இமையத்தின் செடல்:எதிர்பார்ப்புகளற்ற கீழைத் தேய வாழ்வின் மீதான விசாரணை
எழுத்தாளர்களில் ஒரு சிலர் தாங்கள் இயங்கும் இலக்கிய வகைமைகளில் ‘மைல்கல்’ அல்லது ‘திருப்புமுனைப்’ படைப்பு என்று சொல்லத்தக்க படைப்புகளை எழுதுவதன் மூலம் கவனிக்கத்தக்க படைப்பாளிகள் பட்டியலில் இடம் பிடித்துக் கொள்கின்றனர். அதுவும் ஒரு படைப்பாளியின் முதல் படைப்பே அப்படிப்பட்ட ஒன்றாக அமைந்து விடும் பொழுது படைப்பாளியின் மீது குவியும் கவனம் ஆழமானது. முதல் நாவல் கோவேறு கழுதைகள், இமையத்திற்கு அப்படியொரு கவனக்குவிப்பைப் பெற்றுத் தந்தது.