில்லை. இப்போது எல்லாத் துறைகளோடு சந்தை இணைந்துவிட்டது. மருத்துவம், பொழு...